லைஃப் பார்ட்னர் | இயக்குனர் மணிபாரதி

 லைஃப் பார்ட்னர் | இயக்குனர் மணிபாரதி

அன்புள்ள அப்பாவிற்கு,

உங்கள் மகள் வினோதினி எழுதிக்கொண்டது.

நீங்களும், அம்மாவும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் நன்றாக இல்லை.

உங்கள் பேச்சையும், அம்மா சொன்னதையும் கேட்காதது, எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை இப்போது உணர்கிறேன்.

லிவிங் டூ கெதர் என்கிற பெயரில், கார்த்திக்குடன் சேர்ந்து வாழ, முடிவெடுத்திருக்கக் கூடாது. அவசரப்பட்டு விட்டேன். அவன், அவனது பசியை தீர்த்துக் கொண்டானே ஒழிய, ஒருநாளும் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வில்லை. அத்தனையும் கண் துடைப்பு. வெளிவேஷம். அவன் மேல் இருந்த, கண் மூடித்தனமான நம்பிக்கையில்தான், அந்த வாழ்க்கைக்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், ஒருநாளும் அது இனிக்க வில்லை. மாறாக, கசந்துதான் போனது.

எப்போது வேண்டுமானாலும், இருவரும் பிரிந்து விடலாம்தான். அதற்கு எந்த கேள்வியும் இல்லை. தடையும் இல்லை. அதற்காக, தேர்ந்தெடுத்த வாழ்க்கையில், அப்படி ஒரு முடிவை, அவசரப்பட்டு எடுத்து விட முடியுமா? ஆனாலும், எப்போதாவது பிரிந்து விடுவோமோ, இது நீடிக்காதோ என்கிற நினைப்பு அடிக்கடி வந்து வாட்டுகிறது. அதனால், அந்த பயத்தில், கவலையில் ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்ய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட, அதை அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ என அச்சமாக இருக்கிறது.

யாரும், யாரையும் கேள்வி கேட்க முடியாதுதான். யாரும் யாருக்கும் அடிமை இல்லைதான். ஆனால், அதுவே, எனக்கு பாரமாகவும், அவனுக்கு வசதியாகவும் மாறிப் போனது. இஷ்டம் போல வருவான். இஷ்டம் போல சாப்பிடுவான். இஷ்டம் போல தூங்கி எழுவான். நடுவில், நான் தேவைப்படும் போது, என் முதுகை சுரண்டுவான். நான் மறுத்தால், சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பி விடுவான். அந்த வீடு, எனக்கு நரகமாகிப் போகும். மீண்டும், நடு இரவில் வந்து கதவை தட்டுவான்.. எவ்வளவு தூக்கத்தில் இருந்தாலும், எழுந்து கதவை திறக்க வேண்டும். கொஞ்சம் தாமதமானாலும், கோபத்தை கதவின் மேல் காட்டுவான். கதவை திறந்த பின், எங்கு போனான், யாரை சந்தித்தான், எந்த கேள்வியும் கேட்க முடியாது. கேட்கக் கூடாது. கேட்டால், “இந்த லைஃப்க்கு சம்மதிச்சுதான வந்த..“ என்பான்.

காலையில் எழுந்ததும், காபி போடுவது, பேப்பர் படிப்பது, பின் டிபன் செய்வது, அதன் பின் குளித்து விட்டு ஆபிஸ் புறப்படுவது, மற்றும் சனி, ஞாயிறானால், துணி துவைத்து காய போடுவது, காய்ந்ததும் அதை எடுத்து வந்து இஸ்த்திரிக்காரனிடம் கொடுத்து வாங்குவது என, இவை எல்லாவற்றிலும், உதவியாகதான் இருப்பான். ஆனால், வாழ்வதற்கும், அந்த வாழ்வு சந்தோஷமாக திளைப்பதற்கும், இது மட்டும் போதாதே.

