73ஆவது குடியரசு தினத்தில் 73 தகவல்கள்

 73ஆவது குடியரசு தினத்தில்          73 தகவல்கள்
  1. இந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிசம்பர் 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது.  அதன் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரச் சட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
  2. 1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார்.
  3. இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை அரசியல் நிர்ணய சபை 1949 நவம்பர் 26ல் ஏற்றுக்கொண்டது.
  4. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது பிரிட்டிஷ் அரசு டொமினியன் அந்தஸ்துதான் அளித்தது.
  5. பிரிட்டிஷ் மன்னரால் நியமனம் செய்யப்பட்ட கவர்னர் ஜெனரல்தான் இந்தியாவின் தலைவராக இருந்தார்.
  6. சுதந்திரம் கிடைத்த பின், லாகூர் மாநாட்டுத் தீர்மானத்தின்படி, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் நவம்பர் 26, 1949ல் அறிமுகப்படுத்தப்பட்டு  ஜனவரி 26, 1950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. இத்தினம் பூரண சுயராஜ்ய நாளாக – அதாவது குடியரசு தினமாக ஆண்டுதோறும் ஜனவரி  26 குடியரசு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
  7. பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.
  8. இந்திய புவியியல் அடிப்படையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த பெரிய தீபகற்ப நாடாகும் இந்தியா.
  9. இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடிக்கும் மேலாக மதிப்பிடப்பட்டு, உலக நாடுகளில், இந்தியா மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கிறது இந்தியா.
  10. இந்தியாவின் தொழிலாளர் படை 516.3 மில்லியன் அளவில் உள்ளனர். இது உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர் படை ஆகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது.
  11. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
  12. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் (Energy Information Administration) கணக்கீட்டின்படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
  13. இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350 – 400 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள்.
  14. உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு.
  15. இந்தியாவில் வாழும் 40% மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.
  16. இந்தியாவின் பொருளாதாரப் பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகரவாசிகளுக்கும், கிராமவாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது.
  17. உலக நல அமைப்பின்படி 9 லட்ச இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் கெடுநீர் ஆவதாலும், கெடுதியான காற்றை சுவாசிப்பதாலும் உயிரிழக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
  18. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. தமிழ், சமஸ்கிருதம் ஆகியன செம்மொழித் தகுதி பெற்ற இந்திய மொழிகளாகும். மரபாக செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாக செம்மொழிக்கான வரையறையை வகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  19. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 80 கோடிக்கும் மேலான இந்தியர்கள் (80.5%), இந்துக்கள் ஆவர்.
  20. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.
  21. இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஜே. & கே. மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியத் தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகளாகும். 
  22. 1956ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வடஇந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. மார்ச், 2020 அன்று இந்தியாவில் 734 மாவட்டங்கள் உள்ளது.
  23. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் 
    ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக (UT) பிரிக்கப்பட்டுள்ள ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடைமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
  24. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கை களை, தவறான அதிகாரப் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்கக்கூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றி கட்டமைக்கப்பட்டுள்ளன.
  25. இந்திய நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருக்கின்றார். எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச் சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவரும் நாடாளுமன்றம் மற்றும் மாநில, பிரதேச சட்டமன்றங்களின் உறுப்பினர்களால் ஐந்து ஆண்டு களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  26. செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீ கரிப்பார்.
  27. இந்திய நாடாளுமன்றம் இரு சட்ட அவைகளைக் கொண்டுள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
  28. மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒருமுறை தேர்த லுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
  29. மக்களவை, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக் கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
  30. இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உச்ச நீதிமன்றம் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையான பிரச்சினைகள் தொடர்பாக ஆள்வரை உண்டு. மேலும் மேன்முறையீடு ஆள்வரையும் உயர் நீதிமன்றங்கள் மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்குப் பொதுவாகவும் 18 உயர் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
  31. 1916-ல் திலகரும், அன்னி பெசண்டு அம்மையாரும், காங்கிரசின் பிளவு இயக்கமாக ‘ஹோம் ரூல்’ இயக் கத்தை ஆரம்பித்தனர். அடுத்து 1923-ல் காங்கிரஸ் அதிருப்தியாளர்களான நேருவின் தந்தை மோதிலால் நேருவும், சி.ஆர்.தாசும் சுய ராஜ்யக் கட்சியைத் தொடங்கினர்.
