பேய் ரெஸ்டாரெண்ட் – 20 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 20 | முகில் தினகரன்

அன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் எப்படியும் வீட்டிற்கு யாராவது வருவார்கள், வந்தவர்கள் எதையெதையோ பேச ஆரம்பித்து கடைசியில் கல்யாணத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்கள். பரிதாப்படுகிற மாதிரி என்னைப் பரிகாசம் செய்வார்கள். பக்குவம் சொல்லிக் கொடுப்பது போல் பாவ்லா காட்டுவார்கள், என்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்த சுமதி, அன்று காலை ஒன்பது மணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பினாள்.

“என்னடி?…லீவு நாளும்…அதுவுமா…எங்கேடி கிளம்பிட்டே?” போகும் போதே வழிமறித்தாள் ராஜேஸ்வரி.

“அது…வந்து…கொஞ்சம் பர்ச்சேஸிங் இருக்கும்மா…உள்ளாடைகள் வாங்கணும்!…இப்பப் போனாத்தான் வாங்கிட்டு வெயிலுக்கு முன்னாடி வீட்டுக்குத் திரும்பிடலாம்…அதான் காலையில் சீக்கிரமே கிளம்பிட்டேன்” பொய் சொன்னாள்.

“சரி…சரி…போயிட்டு சீக்கிரம் வந்திடு!…மறக்காம குடையை எடுத்திட்டு போ”

“எதுக்கும்மா?…மழை வரும்!ன்னு வானிலை அறிக்கைல சொன்னாங்களா?” வேண்டுமென்றே கேட்டாள் சுமதி.

“மழைக்காக இல்லேடி…அடிக்கற வெயிலுக்கு…பாரேன்…காலை நேரத்திலேயே எப்படி சுரீர்ன்னு இருக்கு!”

“இல்லைம்மா…வேண்டாம்மா” அவசரமாய் மறுத்தாள் சுமதி.

“சொன்னாக் கேளுடி…மதிய வெயில்ல நீ வரும் போது மூஞ்சியெல்லாம் கருத்துக் போயிடும்டி” தன் மகளின் வதனம் குலைந்து விடும் என்பதில் அக்கறை காட்டும் தாயைப் பார்த்து அர்த்த புஷ்டியுடன் சிரித்து விட்டு நகர்ந்தாள் சுமதி.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்ற பின்தான் யோசித்தாள். “எங்கே போறது?…மதியம் வரைக்கும் நேரத்தை ஓட்டிட்டா…அப்புறமா வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம் போட்டா இன்றைய பொழுது ஓடி விடும்!…அது செரி….இப்ப எங்க போறது?…யாராவது கொலீக்ஸ் வீட்டுக்குப் போகலாம்ன்னா அவங்களும் கல்யாணத்தைப் பத்திப் பேசி சாகடிச்சிடுவாங்க!….சரி…பழைய தோழிகள் வீட்டுக்குப் போகலாம்ன்னா…அவளுகெல்லாம் கல்யாணமாகி புருஷன்…புள்ளை குட்டிகளோட குடித்தனம் நடத்திட்டிருக்காளுக!…அங்க போனா எனக்கே மனசு சோகமாயிடும்!…என்ன ஒரு அநியாயம்…இவ்வளவு பரத்த உலகத்துல எனக்கு!ன்னு ஒரு நல்ல நண்பனோ…நண்பியோ கூட இல்லையே?”

அவளுக்கே அவள் மீது ஒரு சுய பச்சாதாபம் ஏற்பட்டது.

திடீரென்று மனதிற்குள் எங்கேயோ…எப்போதோ…படித்த அந்தக் கவிதை வரிகள் ஞாபகத்தில் வந்தன.

“நூலக அலமாரிகளில்
நூற்றுக் கணக்கான நண்பர்கள் – உன்
நேயத்திற்காக காத்திருப்பது
உன் ஊனக் கண்ணுக்குத் தெரியவில்லையா?”

“கரெக்ட்!…அதுதான் சரியான இடம்!…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, டவுன் ஹால் செல்லும் பஸ் வந்ததும் அதில் ஏறி, கார்ப்பரேஷன் ஆபீஸில் இறங்கி, எதிரே இருந்த நூலகக் கட்டிடத்தினுள் நுழைந்தாள்.

வார, மாத இதழ்களையெல்லாம் மேலோட்டமாகப் படித்து விட்டு, வாட்சைப் பார்த்தாள். மணி பதினொன்றுதான் ஆகியிருந்தது. “ப்ச்…நேரமே நகர மாட்டேங்குது” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு, மெல்ல எழுந்து அலமாரிகளுக்கிடையே நடந்து, வரிசையாய் ஒவ்வொரு புத்தகத்தின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தாள்.

