அவ(ள்)தாரம் | 8 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 8 | தேவிபாலா

திரே வந்து நின்ற அருளைப் பார்த்ததும் கொலை வெறி கூத்தாட, பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்தார் பூதம்!

“உன் கதையை இன்னிக்கே முடிச்சிர்றேன்..!”

சொல்லிக்கொண்டே, அவன் கழுத்தைப் பலம் கொண்ட மட்டும் இறுக்க, அருள் சிரித்துக்கொண்டே அவரது கால் விரலைத் தன் பெரு விரலால் அழுத்த, அப்படியே கண்களை இருட்டி, பிடித்திருந்த கை நழுவி, ஒரு பக்கமே மரத்த மாதிரி ஆகி, அப்படியே சரிந்தார் பூதம்..! அவரை விழாமல் தாங்கிப் பிடித்தான் அருள்..! சோபாவில் உட்கார வைத்தான்..! தண்ணீர் எடுத்து வந்து அவர் முகத்தில் தெளித்து, குடிக்கவும் தந்தான்..! அவரது செயலிழந்த வலது பக்கத்தை மெல்ல நீவி விட்டான்..! படிப்படியாக ரத்த ஓட்டம் சீராகி, அவர் இயல்புக்கு வர…

“என்னை நீ கொல்லப்பாக்கறியா..? முடியுமா..? வர்மக்கலை தெரிஞ்சவன் நான்..! இன்னும் பலமா நான் அழுத்தியிருந்தா நீ பாரலைஸ் ஆகியிருப்பே..! பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட மாத்ருபூதம்னு மீடியா நீலிக்கண்ணீர் வடிக்கும்..! உன்னை அந்த மாதிரி பார்க்க எனக்கு விருப்பமில்லை..!”

பூதம் இயல்புக்கு வந்தார்..! மூச்சை உள்ளிழுத்து தன்னைச் சீராக்கிக் கொண்டார்..!

“எதுக்காக என் சங்கதில நீ மூக்கை நுழைக்கறே..? வர்த்தகத்துல வர விரும்பலைனு ஒதுங்கினே..! நான் விட்டாச்சு..! இப்ப எதுக்காக அளவுக்கு மீறித் தலையிடறே..? மேகலாவை மீட்டு, இந்த பாரதி சங்கதில தலையிட்டு, என் ரூம்ல எலக்ட்ரானிக் ஸ்பை வேலைகளை செஞ்சு, எதுக்கு இத்தனை கண்காணிப்பு..? ஏன் இத்தனை எதிர்ப்பு..? நான் உன் அப்பா..! அவங்கள்ளாம் யாரோ..! இனி எதிர்க்காதே..! நிறுத்திக்கோ..!”

“நீ நிறுத்து..! பல பெண்களை நாசம் பண்ணி அவங்களை வியாபாரப் பொருளாக்கி, நீ மூட்டை மூட்டையா பணம் சேர்க்கறது மகா பாவம்..! அதை நிறுத்து..! இந்தச் சதை வியாபாரம் ஒரு முடிவுக்கு வரணும்..! வேண்டாம், திரும்பவும் சொல்றேன்..! பெண்களோட கண்ணீர்ல இந்த வீடு மூழ்க வேண்டாம்..! இந்த பங்களாவை சுற்றி, நெகட்டிவ் வைப்ரேஷன் நிறைய இருக்கு..! அது நல்லதில்லை..!”

“முடியாது..! எதையும் நிறுத்த முடியாது..! நானே நினைச்சாக்கூட இதை நிறுத்த முடியாது..! பல பெரிய தலைகள் இதுல இருக்கு..! உனக்கு அதெல்லாம் புரியாது..! நீ ஒதுங்கு..!”

“இல்லை..! தெரிஞ்சும், பலிகளை நான் ஆதரிக்கறதா இல்லை..!”

“இதப்பாரு! அப்புறமா நானும், எந்த எல்லைக்கும் போக வேண்டி வரும்..! இன்னிக்கு உன்னோட வர்மம் என்னை சாச்சிருக்கலாம்..! நான் உஷாராயிட்டா, நீ தாங்க மாட்டே..!”