ஒருநாள், காய் நறுக்கும் போது, நான் என் கையை நறுக்கிக் கொண்டேன். ரத்தம் கொட்டுகிறது. அவன் சிறிது கூட பதட்டப்பட வில்லை. “பாத்து கட் பண்ணக் கூடாதா..“ என்கிற ஒற்றை கேள்வியோடு நிறுத்திக் கொண்டான். நானேதான், ஒரு துணியை கிழித்து சுற்றிக் கொண்டேன். அந்த காயம் ஆற, ஒரு வாரம் ஆனது. நடுவில், ஒருமுறை கூட, அவன் “எப்படியிருக்கு?“ என கேட்கவில்லை. இதுவே அம்மாவிற்கு நடந்திருந்தால், நீங்கள் எப்படி துடித்து போயிருப்பீர்கள். ஒரு நாள், கோவிலுக்கு போய் விட்டு திரும்பும் போது, அம்மாவின் செருப்பு அறுந்து விட்டது. அம்மா சூடு தாங்க மாட்டாள் என்பதற்காக, நீங்கள், உங்கள் செருப்பை அம்மாவிடம் கொடுத்து விட்டு, வெறும் காலோடு நடந்து வந்தீர்கள். அந்த அன்பு, அந்த பாசம், அந்த அக்கறை இந்த வாழ்க்கையில் ஒரு துளி கூட இல்லை அப்பா.

பெரியவர்கள், கல்யாணம் என்கிற உறவை சும்மாவா ஏற்படுத்தி வைத்தார்கள். பெண் பார்க்கும் போதே, அந்த பெண்ணையும், மாப்பிள்ளையையும், கண்ணுக்கு தெரியாத ஒரு பிணைப்பு கட்டிப்போட்டு விடுமே. அதை அறுப்பதென்பதும் அவ்வளவு சுலபமல்லவே. ஆயிரம் உறவுகளை எதிர்ப்பதற்கு அது சமமாயிற்றே. இரண்டு பேருக்குமே அது புரியுமே. அதனால்தான், திருமணத்திற்கு பிறகு, என்ன பிரச்சனை வந்தாலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்து போகிறார்கள்.

நீங்களும், அம்மாவும் போட்டுக்கொள்ளாத சண்டையா? என்றைக்காவது, ஒருவரை ஒருவர் துண்புறுத்த நினைத்ததுண்டா? காயப்படுத்த நினைத்ததுண்டா? எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும், இரண்டு நாட்களில், எல்லாம் சரியாக போய் விடுமே. ஒன்று அம்மா பேசி விடுவாள். அல்லது, நீங்கள் பேசி வீடுவீர்கள். அதன்பிறகு, இருவரும் கை கோர்த்துக் கொண்டு, கோவிலுக்கோ அல்லது சினிமாவிற்கோ ஜோடி போட்டு போகிற அழகு இருக்கிறதே, அடடா.. அதுவல்லவா ஆனந்தம்.. சுட்டுப் போட்டாலும், அது இந்த வாழ்க்கையில் வராது.

இரண்டு நண்பார்களுக்குள் கூட ஒரு நல்ல பிணைப்பு இருக்கும். விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை இருக்கும். தன்னை, அந்த நண்பனாக பாவிக்கிற மனசு இருக்கும். ஒருவருடைய வலியும், வேதனையும், எதிர்ப்பார்ப்பும் இன்னொருவருக்கு புரியும். எந்த ஓடுகாலி கண்டு பிடித்தான் எனத் தெரியவில்லை, இந்த ஒட்டுதல் இல்லாத கெட் டூகெதர் வாழ்க்கையை.

அவன், எப்போதும் கையில் எதாவது ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை வைத்திருப்பான். அதில் பெண் சுதந்திரத்தைப்பற்றி எழுதியிருந்தால் போதும், அவ்வளவுதான், “வினோ இதை கொஞ்சம் கேளேன்“ என இழுத்து உட்கார வைத்து, வரிவரியாக படித்துக் காட்டுவான். இதுதான், தான் எதிர்ப்பார்க்கிற மாற்றம் என்பான். எவன் ஒருவன் பெண்ணை மதிக்கிறானோ, அவனது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்பான். பிடித்த எழுத்தாளர் என பிரபஞ்சனையும், ஜெயகாந்தனையும் குறிப்பிடுவான். யார் யாருக்கோ கோவில் கட்டுகிறார்களே, இவர்களுக்கு கட்டலாம் என்பான். நல்ல வேளை, இரண்டு பேரும் உயிரோடு இல்லை. இருந்திருந்தால், இப்படி ஆளை, செருப்பை கழட்டி அடித்திருப்பார்கள். அத்தனையும் வேஷம்.. நடிப்பு.

