சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி

 சிவமலர் – மொட்டு – 1 | பஞ்சமுகி

“பொன்னார் மேனியனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே!”

அந்த அதிகாலையில் ஓதுவார் சம்பந்தனின் குரல் கணீரென ஒலிக்க கூடவே ஆலய மணியின் ஓசையும் இணைந்து சூழலை தெய்வீக மணம் கமழ வைத்துக் கொண்டிருந்தது.

85 வயதான நீலகண்ட குருக்கள் கோவிலின் வலது பக்கத்திலிருந்த தீர்த்தத்திலிருந்து முகர்ந்து வந்த நீரால் அபிஷேகம் செய்து சற்றே பழுத்துப் போயிருந்த அந்த வஸ்திரத்தை சாற்றி கோவிலைச் சுற்றிப் பூத்திருந்த பூக்களை சமர்ப்பித்தவரின் கண்களில் கண்ணீர் மல்கியது

தள்ளாட்டத்தோடு மனைவி கமலா செய்தனுப்பிய பிரசாதத்தை நிவேதனம் செய்தவர் கருவறைப் படிக்கட்டில் சரிந்தபடி பெருமூச்செறிந்தார்.

“சம்பந்தா! உன்னோட பாட்டும் இல்லைனா ரொம்ப அநாதரவா இருக்கிற மாதிரி ஆயிருக்கும்.

நாளுக்கு நாள் உன் குரல் மெருகேறியிருக்கு.

சிவனைப் பாடற நாவுக்கு இது கூட கைகூடலையினா எப்படி?”

“இருக்காதா பின்ன? உங்க ரெண்டு பேரு தயவு இல்லையின்னா சிவனோட கதி அதோகதிதான்!”

சிரித்தபடியே சொல்லிக்கொண்டு உள்ளே வந்தான் மாணிக்கம்.

அந்த சிறிய ஊரின் முக்கியஸ்தர்களில் அவனும் ஒருவன்

அவன் பேச்சைக் கேட்டதும் தீப்பட்டது போல் நீலகண்டன் துடித்துப் போனார்.

“அபச்சாரம்! இந்த அண்டசராசரத்துக்கே படியளக்கறவன் ஈசன். அவனோட தயவில்தான் அத்தனை பேரும் வாழறோம். வாயைக் கழுவு முதலில்.”

ஆத்திரத்தில் குரல் கமறியது.

“கோச்சுக்காதீங்க அய்யரே! எனக்கு சாமி பக்தி எல்லாம் கிடையாது. சாமி மேல நம்பிக்கையும் கிடையாது. ஆனால் மனுஷனுக்கு மனுஷன் உதவணும் னு நினைக்கிறேன். வாழ்ந்தவன் கெட்டா வரையோட்டுக்கும் ஆகாதுன்னு சொல்லுவாங்க! ஒரு காலத்தில் இந்த கோயில் ஓஹோன்னு

இருந்தது.இவரோ இன்றைக்கு பஞ்சப் பராரியா நின்னு இருக்காரு. அவர் சொத்தையே அவரால காப்பாத்திக்க முடியல. அண்டசராசரத்துக்கும் படியளக்குறார் னு நீங்க கதையளக்கறீங்க.!”

நீலகண்டன் கண்ணில் நீர் தளும்பியதைக் கண்டு பேச்சைத் தொடர்ந்தான் மாணிக்கம்

“சரி! இந்த காலை நேரத்துல உங்க மனசை ஏன் கஷ்ட படுத்தணும்? நாளைக்கு என் ஆளுங்க ரெண்டு பேர் வருவாங்க கோயிலுக்கு முன்னாடி இருக்குற இடத்தையும் குளத்துக்கு இறங்குற படிக்கட்டையும் சுத்தம் பண்ண சொல்லி இருக்கிறேன். வேற ஏதாவது வேலை இருந்தா வாங்கிக்குங்க. நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் வேலை பாப்பாங்க அதை சொல்லிட்டு போக தான் வந்தேன்.!”

“உன் உதவிக்கு ரொம்ப நன்றி ப்பா.ஆனா சிவனோட சக்தி தெரியாம விளையாடிட்டிருக்க..”