“ஆவி நேயம்”

அந்தப் புத்தகம் அவள் கவனத்தை ஈர்க்க, எடுத்துப் புரட்டினாள்.

“உங்களின் நட்பு வட்டாரம் திருப்தியளிக்கவில்லையா? உங்களைப் புரிந்து கொள்ளும் நண்பர்கள் அமையவில்லையா?…ஆவி நட்பை நாடுங்கள். அன்ம திருப்தியை அடையுங்கள்’ என்று ஆரம்பித்த அதன் முன்னுரை அவளுக்குள் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட, சற்று ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு நாற்காலியில் சென்றமர்ந்து, அந்தப் புத்தகத்தினை முழு ஈடுபாட்டுடம் வாசிக்க ஆரம்பித்தாள்.

அரை மணி நேரத்தில் அதை முழுவதுமாய் படித்து முடித்த போது அவளுக்குள் ஒரு மாற்றம்…ஒரு தெளிவு…ஒரு புத்துணர்வு ஏற்பட்டிருந்தது.

“ஆஹா…இது எனக்காகவே எழுதப்பட்ட புத்தகம்!…என் மனதைப் புரிந்து கொள்ளாத சக மனிதர்களால் வெறுப்பின் உச்சியில் உலவிக் கொண்டிருக்கும் எனக்கு உண்மையிலேயே இந்தப் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான்…இதில் எழுதியிருப்பது போல் நாமும் ஏன் ஒரு நல்ல ஆவியை நட்பாகக் கொள்ளக் கூடாது?”

அவளுக்குள் ஆர்வம் கொப்பளித்தது.

தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு வெள்ளத் தாளை எடுத்து அந்தப் புத்தகத்திலிருந்து சில விஷயங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

அந்த நூலகத்தை விட்டு வெளியேறும் போது நாளைக்கே ஆவியுலகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், என்கிற வெறி அவளுக்குள் உண்டாகியிருந்தது.

அந்த ஆர்வம்தான் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கப் போகின்றது என்பதை அந்த நிமிடத்தில் அவள் உணர சாத்தியமில்லை.

— — — — — — –

நூலகத்தில் தான் வாசித்த “ஆவி நேயம்” என்கிற புத்தகத்தில் கூறியபடி ஆவியுலகத் தொடர்புக்கான உபகரணங்களை ஒவ்வொன்றாய் வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தாள் சுமதி.

“ஏய்…என்னடி இதெல்லாம்?…எதுக்கு இதையெல்லாம் சேர்த்து வெச்சிருக்கே?” ராஜேஸ்வரி கேட்க,

“அது வந்து…ஆயில் பெயிண்டிங் பண்ணப் போறேன்மா” பொய்யைச் சொல்லி வைத்தாள்.

“க்கும்…இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல்” முனகிக் கொண்டே சென்ற அம்மாவை முறைப்போடு பார்த்தாள். “எனக்கு மட்டும் ஒரு நல்ல ஆவியோட சிநேகிதம் கிடைக்கட்டும்…அந்த ஆவி கிட்டச் சொல்லி உன்னோட வாயை பேசவே முடியாதபடிக்கு அப்படியே ஒட்டிக்கற மாதிரி செய்யச் சொல்லிடறேன்.

அன்று மதியம் 2.30.

அம்மாவும், அப்பாவும் யாரோ உறவுக்காரர் வீட்டுச் சாவிற்குச் சென்றிருந்ததால் வீட்டில் சுமதி மட்டும் வழக்கம் போல் தன் அறையில் படுத்துக் கிடந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தத் தனிமையைப் பயன் படுத்திக் கொள்ளும் விதமாய் மெல்ல எழுந்தாள்.

தன் ஆவியுலகத் தொடர்பிற்கான முயற்சியை ஆரம்பிப்பதற்கு அதுவே சரியான நேரம் என்று முடிவு செய்தவளாய் தான் சேகரித்து வைத்திருந்த பொருட்களை எடுத்துக் கடை விரிக்கத் துவங்கினாள்.

பத்து நிமிடப் பரபரப்பிற்குப் பின்,

சதுரமான கண்ணாடிப் பலகையொன்று (ஒய்ஜா போர்டு) மேஜே மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் நான்கு ஓரங்களிலும் ஒரே அளவுள்ள இடைவெளி விட்டு இருபத்திஆறு ஆங்கில எழுத்துக்களும், தனித்தனியாக எழுதி ஒட்டப்பட்டிருந்தன.