அவனது, இந்த அறிவு ஜீவித்தனத்தை நிஜம் என்று நம்பிதான், அவனோடு சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டேன். அவன், பெண்ணை மதிக்கிறவனெல்லாம் இல்லை. உபயோகிக்கிறவன். எந்த வார்த்தையால் அடித்தால், எப்படி மயங்கி விழுவார்கள் என்பது அவனுக்கு தெரியும். ஒரு மாதம் கூட ஆக வில்லை. அதற்குள், அவனது சுயரூபம் தெரிந்து விட்டது. உங்களையெல்லாம் எதிர்த்துக் கொண்டு வந்தவளுக்கு, திரும்பி உங்கள் முன்னால் வந்து நிற்கிற தைரியம் இல்லை. அவமானம் பிடுங்கி திங்கிறது. அதனால், எல்லாவற்றையும் சகித்துக் கொள்வது என முடிவெடுத்து விட்டேன். அதையும், எத்தனை நாளைக்கு கட்டி காப்பாத்த முடியும்? ஒரு புழுவிற்கே, சிறு தீண்டலால் கோபம் வருகிற போது, நான் மனுஷி.. எப்படி சொரனையற்று உட்கார்ந்திருக்க முடியும்?

ஒருநாள், என்னுடன் காலேஜில் படித்த ரகு, என்னை தேடி வந்தான். பார்ப்பதற்கு ஜெயம் ரவி போல் ஹேன்ட்சமாக இருப்பான். எப்போதும் கலகலப்பாக பேசுவான். இத்தனை மாதங்கள் கழித்து பார்த்தும் கூட, அவனது கேரக்டர் கொஞ்சமும் மாற வில்லை. வந்ததிலிருந்து கிண்டலும் கேலியுமாகவே இருந்தது அவனது பேச்சு. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்தேன். சிரிக்கும் போது அவனை தொடக் கூட செய்தேன். அவன் முதுகிலும், கன்னத்திலும் உற்சாகத்தில் தட்டினேன்.

இதையெல்லாம் உடன் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, கொஞ்சமாவது பொறாமையோ, கோபமோ, எரிச்சலோ வரவேண்டுமே? ம்கூம்.. சிலை போல உட்கார்ந்திருந்தான். ஜடம்.. ஜடம்.. மனசுக்குள் திட்டி தீர்த்தேன். எனக்கு சொந்தமான பொருளை, யார் தொட்டாலும், எனக்கு கோபம் வந்து விடும். இதுவே, அவன், அவனுடன் படித்த பெண்ணை வரவழைத்து இப்படி சிரித்து பேசிக் கொண்டிருந்தானென்றால், சத்தியமாக என்னால் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. கோபம் பொத்துக் கொண்டு வந்திருக்கும். நான், என்னுடைய எதிர்ப்பை எப்படியாவது காட்டியிருப்பேன். சொரனை கொட்ட ஜென்மம்.

ரகு போனதும், யார் அவன், எதற்காக வந்தான், இப்படி எதாவது ஒரு கேள்வி கேட்க வேண்டும் இல்லையா? எந்த கேள்வியும் இல்லை.

மாறாக, அவன் என்ன கேட்டான் தெரியுமா?