  32. “நாட்டில் நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: உள்ளன. இவற்றில் பெரும்பாலானாவை தேர்தலில் போட்டியிடாதவை. இப்படிப்பட்ட ‘லெட்டர் பேடு’ கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தேர்தல் கமிஷனர் யோசனை தெரிவித்தார் (17-11-09).
  33. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதலாவது பொதுத்தேர்தல் 1952-ல் நடந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 73 மட்டுமே. பின்னர் 2008-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 1,100. இவற்றில்  தேசிய  கட்சிகளாக  7  கட்சிகளும்,  மாநிலக்  கட்சிகளாக 49ம் அங்கீகரிக்கப்பட்டன.
  34. மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளால் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் 10% பேர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 738 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 63 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தேசிய அளவில் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆராயும் தன்னார்வத் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. (2009 மார்ச் 25)
  35. உலகில் அதிக அரசியல் கட்சிகளைக்கொண்ட நாடு இந்தியா. “நாடு முழுவதும் சுமார் 1200 அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ளன” என 2009 ஜூன் 26ல் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார்.
  36. இந்தியாவில் எல்லா வகையான ஊழல்களுக்கும் தாயாக இருப்பது தேர்தல் மற்றும் அரசியலாகும். ஐந்து ஆண்டுகளில் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ரூ.7000 கோடி செலவிடுவதாகவும் அதற்காக அவை ரூ.70,000 கோடி வசூல் செய்வதாகவும் இந்தத் தொகையை அதிகாரிகள் மூலமாகத் திரட்டும்போது மேலும் பலமடங்கு திரட்டப்படுவதாகவும் ‘லோக் சத்தா’ என்ற அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
  37. முன்னாள் பிரதமர்கள் பிரதமர் தேவகவுடா 13 கட்சிகளை வைத்து திணறினார். அடுத்து வாஜ்பாய் 19 கட்சிகளை வைத்துச் சமாளித்தார். இதைவிட ஒரு கொடுமை. வாஜ்பாயி அரசு 13 நாட்கள் மட்டுமே (16-5-96 – 25-5-96) அரசாண்டது. ஒரு ஓட்டில் வாஜ்பாய் (மத்திய) அரசு கவிழ்ந்தது ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதற்குக் காரணம் கட்சிகளிடையே நிலையான கொள்கை இல்லாததுதான். இதையடுத்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியானது.
  38. இந்தியாவில் 1998-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் 177. ஜனத்தொகை 96 கோடி. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 89 கோடி. இதில் லோக் சபா தேர்தலின்போது 37 கோடி மக்கள்தான் ஓட்டளித்தனர். ஓட்டளிக்காதவர்கள்  52 கோடி. பிறகு எப்படி ஒரு தேசியக் கட்சி மெஜாரிட்டி பெற முடியும்
  39. 177 கட்சிகளில்  மக்களவைக்குள் நுழைந்த கட்சிகள் 38 மட்டுமே. 139 கட்சிகள் ஒரு சீட் கூட பெற முடியவில்லை. 12 கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
  40. இந்திய அரசியலில் ஓர் அதிசயம். மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நிருவேந்திர சக்கரவர்த்தி திரிபுரா மாநில முதலமைச்சராக 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவிட்டு பதவியிலிருந்து இறங்கியபோது, தாம் தங்குவதற்குச் சொந்த குடிசைகூட இல்லாதவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  41. லண்டனில் உள்ள ‘காமன்வெல்த் பவுண்டேசன், ஓர் ஆய்வினை இந்தியாவில் நடத்தியது. “இந்தியாவில் குடிமக்களுக்கு எந்த மரியாதையும் கிடையாது. அரசாங்க அதிகாரிகள், அதுவும் கீழ்நிலையில் உள்ள அலுவலர்கள் மக்களை ஏளனமாக ஓர் அடிமை போல் பார்க்கின்றனர். மக்களோ அரசாங்க அலுவலகத்தைத் தங்கள் எஜமானர்கள் என எண்ணி மிரளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் விளைவாக அரசாங்கத் திற்கும் மக்களுக்கும் ஒரு நீண்ட இடைவெளி உருவாகியுள்ளது. இதனை அரசியல் இடைத்தரகர்கள், கட்சிக்காரர்கள் பயன்படுத்தி மக்களைச் சுரண்ட ஆரம்பித்து விட்டனர்” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
  42. 340 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன், இந்தியாவின் அதிகச் சொத்து வைத்திருக்கும் கட்சி என்ற பெருமையைப் பெறுகிறது காங்கிரஸ்.