அவரை வெறுப்புடன் பார்த்து விட்டு அருள் அங்கிருந்து அகன்றான்.

சிதம்பரம் ஆஃபீசுக்கு போகாமல், நேராக வீட்டுக்கு வந்து விட்டார்..!

“என்னங்க! சீக்கிரமே வந்துட்டீங்களே..! சாயங்காலம் நாலு மணிக்கு காளிகாம்பாள் கோயிலுக்கு போகலாமா..?”

“எனக்கு இப்ப கோயிலுக்கு வர்ற மனநிலை இல்லை கௌசல்யா..! நீ போயிட்டு வா..! நான் ரெஸ்ட் எடுக்கணும்..!”

“இதப்பாருங்க..! நம்ம மேகலா தப்பிக்க அந்த தெய்வம்தான் காரணம்..! அதுக்கு நன்றி சொல்ல வேண்டாமா..?”

“அந்த அருள்தான் தெய்வமா வந்து காப்பாத்தியிருக்கான்..! நன்றியை அவனுக்குத்தான் சொல்லணும்..!”

“உங்க முதலாளி அத்தனை பண்பாட்டோட மகனை வளர்த்திருக்கார்..!”

“நீ என்னை கொஞ்சம் தனியா விடு..!”

மாலை நாலு மணிக்கு சம்பத், பாரதியை அழைத்தான்..!

“மன்னிச்சிடு பாரதி..! அந்த பூதம் பணம் தந்து, உன் மேல பழி போடச்சொன்னதால, நானும் அந்த தப்பை பண்ணிட்டேன்..! அந்த ஆள் மோசமானவன்..! பெரிய செல்வாக்குள்ளவன்..! பகைச்சிட்டு வாழ முடியாது பாரதி..! இனிமே என்னால உனக்கு எந்த பிரச்னையும் வராது..!”

பாரதி வீடு திரும்ப, அம்மா கோயிலுக்கு போயிருந்தாள்..! அப்பா மட்டும் இருந்தார்..!

“அப்பா! அம்மா இல்லாததும் நல்லதுக்குத்தான்! நாம கொஞ்சம் பேசிடலாம்..!”

“சொல்லும்மா..!”

“இனிமேலும் அந்த கம்பெனில நீங்க இருக்கணுமா..? உங்க ரெண்டு பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்க நெனச்ச ஒரு முதலாளிகிட்ட நீங்க எதுக்குப்பா வேலை பார்க்கணும்..? நீங்க ராஜினமா பண்ணிடுங்க..! நான் வேலைல தானே இருக்கேன்..! பேங்க் பேலன்ஸ் கொஞ்சம் இருக்கு..! சமாளிச்சுக்கலாம்..! வேணும்னா உங்க அனுபவங்களை வச்சு வேற வேலை தேடிக்கலாம்..! அந்த ஆள் வேண்டாம்பா..!”

“இல்லைம்மா! உடனடியா அந்த முடிவை எடுக்கறது கஷ்டம்..!”

“ஏன்பா? தப்பான ஆள்னு தெரிஞ்ச பிறகு அங்கே நீடிக்க வேண்டிய அவசியம் என்னப்பா..?”

“பெரிய மனுஷங்க கம்பெனி நடத்தறாங்கனா பலதும் இருக்கத்தான்மா இருக்கும்..!”

“அந்த பலதும் இப்ப நம்ம குடும்பத்தைத் தாக்குதேப்பா.! மேகலா மாட்டிக்கக் காரணமும் அவர் தான்..! தப்பான தொழில் நிலத்தடில நடக்குதுப்பா..! என்னை அவர் மாட்ட வைக்க நினைச்சதும் அதுலதான்னு எனக்குத் தோணுது..!”

அவர் பேசவில்லை..!

“அப்பா..! நீங்க உழைப்பாளி..! ஒழுக்கம் நேர்மைனு வாழற நல்ல மனுஷன்..! உங்களால இதையெல்லாம் ஜீரணிக்கவே முடியாது..! ஆனா அவரோட மகன் அருள், அப்பாவோட அசிங்கத்தை விரும்பாம வீட்டுக்குள்ள தனியாக் குடித்தனம் நடத்தறார்..! போதுமா..? பெத்த பிள்ளையால ஜீரணிக்க முடியாத ஒருத்தரை நீங்க ஏன்பா சகிச்சுக்கணும்..?”