“டின்னருக்கு நா வெளில போறேன்.. நீ எப்படி. வீட்டுல இருக்குறதையே சாப்பிட்டுக்குறியா? இல்ல என் கூட வறியா?..“

எனக்கு, அவனை அப்படியே ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது. தாலி கட்டிய பெண்டாட்டி இல்லைதான். ஆனால், அதற்கு சமமான இடத்தில்தானே இருக்கிறேன். அந்த உணர்வு கூடவா இல்லாமல் போகும்.. அப்படியென்றால், இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்? சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு போவது, இது மட்டும்தானா? அன்பு, பாசம், கோபம், பொறாமை, காதல் இது எதுவுமே இருக்காதா? நான், எவ்வளவோ கனவுகளுடன், அவன் கரம் பற்றி இந்த வீட்டிற்குள் நுழைந்தேன். அதில், ஒவ்வொன்றாக, அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

என்னிடம் மட்டுமல்ல.. அவன், அவனுடைய அப்பா, அம்மா, அக்கா, இப்படி எல்லோரிடமும் பற்றுதல் இல்லாமல்தான் நடந்து கொள்கிறான். அவன் அப்பா போன் செய்தால் “எப்படிப்பா இருக்கிங்க“ என கேட்க மாட்டான். நேரடியாக விஷயத்திற்கு வருவான். என்ன பதில் தேவையோ, அதை மட்டும் பேசி விட்டு, கட் பண்ணி விடுவான். ஒருநாள், அவனுடைய அக்கா குழந்தைக்கு பெயர் சூட்டு விழா. தாய் மாமன் என்கிற படியால், அக்கா, அவனை, வருந்தி வருந்தி அழைத்தாள். வருவதாக சொல்லி விட்டு, அவன் போக வில்லை. “என்ன கார்த்திக் இப்படி பண்ற..“ என கேட்டதற்கு, “நா அப்படிதான்.. இதையெல்லாம் நீ கண்டுக்காம போறதுதான் உனக்கு நல்லது..“ என செவிட்டில் அறைந்தது போல் பதில் சொன்னான். அதன் பிறகு, அவனது சொந்த விஷயத்தில், நான் தலையிடுவது இல்லை. சொந்த விஷயம் என்பது கூட, அவனோடு போகக் கூடியது. எங்கள் இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அப்படியில்லையே.. பாதிப்புக்குள்ளாகி கொண்டிருக்கிறவள் நானல்லவா?

அப்படியும், ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனிடம் கேட்டு விட்டேன்.

“கார்த்திக், நீ நடந்துக்குற முறை எதுவுமே சரியில்ல..“

அவன், என்னை கோபமாக திரும்பிப் பார்த்தான். “புரியல..“ என்றான்.

“செக்ஸ் ஒண்ணத்தவிர, மீதி எல்லாத்துலயும் மரக்கட்டை மாதிரி நடந்துக்குற…“

“கெட் டூகெதர் லைஃப்ன்னா என்னன்னு நினைச்சுகிட்டு இருக்க.. நா நானாவும், நீ நீயாவும் இருக்குறதுதான்.. இதுல ஒருத்தர ஒருத்தர் மாத்தனும்ன்னு நினைக்கிறது, பிரச்சனையதான் உண்டு பண்ணும்.. நா, என்னிக்காவது உன்கிட்ட, இப்படி இருக்கனும் அப்படி நடந்துக்கனும்ன்னு எதிர்பாத்துருக்கேனா.. இல்லைல்ல.. அப்படியிருக்கும் போது, நீ மட்டும் எதுக்காக எதிர்ப்பாக்குற.. அதுக்கு நீ ஒருத்தனை கல்யாணமில்ல பண்ணியிருக்கனும்..“

“கெட் டூகெதர் லைஃபே தப்பா, இல்ல நீ தப்பான்னு என்னால புரிஞ்சுக்க முடியல.. அதுதான் என்னோட கேள்வி..“

“எல்லாம் கரெக்ட்டுதான்.. நீதான் தப்பா இருக்க..“

நான் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தேன்.

“என்னை புடிக்கல, என் கூட பார்ட்னர்ஷிப்பா இருக்குறது கஷ்டம்ன்னு நினைச்சின்னா, எதுக்கு இதை கண்டினியூ பண்ணிட்டு இருக்க.. குட் பைன்னு சொல்லிட்டு புறப்பட வேண்டியதுதான..“

எனக்கு, கோபம் உடைத்துக்கொண்டு வந்தது.