  43. ஒரு கட்சியின் மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்து தொடர வேண்டுமெனில், லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் குறைந்தபட்சம் 6%  ஓட்டுகளை அக்கட்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகரிக்க அக்கட்சி குறைந்தது 4 மாநிலத்தில் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  44. ஏறத்தாழ 7500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை உடைய இந்தியாவில் இப்போது 12 பெரிய துறைமுகங்கள் உள்ளன. அலைகடல் ஓரங்களில் 3,200 மீனவ கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களைச் சேர்ந்த 35 லட்சம் பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏறத்தாழ 4 கோடி மீனவர்கள் கடலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துகின்றனர்.
  45. ஆண்டுதோறும் சுமார் ரூ. 7000 கோடி அன்னியச் செலவாணியைப் பெற்றுத்தரும் கடல்மீன்களுக்குப் பாதிப்பு ஏற்படாதா?
  46. இந்தியக் கடலுக்குள் ஒரு நாளைக்கு 1600 மில்லியன் டன் சாக்கடை மண் கலக்கிறது. தொழில்துறை கழிவுகள் 50 லட்சம் மில்லியன் டன்னும், மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 23 கோடி லிட்டர் தொழிற்கழிவுகளும் கடலில் கலக்கின்றன. சாக்கடை நீர் 220 கோடி லிட்டர் கலக்கின்றன. இவை போதாதென்று வெளிநாட்டுக் கதிர்வீச்சுக் குப்பைகளைக் கப்பல்களில் ஏற்றி வந்து கொட்டிவிட்டுப் போகிறார்கள்.
  47. ‘சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் 8 ஆயிரம் கோடி டாலர் முதலீடு. (2.88 லட்சம் கோடி) இதை மீட்டால் ஏழை இந்தியனின் தலையில் சுமத்தப்பட்டுள்ள கடன் சுமை குறையும் (15-2-97)
  48. உலகில் 1998ல் 32 நாடுகள், பெரும் கடனாளி நாடுகளாக உள்ளன. இதில் இந்தியாவும் அடங்கும். (அந்த 32 நாடுகளில் 25 நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள்.)
  49. மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனையால் தினமும் ரூ.92 கோடி நஷ்டம். இது தொடருமானால் இந்த நிதியாண்டில் (2009-10) ஐ.ஓ.சி. எதிர்கொள்ளும் நஷ்டம் ரூ.25,440 கோடியாக இருக்கும். பாரத் பெட்ரோலிய நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த நஷ்டம் ரூ.45,160 கோடியாக இருக்கும். சரி இதற்குத் தீர்வு என்ன? “நஷ்டத்திற்கு ஈடாக கடன் பத்திரங்களை வெளியிட்டு, ஈடுகட்டிக் கொள்ளலாம்” என மத்திய அரசு (17-11-09) அறிவித்துள்ளது.
  50. இந்தியா ஆண்டுதோறும் 3 லட்சம் கோடி கடன் வாங்கி வருகிறது. 2010ம் ஆண்டு மார்ச்சுக்குள் இந்தப் பொதுக்கடன் ரூ. 34 லட்சத்து 6 ஆயிரத்து 322 கோடியாக உயரும். தற்போதைய மக்கள் தொகை 115.40 கோடி. இதன் அடிப்படையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் சராசரி கடன் ரூ. 30 ஆயிரமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.” (18-2-09 நாளிதழ்)
  51. இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலருக்கு மேல் இருக்கும் எனக் கூறப்படு கிறது.
  52. 1994 ஆகஸ்டு நிலவரப்படி- இந்தியா வெளிநாட்டுக் கடன் 2 லட்சத்து 66 ஆயிரம் கோடி. நம்நாட்டு ஜனத்தொகை 80 கோடி. ஒரு தலைக்கு ரூ.2700 கடன் இருந்தது. 1997-98 அரசின் திட்டம் சாரா வருவாய் வகைச் செலவாகிய ரூ. ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 854 கோடியில் ரூ.68 ஆயிரம் கோடி. அதாவது 46.6% கடந்த காலக் கடனுக்கு வட்டியாக மட்டுமே போய்விடும். இத்தகைய விரயத்தைத் தவிர்க்க வேண்டுமென் றால் நமது வரிக் கொள்கைகளில் மாற்றம் தேவை. செல்வந்தர்களும், பெரும் தொழில் மற்றும் இதர லாபமீட் டும் நிறுவனங்களும் உரிய பங்கினை வரியாகச் செலுத்துவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
  53. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தொகை ஒன்றரை லட்சம் கோடி. இதில் ஓசையின்றி ரூ.15 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. கடனைத் திருப்பிச் செலுத்தவேண்டும் என்ற எண்ணம் கடன் பெற்ற வர்கள் மனதில் உருவானால் மட்டுமே முடங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வாராக் கடனை வங்கிகள் திரும்பப் பெற வழி பிறக்கும். வங்கி வாராக்கடன் 1.5 லட்சம் கோடி (3-11-09)
  54. 70% இந்தியர்கள் விவசாயம் சார்ந்து வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களில் 70% பேரும் வறுமையில் உழல்கிறார்கள்.