“அட போங்க சாமி.இந்த கோவிலோட நிலபுலம் சுத்துபட்டு கிராமத்தில எங்கெங்கோ இருக்குனு சொல்றாங்க. அதையெல்லாம் எந்த போக்கத்தவனுங்களோ அனுபவிக்க உங்க உபயத்தில சீவனை வச்சிட்டிருக்க இந்த சிவனுக்கு சக்தியிருக்கா?நம்புற மாதிரி ஏதாவது சொல்லுங்க”

அவன் பெரிதாய் சிரிக்க…

சம்பந்தம் எரிச்சலானார்.

“போதும் பா.உன் சம்சாரத்துகிட்ட போய் இதெல்லாம் சொல்லு!”

“வேற வினையே வேண்டாம்.அப்புறம் நானும் சிவனுக்கு போட்டியா இங்கேயே இருக்க வேண்டியது தான்

என்றவன் … ஏஞ்சாமி பேசாம கோவிலை அரசாங்கத்திடம் ஓப்படைச்சா என்ன?”

“அதுக்கும் உரியவங்க ஒப்புதல் வேணுமே..”

“அப்ப இது கதைக்காவாது.நான் போய் பொழைப்பைப் பார்க்கிறேன். ஓதுவார் சாமி! என் வீட்ல எதையும் போட்டுக் கொடுத்திடாதீங்க.என் வீட்டம்மா பெரிய சிவபக்தை.அப்புறம் ராச்சோறுக்கு உங்க வீட்டுக்குத் தான் வரணும்..”

அவன் நகர்ந்தான்.

மாணிக்கம் சொல்வது போல் அவனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தான். ஆனால் அவ்வப்போது கோயில் காரியங்களில் ஏதாவது ஒரு உதவி செய்து கொண்டுதான் இருக்கிறான்

அவன் மனைவி கொடுக்கிற பாலில் தான் ஸ்வாமிக்கு அபிஷேகம் நடக்கிறது

இப்போது நெருஞ்சிக்காட்டை

சுத்தம் செய்ய வருவது போல்….எத்தனையோ சின்ன சின்ன உதவிகள்.. அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்ட குருக்கள் அறுபது வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்த கோயில் நாளுக்கு ஒரு திருவிழா தினத்துக்கு ஒரு கொண்டாட்டம் னு ஏகபோகமாக இருந்தது இன்னைக்கு கவனிப்பாரற்று பாழடைந்து கிடக்கு.

ஆறு கால பூஜையும் பஞ்சமுக வாத்தியம் முழங்க படு அமர்க்களமாக நடக்கும் சிவனுக்கு வேளைக்கு ஒரு பட்டாடை அவனுக்கு இடப்புறத்தில் சன்னதியில் இருக்கும் வடிவுடையம்மன் மட்டும் குறைந்தவளா என்ன அவளுக்கென்று பிரத்தியேகமாக நெய்த பட்டு புடவைகளில் வைர வைடூரியமணிந்து ஜொலித்துக் கொண்டிருப்பாள்.

இன்றோ…கரப்பு அரித்த புடவையைக் கிழிசல் தெரியாமல் கட்டிவிட வேண்டியிருக்கிறது.

திருமேனி எண்ணெய்க்காப்பு இல்லாமல் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது.

பெரியவர் மகேஷ்வர பூபதியின் அப்பா பஞ்சாட்சரம்..

நஞ்சையும் புஞ்சையுமாய்ப் பல ஏக்கர் நிலங்கொண்ட ஜமீன்தார்.

அவருடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொத்தைப் பாகப்பிரிவினை செய்ய முயன்றபோது கனவில் வந்து என் பாகம் எங்கே? என்றாராம் சிவன்.

மறுநாள் அவருடைய தோப்புக்குள் சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்துக்கும் பாகம் கொடுத்து உடனே கோவிலை நிர்மாணித்தார்.அப்போது நாகமொன்று அவரைத் தீண்ட நாகத்தின் நஞ்சை தன் மேனியிலேற்றிக் கொண்டு பஞ்சாட்ரசத்தைக் காப்பாற்றி நஞ்சுண்டேஸ்வரராக அருள்பாலிக்கிற தலமிது.

