பயணங்கள் தொடர்வதில்லை | 7 | சாய்ரேணு
7. பாட்டரி விளக்கு
“காணுமா? என்ன சொல்றீங்க?” என்று குழம்பிய தர்மா “முதல்ல உட்காருங்க. என்ன நடந்ததுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” என்றான்.
“அதுக்கெல்லாம் நேரமில்லை சார். அவங்களைக் காணோம்! திடீர்னு விழிப்பு வந்தது. பார்த்தா… பர்த் எம்டியா இருக்கு! எங்கிட்ட சொல்லாம எங்கியும் போக மாட்டாங்க சார்! சரி, ரெஸ்ட் ரூம் போயிருக்காங்களோன்னு அங்கேயும் போய்த் தேடினேன். அங்கெல்லாம் இல்லை சார்…” ஷான் அழுதுவிடுவாள் போல் காணப்பட்டாள். கையில் பாட்ட்டரி விளக்கு வைத்திருந்தாள்.
“டென்ஷன் ஆகிக்காதீங்க! இந்தக் கோச்சில் வரவங்க எல்லோருமே அவங்க ரிலேட்டிவ்ஸ் தானே? யாரோடையாவது பேசிட்டிருப்பாங்க, வந்துடுவாங்க” என்றான் தர்மா.
“ஷான், உங்ககிட்ட ரெண்டு மொபைல் இருந்ததைப் பார்த்தேனே, அதில் ஸ்ரீஜாவோட மொபைல் கேபின்ல இருக்கா, பார்த்தீங்களா?” என்று திடீரென்று கேட்டாள் தர்ஷினி.
“இ… இல்லை. அந்த ரெண்டு மொபைலுமே மேடமோடது தான். ஆனா என்கிட்ட தான் எப்போதும் இருக்கும். கால் வந்தா நான் எடுத்துப் பேசிட்டு, மேடம் கண்டிப்பா பேச வேண்டி வந்தா அவங்ககிட்ட தருவேன்” என்றாள் ஷான்.
“சரி வாங்க, உங்க கேபினுக்குப் போகலாம். இதுக்குள்ள ஸ்ரீஜா அங்கே வந்திருக்கலாம்” என்று எழுந்தாள் தன்யா.
ஷான் முன்னால் செல்ல, தர்மா, தன்யா, தர்ஷினி பின்னால் சென்றார்கள். போகும்போதே வழியில் வரும் கேபின்களைப் பார்த்துக் கொண்டார்கள் – விளக்கு எரிகிறதா, பேச்சுக் குரல் கேட்கிறதா என்றெல்லாம்.
நிசப்தம்.
“என்ன இவ்வளவு சைலண்ட்டா இருக்கு? ட்ரெயின் சத்தம்கூடக் கேட்கலை?” என்று முணுமுணுத்தாள் தன்யா.
“ட்ரெயின் நகரலை. நின்னுட்டிருக்கு” என்றாள் தர்ஷினி அதே தாழ்ந்த குரலில்.
“ஸ்டேஷனா? மணி அஞ்சரையாச்சு. தெனாலி வந்திருக்கும் இப்போ. ஆனா அங்கே இவ்வளவு நேரம் நிற்காதே” என்று நெற்றியைத் தேய்த்தான் தர்மா.
அதற்குள் கூப்பே வந்திருந்தது. அமைதியாக, நேர்த்தியாக இருந்தது. பர்த்தில் விரிக்கப்பட்டிருந்த படுக்கைகூட அத்தனை அதிகமாகக் கலையவில்லை.
“நான் அப்பர் பர்த்தில் படுத்திட்டிருந்தேன். அஞ்சு மணிக்கு எழுந்து பார்த்தேன், மேடம்மைக் காணும். சரி, வந்துருவாங்க, வந்துருவாங்கன்னு வெயிட் பண்ணினேன். அரைமணி நேரமாச்சு, அதான் உங்ககிட்ட…” என்றாள் ஷான்.