  55. இந்தியாவின் மக்கள் தொகை 2050-ம் ஆண்டில் 175 கோடியாக உயரும். அப்போது அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமானால் உற்பத்தி இருமடங்காக அதிகரிக்க வேண்டும். வேளாண் பரப்பு இப்போதுள்ள 60 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 114 ஹெக்டேராக விரிவுபடுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் இன்றே திட்டமிட்டால்தான் நாளை நடைமுறைப்படுத்த முடியும்!
  56. நாட்டில் 50% விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுவதாக அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. தமிழகத்தில் 74.5% விவசாயிகள் கடன் பளுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 8.93 கோடி விவசாயி களில் 4.34 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு (48.6%) கடன் தொல்லை உள்ளது. ஆந்திரா  முதலிடத்திலும், தமிழ்நாடு 2-ம் இடத்திலும் உள்ளது என மத்திய வேளாண்துறை அமைச்சர் 2011 செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் என்கிறோம். ஆனால் அவர்கள் நிலை பரிதாபமாக உள்ளது.
  57. “இந்தியாவில் மட்டும் 9 கோடி விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இதில் 4.3 கோடி விவசாயக் குடும்பங்கள் அதாவது 48.6% பேர் மீள முடியாத கடன்சுமையில் அழுந்தியுள்ளனர்” என்கிறது நேஷனல் சாம்பிள் சர்வே அமைப்பு தரும் புள்ளிவிவரம்.
  58. உலகத்திலேயே எந்த நாடும் ‘இந்தியா அளவுக்கு வட்டி கட்டியது இல்லை. அதனால் உலக வங்கியின் நம்பர் ஒன் வாடிக்கையாளர் இந்தியாதான். பொதுசுகாதாரம், குடிநீர், மேம்பாலம் கட்டுதல் போன்ற 60 வகையான வளர்ச்சிப் பணிகளுக்கு உலக வங்கி கடன் உதவி செய்கிறது. வாங்கித் தள்ளுகிறார்கள்.
  59. கடந்த ஆண்டு ஏப்ரல் – செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.13.3 லட்சம் கோடியாகி உள்ளது. (2-1-11)
  60. “கடன் தொல்லை காரணமாக நம் நாட்டில் 12 மணி நேரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள் கிறார். 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் இந்த அவலநிலையைப் போக்க, மத்திய – மாநில அரசுகள் பெரிய அளவில் திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை” என விவசாய நிபுணர்கள் 2011 மார்ச் 13 அன்று கவலை தெரிவித்துள்ளனர்.
  61. இந்தியாவில் தற்போது நிலவும் வறுமையைப் பாதியாகக் குறைக்க இன்னும் 50 ஆண்டுகள் ஆகும். விவசாயத் துறையில் பெருமளவில் முதலீடு செய்யாததும், விவசாயிகள் கடன் தொல்லையில் அவதிப்படு வதும் காரணம் என லண்டனைச் சேர்ந்த ‘ஆக் ஷன் எய்டு’ என்ற  நிறுவனம் ஆய்வு செய்து இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
  62. ஏர் இந்தியா நிறுவனம், 67 ஆயிரம் கோடி ரூபாய் நிதி இழப்பு மற்றும் கடன் சுமையால் தத்தளிக்கிறது (18-7-11 நாளிதழ்). மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு இனியும் கடனுக்கு பெட்ரோல் (ஏ.டி.எப்.) அளிக்க இயலாது எனக் கூறியது. கூறியது யார்? அதே மத்திய அரசு நிறுவனங்கள்தான். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ. 2700 கோடி கடன் பெற்றுள்ள தால்  எரிபொருள் வழங்கப்படவில்லை. எனவே 60 விமானங்கள் 2011 ஜூன் 2-ம் தேதி ரத்து செய்யப்பட்டன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் 320 விமானங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  63. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் ‘‘வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை கட்சிகள் மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும். வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளிற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாளிதழ் அல்லது ஊடகங்களில் வெளியிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
  64. வெளிநாடுகளில் அதிகபட்சமாக 3 அல்லது 4 கட்சிகளே இருக்கும். இதனால் மக்கள் குழப்பமின்றி வாக்களிக்க முடியும். ஆனால் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புதுக் கட்சி உருவாகிக்கொண்டிருக்கின்றன.  2019 மார்ச் 9ஆம் தேதி வரை இந்தியாவில் 2293 கட்சிகள் உள்ளன என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் அங்கீகரக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7, மாநிலக் கட்சிகள் 59, தமிழகத்தில் மடுடும் 15 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளன.
