அஷ்ட நாகன் – 15| பெண்ணாகடம் பா. பிரதாப்
-அமானுஷ்ய தொடர்-
பாம்புகளில் மிகப்பெரிய பாம்பாக தற்போது ‘அனகோண்டா’ என்று கூறப்படுகிறது.அதைப்போல, படமெடுத்த ஆடும் நாகங்களில் ‘ராஜ நாகம்’ மிகப்பெரிய நாகமாக கருதப்படுகிறது.நாம் ஏற்கனவே பாம்பிற்கும்,நாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தோம்.படமெடுத்து ஆடுபவை ‘நாகங்கள்’ ஆகும்.படமெடுக்க இயலாதவை பாம்புகள் ஆகும்.நாகங்களில் நல்ல பாம்பு,ராஜ நாகம் மற்றும் கருநாகம் ஆகிய மூன்று வகை நாகங்கள் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களாக கருதி வழிபட்டு வரப்படுகின்றன.இந்து மதத்தில் நல்ல பாம்பை பெருந்தெய்வ வழிபாட்டில் பல தெய்வங்களுடன் இணைத்து வணங்குகின்றனர்.கரு நாகத்தை சிறு தெய்வ மற்றும் கிராம தெய்வ வழிபாட்டில் முக்கியமான தெய்வமாக கருதி பூஜித்து வருகின்றனர்.அதைப் போலவே,ராஜ நாகத்தை மலை வாசிகள் தெய்வங்களாக எண்ணி பூஜித்து வருகின்றனர்.பாம்புகளில் மிகப்பெரிய பாம்பாக ‘மாசுணம்’ என்று ஒரு வகை பாம்பு இருந்ததாக சங்க கால இலக்கியங்களான நற்றினை,திணை மாலை நூற்றைம்பது மற்றும் மலைபடுகடாம் ஆகிய நூல்கள் கூறுகின்றன.மாசுணம் என்ற பாம்பு ஒரு யானையை விழங்குமளவு இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது.தஞ்சை பெருவுடையார் கோயிலில் மாசுணம் என்ற பாம்பு யானையை விழுங்குவது போன்ற சிற்பம் தஞ்சையில் உள்ள துவார பாலகர்கள் சிலையில் உள்ள கதாயுதத்தோடு இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. நாக வழிபாடு தொன்மையானது.
– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-
ஏலக்காய் சித்தர் குடில் !
ஏலக்காய் சித்தர் பக்கத்தில் ஒரு ‘மகா மந்திரியை போல’ அந்த ராஜ நாகம் மிக கம்பீரமாக படமெடுத்த நிலையில் முருகேசன்,அரவிந்தன், நந்தன் மற்றும் யோகினியை பார்த்துக் கொண்டிருந்தது.
அவ்வப்போது தன் பிளவுபட்ட நாக்கை அது நீட்டி…நீட்டி அச்சம் உண்டாக்கியது.
முருகேசனுக்கு தொடை நடுங்க ஆரம்பித்து விட்டது.
பயத்தில் அரவிந்துனுக்கு ஸ்பிரே அடித்த மாதிரி வியர்க்க ஆரம்பித்தது.
‘இந்த ராஜ நாகம் திடீரென எங்கிருந்து வந்தது?’ என்ற கேள்வியுடன் யோகினி சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
நந்தன் அந்த ராஜ நாகத்தை ‘ஒரு நாகம் மற்றொரு நாகத்தை பார்ப்பது போல’ மிக இயல்பாக அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த ராஜ நாகம் யோகினியை மட்டும் தீண்டுவது போல சீறியது.
‘ஒருவேளை இவள் இச்சாதாரி நாகினியாக இருப்பாளா?’ என்று ஏலக்காய் சித்தர் சிந்திக்கத் தொடங்கினார்.
அடுத்த சில நொடிகளில் அந்த ராஜ நாகம் மீண்டும் பழையபடி மூங்கில் பரணில் ஏறி நாக சாஸ்திர ஏடுகளின் ஒய்யாரமாக அமர்ந்து காவல் புரிய ஆரம்பித்தது.
அனைவரும் அச்சத்தின் உச்சத்தில் இருந்தனர்.
“யாரும் பயப்பட வேண்டாம். முதல்ல குடிசைக்குள்ற வாங்க” என்று ஏலக்காய் சித்தர் கூறினார்.