“போறேன்.. ஆனா, என்னை பழைய மாதிரி உன்னால திருப்பி குடுக்க முடியுமா..“

“நீயும் சம்மதிச்சுதான அது நடந்தது..“

“எங்க யோசிச்சு பாரு.. ஒருநாள் கூட உன்னை நா அதுக்கு கூப்பிட்டது இல்ல.. நீதான் என்னை கம்ப்பள் பண்ணி சம்மதிக்க வைப்ப… என்னோட கனவு எதிர்ப்பார்ப்பெல்லாம் வேற.. கவிதையா வாழனும்ன்னு ஆசைப்பட்டவ.. அதுக்காகதான், இந்த கெட் டூகெதர் செட்டப்புக்கே ஒத்துகிட்டேன்….“

அவன் அமைதியாக இருந்தான்.

“யாரோ ரெண்டு பேரு மாதிரி வாழ்றதுக்கு, லிவிங் டூ கெதர் லைஃப் மட்டுமில்ல.. கல்யாணம்ங்குற அமைப்புல அப்படி நடந்தாலும், அது வேஸ்ட்தான்.. ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கனும்.. அன்பு பாராட்டனும்.. காதல், மூனு வேளையும் பூக்கனும்.. சில குடும்பங்கள்ல கேள்விப்பட்டிருப்பியே, பாட்டி செத்ததும், தாத்தாவும் செத்து போய்ட்டார்ன்னு.. அதுக்கு என்ன அர்த்தம்ன்னு நினைச்சுகிட்டு இருக்குற.. லவ்.. டீப் லவ்.. அந்த இடத்தை அடையுறதுக்கு, என்ன பேர் வேணும்ன்னாலும் வச்சுக்கலாம்.. ஆனா, கடைசி வரைக்கும் நிம்மதியா இருக்கனும்.. பணம் காசெல்லாம் கூட சம்பாதிச்சுடலாம்.. நிம்மதிய சம்பாதிக்கனும்….“

“நீ என்னென்னமோ சொல்ற.. என்னோட கணிப்புல, உனக்கு, இனி இந்த லைஃப் செட் ஆகாது.. ஒரு பத்து நாள் டயம் எடுத்துக்கலாம்.. நானும் யோசிக்குறேன்.. நீயும் யோசி.. பத்து நாள் கழிச்சு, மனசு என்ன சொல்லுதோ, அதை ரெண்டு பேருமே கேட்போம்..“

“சரி.. பார்க்கலாம்..“

பத்து நாட்கள் மெதுவாகதான் நகர்ந்தது. எனக்கு, அவனிடம் பேச ஒன்றுமில்லை. பேச வேண்டிய விஷயத்திற்கு மட்டும், தேவைக்கேற்ப, பட்டும் படாமல் பேசிக் கொண்டேன். அப்போது கூட, அவனது கண்கள் தேவையில்லாத இடங்களில் மேய தொடங்கும். எனக்கு கரப்பான் ஊர்வது போல இருக்கும். ச்சீ.. சரியான காட்டுமிராண்டியாக இருப்பான் போலிருக்கிறது. காட்டில் வாழும் விலங்குகள் கூட, கட்டுப்பாட்டுடன்தான் இருக்கின்றன. பசிக்கு வேட்டையாடும்.. காமத்திற்கு, ஒருநாளும் அது வேட்டையாடியதில்லை.

எட்டாவது நாள், துணிமணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். எனக்கு, என்ன செய்கிறான் என்பதன் அர்த்தம் புரியவில்லை. அடக்க முடியாமல் அவனிடம் கேட்டேன்.

“என்ன பண்ணிட்டு இருக்க..“

“ஆபிஸ் வேலையா மும்பைக்கு போறேன்.. திரும்பி வர பத்து நாள் ஆகும்..“

“இது எப்ப தெரியும் உனக்கு..“

“ஒரு வாரத்துக்கு முன்னாலயே தெரியும்..“

“அப்பவே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே..“

“சொல்லியிருக்கலாம்தான்.. ஆனா, முன் கூட்டியே சொல்றதுக்கான அவசியம் இல்ல….“

“அதான.. அப்ப பத்து நாள் கெடு வச்சியே.. அது..“

“அது மாறாது.. நா திரும்பி வரும் போது, நீ இந்த வீட்டுல இருந்தின்னா, சந்தோஷம்.. இல்லன்னா ரொம்ப சந்தோஷம்.. எப்படியும், ரெண்டு பேருகிட்டயும் வீட்டு சாவி இருக்கு.. போவனும்ன்னு முடிவு பண்ணிட்டின்னா, பூட்டிட்டு நீ கிளம்பு..“

