வீட்டிலேயே இருந்த மகாத்மாவின் முன்னோடி…

ஒரு ஆலமரத்தின்கீழ் எதுவுமே வளர்வது இல்லை. அப்படித்தான் இப்பெண்மணியும். தன் கணவரின் உச்சியில் உள்ள புகழ், பெயர். அதற்குப் பாதிக்கும் கீழ் காரணமாகத் திகழ்ந்த ஒரு பெண். தன் இறப்பு வரை கணவருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர்.

தன்னால் முடிந்த எல்லா காரியங்களையும் செய்து முடித்து சிறையிலேயே உயிர் நீத்த ஒரு வயதான பெண்மணி. அவர்தான் மகாத்மாவின் ஆன்மா கஸ்தூரிபாய் காந்தி ஆவார். ஆனால் இன்றளவும் காந்தியை மட்டுமே நினைவு வைத்துக் கொள்ளும் மக்கள் கஸ்தூர்பாவை மறந்து விட்டது தான் நிதர்சனமான உண்மை.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும், கஸ்தூர் கபாடியாவும் ஒரே ஆண்டில் 1869 ஆம் ஆண்டு பிறந்த வர்கள். காந்தியைவிட, கஸ்தூரிபா சில மாதங்கள் பெரியவர். கஸ்தூர்பா ஏப்ரல் மாதம் பிறந்தவர். இவரது பிறந்ததேதி பற்றி கஸ்தூர்பாவின் அன்னைக்கே ஞாபகம் இல்லை. தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க அரேபிய மார்க்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு ஆகியவற்றை வியாபாரம் செய்து வந்தார். காந்தியின் தந்தை கரம்சந்த் போர்ப்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக இருந்தார்.

இவ்விருவரின் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்ப தில் மிக மும்முரமாக இருந்தார்கள். கஸ்தூர்பாவிற்கும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கும் ஏழு வயதில் நிச்சயதார்த்தமும், பதின்மூன்று வயதில் திருமணமும் செய்து வைத்து தங்கள் கடமை நிறைவுற்ற தாக எண்ணி மகிழ்ந்தனர்.

திருமணமான புதிதில் கணவன் மனைவிக்கு இடையே சரியான புரிதல் என்பது இல்லை. காந்தி நன்றாகப் படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவர். தன் மனைவிக்கு எப்படியாவது கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என விரும்பியவர். ஆனால் கஸ்தூர்பாவோ வீட்டு வேலைகளை ஒழுங் காகச் செய்து முடிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்.

காந்தி தம்பதிக்கு 13 வயதிலிருந்து 31 வயதுவரை ஐந்து குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை மட்டும் பிறந்து மூன்றே நாட்களில் இறந்துவிட்டது. காந்திக்கு சிறுவயதில் பயந்த சுபாவம் அதிகம் இருந்ததாகவும், பாம்பு, பேய், கொள்ளைக்காரர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் நினைத்து பயந்து கொண்டு இருப்பாராம். ஆனால் கஸ்தூர்பா பயமில்லாத மிகவும் துணிச்சலான பெண் என்று காந்தி தன் சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தி மொழி மட்டுமே தெரிந்த கஸ்தூர்பா பிராமணர் இல்லை. ஆனால் பிராம ணியக் கொள்கையை முழுமையாக நம்பியவர். தனது கணவரின் பரிசோதனைக் கூடங்கள் அமைந்திருக் கும் இடமான டால்ஸ்டாய் பண்ணைக் குடியிருப்பு, பீனிங்ஸ் குடியிருப்பு ஆகியவற்றில் பலதரப் பட்ட மக்களுடன் சகஜமாக பழகத் தொடங்கினார். அப்போது அவர் தன் சாதி பற்றி சிந்திக்கத் தொடங்கவில்லை. கஸ்தூர்பா இதில் இருந்துதான் மூடநம்பிக்கைகளைத் தகர்த்து ஒன்றாக வாழவும் உழைக்கவும் செய்தார்.

கஸ்தூர்பா எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்குப் போகிறவரோ கிடையாது. அதேசமயம் தான் எது நியாயமானது, சரியானது என்பதைக் கருது கிறாரோ அதை நிலைநிறுத்த தயாராக இருப்பார். இது தான் பின்னாளில் காந்தி அவர்கள் கடைப் பிடித்த அகிம்சை தத்துவத்தின் உண்மை யான நிலைப்பாடு என்பதை காந்தியே கூறுயிருக்கிறார்.

ஜொஹனாஸ்பர்க்கில் ஆப்பிரிக்க சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட ப்ளேக் நோயைத் தீர்ப்பதற் காக அங்கிருந்த காலி வீடு ஒன்றில் நோய் தாக்கியவர்களைக் கொண்டுவந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார் காந்தி. அப்போது கணவருக்கு உறுதுணையாக கஸ்தூர்பா அந்நோயாளிகளின் படுக்கையைச் சுத்தம் செய்வது, அவர்களுக்குத் தகுந்த மருந்துகளைக் கொடுப்பது போன்ற உதவி களும், மற்ற பெண்களுக்கு இந்நோய் பரவாமல் இருக்க ஆலோசனைகளையும் அவர்களிடத்தில் சென்று கூறினாராம். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு காந்தி தன் மனைவியின் செயலைக் கண்டு மிகவும் ஆனந்தப்பட்டதாக கூறியுள்ளார்.