அப்பலகையின் நடுவில் சிறிய வட்டம். அதுதான் மையப்புள்ளி. அச்சிறு வட்ட்த்தின் மேல் ரூபாய் நாணய வடிவில் ஒரு பிளாஸ்டிக் துண்டு (ஆவி சலன சாதனம்) வைக்கப்பட்டிருந்தது.

அருகில் ஒரு வெள்ளைத் தாளும், பேனாவும் தயாராக இருந்தன.

“ம்…அடுத்து என்ன செய்யறது?” சற்றுத் தள்ளி நின்று யோசித்தாள் சுமதி. “ம்ம்ம்…கரெக்ட்…நாம் விரும்பும் இறந்து போனவருடைய மனித உருவத்தை எண்ணி மனதை ஒருமுகப்படுத்தினால் அவருடைய ஆவி இங்கே வரும்!…” “ஆவி நேயம்” புத்தகத்தில் படித்த குறிப்புக்கள் ஞாபகத்தில் வர,

அந்த ஒய்ஜா போர்டின் முன் அமர்ந்து, அதன் நடுவில் இருந்த பிளாஸ்டிக் துண்டின் மீது வலது கை ஆட்காட்டி விரலை வைத்துக் கொண்டு, இரண்டு வருடங்களுக்கு முன் தூக்குப் போட்டு இறந்து போன தன் ஆத்ம தோசி சித்ராவை நினைத்துக் கொண்டு, கண்களை மூடி மனதை ஒருமுகப் படுத்தினாள்.

ஐந்து நிமிடம்,

பத்து நிமிடம்,

பதினைந்து நிமிடம்,

அரை மணி நேரமாகியும் எந்த வித சலனமுமில்லை.

“ஏன்?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு, “ஒருவேளை…பகல் நேரத்தில் இந்த வேலைகளைச் செய்தால் எடுபடாதோ?” தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்.

எழுந்து சென்று தான் எழுதி வைத்திருந்த குறிப்புக்களை எடுத்து மீண்டும் வாசித்தாள்.

“ஒரே முயற்சியில் ஆவித் தொடர்பு என்பது மிகவும் அரிதானவொன்று. பல நேரங்களில் மணிக் கணக்கில், நாள் கணக்கில், ஏன் மாதக் கணக்கில் கூட ஆகலாம்”

“ஓ.கே!…முதல் முயற்சியிலேயே சக்சஸ் ஆக வேண்டுமென நானும் எதிர்பார்த்திருக்கக் கூடாதுதான்!”

தன் முயற்சியை அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

சாவு வீட்டிலிருந்து திரும்பி வந்த ராஜேஸ்வரி, “ஏன்னடி இதெல்லாம்…ஆயில் பெயிண்டிங் பண்ணப் போறேன்!னு சொன்னே…ஆனா இதையெல்லாம் பார்த்தா அப்படித் தெரியலையே?” மிரட்சியுடன் கேட்டாள்.

“அது…வந்து…இது…ஆயில் பெயிண்டிங் இல்லேம்மா..ஒரு கேம்…விளையாட்டு” வாயில் வந்ததைச் சொல்லி வைத்தாள். உண்மையைச் சொன்னால் அம்மா ஒரு பெரிய களேபரத்தையே உண்டாக்கி விடுவாள் என்பது சுமதிக்குத் தெரியும்.

தாயும், தந்தையும் வீட்டிலிருந்ததால், தன் முயற்சியைத் தொடர முடியாமல் தவித்த சுமதி, அன்று இரவே தன்னுடைய இரண்டாவது முயற்சியில் ஈடுபட்டாள்.

நள்ளிரவு சரியாக பனிரெண்டு மணி.

மீண்டும் அந்த ஒய்ஜா போர்டு முன் அமர்ந்து, துர்மரணம் எய்திய அதே தோழியை நினைத்துக் கொண்டு மனதை ஒருமுகப்படுத்தினாள்.

ஆரம்பத்தில் சலிப்பூட்டிய அந்த முயற்சி போகப் போக ஆர்வத்தை ஏற்படுத்தியது. சரியாக பனிரெண்டு மணி பனிரெண்டாவது நிமிடத்தில் அந்த பிளாஸ்டிக் துண்டு மெல்ல நகர ஆரம்பித்தது.

அந்த கணத்தில் சுமதி சுயநினைவற்றுப் போயிருந்தாள்.