ஏலக்காய் சித்தர் முன்னே நடக்க, அவரைத் தொடர்ந்து முருகேசன்,நந்தன்,யோகினி மற்றும் அரவிந்தன் என ஒவ்வொருவராக குடிசைக்குள் சென்றனர்.
குடிசையின் ஒரு மூலையிலிருந்த கோரைப் பாயை முருகேசன் விரித்து போடவும், அனைவரும் அதில் அமர்ந்தனர்.
அனைவரும் மூங்கில் பரணில் கம்பீரமாக படமெடுத்த நிலையில் நாக சாஸ்திர ஏடுகளை பாதுகாக்கும் ராஜ நாகத்தை வியப்போடு பார்த்தனர்.
“அரவிந்த் தம்பி ! நீங்க கண்ட கனா பற்றியும்,நந்தன் கழுத்துல கரு நாகம் ஏறுனது பற்றியும் முருகேசன் முழசா சொன்னான்.நாக சாஸ்திரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலையும் தொட முடியாது.நாக சாஸ்திரத்தை எடுத்து படிக்க ஆதிசேஷனோட ஆசிகளும், அந்த ராஜ நாகத்தோட அனுமதியும் வேணும்.”
“அப்போ நாக சாஸ்திரத்தை எடுத்து என் கனவுக்கான பலனை நீங்க சொல்ல முடியாதா?” நான் ஒரு இச்சாதாரி நாக கன்னி தீண்டி இறந்துடுவேனா?” என்று பயத்தோடு படுவேகமாக அரவிந்தன்,ஏலக்காய் சித்தரை பார்த்து கேள்வி எழுப்பினான்.
“அரவிந்த் விடியற் காத்தால கண்ட கனா ஒரு மாசத்துல பலிக்குமுன்னு கனவு சாஸ்திரம் சொல்லுது.ஆனா, உங்களுக்கு நல்ல விதி இருக்குறதால தான் நீங்க கொல்லிமலைக்கு வந்துருக்கீக.கவலைப் படாதீக.என்னால முடிஞ்ச உபகாரத்தை உங்களுக்கு செய்தேன்” என்று அரவிந்தனுக்கு நம்பிக்கை ஊட்டினார்.
“இப்போ நாங்க என்ன செய்யணும்?” என்று ‘வெட்டு ஒண்ணு,துண்டு ரெண்டு’ என்பது போல நந்தன் கேள்வி எழுப்பினான்.
“இதுக்கு ஒரே வழி தான் இருக்கு.இன்னும் ரெண்டு நாள்ல பெளர்ணமி வருது.பெளர்ணமி அன்னைக்கு நீங்க மூணு பேரும் முழு நம்பிக்கையோட,மன மற்றும் உடல் தூய்மையோட ஆதிசேஷனை நினைச்சு விரதம் இருந்து இராக்காலத்துல என் கூட வந்து காட்டுக்குள்ற நாக ரூபத்துல சித்தர்கள் பூஜை பண்ற சிவலிங்கத்தை நீங்க பூஜை செஞ்சி வேண்டிக்கிட்டாக்க. கண்டிப்பாக நாம, நாக சாஸ்திரத்தை எடுத்து வாசிக்குற கொடுப்பனை அமையும்.”
“அரவிந்தா…நீ எதுக்கும் பயப்படாதே ! உனக்கு எதுவும் ஆகாதுடா.என் உயிரை கொடுத்தாவது உன்னை காப்பாத்துறேன்” என்று நந்தன்,அரவிந்தனுக்கு ஆறுதல் கூறினான்.
ஏலக்காய் சித்தர் அவர்கள் அனைவருக்கும்,தன் கையாலே சமைத்து தினை கஞ்சியில் பனங்கற்கண்டு கொடுத்து அவர்களை உண்ணச் சொன்னார்.
அவர்களும் ‘மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல’ ஏலக்காய் சித்தர் சொல்படி உணவு உண்டுவிட்டு தங்கள் வழியில் பயணித்தனர்.
5 Comments
வாழ்க வளத்துடன் மற்றும் நலத்துடன் கோடாண கோடி நன்றிகள் தங்களின் எழுத்துப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் துனை இருக்கட்டும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள் நன்பா நன்றி
மிக்க நன்றி இனிய நண்பரே
இச்சாதாரி நாகம் யாருன்னுமர்மமா இருக்கு
மர்மம் தொடரும்.நன்றி நண்பரே
இந்த பகுதியை மிகவும் சிறியதாக முடித்துவிட்டீர்களே!