மனசு “அடப்பாவி..“ என்றது. ஆத்திரமும், அழுகையுமாக வந்தது. இத்தனை நாள் அவனுடன் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்.. அதற்கான நன்றி, ஒரு துளி கூடவா இல்லாமல் இருக்கும். ஒரு சொறி நாயிடம் இப்படி ஏமாந்து நிற்கிறனே.. ம்கூம்.. இவனை அதோடு ஒப்பிடக் கூடாது. அது நன்றியுள்ள பிராணி. இவன் அதற்கும் கீழானவன். உடம்பு முழுவதும் சேறை பூசிக்கொண்டு லோ லோ என்று அலையுமே பன்றி, அந்த வகையை சேர்ந்தவன்.

அப்பா, அம்மா, முதலில் உங்கள் இருவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.. நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரிய வில்லை. நமது குடும்பத்தில், எல்லோரும் முறைபடி கல்யாணம் செய்து கொண்டவர்கள். இன்று நன்றாகவும் இருக்கிறார்கள். நான்தான், அதை ஏற்றுக் கொள்ளமல் வெளியில் வந்தேன். இப்போது, அது தவறு என்பதை, முற்றிலுமாக உணர்ந்து விட்டேன். இத்தனை நாளில் என்னால் எவ்வளவு அவமானப்பட்டிருப்பீர்கள் நீங்கள்.. ஒரு கல்யாணம் காட்சியில் உங்களால் நிம்மதியாக கலந்து கொள்ள முடியாமல் போனதே.. எங்கு போனாலும் என்னைப்பற்றியே பேச்சு.. பாவம் நீங்கள்… உங்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுத்து விட்டேன்.. என்னை மன்னிப்பீர்களா அப்பா?

அப்போது, வாசலில் ஓலோ கார் வந்து நின்றது. அவன் பெட்டியை மூடினான். ஒரு வார்த்தை என்னிடம் சொல்ல வில்லை. பெட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு போனான். இதற்கு முன், அவன் எப்போது ஊருக்கு போனாலும், நான் ஏர்ப்போர்ட் வரை போய், வழி அனுப்பி விட்டு வருவது வழக்கம். போன முறை, அவன் ஐதராபாத் போன போது, இருவரும் டாக்ஸியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது அவன் “வினோ.. நா போற ஃபிளைட் திடீர்ன்னு ஆக்ஸிடன்ட் ஆகி, நா இறந்துட்டேன்னா என்ன பண்ணுவ..“ எனக்கேட்டான்.

“எதுக்காக இப்படியெல்லாம் யோசிக்குற..“

“சொல்லேன்..“

“அழுவேன்..“

அவன் சிரித்தான்.

“அசடு.. அதுவே உனக்கு நடந்தா, நா என்ன பண்ணுவேன் தெரியுமா..“

“என்ன பண்ணுவ..“

“உன் இடத்துல, வேற ஒரு பொண்ண சேத்துக்குவேன்..“

எனக்கு சொரேல் என்று இருந்தது.

“இப்படி சொல்ல உனக்கு மனசு உறுத்தல..“

“எதுக்காக உறுத்தனும்.. நீ என்ன தாலி கட்டின பொண்டாட்டியா.. எல்லாத்துக்கும் சம்மதிச்சுதான வந்த..“

எனக்கு பயங்கர கோபம் வந்தது. டிரைவரிடம் “ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்க..“ என்றேன். அவன் நிறுத்தினான். நான் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்தேன். அவன், அதற்காக கொஞ்சம் கூட கவலைப்பட வில்லை. போன் பண்ணி “ஸாரி“ கேட்பான், சமாதானப்படுத்துவான் என எதிர்பார்த்தேன். ஒன்றும் நடக்கவில்லை. ஊரிலிருந்து திரும்பி வந்தவன், அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். நான்தான் திராணியற்றவளாயிற்றே.. என்ன செய்து விட முடியும்?

