வாகினி – 29| மோ. ரவிந்தர்

 வாகினி – 29| மோ. ரவிந்தர்

ஒன்றிரண்டு மேகக் கூட்டத்துக்கு இடையில், வானம் வெள்ளை நிறத்தில் ஜொலித்துக் கொண்டிருக்க, மேற்குத் திசையிலிருந்து வெண் கதிரவன் தன் திருமுகத்தை மெல்ல பிரதிபலிக்கத் தொடங்கிக் கொண்டிருந்தான்.

இரைதேடும் பறவையினங்கள் ரீங்கார இசையோடு அங்குமிங்குமாக வானில் பறந்து கொண்டிருந்தன.

காலை வேளை என்பதால், மக்கள் விழித்திரைகள் ஒவ்வொன்றாக மெல்ல விழிக்கத் தொடங்கியது. வேளையோடு எழுந்த குடும்பத்தலைவிகள் தங்களது வீட்டு வாசலைத் துடைத்துச் சுத்தம் செய்து, சாணத்தைத் தெளித்துக் கோலமிடும் காட்சி அங்கங்கே அழகாய்க் காட்சியளித்தது.

ஏதோ ஒரு திசையில் சேவல் கூவும் சத்தம் இன்னும் ரம்மியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

காலை செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொள்வதற்காக ஒருசில ஆண்மகன்கள் கழனி காடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

நேற்று நடந்த அனைத்து விஷயங்களை அறவே மறந்து, புது மனுஷியாக, வீட்டு வாசலில் இருந்த தண்ணீர் தொட்டிக்குப் பக்கத்தில் அமர்ந்து, எப்போதும் போல் அழுக்குப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

கஸ்தூரி கழிவாக ஒதுக்கிக் கொண்டு இருந்த உணவிலிருந்து தனக்கு ஏதாவது கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்புடன் வேப்ப மரத்தின் மீது காத்திருந்த காகங்கள் எல்லாம் “கா….கா…” எனக் கரைத்துக் கொண்டிருந்தன.

‘இவர் முகத்தைப் பார்த்தால் ஏதோ சோகத்தில் இருப்பதாகத் தெரிகிறது? அந்த விஷயம் ஏதாவது தெரிந்திருக்குமா? ச்சே,நாம சொன்னாதானே தெரியும். அப்படி எதுவும் தெரியவாய்ப்பில்லை. ஒருவேளை, பணம் கேட்ட இடத்தில யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா? எதுக்கு இப்படிச் சோகமா இருக்காரு?

எது நடந்தாலும் சரி, இது வேணும்… அது வேணும்னு இனிமே ஒரு வார்த்தை கூட அவரை நச்சரிக்கக் கூடாது. பாவம் மனுஷன் எவ்வளவுதான் கஷ்டப்படுவார். அவர் இஷ்டம் போலவே இனி எல்லாம் நடக்கட்டும். நாம எதற்கும் இனிமே தடை சொல்லக்கூடாது. எது நடந்தாலும் அது இறைவனின் செயல். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அதன்படியே நடக்கட்டும்’ என்று தன் கணவனைப் பற்றிப் புத்தியில் போட்டுக் கொண்டு, கையில் கிடைத்த பாத்திரத்தைத் துலக்கிக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

அந்தநேரம்,

“அம்மா…, அப்பா மட்டும் ஊஞ்சல் ஆடிட்டு இருக்காரு, என்னைச் சேர்த்துக்கக் கேட்டா! சேர்த்துக்க மாட்டாரு… நீ வந்து கேளுமா…” என்று பெரும் அழுகைச் சத்தத்துடன் கண்ணைக் கசக்கிக் கொண்டே வீட்டுக்குள் இருந்து வனிதா, கஸ்தூரி இருந்த இடத்திற்கு வெளியே வந்தாள்.

“என்னடி சொல்ற, அப்பா ஊஞ்சலாடறாரா?” என்று வனிதாவிடம் கூறிவிட்டு, கையில் வைத்திருந்த பாத்திரத்தை அவசரமாக உதறித்தள்ளி விட்டு, அலறி அடித்துக் கொண்டு எழுந்து “கடவுளே! என் புத்தி, ஏதோ சொல்கிறது எதுவும் நடந்திருக்கக் கூடாது. எங்களுக்கு யாரும் இல்ல” என்று இல்லாத கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டே வேகமாக வீட்டுக்குள் ஓடினாள், கஸ்தூரி.

அவள் பின்னாலே வனிதாவும் பெரும் அழுகையுடன் வந்தாள்.

அவள் புத்தி எதிர்பார்த்ததைப் போலவே அங்கு ஒரு சம்பவம் அரங்கேறியது.

“ஐயோ…என்னங்க அவசரப்பட்டு இப்படிச் செஞ்சிடிங்களே…” என்று தலையில் அடித்துக் கொண்டு, உயிர் போகும் அளவிற்குக் கத்திக்… கதறிப் பெரும் கூச்சலிட்டாள், கஸ்தூரி.

