அரசியலைத் தீண்டாத சூப்பர் ஸ்டார்
1930களில் தொடங்கி 1959 வரை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.கே.டி. எனப்படும் எம்.கே.தியாகராஜ பாகவதர். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவே அவர் வீட்டுக்கு வந்து தேர்தலில் நிற்கச்சொல்லியும் அரசியலைக் கைகழுவியவர். மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்குப்போன தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார். இவர் மொத்தம் 14 படங்களோடு தன் வாழ்வை முடித்துக்கொண்டு தமிழக மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்.
பாகவதரின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் சுவையானவை. அவரது இறுதிக்காலம் மிக சோகமானது. அவருடைய பாகவதர் கட்டிங் ரொம்பப் பிரபலம். சங்கீத இசையின் சங்கதி, தாளக்கட்டுகளை சாதாரண மக்களும் ரசிக்கும் வண்ணம் தன் கந்தர்வ கானக் குரலால் இனிமையாக, எளிமைப்படுத்திப் பாடினார்.
இவர் நடித்த ‘ஹரிதாஸ்’ படம் மூன்று தீபாவளிக்கு சென்னை ‘பிராட்வே’ தியேட்டரில் ஓடியது என்பது இன்று வரை எந்தப் படத்துக்கும் இல்லாத சிறப்பு. பத்திரிகையாளர் லஷ்மிகாந்தன் கொலை வழக்கில் பாகவதரும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் 1944இல் கைதாகி 1947இல் வெளிவந்தனர். அதுவரை ஹரிதாஸ் படம் ஓடிக்கொண்டிருந்தது.
லட்சுமிகாந்தன் வழக்கு விசாரணையின்போது, பாகவதரின் கணக்குப் புத்தகத்தில் குறிப்பிட்ட தொகைக்குக் கணக்கு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இருவரும் கைது செய்யப்பட்டு பின் மூன்று ஆண்டுகள் சிறை வாசத்திற்குப்பின் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்கள்.
சிறை செல்லும் முன் பாகவதர் 12 படங்களுக்கு புக் செய்யப்பட்டிருந்தார். இவர் வெளிவந்ததும் இனி இவர் நடித்த படங்கள் ஓடுமா? என சிலர் நினைத்தனர். அவர்களிடம் அட்வான்ஸ் பணத்தை பாகவதர் திருப்பிக் கொடுத்தார். அதன் பிறகு அவர் நடித்த சில படங்கள் சரியான வரவேற்பினைப் பெறவில்லை. சர்க்கரை நோயின் காரணமாக அவருக்குக் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இவர் மருத்துவமனையை நாடாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் பாடல்களைப் பாடிப் பாடியே ஆறுதல் பெற்றார். அதுவே அவருக்கான சிகிச்கையாகவும் அமைந்தது.
3 வருட சிறை வாழ்க்கையின்போது ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் கஷ்டப்பட்ட போதும் இவர் யாரையும் நாடி உதவி கேட்டதில்லை. உதவ முன்வந்தவர்களையும் மறுத்தார்.
இவர் நடித்த சத்தியசீலன், திருநீலகண்டர் படங்கள் இவரின் சொந்தத் தயாரிப்பு. வைகுண்டம் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். 1936லேயே சத்தியசீலனில் பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்து அசத்தியிருந்தார். இவர் நடித்த, அம்பிகாபதி படத்தை அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி படங்கள் வருடக்கணக்கில் ஓடிச் சாதனை படைத்தவை.
பழைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் திருச்சியில் ‘பவளக்கொடி’ எனும் நாடகத்தில் அர்ஜுனனாக நடித்தார். இவரின் தோற்றமும், மயக்கும் இனிய குரலும் பார்ப்பவரையும் கேட்பவரையும் கட்டிப்போட்டன. ஒருநாள் இந்த நாடகத்தை தொழிலதிபர் லட்சுமணச் செட்டியாரும் அழகப்பச் செட்டியாரும் பார்க்க வந்தனர். பாகவதரின் நடிப்பும் பாட்டும் பிடித்துப்போக இந்த நாடகத்தையே படமாக்கலாம் என்று முடிவு செய்தனர். அந்தப் படத்தை இயக்கியவர் புகழ்பெற்ற இயக்குநர் கே. சுப்பிரமணியம். பாவதரின் முதல் படமே முத்திரைப் பதித்த படமாக அமைந்தது. பாபநாசம் சிவன்தான் பெரும்பாலும் இவர் பாடிய பாடல்களை எழுதியவர்.
பாகவதர் இரக்க குணமும் தயாள குணமும் உள்ளவர். பெரிய ஹீரோ என்கிற இமேஜ், பந்தா இல்லாதவர். தேச பக்தியும் தெய்வபக்தியும் நிறைந்தவர். உவமைக் கவிஞர் சுரதா பாகவதரின் படத்துக்கு வசனம் எழுதியவர். ஒரு முறை பாகவதர் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சுரதா பாகவதர் சாப்பிடும் சட்டைப் பார்த்தார். “என்னப்பா அப்படிப் பார்க்கிறே, இந்தா இனிமே இந்தத் தட்டை நீயே வைச்சுக்கோ” என அன்பாகத் தந்தார். அது சாதாரணத் தட்டு அல்ல. தங்கத் தட்டு.
இவரது இறுதிக் காலத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபோதும் மறுத்தார். நான் ஒரு ஹீரோவாக நடித்திப் புகழ் பெற்றவன் அப்படியே இருந்துவிடட்டும் என்று நிஜவாழ்க்கையிலும் ஹீரோவாக இருந்தார். மாயவரத்தில் பூர்வீகமாகக் கொண்டது பாகவதரின் குடும்பம். தந்தையின் தொழில் காரணமாக திருச்சி வந்தனர். திருச்சியிலிருந்து பிரகாசித்து பல உள்ளங்களை ஒளிரச்செய்த இந்தப் பூரணச்சந்திரன் 1959 நவம்பர் 1ஆம் தேதி தன் 49ஆவது வயதில் பிரகாசத்தை நிறுத்திக் கொண்டது.