காலம் மாறிவிட்டது

 காலம் மாறிவிட்டது

தமிழ் நாளிதழ்களைப் பொறுத்தமட்டில், அவை தமது வாசகர்களை் இன்னும் பாமரர்களாகவே கருதுகின்றன.

‘தினத்தந்தி’யை சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்தபோது, அந்த நாளிதழைப் பாமரர்களின் செய்தி வாசிப்புக்காகக் கொண்டுவந்ததாகச் சொல்வார்கள்.

வாசகர்களுக்குத் தமிழ்கூட எழுதப் படிக்கத் தெரியாது என்ற நிலை அப்போது இருந்தது உண்மை தான்.

எனவே அவர்கள் எழுத்துக் கூட்டி வாசிக்க ஒரு நாளிதழ் தேவை என்று அவர் கருதியிருந்தார். அது அந்தக் காலத்து நியாயம். பாமரர்களுக்காக அவ்வாறு ஒரு நாளிதழ் நடத்தி ஆதித்தனார் வெற்றி கண்டதைப் பாராட்டத்தான் வேண்டும். தமிழில் அவ்வளவு பரிச்சயமில்லாத வாசகர்கள் சலூன்களுக்கோ தேநீர்க் கடைகளுக்கோ செல்லும்போது அந்த நேரத்தைப் பயன்படுத்தித் தமிழை எழுத்துக்கூட்டி வாசித்துத் தம் அறிவைத் திரட்டிக்கொண்டார்கள்.

இதனால்தான் ஒற்றெழுத்துகள் வராமல் தினத்தந்தி பிரசுரம் கண்டது. எளிய எளிய வார்த்தைகளும் மக்களின் பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளும் அந்த இதழில் இடம்பெற்றன. ஒற்றெழுத்து இருந் தால் வாசகரின் நாவுகள் பிறழ்ந்துவிடுமென்று அவருக்குச் சொன்னது யாரோ? ஒற்றெழுத்துகள் என்ன ஓட்டத் தடைகளா? விசித்திரமான கற்பனை.

மேலும் பாமரர்கள் அறிவார்ந்த செய்திகளை வாசிப்பதில்லை என்று ஆதித்தனராகக் கருதிக் கொண்டார். அதனால் பாமரர்களுக்குப் பாமரத்தனமான செய்திகளே அதில் வந்தன. திரைநடிகர் களென்றால் ஒவ்வொரு பாமரனுக்கும் தெரியும். அதனால் திரைச் செய்திகள் அதிகமாக இடம் பெற்றன. அதற்காக வேண்டித் தமிழ் எழுத்தாளர் உலகமும் அறிஞர் உலகமும் பேரளவில் பலியாக வேண்டியிருந்தது. இதற்கு ஓர் உதாரணமான செய்தியைச் சொல்வார்கள். அவர் தன்னுடைய பத்திரிகையாளர் கையேட்டில் அதனை எழுதியிருப்பதாகவும் முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை காலமானபோது அந்தச் செய்திக்கு முக்கியத்துவம்கொடுத்து உதவியாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதனைப் பார்த்த ஆதித்தனார் தன் அலுவலகத்தின் காவல்காரரை அழைத்து, “ ரா.பி.சேதுப்பிள்ளையை உனக்குத் தெரியுமா,” என்று கேட்டிருக்கிறார். அவரோ தனக்கு சேதுப்பிள்ளையைத் தெரியாதென்று கூறியிருக்கிறார். இதனைத் தன் உதவி ஆசிரியர்களிடம் சுட்டிக்காட்டிய ஆதித்தனார், “பாமரர்களுக்குத் தெரியாத செய்திகளுக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டாம்,” என்று வலியுறுத்தினாராம்.

ஆனால் இன்றும் தமிழ் வாசகர்கள் பாமரர்களாகத்தான் இருக்கிறார்களா? கடல்கடந்துபோய்க் கொடிநாட்டும் அளவுக்கு வாசகர்கள் வளர்ச்சியடைந்துவிட்டார்கள்.