1913ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் குடியிருந்தபோது, காந்தி தன் மனைவியிடம் ‘‘இன்னும் சிறிது நாளில் நீ என் மனைவி என்ற அந்தஸ்தை இழக்கப் போகிறாய்’’ என்றாராம். சமைத்துக்கொண்டிருந்த மனைவி “என்ன சொல்கிறீர்கள்?” என அதிர்ச்சியுடன் கேட்டதற்கு “தென் ஆப்பிரிக்க ஜெனரல் ஸ்மட்ஸ்தான் இதுபற்றி பேசி இருக்கிறார். சட்டபடி கிறித்துவ முறைப்படி திருமணம் செய்திருக்க வேண்டு மாம் அப்படி இல்லாதவர்கள் வைப்பாட்டியாம்” என்றார் காந்தி.

“அதெப்படி? இதை எதிர்க்க வேண்டும்” என்றாராம் கஸ்தூர்பா. “நல்லது உன்னைப் போன்ற பெண்கள் அனைவரும் எதிர்த்து சிறை செல்ல நேரிட்டால் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்” என்ற காந்தியை முறைத்தாராம் கஸ்தூர்பா.

“சிறை செல்ல வேண்டுமா?  என்ன விளையாடுகிறீர்களா?” என்று அன்று அதிர்ச்சியுடன் கேட்ட கஸ்தூர்பா, பின்னாளில் அதிகமுறை சிறை சென்று சிறையிலேயே இறக்கும் நிலையும் ஏற்பட்டது. அந்த அளவிற்கு காந்தி அவர்களால் பெறப்பட்ட இந்திய விடுதலையில் கஸ்தூர்பாவின் பங்கு அதிகமாக இருந்தது.

காந்தி சிறையில் இருக்கும் நேரங்களில் பல போராட்டங்களைத் தன் முன்னிலை யில் நடத்தினார் கஸ்தூர்பா. சென்னையில் டிசம்பர் 3, 1932ல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம், ராஜ்கோட்டில் தாகூர் ஆட்சியில் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதை எதிர்த்தும், சமஸ்தானத்தின் ஆங்கிலேய அரசியல் ஏஜண்ட்டின் நிலைப்பாட்டை எதிர்த்தும் கஸ்தூர்பா பல பெண்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 1938ல் டிராம்போவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கஸ்தூர்பா.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் தென்ஆசிய நாடுகளில் நுழைந்து ஒரு பெரும் அபாயம் ஏற்பட்டபோது பிரிட்டன் இந்திய ராணுவத்தை யுத்ததில் ஈடுபடுத்தியது. உடனடியாக இந்தியா விற்குச் சுதந்திரம் அளிக்கவில்லை எனில் காந்தியின் தலைமை யில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி போராடுவோம். இது பற்றி முடிவெடுக்க ஏ.ஐ.சி.சி. பம்பாயில் கூடியபோது பொதுக்கூட்டத் தில் ஒரு மந்திரத்தை அளித்தார் காந்திஜி. அதுதான் “do or die”. அதனால் கைது செய்யப்பட்ட காந்தியைத் தொடர்ந்து கஸ்தூர்பா அப்போராட்டத்தைத் தன் தலைமையில் நடத்தினார்.

இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் கஸ்தூர்பா பேசிய மேடைப் பேச்சினால் (கஸ்தூர் பாவின் மிகச் சிறந்த பேச்சு) கைது செய்யப்பட்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை வழிநடத்தி னார். ஆனால் அவர் தன் உடல்நிலை காரணமாக முழுமையாக ஈடுபடமுடியவில்லை.

இறுதியாக காந்தியும் கஸ்தூர்பாவும் ஆகாகான் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப் பட்டனர். அங்கே கஸ்தூர்பாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டது. தன் இறுதி மூச்சை தன் கணவர் காந்தியின் தோளின் மீது விட்டார் கஸ்தூர்பா. ‘என் உடலில் முக்கியமான பாகத்தை இழந்துவிட்டேன் (The best part of me is dead) நான்’ என்று கஸ்தூர்பாவின் இரங்கலில் தெரிவித்துள்ளார் காந்தி.

சிறையிலிருந்த காந்தி ஒருமுறை கஸ்தூர்பாவிற்கு எழுதிய கடித்ததில் “ஒருவேளை நீ இறந்து விட்டாலும், நான் இறப்பதற்கு முன்னாடி நீ இறப்பது உனக்கு நல்லது. நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். என்னைப் பொறுத்த வரை நீ இறந்துவிட்டாலும் உன் ஆன்மா சாவிற்கு அப்பாற்பட்டது. உன் சாவு சத்தியாகிரகப் போராட்டத்திற்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய தியாகம். என்னைப் பொறுத்தவரை நீ என்றென்றும் வாழ்பவள்” எனக் குறிப்பிட்டு இருந்தார் காந்திஜி.

இந்தக் கடிதத்தில் எழுதிய கணவரின் வார்த்தையை உண்மையாக்கினார் கஸ்தூர்பா காந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!