“வெயிட். ஏன் எங்ககிட்ட வரணும்? ஏன் இங்க இருக்கற மற்றவங்க கிட்ட நீங்க போகலை? அவங்க எல்லோரும் சொந்தக்காரங்கதானே?” என்று கேட்டான் தர்மா.
“சார் நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. இங்கே வந்திருக்கறவங்க எல்லோரும் சங்கர் சாரோட ரிலேட்டிவ்ஸ். இவங்க ஸ்ரீனி சாரோட தங்கை” என்றாள் ஷான்.
தர்மா கண்களைக் கொட்டினான். “சாரி” என்றான். “அப்படியே இருந்தாலும், நீங்க சுப்பாமணி சார்கிட்டச் சொல்லியிருக்கலாமே. அவர்தானே இன்-சார்ஜ் இங்கே?” என்றான் தொடர்ந்து.
“அவர் அவரோட கூப்பேல இல்லை சார்” என்றாள் ஷான்.
மௌனம்.
மூவரும் ஷானை உற்றுப் பார்த்தார்கள்.
“அவர் கேடரிங் பே-க்குப் போயிருக்கலாம்னு நினைச்சேன் சார். அதான் உங்களை வந்து கூப்பிட்டேன்” என்றாள் ஷான்.
“ஓகே… ஸ்ரீஜா ஃபோன் இருக்கா பாருங்க” என்றாள் தர்ஷினி.
ஷான் மேல் பர்த்தைத் துழாவி “அவங்க பிஸினஸ் மொபைல் இதோ இருக்கு சார். பர்சனல் மொபைல் இல்லை” என்றாள்.
“சரி, இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியேறினார்கள்.
காரிடாரில் இருவர் அவர்களுக்காகவே காத்திருந்தார்கள். “சார், நாங்க ஸ்பெஷல் கோச் அட்டெண்டர்ஸ்” என்றார்கள்.
ஸ்பெஷல் கோச்சிற்கு அடுத்து அமைந்திருந்தது டைனிங்-கார். அதன்பின் இரண்டு கேபின்கள். பிறகு சின்னஞ்சிறிய லவுஞ்ச். கிச்சன். அதற்கும் அப்பால் கேடரிங் ஸ்டாஃப் தங்கும் கேபின்கள்.
“ஒரு பகல், ஒன்றரை ராத்திரி. அதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று வியந்தாள் தன்யா. அவர்கள் டைனிங் காரில் அமர்ந்திருந்தார்கள்.
“தமிழ்நாட்டின் லீடிங் இண்டஸ்ட்ரியலிஸ்ட்டோட்ட டாட்டர் கல்யாணம் இல்லையா மேடம்?” அவர்களோடு அமர்ந்திருந்த கேடரிங் அணியின் தலைவர். “இதோ, நாங்க வேலை ஆரம்பிச்சாச்சு. ஆக்சுவலா, ஆறரை மணிக்கு ஆரம்பிச்சா போதும்னு சொல்லியிருந்தார் சுப்பாமணி சார். ஆனா, நீங்க என்னை எழுப்பி விசாரிச்சதால, மறுபடி தூங்கறதைவிட வேலையை ஆரம்பிச்சுடலாமேன்னு…” ஏன் என் வேலையைக் கெடுக்கிறீர்கள் என்ற பாவம் தெரிந்தது குரலில்.
“அதெல்லாம் போகட்டும்” என்றாள் தர்ஷினி, கடிகாரத்தைப் பார்த்தவாறே. “சுப்பாமணி சாரை நீங்க இரண்டு மணிக்கு மேல எப்பவாவது பார்த்தீங்களா?”
“இல்லை மேடம், அந்த கெட்-டுகெதர்க்கு அப்புறம் சுப்பாமணி சார் இங்கே வரலை, அவரோட கூப்பேக்குப் போயிட்டார்” என்றார் கேடரிங் தலைவர். சரியாகத் தூக்கமில்லாத களைப்பும் கோபமும் கண்களில் தெரிந்தது.