இப்போது சொல்லுங்கள் அப்பா. நான் என்ன செய்ய வேண்டும். உங்கள் பதிலில்தான் என்னுடைய மீதி வாழ்க்கை அடங்கி இருக்கிறது. இவனோடு, என் வாழ்க்கை முடிந்து விட்டதாக, நான் நினைக்க வில்லை. அதில் தீர்மானமாகவும் இருக்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகள்,
வினோதினி.

கடிதத்தை, அப்பாவின் மெயிலுக்கு சென்ட் பண்ணினாள். இரண்டு நாட்கள், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவளுக்கு திக் திக் என்றிருந்தது. மூன்றாவது நாள் பதில் வந்தது.

“வினோ.. இனி ஒரு நிமிஷம் கூட, நீ அங்க இருக்க வேண்டாம்மா.. உடனே புறப்பட்டு வா..“

மெயிலை படித்ததும் அவளுக்கு அழுகை வந்தது. அப்பா, என்றைக்குமே அப்பாதான். அவரை மீறிக்கொண்டு வெளியே வந்தது, அவளுடைய தப்புதான். அது, அவருக்கு எவ்வளவு பெரிய மன உளைச்சலை கொடுத்திருக்கும்? ஆனாலும், அதை மனதில் வைத்துக்கொள்ளாமல், உடனே புறப்பட்டு வா என்று சொல்கிற அந்த பெருந்தன்மை இருக்கிறதே, அது வேறு யாருக்கு வரும்..

உடனே, மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு, வீட்டை இழுத்து பூட்டினாள். ஒரு ஆட்டோ பிடித்து, நேரே அவளது வீட்டிற்கு வந்தாள். அப்பா, அம்மா இருவரும் வாசலில் நின்று அவளை வரவேற்றார்கள். அப்பா “நடந்தது எதைப்பத்தியும் யோசிக்க வேண்டாம்.. நல்ல காலம், இப்பவாவது முழிச்சுகிட்டியே.. உங்கம்மா, உனக்கு புடிச்ச கீரைக்குழம்பு பண்ணி வச்சுருக்கா.. நல்லா சாப்பிடு.. தூங்கி ரெஸ்ட் எடு.. மேற்கொண்டு என்ன பண்ணலாம்ங்குறத, மெதுவா யோசிக்கலாம்..“

“தாங்ஸ்ப்பா..“

இரண்டு நாட்கள் கழித்து அப்பா கேட்டார்.

“அவன் மேல போலிஸ் கம்ப்ளைன்ட் எதுவும் குடுக்கனுமாம்மா..“

“இல்ல வேண்டாம்ப்பா.. அவன் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்ல. என்ன ஒண்ணு.. என் இடத்துல, பாவம் வேற ஒரு பொண்ணு மாட்டிகிட்டு சீரழிவா.. அதுதான் கஷ்டா இருக்கு..“

“அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாதும்மா..“

சிறிது நேர அமைதிக்கு பின் வினோதினி பேசினாள். “அப்பா, என் கதைய புரிஞ்சுகிட்டு, என்னை ஏத்துக்குற ஒரு மனுஷனா பாருங்க.. நா அவர கல்யாணம் பண்ணிக்குறேன்..“

அப்பாவும், அம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவளுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.

“அதெல்லாம் நாங்க ஏற்கனவே முடிவு பண்ணிட்டோம்.. பையன் பேரு பாலு.. ஒரு பிரைவேட் பேங்க்ல ஒர்க் பண்றான்.. தங்கமான பையன்.. இன்னிக்கு அவனை மீட் பண்ணப் போறோம்.. ரெண்டு பேரும் பேசிப்பாருங்க.. புடிச்சுருந்தா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்..“

அவள், அப்பாவை ஆச்சரியமாக பார்த்தாள். “தாங்ஸ்ப்பா..“ என்றாள்.