ஒரு ஆங்கில எழுத்தின் மீது சென்று சில வினாடிகள் நின்று, பிறகு அடுத்த எழுத்திற்குச் சென்று, அங்கு சில வினாடிகள் நின்று, அவற்றின் கோர்ப்பில் ஒரு வார்த்தையை உருவாக்கி, மொத்தமாய் ஒரு செய்தியினைச் சொல்லி விட்டு ஓய்ந்தது.

மெல்ல சுய நினைவிற்கு வந்து, சில நிமிடங்கள் யோசித்த பிறகுதான் சுமதிக்கு தான் செய்த தவறு புரிய ஆரம்பித்தது. பிளாஸ்டிக் துண்டு காட்டிய எழுத்துக்களை ஒரு வெள்ளைத்தாளில் குறித்துக் கொள்ள, கூடவே இன்னொருத்தரை வைத்துக் கொள்ள மறந்து போனாள்.

தன் தவறுக்காக தன் தலையில் தானே லேசாய்க் குட்டிக் கொண்டவள், “அது செரி…யாரை கூட வைத்துக் கொள்வது?” யோசித்தாள்.

“ஹும்…புற உலகில் சரியான தோழமை உறவு கிடைக்காததால்தான் நான் ஆவி உலகில் முயற்சி செய்கிறேன்!…அப்படியிருக்கும் போது யாரை நம்பி கூட அமர்த்துவது?”

சோர்ந்து போனாள். “ச்சை…ஆவி வந்தும்…செய்தி கொடுத்தும்…அதைப் பதிவு செய்யாமல் மிஸ் பண்ணி விட்டோமே?…” தன்னுடைய பைத்தியக்காரத்தனத்தை நினைத்து நினைத்து நொந்து போனாள்.

அந்தக் குழப்ப நிலைக்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டி, தான் எழுதி வைத்திருந்த குறிப்பேட்டைத் தேடி எடுத்து மீண்டுமொருமுறை ஊன்றிப் படிக்கலானாள்.

“ஆவியானது வேறொரு நபர் மூலமாக எண்ணங்களை உற்பத்தி
செய்யாமல் நேரடியாகவே ஊடகரின் எண்ணங்களில் பாய்ந்து அவர்
எண்ணங்களின் வாய்லாக தனிச் செய்தியையும் தந்து
செயல்படுகின்றது.”

அந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தாள். லேசாய்த் தெளிவு பிறந்தாற் போலிருந்தது.

“அப்படின்னா…இன்னொருத்தர் உதவி இல்லாமல் நானே என் வலது கை விரலை பிளாஸ்டிக் துண்டு மேலே வெச்சுக்கிட்டு…இட்து கைல பேனாவைப் பிடிச்சுக்கிட்டு தயாராயிருந்தா…ஆவி நேரடியா என்னுடைய எண்ணங்களில் பாய்ந்து என் மூலமாகவே அதோட செய்தியைத் தருமே?…நான்தான் இட்து கைப் பழக்கமுள்ளவளாச்சே?….என்னால் இட்து கையால் நன்றாகவே எழுத முடியுமே?…முயற்சி பண்ணிப் பார்த்தால் என்ன?”

நம்பிக்கையோடு மீண்டும் களத்தில் இறங்கினாள்.

அப்போது நேரம் சரியாக 2.30 மணி.

நிசப்தத்தில் உலகம் அமிழ்ந்து கிடந்தது.

பிளாஸ்டிக் துண்டின் மேல் ஒரு கையும், பேனாவில் இன்னொரு கையுமாய் சித்ராவின் ஆவியை நோக்கி மனதை ஒருமுகப்படுத்தினாள் சுமதி.

சரியாக இருபதாவது நிமிடத்தில்….

தெருவில் நான்கைந்து நாய்கள் திடீரென்று கோரஸாய்க் குரைத்தன.

ஜன்னலின் திரைச்சீலை “பட…பட”வென்று பேயாட்டம் ஆடி நின்றது.

அறைக்குள் அதிக பட்ச ஜில்லிப்பு பரவியது. வாந்தி வரச் செய்யும்படியான ஒரு துர்வாடை வீசியது.

பிளாஸ்டிக் துண்டில் லேசாய் சலனம் தெரிந்தது பேனாவைப் பிடித்திருந்த சுமதியின் இடது கை நடுங்க ஆரம்பித்தது. துவக்கத்தில் “கரா…முரா”வென்று பேப்பரில் எதையோ கிறுக்கிய விரல்கள் மெல்ல நிதானம் பெற்று எழுத்துக்களைக் குறிக்கத் தொடங்கியது.