“உன் கேள்வில இருக்கற நியாயம் எனக்கு புரியுதும்மா..! ஆனா முப்பது வருஷத்துக்கு மேல சர்வீஸ் எனக்கு..! இப்ப நான் கழண்டு வந்தா, ஃபைனல் செட்டில்மென்ட் வருமா..? பல லட்சங்களை நான் இழக்க வேண்டி வரும்..!”

“அப்படியெல்லாம் யாரும் ஏமாற்ற முடியாதுப்பா..! கோர்ட்டுக்குப் போகலாம்..! உங்க சர்வீஸ் ரெக்கார்டைக் காட்டி, பணத்தை வாங்க முடியும்..! இப்ப மட்டும் அவருக்கு உங்க கிட்ட பகை இருக்காதா..? உங்களை அவர் நண்பரா இனி நினைப்பாரா..? நீங்க அங்கே இருக்கறது ஆபத்துப்பா..! வெளில வர்றது உங்களுக்கு பாதுகாப்பு..!”

“வேண்டாம்மா..! ஒரு பணக்காரனை ஒரேடியா பகைச்சுக்க வேண்டாம்..! அது நம்ம குடும்பத்துக்கே நல்லதில்லை..! நீ அருள் தம்பி கிட்ட பேசிப்பாரு..!”

“அவர் என்னப்பா சொல்லுவார்..? பல நூறு கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரன் ஆக வேண்டிய ஒரே பிள்ளை, எல்லாத்தையும் உதறிட்டு விலகி நிக்கறார்னா அவர் மனுஷன்..! அவர் தப்புக்கு துணை போக, ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்பா..! நான் பேசறேன்..! நீங்க சீக்கிரம் நல்ல முடிவா எடுங்க..!”

அவள் விலகிப்போனதும், சிதம்பரம் முகம் இருண்டு கிடந்தது!

“அந்த மாதிரி விலக முடியாம நானும் மாட்டியிருக்கேனேம்மா..! அதை உன் கிட்ட உடைச்சு சொல்லவும் வழியில்லையே பாரதி..!”

று நாள் காலை பூதத்துக்கு எதிரான சில ஆட்கள் மீடியாவில் இருப்பதால் அவர்கள் விளையாட தொடங்கி விட்டார்கள்..! ‘பெரிய பதவியை தந்தும் ஏற்காத வீராங்கனை பாரதி!’ என ஆரம்பித்து, பூதம் தந்த பெரிய வாய்ப்பை பாரதி நிராகரித்ததை பெரிதுபடுத்தி எழுத, விசுக்கென பாரதியின் மரியாதை ஏறத் தொடங்கியது!

காலை முதலே பூதத்தின் ஃபோன் தொடர்ந்து ஒலிக்க,

“ஏன் சார்..? கோயில்ல நீங்க பெருந்தன்மையா மன்னிப்பு கேட்டும், அந்த பொண்ணு நீங்க தந்த பதவியை, பணத்தை நிராகரிச்சு உங்களை ஏன் கேவலப்படுத்தறா..? இது உங்களுக்கு அசிங்கமில்லையா..? அவ்ளோ பெரிய ஆளா அவ..?”

இது மாதிரி பல கேள்விகள் அவரைத் துளைக்க, அவரால் சமாளிக்க முடியவில்லை..!

“மாத்ருபூதம்…பாரதி பனிப்போர் ஆரம்பமாகி விட்டது..! தகப்பனை விட்டு விலகி நிற்கும் மகன் அருள், பாரதி பக்கம்..! இன்னொரு அணி உருவாகிறதா..?”

இதைப் படித்துவிட்டு வாசுகி நேராக வீட்டுக்கே வந்து விட்டாள்..!

“என்னடீ பாரதி..? அப்பாவோட வேலைக்கே நீ உலை வைக்கப்போறியா..? அந்த அருள், குடும்பத்துக்கு அடங்காதவன்..! ட்ரக் அடிக்ட்..! அவனைத் திருத்த முடியாம கை கழுவிட்டார் முதலாளினு ஒரு தகவல் உண்டு..!”

