அவ(ள்)தாரம் | 7 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 7 | தேவிபாலா

யார் கிட்டே சவால் விடறேம்மா?”

அவர் கண்களில் கேள்வி தொங்க, அவளை விஷமமாக பார்த்தார்!

“அந்த வீனஸ், நம்ம க்ளையன்ட் தான்! நம்மை மீறி அவனால எதுவும் செய்ய முடியாது! ஆனாலும் இன்னிக்கு அங்கே தொழிலாளர்களுக்கு சம்பளம் தரலைனா அது நியாயம் இல்லை! மேலும் உன் அஜாக்ரதையால ஆறு லட்சம் போயிருக்கு! அதனால நான் பணம் ரெடியா வச்சிருக்கேன்! நீ கொண்டு போய் குடுத்துடு! அதுக்கு முன்னால இங்கே ஜாயினிங் ரிப்போர்ட் குடுத்து வேலைக்கு சேர்ந்துடு! தவிர ஒரு கம்பெனி பாண்ட் இருக்கு, பத்து வருஷ பாண்ட்! அதுல கையெழுத்து போட்டு சேர்ந்துடு! நடுவுல வேலையை விட்டுப்போனா, சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம்! அது இந்தக் கம்பெனியோட சட்டம்! உங்கப்பாவுக்கு தெரியுமே!”

சிதம்பரம் வேதனையுடன் பார்த்தார்!

‘இப்படி ஒரு பிரச்னை உனக்கு வரணுமா?’ என்றது அவர் பார்வை!

தன்னை அவர் சரியாக லாக் செய்து விட்டார் என்பது பாரதிக்குப் புரிந்தது! தப்பிக்கவும் வழியில்லை! பூதம் எந்த எல்லைக்கும் போவார்!

பாண்டை படித்து பார்த்தாள்! ஏராளமான நிபந்தனைகள் இருந்தது!

“நேரமாகுது பாரதி! அங்கே பத்து மணிக்கு நீ போகலைனா சம்பத் போலீசை வரவழைச்சிடுவான்! சீக்கிரம் இங்கே ஃபார்மாலிட்டிகளை முடி!”

பாரதி அதைப் படித்து முடித்து, கையெழுத்துப் போட பேனாவை எடுத்தாள்! சிதம்பரம் தவித்தார்! தன் மகள் நன்றாக மாட்டிக்கொண்டாள் என்பது புரிந்தது! ஒரு தகப்பனாக இருந்து அவளை விடுவிக்க முடியவில்லையே என வலித்தது! பார்த்துப் பார்த்து ஆளாக்கிய மகளை தெரிந்தே பலி கொடுக்கிறோமே என்ற வேதனை நெஞ்சை பிழிந்தது!

பேனாவை திறந்து பாரதி கையெழுத்திடும் நேரம், பாரதியின் ஃபோன் அடித்தது! எடுத்தாள்!

“நான் அருள் பேசறேன்! நீங்க அப்பா கம்பெனில கையெழுத்து போட்டாச்சா?”

“போடப்போறேன்!”

“வேண்டாம்! போட வேண்டாம்! உடனே புறப்பட்டு வாங்க! உங்க பணம் கிடைச்சாச்சு! சீக்கிரம் வாங்க; நேர்ல விவரம் சொல்றேன்!”

பாரதி உற்சாகமாக நிமிர்ந்தாள்!

“மன்னிக்கணும்! ஆறு லட்சம் பணம் கிடைச்சாச்சு! நான் இனி இங்கே வேலைல சேர வேண்டிய அவசியம் இல்லை! நான் வர்றேன்”

“எப்படீம்மா? யார் கட்டினது?”

சிதம்பரம் கேட்க…

“அதை அங்கே போய் சொல்றேன்பா! நீங்களும் வாங்கப்பா!”

இருவரும் புறப்பட்டு போக, அவசரமாக சம்பத்துக்கு ஃபோன் அடித்தார் பூதம்! அது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது! வேறு சில எண்களை முயன்றார்! கிடைக்கவில்லை! அவருக்கு டென்ஷன் அதிகமானது! அதே நேரம் வேகமாகப் புறப்பட்ட அப்பா, மகள் கம்பெனிக்கு வந்து சேர, அங்கே போலீஸ் இருந்தது! கம்பெனி ஜி.எம். சம்பத் முகம் வெளுக்க நிற்க, பணம் எடுக்க அவளுடன் வந்த டிரைவர் கூடவே இருந்தான்!

“பாரதி வந்தாச்சு சார்! இனி ஆரம்பிக்கலாம்!”

“என்னாச்சு அருள்?”

“இந்த சம்பத், டிரைவர் தீனா ரெண்டு பேரும் சேர்ந்து போட்ட பிளான் இது!”

ரோடில் சண்டை போட்ட பெண் வந்து நிற்க,

“சொல்லும்மா!”