அம்மனோ ஒரு படி மேலாய் ஸ்தபதியின் கனவில் தன்னுருவைக் காட்டி உருவானாள்.

பஞ்சாட்சரத்தின் மகன்களில் மூத்தவரான மகேஸ்வர பூபதி அப்பாவுக்குப் பின்னும் பொறுப்பாக கோவிலைப் பராமரித்தார்.

ஆறுகால பூஜையும் பஞ்சமுக வாத்யங்களும் நாதஸ்வரமும் முழங்க விமரிசையாக நடக்கும்.

கோவிலுக்கென்றே தனி நாதஸ்வர வித்வானும் பல்லக்கு தூக்கிகளும் இருந்தார்கள்.

பிரகாரத்தின் வெளிப்புறத்தில் நந்தவனமும் அதைப் பராமரிக்க ஆட்களும் பூக்கட்டும் நபர்களும் இருந்தார்கள்.

மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சியும் திருவாதிரைத் திருநாள்..சிவராத்திரியும் ஊர் கூடி சிவநாமத்தை உச்சரிக்கும்.

கார்த்திகை சோமவாரங்களில் அலைமோதும் கூட்டத்தில் எள் போட இடமிருக்காது.

மகேஸ்வரரின் துர்ப்பாக்யமோ என்னவோ அவருக்கு ஆண் மகவில்லை.அவருக்கு அடுத்த இரு சகோதரர்களுக்கு புத்ர பாக்யமில்லை.கடைசி சகோதரர் ஈஸ்வரனுக்கு இரு மகன்கள். ஈஸ்வரன் அப்பாவி. மனைவி இறந்த பிறகு இரண்டாம்தாரமாக வந்த பெண்ணின் குடும்பம் அவருடைய சொத்துகளையும் கோவில் சொத்துகளையும் சேர்த்து அழித்தது. அதில் கோவிலைக் கவனிக்காமல் சிதிலமடைய வைத்துவிட்டார். நாள்கிழமை கூட கோவிலுக்கு வருவதில்லை. அவரது மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகன் அருணாசலம் தான் வரவு செலவு பார்ப்பதாகக் கேள்வி. அவரோ அவர் குடும்பத்தாரோ இங்கு வந்ததேயில்லை. இரண்டாவது மகன் சிவகடாட்சம் மிகுந்த சிவப்பற்று உள்ளவர் என்றும் அவர் அகால மரணமடைந்து விட்டதாகவும் பேசிக் கொண்டார்கள்.

சிவன் சொத்து குலநாசம் என்பார்கள்.

சொத்தைக் கொடுத்த ஒரு குலமே அதை வீணடிக்கும் கொடுமையை என்ன சொல்வது?

நீலகண்டன் பெற்றோரை இழந்து தனியனாய் நின்றபோது அவருக்கு பதினாறு வயது. திக்குத் தெரியாமல் கலங்கி நின்றவரை கைநீட்டி அரவணைத்துக் கொண்டவர் மாமா சுந்தரேச குருக்கள். ஆனால் தனக்குப் பணிவிடை செய்யப் பணித்தவர் நஞ்சுண்டேஷ்வரரே.

மாமா பெண் கமலாம்பாளை மணந்து இங்கேயே செட்டிலாகிவிட்டார்.

ஒரு ஆண் மகவை ஆண்டவன் அருளியிருந்தால் கோவில் கார்யத்தில் உதவியிருப்பான். ஆனால் பிறந்ததோ பெண் மகவு.

வடிவுடையம்மனே தனக்குப் பிறந்திருப்பதாக எண்ணி வடிவழகி எனப் பெயர் வைத்து சீராட்டினார். வாய்த்த மாப்பிள்ளை திருச்செந்தூர் கோவிலில் பரம்பரையாய் பூஜிப்பவர்.