“வண்டி மூணே முக்காலுக்கே நின்னுடுச்சா?” என்று கேட்டாள் தன்யா.
“ஆமா மேடம், ஓங்கோல் ஸ்டேஷன்லேர்ந்து கிளம்பினது, கொஞ்ச தூரத்திலேயே நின்னுடுச்சு. இங்கேயும் சிராலாலயும் நேற்றைக்குப் பூராவும் பயங்கர மழையாம். தண்டவாளம் பல இடத்தில் ப்ரேக் ஆகிருக்குன்னு தெரிஞ்சதால, இங்கேயே நிறுத்திட்டாங்க. தண்டவாளம் முழுவதும் செக் பண்றவரை வண்டி கிளம்பாதாம்” என்றார் ஒரு அட்டெண்டர்.
“சரி. ஸ்ரீஜா மேடம் விஷயமா எங்ககிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே” என்றதும் இரு அட்டெண்டர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு “வண்டி மறுபடி நின்னுட்டதும் எங்களுக்கு இன்ஃபர்மேஷன் வந்தது. அப்புறம் நாங்க கீழே இறங்கிப் பார்த்துட்டு, அஞ்சு நிமிஷத்தில் மறுபடி மேலே ஏறிட்டோம். நாலரை மணிவாக்கில் ஒரு இரயில்வே ஆஃபிஸர் வந்து, இந்த ஸ்பெஷல் கோச்சோட இன்-சார்ஜ் யாருன்னு கேட்டாங்க. நாங்க சுப்பாமணி சாரைத் தேடினோம். அவரைக் காணும்னதும் ஸ்ரீஜா மேடம்கிட்ட விஷயத்தைச் சொல்லிக் கூட்டிட்டு வந்தோம்.
“ஸ்ரீஜா மேடம் ஆஃபிஸரோட பேசினாங்க. உடனே கிளம்பி அவங்களோட போயிட்டாங்க” என்று முடித்தார் அட்டெண்டர்.
“அதுக்கு முன்னாடி என்ன நடந்தது? சுப்பாமணி சார் எப்போ இறங்கிப் போனார்?” என்று கேட்டாள் தன்யா.
“தெரியலை மேடம். நான் இந்த கோச் அட்டெண்டர். அவர் லவுஞ்ச் கோச் அட்டெண்டர். அங்கேயும் ரெண்டு கேபின் இருக்கு. இரண்டேகாலுக்கு நெல்லூர் வந்தது. அப்போ நாங்க ரெண்டுபேரும் இறங்கி ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்ம்ல நின்னுட்டிருந்தோம். அஞ்சு நிமிஷத்தில் மறுபடி உள்ளே வந்தபோது, எல்லோரும் தூங்கிட்டாங்க, கோச் அமைதியா இருந்தது. அதனால நாங்க லவுஞ்சிலேயே உட்கார்ந்து பேசிட்டிருந்தோம். அப்படி யாராவது கூப்பிட்டாலும், இங்கே டேப்லட்டில் நோட்டிஃபிகேஷன் வந்துடும். அதனால கொஞ்சநேரம் இங்கே ரிலாக்ஸ்டா உட்கார்ந்தோம்…”
தர்மா, தன்யா, தர்ஷினிக்கு உள்ளூரத் தவிப்பாக இருந்தது.
என்ன இது, இங்கே சாவதானமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்? ட்ரெயினிலிருந்து இருவர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைத் தேட எந்த ஸ்டெப்பும் எடுக்காமல்…
ஸ்ரீஜா போனது ரயில்வே ஆஃபீஸரோடுதானா? அவளை அழைத்துப் போக என்ன காரணம்?
இந்தச் சுப்பாமணி எங்கே போய்த் தொலைந்தார்? எப்போது போனார்?
*
“நீங்க ரெண்டுபேரும் இங்கேயே இருங்க. நான் ஸ்டேஷனுக்குப் போய் ஸ்ரீஜா எங்கே போனாங்கன்னு தெரியுதான்னு பார்க்கறேன்” என்றான் தர்மா.