என்றைக்கோ இருந்த வாசகரைக் காரணம்காட்டித் தமிழ் எழுத்தாளர்கள் இன்னமும் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள். தினத்தந்தி காட்டிய வழிமுறையை ஏறத்தாழ பல நாளிதழ்களும் பின்பற்றி வருகின்றன. இப்படியாக ஒரு மொழியின் படைப்புச் சக்திகளை ஓரம்கட்டி அன்று ஆதித்தனார் வெற்றிபெற்றதாக இன்றும் சொல்லிக்கொண்டிருப்பது என்ன நியாயம்? செய்திகளோடு செய்தியாகத் தமிழ் எழுத்தாளர்களை அவர்தான் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். பத்து அல்லது பன் னிரண்டு பக்கங்களில் அன்று நாளிதழ்கள் வெளிவந்துகொண்டிருந்தன. அதில் ஒரு கால்பக்கத் திற்கும் இடம்பெற முடியாத அளவுக்குத் தினத்தந்தியால் தமிழ் எழுத்தாளர்கள் பழிவாங்கப்பட் டார்கள். அவ்வாறு பழிவாங்கப்பட்டதை வணிக வெற்றியின் அடையாளமாகக் காட்டுவது பேதைமை.

ஒருவேளை அன்றைய நிலைமை அப்படியிருந்தாலும் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. பழங்காலத்தைச் சொல்லிக்கொண்டே எண்பது ஆண்டுகளைத் தாண்டிவந்துவிட்டது அந்த இதழ். ஏனைய இதழ்களும் நன்றாக மூத்துத் திரைந்துவிட்டன. இப்போதேனும் அவை தம் செயல்பாட்டை மாற்றிக்கொண்டாலென்ன?

இதன்வழியாகத் தமிழில் ஒற்றெழுத்துப் பயன்பாட்டைக் கொண்டுவர முயல வேண்டும். மொழியின் ஓர் உயிர்நாடியை வேரறுக்கும்போது அம்மொழியின் வேறுபல உறுப்புகளும் அப்படியே காலமாகி விடுகின்றன. இப்படியாக வாக்கிய அமைப்புகளில் ஏகப்பட்ட கோளாறுகள்.

தினத்தந்தி தன் முகப்பில் “தமிழ் வெல்க” என்று பொறித்திருக்கின்றது. ஆனால் அந்நாளிதழின் தலையங்கங்களை வாசித்தால், தமிழறிவே இல்லாத ஒருவரோ அல்லது ஒரு குழுவோதான் அதை எழுதிக்கொண்டிருக்கிறது என்கிற உண்மை தெரியவரும். ஒரே வாக்கியத்தை மூன்று வாக்கியங் களாகத் துண்டாடுகிறது. அது மட்டுமல்ல, ஏராளமான கோளாறுகள். செய்திகளை எழுதும் உதவி ஆசிரியர்களைவிட தலையங்கம் எழுதுகிறவர் மோசமான தமிழறிவோடு இருப்பது வேதனை யல்லவா?

இதனைப் படிக்கின்ற பள்ளிப் பிள்ளைகளுக்கு அதே தினத்தந்தி மூலம்தான் தமிழ்ப் பிழை அல்லது உடைபட்ட தமிழ் போய்ச் சேருகின்றது.

இந்நிலை மாற வேண்டுமெனில், அனைத்து நாளிதழ்களுமே ஒருசேர மாற வேண்டும். ஏராளம் ஏராளமான நாளிதழ்கள், இணைய இதழ்கள், பருவ இதழ்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என நாம் இருக்கும்போதே தமிழ் தன் உயிரை இழக்குமெனில், தன் அழகையும் கம்பீரத்தையும் ஒருசேரப் பறிகொடுக்குமெனில், நாமெல்லாம் இருந்தும் என்ன பயன் என்ற கேள்விதான் எழுகின்றது. -களந்தை பீர்முகம்மது

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...