குடியிருக்கும் வீடும் கொஞ்சம் நிலமும் இருப்பதால் மானத்தோடு யாரிடமும் கையேந்தாமல் தன் வரையில் பார்த்துக்கொண்டு கோவிலையும் பராமரிக்கிறார்.

கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாகியும் குடமுழுக்கின்றி நிற்கும் கோவிலை நினைத்து அவர் வருந்தாத நாளே இல்லை.

இனியும் காலந்தாழ்த்துவதில் அர்த்தமில்லை.

“ஈசனே சீக்கிரமா இதுக்கொரு முடிவு கொடு”

மனம் கலங்கி நிற்கும் குருக்களை ஆறுதல் படுத்த ஆரம்பித்தார் ஓதுவார் சம்பந்தம்.

“குருக்களய்யா! மனசை விடாதீங்க.உங்களுக்குத் தெரியாததா?

தானே விரும்பி இங்கே எழுந்தருளியிருக்கிற பரமேஸ்வரனுக்கு எப்போ மௌனமா இருக்கணும் எப்ப விஸ்வரூபம் எடுக்கணும் னு தெரியாதா?

ஏதோ காரணத்தினாலதான் அமைதியா இருக்கார் னு நீங்க தானே சொன்னீங்க.”

“ஆமாம் சம்பந்தா! மறுபடியும் இந்த கோவில் பழையபடி பிரசித்தமாகும்.

அது சர்வ நிச்சயம்.ஆனால் எனக்கு தள்ளாமை அதிகமாயிட்டு. யார் யாரோ அனுபவிச்சுகிட்டு இருக்கிற சொத்தையெல்லாம் மீட்டு கோவிலை புனருத்தாரணம் செய்ய ஒருத்தர் வருவாங்க னு உள்மனசு சொல்லுது.”

அது வரைக்கும் நான்….

“இருப்பீங்க ஐயா.உங்களைத் தேடி சிவகிருபை பெற்ற அந்த ஒருத்தன் வருவான்..”

கோவிலின் ஏராள சொத்தை எவனோ அனுபவித்திருக்க வருமானமேயில்லா குருக்களின் சொந்தக் காசில் ஒரு வேளை தீபத்துக்கும் பிரசாதத்துக்கும் வழி செய்து கொண்டிருக்கும் ஈசன்

நிலையை மாற்றும் ஒருவனை தன் பக்கம் வரவழைக்க என்ன மாயம் செய்யப் போகிறாரோ?

நஞ்சுண்டபுரத்தில் நடக்கும் இந்த சம்பாஷணைகள் பற்றி எதுவும் தெரியாமல் அங்கே வர கிளம்பிக் கொண்டிருந்தான் விபுலானந்தன்.

சென்னையின் முக்கிய இடமான போக் ரோடில் இருக்கும் அந்த பங்களாவில் நெய்யும் முந்திரியும் மணக்க தடபுடலான காலை உணவு தயாராகிக் கொண்டிருக்க,தன் தோள்பை சகிதமாக எங்கோ கிளம்ப தயாராகி நிற்கும் மகனைப் பார்த்து திகைத்தார் சாரதா, அந்த வீட்டின் எஜமானி.

நேற்று ராத்திரி தான் ஊரிலிருந்து வந்தே. இப்ப மறுபடியுமா? ஒரு மாசம் என்கூட இருக்குறாத் தானே சொன்ன? ஒரு நாளும் உன்னை நான் கிளம்ப விட மாட்டேன்- கோபமாக சொன்ன தாயைக் கனிவோடு பார்த்தான் விபுலானந்தன்.

நான் என்ன அம்மா செய்வேன்? திடீர்னு என் ப்ரெண்ட்.. அதான் மன்னார்குடியில் இருந்து வருவாளே..ஸ்வர்ணா..அவள் தான்! போன் செஞ்சு கூப்பிடறாளே?

என்னது மன்னார்குடிக்காரியா.. ஒரு கணம் நெற்றியை சுருக்கி யோசித்தவர் தன்னுடைய நிலத்தில் கிடைச்சதா 1000 பொற்காசுகள் கொண்ட ஒரு புதையலை அரசாங்கத்திடம் ஒப்படைத்தவள் தானே என்றவர்.