“வாயை மூடுக்கா..! அருள் மேல அபாண்டமா யாரும் பழி சுமத்த வேண்டாம்..! நம்ம மேகலாவை மீட்டு நம்ம கைல ஒப்படைச்சது அருள்னு மறக்கக் கூடாது..!”

“அவனைச் சொன்னா உனக்கேண்டீ கோவம் வருது..?”

“நல்லவங்க மேல பழி சுமத்தினா எப்படீ பொறுத்துக்க முடியும்..?”

“என்னப்பா இவ இப்படிப் பேசறா..?”

“அவ சொல்றது தான் சரி வாசுகி..! அருள், தங்கமான பையன்..! கண்டவங்க பேசறதை கேட்டு அவனை தப்பா விமர்சிக்காதே..!”

“வாசுகி..! உங்கப்பா பாரதி சொல்றதைத்தான் கேப்பார்..! நீ என்ன சொல்லியும் லாபமில்லை..! நல்ல வாய்ப்பை இழந்தாச்சு..! யாரு சொல்றது..?”

சிதம்பரம் அலுவலகம் வந்து விட்டார்..! பூதம் அழைத்தார்..!

“ஒரு புது கான்ட்ராக்ட் வந்திருக்கு சிதம்பரம்..! ரெண்டு நாள்ள முடிக்கணும்..!”

“சார்! தப்பா எடுத்துக்காதீங்க! எனக்கு வயசாகுது..! உழைக்கற தெம்பு ஒடம்புல இல்லை..!”

“அதனால..?”

“எனக்குக் கட்டாய ஓய்வு தந்து, என்னை வீட்டுக்கு அனுப்பிடுங்க..!”

“புரட்சிப் பெண் பாரதி யோசனையா இது..? இல்லை, என் மகன் அருள் சொன்னானா..? யார் பேச்சை கேட்டு கட்டாய ஓய்வுக்கு வர்றீங்க..?”

“நான் உங்ககிட்ட சண்டைபோட வரலை சார்..!”

“போடவும் முடியாது..! இன்னும் அஞ்சு வருஷ காலத்துக்கு உங்களை விடுவிக்க முடியாது..! அப்படி போய்த்தான் தீருவேன்னு நீங்க பிடிவாதம் புடிச்சா, எல்லா விஷயத்தையும் உங்க குடும்பத்துக்கு சொல்ல வேண்டி வரும்..! இல்லைனு நீங்க மறுக்க முடியாது..! ஆதாரங்களோட நிரூபிக்க ஆயிரம் பேர் வருவாங்க..! எப்படி..? உங்க பாரதியை கூப்பிட்டு உங்க மேலான சர்வீசை வெளிச்சம் போடலாமா..?”

சிதம்பரம் முகம் சுருங்கி விட்டது!

“என்ன..? உங்க மகள் ரெண்டு பேரும் நான் விரிச்ச வலைலேருந்து தப்பிட்டாங்க..! ஆனா உங்களால தப்பிக்கவே முடியலியோ..?”

“எப்படி..? என் பொண்ணுங்க வாழ்க்கையை கெடுக்கப் பார்த்துட்டு எங்கிட்ட எப்படீ, இப்படி கூச்சநாச்சமில்லாம பேச முடியுது உன்னால..?”

“மரியாதை தேயுது சிதம்பரம்..!”

“உனக்கென்னடா மரியாதை..? அந்த மாதிரி இடத்துலயா நீ இருக்கே..?”

“சிதம்பரம்..!”

கூச்சலிட்டபடி ஆவேசமாக நெருங்கினார் பூதம்..!

“என்னை கொல்லப்போறியா? நான் செத்து முப்பது வருஷமாச்சுடா..! இப்ப நடமாடறது, நடைப்பிணம்..!”

“சரி! உன் அனல் பறக்கும் வசனங்களைக் கேக்க எனக்கு நேரமில்லை..! சீக்கிரம் நான் சொன்ன வேலையை முடி..!”

சிதம்பரம் வெறுப்புடன் பார்த்து விட்டு, தளர்ந்து போய் வெளியேற, உடனே பசவப்பாவுக்கு ஃபோன் பறந்தது..!