  65. இந்தியா, 1947-ம் ஆண்டு சுதந்திர நாடான போதும், அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் கழித்து 1951-1952-ல்தான் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது இருந்த மொத்த வாக்காளர்கள் சுமார் 17 கோடி. இவர்களில், சுமார் 8 கோடி பேர் வாக்களித்தார்கள்.
  66. 60 ஆண்டுகள் கழித்து, 2014-ல் நம் நாட்டில் இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81.4 கோடி. தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்கும், அதாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் சேர்ந்துகொள்கிறார்கள். இதனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையுடன் முதல் இடத்தில் இருக்கிறோம்.
  67. அரசியல் சாசனம் பிரிவு 326-ன் படி, குறிப்பிட்ட வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க உரிமை உடையவர்கள். தொடக்கத்தில் 21 வயது நிரம்பியவர்கள்தான் வாக்களிக்க முடியும் என்று இருந்தது. பிறகு 1989-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, 61-வது திருத்தம் மூலம், வாக்களிக்கும் வயது 18 ஆக குறைக்கப்பட்டது. இதுவரை நடந்த பொதுத்தேர்தல்களில், 2019-ம் ஆண்டில், அதிகபட்சமாக 67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதாவது மூன்றில் ஒரு பங்கினர் பொதுத்தேர்தலில் பங்கேற்பதில்லை. இது மிகவும் வருந்துதற்குரிய செய்தி.
  68. இந்த விஷயத்தில் சிலர், ‘கட்டாய வாக்களிப்பு’ குறித்து பேசி வருகின்றனர். நமது சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும் இந்த கோரிக்கை. வாக்களிக்க ஒருவருக்கு உரிமை இருப்பது போலவே, வாக்களிக்காது விலகி நிற்கவும் ஒருவருக்கு உரிமையுண்டு.
  69. வாக்காளர் பதிவேடு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருகிறது. அரசியலமைப்பு சட்டம் பிரிவு 324-ன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலையாய பணிகளில் இது ஒன்று.
  70. தேர்தல் களத்தில், கைவிரலில் மை வாங்கி, வாக்களிப்பதோடு, ஒரு வாக்காளரின் ‘ஜனநாயக கடமை’ முடிந்து போகிறது. அதன் பிறகு அரங்கேறும் எந்த ஆட்டத்திலும் வாக்காளருக்கு, ‘மவுன பார்வையாளர்’ என்கிற ‘பெருமை’ மட்டுமே மிஞ்சுகிறது.
  71. ‘ஜனநாயகம்’ உயிர்ப்புடன் இருக்க முழுமுதற்காரணி, ஒரே அடிப்படை காரணி வாக்காளராகிய பொதுமக்களின் பங்களிப்பு. நமது அரசியலமைப்பு சட்டமே கூட. ‘நாமாகிய இந்திய மக்கள்’ நமக்கு நாமே அளித்துக்கொண்ட, மக்களின் ஆவணம்தான். இப்படி இருக்க, வாக்காளர்களை வெறுமனே பார்வையாளர்களாக வைத்து, ‘தேர்தல் திருவிழா’ என்கிற கிளுகிளுப்பை கொண்டு மக்களை மகிழ்விக்கிற போக்கு முற்றிலுமாக மாறட்டும்.
  72. பொதுமக்கள், அரசுகள், தேர்தல் ஆணையம் மூவரும் சம அதிகாரத்துடன் இணைந்து செயல் புரிதல் வேண்டும். இதற்கு வழி கோலட்டும்,.
  73. இந்தியா கடந்துவந்த பாதைகள் கரடுமுரடானவை. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று போன காலம் போகட்டும். இனியாவது நல்ல ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். அடுத்த குடியரசுக்குள்ளாவது முழுமை யான லோக்பாலை அமல்படுத்துவோம். லஞ்சம் இல்லா இந்தியாவை உருவாக்குவோம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...