இந்த காலத்தில் இப்படியொரு பெண்! எத்தனை தேசபக்தி!

என வியந்து கொண்டார்.

ஆமாமா அவளேதான் அவ ஒப்படைத்த பொக்கிஷத்தில் 990 காசு தான் இருந்தது கூடவே ஒரு ஓலைச்சுவடி .அதிலுள்ள விவரப்படி மீதமிருக்கிற இருக்குற காசும் வேற சில ரகசியங்களும் விடமுண்ட சிவனிடத்தில் இருக்கறதா எழுதியிருக்கு அந்த சிவனைத் தேடித்தான் அலைஞ்சுகிட்டிருக்கேன்.

அந்தக் காசில் இருதலையுள்ள ஒரு பறவை இலட்சினை இருக்கு.

அதே இலட்சினை உள்ள ஒரு கோவிலைப்பற்றிய விபரம் அவளுக்கு கிடைச்சிருக்கு. அவளோட கோ சிஸ்டரோட ப்ரெண்ட் ஹஸ்பண்ட் வெங்கட் ஜமீன் பரம்பரையாம்.வெங்கட்டின் மூதாதையர் யாரோ கட்டிய சிவன் கோவில் நஞ்சுண்ட புரத்தில் இருக்காம்.அங்கே நான் உடனே போகணும் மா.ப்ளீஸ் மா.இரண்டே நாளில் வந்திடுவேன்.

“நந்தா! நான் என் குழந்தைதளோட சந்தோஷமா இங்கே இருக்கணும் னு உங்க தாத்தா பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு இது. ஆனா என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அப்பா பிசினஸ் அது இதுன்னு சிங்கப்பூர்ல போய் செட்டில் ஆக வச்சுட்டார். நீயும் உன் தம்பியும் சிங்கப்பூரில் வளர்ந்தீங்க. அவருடைய இறப்புக்கு அப்புறம் என்னோட தனிமையைப் போக்கறதுக்காகவாவது இங்கே வந்திடணும் னு நினைச்சேன். நீயும் உன் தம்பியும் பிஸினஸில் ஈடுபாடு காட்டல. எல்லாத்தையும் விட்டு இங்கே வந்தாச்சு.

உன் விருப்பப்படி தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை நீ தேர்ந்தெடுத்தே.

உன் தம்பி குமாரநந்தனோ ஐடி தான் பெரிசுனு பெங்களூரில் போய் உட்கார்ந்திருக்கான்.

இத்தனை பெரிய வீட்டுல தன்னந்தனியா நான் எத்தனை நாள் வெறிச்சு உட்கார்ந்திருக்கிறது.ஒரு மகள் இருந்தாலாவது என் மனசைப் புரிஞ்சு என்னோட இருந்திருப்பா.இந்த வயதில் யாருமில்லாத தனிமை என்னை வாட்டுது.”

நந்தனுக்கும் அம்மாவைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.ஆனால் அதைவிட முக்கியமான பணி அவனுக்கிருக்கிறதே.

“நீங்க சொல்றது புரியுது மா.இரண்டு நாள் மட்டும் அனுமதி கொடுங்க.சுவடியில் இருக்கிற கோவில் இது தானானு பார்த்துட்டு வந்திடறேன்.நிச்சயமா ஒரு மாதமாவது உங்க கூட தங்கி உங்க கையால சாப்பிட்டு ஓய்வெடுக்கிறேன்.”

“இந்தக் கதையெல்லாம் வேண்டாம். பேசாம நீயொரு கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு முடிச்சப்புறம் தான் உன் தம்பிக்கு பார்க்கணும். பேரக்குழந்தைகளைப் பார்த்துகிட்டு நானும் அக்கடானு இருப்பேன்.”

“சரி மா.இப்ப என்னைப் போக விடுங்க. ஒரு வேளை நான் போகிற ஊரில் உங்களுக்கு மருமகள் கிடைச்சாலும் கிடைக்கலாம்.'”

அம்மாவை சமாதானப்படுத்த அவன் வாய்க்கு வந்ததைக் கூற ஈசானிய மூலையில் கௌலி அடித்தது.