“பசவப்பா..! இனி சிதம்பரத்தோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கணும்..! ஏன்னா, இப்ப நம்ம பிடில சிதம்பரம் இருந்தாலும், விடுபட வாய்ப்புண்டு..! உஷாரா இருக்கணும்..!”

மாலை ஆஃபீஸ் முடிந்து வெளியே வந்தாள் பாரதி..! தன் ஸ்கூட்டரை எடுத்தாள்..! கொஞ்ச தூரம் போனதும் இடக்குப் பண்ணியது..! மழைத் தூறல் இருந்தது..! எந்த நேரமும் வலுக்கலாம் என்ற நிலையில் வேகத்தைக் கூட்டினாள் பாரதி..! மழை பலமாக ஆரம்பிக்க, வண்டி ரகளை செய்ய, கொட்டும் மழையில் அதைத் தள்ளிக்கொண்டு நனைந்தபடி நடந்தாள் பாரதி..! வொர்க் ஷாப் இருக்கிறதா என கண்கள் தேட, ஒரு வொர்க் ஷாப் கண்களில் விழ, வேகமாக வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தாள்..!

“யாரும் இல்லீங்களா..?”

ஒரு காருக்கடியில் படுத்திருந்த அவன் வெளியே வர, பாரதிக்கு இன்ப அதிர்ச்சி..! அது அருள்..!

“நீங்க இங்கே மெக்கானிக்கா..?”

“ஓனர், க்ளீனர், மெக்கானிக் எல்லாம் இங்கே நான் தான்..! வாங்க..! தெரிஞ்சு வந்தீங்களா..? தற்செயலாவா..?”

“நீங்க பட்டறை வச்சிருக்கறது எனக்கெப்படி தெரியும்..? வண்டி ஓடலை..!”

“பாக்கறேன்! டீ சொல்லவா..?”

“சூடா பஜ்ஜி, பக்கோடானு ஏதாவது கிடைச்சா சாப்பிடலாம்..! மழைக்கு நல்லா இருக்கும்..!”

“பையனை அனுப்பறேன்! சாப்பாட்டு ரசிகையா..?”

“ருசிக்க மட்டும் இல்லை, சமைக்கவும் தெரியும்..!”

“ஒரு பழைய சினிமா பாட்டு உண்டுங்க! சமையலுக்கும், மையலுக்கும் ஓரெழுத்து பேதம்னு.”

“இந்த மழை நேரத்துல எதுக்கு இந்த ஏடாகூடமான பாட்டு..?”

“நானே கொஞ்சம் ஏடா கூடமான ஆசாமி தானே பாரதி..?”

“இப்படியெல்லாம் பேச வருமா உங்களுக்கு..?”

தேனீரும், மிளகாய் பஜ்ஜியும் வர, அவனைக் கண்களால் பருகியபடி அதை பாரதி சுவைக்க, அவன் பாரதியின் ஸ்கூட்டரைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தான்..! வெளியே மழை அடித்துப் பெய்து கொண்டிருக்க,

“அருள்! ஸ்கூட்டரை அப்புறமா பழுது பார்க்கலாம்.,! இது எதிர்பாராத சந்திப்பு..! உங்களைத் தேடி நானே வரணும்னு நெனச்சேன்..! அந்த ஆசையை மழை நிறைவேற்றி வச்சிடுச்சு..!”

“சரி பண்ணியாச்சு..! வண்டியை நீங்க எடுக்கலாம்..! சர்வீஸ் சார்ஜ் நானூறு ரூபா..!”

“முதல் சர்வீஸ் ஃப்ரீ கிடையாதா..?”

அவள் கேட்கும் நேரம், நாலு பேர் மழைக்கு ஒதுங்குவது போல தடதடவென ஓடி வந்து உள்ளே புகுந்தார்கள்..! ஷட்டரை கீழே இறக்கி கடையை மூடினார்கள்..! ஆயுதங்களுடன் இவர்களின் பக்கம் திரும்பினார்கள்!

“படக்குனு அவளை போட்டுத் தள்ளிட்டுப் புறப்படுங்கடா..!”

–தொடரும்…

ganesh

1 Comment

  • Interesting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...