கிரீன் பார்க் ரெஸ்ட்டாரென்ட். பாலுவை அங்கு சந்தித்தார்கள். பார்த்த உடனேயே வினோதினிக்கு அவனை பிடித்துப் போனது. அவன் “நீங்க உங்க அப்பாவுக்கு எழுதின லெட்டரை நானும் படிச்சேன்.. உங்கள மாதிரியே நானும் கெட் டூகெதர் லைஃப்ல அடிபட்ட ஆளுதான்.. நீங்க எப்படி கார்த்திக்கால பாதிக்கப்பட்டிங்களோ, அது மாதிரி, நா ரேவதிங்குற ஒரு பெண்ணால பாதிக்கப்பட்டேன்.. பயங்கர செல்ஃபிஷ் அவ.. ஓகே.. அவங்க கதை இப்ப தேவையில்ல.. நம்ம கதைக்கு வருவோம்.. ஃபாஸ்ட் ஈஸ் ஃபாஸ்ட்.. அதை, திரும்ப நினைக்கவோ, பேசவோ அவசியமில்ல.. இந்த நிமிஷத்துலேருந்து, ஒரு புது வாழ்க்கைய தொடங்குறதுக்கான, ஃபஸ்ட் ஸ்டெப்ப எடுத்து வைப்போம்.. மத்தபடி, எனக்கு வேற எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல..“ என்று கூறினான்.

அவள் “தாங்ஸ்..“ என்றாள். அவனது கண்களில், நம்பிக்கை தெரிந்தது. அந்த நம்பிக்கை, அவளுக்கு புது உத்வேகத்தை தந்தது. அப்பாவிடம் “சீக்கிரமே ஒரு நல்ல தேதிய பாருங்கப்பா..“ என்றாள்…

இயக்குனர் மணிபாரதி

கமலகண்ணன்

6 Comments

  • ரியலி சூப்பர்!! Living together கான்சப்ட்ல கதையை எழுதி அசத்தி இருக்கார் மணிபாரதி சார்.

    கதாசிரியருக்கு ‘லிவிங் டூ கெதர்’ல விருப்பமே இல்லை என்பது அவர் எழுதியிருந்த விதத்திலேயே தெரிகிறது.

    முழு கதையும் ஒரு கடிதத்திலேயே பின்னப்பட்டிருப்பது அருமை.

    படிக்க படிக்க…சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு வரியிலிலும்….சோம்பல் இல்லை. விறு விறு என்று முடிந்தது.

    முடிவு..சூப்பர்.

    ஒரு நல்ல கதையை படித்த திருப்தி மனசுக்குள்.

    பாராட்டுகள்!!!

  • லிவிங் டு கெதர் கான்செப்ட்….. ஆனால் நீங்கள் கதை முழுவதும் கெட் டு கெதர் எனப் பயன்படுத்தி உள்ளீர்கள். அதன் பொருள் வேறு. சேர்ந்து வாழ்தல் ஒரு சாபக்கேடு இந்தக் கால இளைஞர்கள் இளைஞிகள் அதில் ஏதோ சுகங் காண நினைக்கிறார்கள். அதிலும் இந்தக் கானல்நீரை நம்பி ஏமாந்து போவது பெண்கள் தாம். அதைச் சரியாகத் தெளிவுபடுத்தி உள்ளது உங்கள் கதை. அதிலும் கடிதம் மூலம் இந்தக் கதை சொல்லப்பட்டதே நல்ல உத்தி. முடிவில் நல்ல முடிவைத் தந்ததற்கு நன்றி சார்🙏💕

    இளவல் ஹரிஹரன் மதுரை🙏💕

    • அருமையான நடை. தந்தை கேரக்டர் அருமை. குடும்ப அமைப்பை சிதைக்கும் எதிலும் எனக்கு உடன்பாடில்லை – தஞ்சை தாமு

  • லிவிங் டூ கெதர் என்றுதான் எழுதியிருக்க வேண்டும்.

    சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

  • அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக லிவிங் டூ கெதர் என்று மாற்றப்படுகிறது…

    கமலகண்ணன்
    பொறுப்பாசிரியர்

  • நன்றி சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...