சிவ! சிவ..! கன்னத்தில் போட்டுக் கொண்ட சாரதாவுக்கு மயிர்கூச்செறிந்தது.

இது தான் ஈச்வர சங்கல்பமோ?

அதன் பின் சாரதா மறுப்பேதும் சொல்லவில்லை.

அம்மாவை சமாளித்து விட்ட மகிழ்ச்சியில் உற்சாகமாகக் கிளம்பினான் நந்தன்.

மன்னார்குடிக்கு போன்பண்ணி போகும் வழி தெரிந்து கொண்டவன் தட்டுத்தடுமாறி நஞ்சுண்டபுரத்துக்கு வந்து சேர்ந்த போது சாயங்காலமாகி விட்டது.

நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே தள்ளி இருந்தது அந்த ஊர்.

சுற்றிலும் மாந்தோப்புகளும் வயல்வெளிகளுமாய் பசுமை சூழ்ந்திருக்க நகரத்தின் மாசுபடியாமலிருந்தது.

அவனுடைய காரைக் கண்டதும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வியப்போடு பார்த்தார்கள்.கோவிலுக்கு வழி கேட்டதும் அசுவாரஸ்யமாக கைகாட்டினார்கள்.

சிற்பக்கலையின் சரியான சாத்திரங்களோடு எழுப்பப்பட்டிருந்த கோபுரம் பராமரிப்பின்றி மங்கியிருந்தாலும் கன கம்பீரமாய் நின்றது.

சுற்று மதில்கள் வெடித்து ஆங்காங்கே விரிசலோடு அரச மர வேர் பதித்துக் கிடந்தது.உள்ளே நுழைய முடியாதபடி நெருஞ்சி முள் மண்டிக் கிடக்க,

இப்படியொரு பொக்கிஷத்தைப் பாழடித்து வைத்திருக்கிறார்களே என்றெண்ணியபடியே கோவிலுக்குள் நுழைய முற்பட, மதிலோரம் உயர்ந்து கிளைபரப்பி நிற்கும் நாகலிங்க மரத்திலிருந்து ஒரு மலர் அவன் தலையில் விழுந்து உள்ளங்கையில் ஐக்கியமானது.

“அட..சிவமலர் கிடைச்சுதா? பத்திரமா வச்சுக்க.

விடத்தை எடுத்திட்டா நாகம் வெறும் கயிறு தான்.அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டான்..”

அரையாடையோடு பைத்தியக்காரன் போலிருந்தவன் நந்தனைப் பார்த்து கூச்சலிட்டான்.

அப்போது தான் சாயரட்சை பூஜைக்காக பாலோடு வந்த நீலகண்ட குருக்கள்

“சன்னாசி! சாயந்திர வேளையில் கோவில் வாசலில் நின்னு யாரையும் பயமுறுத்தாதே. வீட்டுக்குப் போ!” என

அந்த பைத்தியக்காரனை விரட்டியவர்

ஆறடி உயரத்தில் தீட்சண்யமான கண்களோடு திடகாத்திரமான உருவோடு கையில் நாகலிங்க மலரேந்தி நிற்கும் நந்தனைப் பார்த்து திகைத்தார். யாரிவன்?

காலையில் செய்த வேண்டுதலுக்குப் பலன் கிடைத்தேவிட்டதோ? ஜமீன் வாரிசோ என யோசித்துக் கொண்டிருக்க

நந்தனோ கையிலிருந்த நாகலிங்க மலரை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

சிவமலர் …இதுவும் இதற்குப் பொருத்தமான பெயர் தான்.

அவனுள் ஒரு சிலிர்ப்பு எழுந்தடங்க

இரு கண்கள் அவனை உக்கிரமாய் பார்த்துக் கொண்டிருந்தன.

(மொட்டு விரியும்)

மொட்டு – 2 >

கமலகண்ணன்

1 Comment

  • மிக அற்புதமான தொடக்கம்.எழுத்தாளருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்… நட்புடன் எழுத்தாளர் பெண்ணாகடம் பா. பிரதாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...