அந்த அலறலைக் கேட்டு வீட்டுக்கு வெளியில் வேப்ப மரத்திற்கு மேல் அமர்ந்து இருந்த காகங்கள் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு விண்ணை நோக்கி வேகமாகப் பறந்தோடின.

சதாசிவம் கோரமான காட்சியில் வீட்டின் உத்தரத்தில் தூக்குப்போட்டுத் தொங்கிக்கொண்டிருந்தார்.

கஸ்தூரியின் குரலைக் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்த மக்களெல்லாம் பெருந்திரளாக அந்த வீட்டுக்குள் ஓடி வந்தனர்.

ஒரு சில இளைஞர்கள் உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சதாசிவத்தின் உடலை மீட்டெடுக்க அருகே ஓடினர்.

தனது மூளை வெடித்துச் சிதறுவதைப் போல் ஒரு உணர்வு! என்ன செய்வதென்றே தெரியாத வண்ணம், தனது தலையில் அடித்துக் கொண்டு பெரிதாக அழ ஆரம்பித்தாள், கஸ்தூரி.

இவளுடைய கதறல் சத்தத்தைக் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த பாபுவும், வாகினியும் அலறியடித்து எழுந்தனர்.

தூக்குக் கயிற்றிலிருந்து தன் தந்தையைச் சில இளைஞர்கள் விடுவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட வாகினிக்கு அழுகை இன்னும் பெரிதானது. தன் தந்தை இறந்திருக்கிறார். அதனால்தான் அம்மா இப்படி அழறாங்க என்று தனது அப்பா முகத்தையே பார்த்து பார்த்து, “அப்பா… அப்பா…” என அழ ஆரம்பித்தாள்.

அலறி அழுது கொண்டிருந்த பாபுவைக் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் போய்த் தூக்கினாள்.

விஷயத்தைக் கேள்விப்பட்டுச் சதாசிவத்தின் அண்ணனான இளங்கோவனும், அவருடைய மனைவி திலகவதியும், மகள் மகாலட்சுமியும். மரகதம், மூர்த்தி. பரவதம்மாள், கோதண்டன் என நெருங்கிய உறவினர்கள் அனைவரும் அடுத்தடுத்து கதறி அழுது கொண்டு, அந்த வீட்டுக்குள் படையெடுத்தனர்.

‘அவசரப்பட்டுட்டிங்களே? என்ன ஏதுன்னு… என் கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கக் கூடாதா? நான் என்ன அவ்வளவு அசிங்கமானவளா?’ என்று மனம் குமுறியது.

“ஐயோ… இப்படிப் பண்ணிட்டீங்களே… எனக்கும் என் குழந்தைக்கும் இனி யார் இருக்கா? ஐயோ…” என்று தலையில் அடித்துக் கொண்டு பெரிதாக ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள், கஸ்தூரி.

“நைட்டு தானடா, என்கிட்ட நல்லாப் பேசிட்டுப் போன, அதுக்குள்ள என்ன வந்துச்சு? எதுக்குடா இப்படிப் பண்ணிட்டு போயிட்டே தம்பி…” என்று அண்ணன் இளங்கோவன் ஒருபுறம் கதறினார்.

“சித்தப்பா, மூணு பிள்ளைகளை இப்படி நடுத்தெருவில் விட்டு இப்படிப் பண்ணிட்டீங்களே. இது உங்களுக்கே நியாயமா…?” என்று குழந்தைகளைப் பார்த்துப் பெரிதாக ஒப்பாரி வைத்தாள், மகாலட்சுமி.

“என் செல்ல தம்பி, எனக்கு ஒன்னுனா, ஓடி வந்து முன்ன நிப்பியே, இனி யாருடா எனக்கு வந்து நிக்கப் போறாங்க? எதுக்குடா இப்படிப் பண்ணட்டே? என் குல சாமி, சொல்லுடா” என்று கதறினார், மரகதம்.

கஸ்தூரியின் வீடு, நொடிப்பொழுதில் இழவு வீடாக மாறியது.

நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் நெஞ்சைக் கிழித்து, உயிரோடு துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தைப் பிரித்தெடுத்து கத்தியால் சின்னாபின்னமாகக் கிழித்துச் சிதைத்தால் எப்படி இருக்குமோ! அப்படி இருந்தது இந்தக் குடும்பத்தின் நிலை, இப்போது. ஊரே ஒரு வீட்டுக்குள் கதறிக் கொண்டிருந்தது.

இந்தப் பெரும் சத்தத்திற்கு இடையில் பக்கத்துத் தெருவில் வசிக்கும் மீனாவின் குரல் “ஐயோ என்னங்க…” என்று விண்ணைக் கிழித்து வானளவு ஓங்கி ஒலித்துச் சத்தமிட்டது.

தொடரும்…

< இருபத்தி எட்டாம் பாகம்முப்பதாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...