சுமதியின் உடல் மட்டும் இங்கிருக்க, உணர்வுகள் எங்கோ அந்தரத்தில் மிதந்து, யாருடனோ புரியாத பாஷையில் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தது.

பதிமூன்று நிமிடங்களுக்குப் பிறகு, சுவிட்சை ஆஃப் செய்ததும் நின்று போகும் மோட்டாரைப் போல் சட்டென்று எல்லாமே அசைவற்றுப் போக,

கையிலிருந்து பேனா நழுவி காகிதத்தின் மேல் கவிழ்ந்தது. பிளாஸ்டிக் துண்டு ஓய்ந்து போனது போல் சலனமற்று நின்றது.

தலையைச் சிலுப்பிக் கொண்டு சுயநினைவிற்கு வந்தாள் சுமதி.

“என்னாச்சு எனக்கு?…இந்த அறைக்குள்ளார இப்ப என்ன நடந்திச்சு?” குழப்பமாய் வெள்ளைத் தாளை எடுத்துப் பார்த்தாள்.

“கச…கச”வென்று குழந்தை கிறுக்கியதைப் போல் தாறுமாறாய் எழுத்துக்கள்.

கண்களுக்கருகே அதைக் கொண்டு போய், உற்று நோக்கிப் படிக்க முயன்றாள். எடுத்த எடுப்பில் எதுவும் புரியாத போதும், திரும்பத் திரும்ப படித்ததில் லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

“நீ…எதிர்பார்க்கும்…சித்ரா…ஆவி
இங்கில்லை…அது….ஏற்கனவே…
ஆவியுலக….மரணமெய்தி விட்டது…
நான்…லட்சுமி நரசிம்மன்”

சிரமப்பட்டு படித்து முடித்தவள் மீண்டும் குழப்ப நிலைக்கே போனாள். “என்னது?…சித்ராவோட ஆவி மரணமெய்தி விட்டதா?”…இதென்ன வம்பாயிருக்கு…இங்க செத்தவங்கதான் ஆவியுலகத்திற்ப் போய் ஆவியாய் வாழுவாங்க!…ஆவியுலகத்தில் அந்த ஆவிக்கும் மரணம் உண்டா?…புரியலையே?…அது செரி…யாரிந்த லட்சுமி நரசிம்மன்?…அவனோட ஆவி எப்படி என்னைத் தேடி வந்திச்சு?”

யோசித்து யோசித்து தலைவலியே வந்து விட்டது.

“சரி…இன்னொரு முறை அதே ஆவியைக் கூப்பிட்டுப் பார்ப்போம்” என்று முடிவு செய்தவள் எதேச்சையாக கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 3.30.

“ப்ச்…விடியறதுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கல்ல?…அதுக்குள்ளார ஒரு முயற்சி பண்ணிப் பார்ப்போம்” மனதிற்குள் சொல்லிக் கொண்டு ஒய்ஜா போர்டின் முன் அமர்ந்தாள். ஆவியை அழைப்பதற்கு முன் அந்தக் காகிதத்தில், தான் கேட்க நினைக்கும் கேள்விகளை எழுதி வைத்தாள்.

கேள்வி : 1 – யார் நீ?
கேள்வி : 2 – நீ நல்ல ஆவியா?…கெட்ட ஆவியா?
கேள்வி : 3 – ஆவியுலக மரணம் என்றால் என்ன?

கண்களை மூடிக் கொண்டு, மனதை ஒருமுகப் படுத்தினாள். இம்முறை ஆவித் தொடர்பு உடனே கிடைத்தது.

அறைக்குள் அதீத குளிர் வந்து புகுந்தது. காற்றில் அதே துர்வாடை.

சில நிமிட அமைதிக்குப் பின் அவளது இடது கை காகிதத்தில பரபரவென்று எதையோ எழுதித் தள்ளியது.

சரியாக பத்தாவது நிமிடம் குளிரும் காணாமல் போனது. துர் வாடையும் இல்லாமல் போனது.

சுமதி சுய நினைவிற்கு வந்த போது, அவளால் கண்களை முழுமையாகத் திறக்க முடியாத அளவிற்கு உறக்கம் இமைகளின் மீது அமர்ந்து பாரமாய்க் கனக்க,

உட்கார்ந்த நிலையிலேயே உறங்கிப் போனாள்.

– தொடரும்…

< பத்தொன்பதாம் பாகம்இருபத்தி ஒன்றாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...