“ஏன் நாங்க வந்தா என்ன? மணி ஆறைத் தாண்டியாச்சு” என்றாள் தன்யா.
“இன்னும் பொழுது விடியவே இல்லை. மழை வேற மறுபடி ஆரம்பிச்சுடுச்சு. நீங்க எதுக்கு இப்போ? நான் ஜஸ்ட் பார்த்துட்டுத்தானே வரப் போறேன்” என்றான் தர்மா.
“இந்த மாதிரித்தான் சுப்பாமணி, ஸ்ரீஜா ரெண்டுபேரும் போனாங்க, திரும்பி வரவேயில்லை” என்றாள் தர்ஷினி மெதுவாக.
அந்த அறையில் இருந்தவர்கள் எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“இங்கே என்ன நடக்குதுன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டீங்களா? இங்கே வேகவேகமா சில சம்பவங்கள் நடந்திருக்கு. ஒன்றேமுக்கால் மணிக்கு நாம எல்லோரும் தூங்கப் போனோம், ரெண்டேகாலுக்கு நெல்லூர் வந்தது. அங்கிருந்து கிளம்பியபோது இரண்டு கோச் அட்டெண்டர்களுமே லவுஞ்சில் போய் உட்கார்ந்துட்டாங்க. மூன்றேமுக்காலுக்கு ஓங்கோலிலிருந்து கிளம்பிய ட்ரெயின் ஸ்டேஷனைவிட்டு வெளியே போனதும் நின்னுடுச்சு. நாலரைமணி வாக்கில் ஸ்ரீஜா இரயில்வே ஆஃபீஸர்னு தன்னைச் சொல்லிக்கிட்ட ஒருத்தரோட இரயிலைவிட்டு வெளியே போனது கவனிக்கப்பட்டிருக்கு. அதே நேரம் சுப்பாமணி ட்ரெயினில் இல்லைன்னும் கவனிக்கப்பட்டிருக்கு. அவர் வெளியே போனாரா, வெளியேற்றப்பட்டாரா, யாருக்கும் தெரியாது…” பேசிக் கொண்டிருந்த தர்ஷினி திடீரென்று டெனிங் ஹால் வாசலைப் பார்த்தாள். அங்கே இரண்டுபேர் நின்றுகொண்டு அவள் பேச்சை சுவாரசியமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் – சந்திரசேகர், தேவசேனாபதி.
தாங்கள் பார்க்கப்பட்டுவிட்டோம் என்று உணர்ந்ததும் அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். “ஸாரி, இங்கே விடாமப் பேச்சுக்குரல் கேட்டதால என்னன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்” என்றார் தேவசேனாபதி.
“நான் சாதாரணமா எழுந்திருக்கற நேரம் இது. ட்ரெயினும் ரொம்ப நேரமா நின்னுட்டிருக்கே, என்னன்னு கேட்கலாம்னு வெளியே வந்தேன், இவரைப் பார்த்தேன்…” என்றார் சந்திரசேகர்.
தன்யா சட்டென்று முடிவுக்கு வந்தாள். “உட்காருங்க சார், நான் எல்லாம் விவரமா சொல்றேன். தர்மா, நீ தர்ஷினியோட போய் ஸ்டேஷனில் ஏதாவது விவரம் கிடைக்கறதான்னு பார்” என்று ஆணையிட்டாள்.
தர்ஷினி கொண்டுவந்து கொடுத்த ரெயிங்கோட்டை அணிந்துகொண்டான் தர்மா. தானும் நீளமான அங்கிபோன்ற கோட்டை அணிந்திருந்தாள் தர்ஷினி. மொபைலின் டார்ச்சை இயக்கிக் கொண்டு இருவரும் கீழே குதித்தார்கள்.
*
ஸ்டேஷனுக்குள் வந்ததுமே இருவரின் பார்வைக்கும் தென்பட்டுவிட்டது அந்தப் பரிச்சயமான முகம்.
ப்ரிஜேஷ்.