“எனக்குப் பணம் தந்து, ஒரு நாடகத்தை ஆடச்சொன்னாங்க! கூட்டத்தை அவங்களே ஏற்பாடு செஞ்சாங்க! இந்த டிரைவர் தீனா குறுக்கு வழியால காரைக் கொண்டு வந்தான்! இந்தம்மா இறங்கி வந்ததும், தீனா பெட்டில இருந்த பணத்தை எடுத்து பத்திரப்படுத்திட்டான்! பழி உன் மேல!”

“எல்லாம் பொய்!”

சம்பத் சொல்ல,

“டிரைவர் தீனாவை நான் புடிச்சு உதைச்சு பணமும் வாங்கியாச்சு!”

“இதுல எனக்கு சம்பந்தமில்லை!”

சம்பத் அலற,

“சார்! போலீஸ் வந்ததும் என்னை மட்டும் மாட்டி விடறீங்களா? நீங்க சொல்லித்தானே நான் செஞ்சேன்!”

“கொஞ்சம் இருங்க சார்! இதுக்கு வேர் யாருன்னு இப்ப காட்டறேன்!”

பறித்து வைத்திருந்த சம்பத் ஃபோனை அருள் ஆன் செய்ய, அது அடித்தது!

“ஏன் சம்பத், நீ ஃபோனை எடுக்கலை? யாரு ஆறு லட்ச ரூபாய் பணத்தை கட்டினாங்க? அந்த பொண்ணு கையெழுத்து போடற நேரத்துல எல்லாம் கெட்டு போச்சே! நம்ம ப்ளான் மொத்தத்தையும் சொதப்பினது யாரு?”

அதை ஸ்பீக்கரில் போட, பூதம் பேசியது தெளிவாக கேட்டது!

“இது மிஸ்டர் மாத்ருபூதம்… உங்கப்பா இல்லையா?” போலீஸ் கேட்க,

“ஆமாம் சார்! அவர் மேல நீங்க நடவடிக்கை எடுக்க மாட்டீங்க! எடுத்தாலும் அவர் அதை உடைப்பார்னு எனக்கு தெரியும்! என் நோக்கம் அவரை மாட்டி விடறதில்லை! அவரால பாதிப்புக்கு ஆளாக இருந்த இந்த பாரதியை விடுவிக்கறது தான்! அது நடந்தாச்சு! இந்த கம்பெனி சேர்மன் நாகபூஷணம் வெளிநாட்ல இருக்கார் அவர் கிட்ட நான் பேசிக்கறேன்!”

ஸ்பீக்கரில் இருந்ததால் சகலமும் பூதம் காதில் விழுந்தது!

“இந்த மேலாளர் சம்பத்தும், டிரைவர் தீனாவும் எங்கப்பாவோட கைக்கூலி! அதனால இவங்களை தண்டிக்க வேண்டாம்! பெரிய மனுஷங்க தப்புக்களை, தான் செஞ்சிட்டு பிரச்னை வரும்போது, மத்தவங்களை மாட்டி விடறது பழக்கம் தானே? நான் வாபஸ் வாங்கிக்கறேன்!”

போலீஸ் உயர் அதிகாரிகள் அருளை வணங்கி வெளியேற, அருளுடன் வந்திருந்த நண்பன் முருகன் சகலத்தையும் வீடியோ எடுத்திருந்தான்! சம்பத்திடம் வந்தான் அருள்!

“இதப்பாரு! இந்த வீடியோவை உன் முதலாளி நாகபூஷணத்துக்கு நான் அனுப்பினா என்னால கூட உன்னை காப்பாற்ற முடியாது! அதனால பாரதிக்கு எந்தத் தொந்தரவு வந்தாலும் நாங்க தான் பொறுப்புனு இதுல எழுதியிருக்கேன்! கையெழுத்துப் போடு!”

முதலில் மறுத்து, பிறகு நடுங்கிக்கொண்டே சம்பத், அதில் கையெழுத்து போட, அருள் குரலை உயர்த்தினான்!

“அக்ரிமென்ட், பாண்ட் இதெல்லாம் எங்களுக்கும் தெரியும்! அந்த ரத்தம் தானே எங்க உடம்புலேயும் ஓடுது! பாரதி! இனி நீங்க தைரியமா வேலையை பார்க்கலாம்! போங்க! உங்களை யாரும் அடிமைப்படுத்த முடியாது! அதுக்கு ஒருநாளும் நான் அனுமதிக்க மாட்டேன்!”

இதுவும் பூதம் காதில் விழுந்தது! தொழிலாளர்கள் காத்திருக்க, பாரதி கேஷ் கவுன்டருக்குள் நுழைந்தாள்!

“தேங்க்யூ அருள்! நான் சாயங்காலம் பேசறேன்! தொழிலாளிகள் சம்பளத்துக்காக காத்திருக்காங்க!”

“உங்க கடமையை செய்ங்க பாரதி! நாம போகலாம் சார்!”

அருளுடன் சிதம்பரம் வெளியே வந்தார்! சட்டென கண்கள் கலங்க, அருள் கைகளை பிடித்து தன் முகத்தில் ஒற்றிக்கொண்டார்!”

“தம்பி! உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கலை! எனக்கு மூணும் பெண்கள்! உங்களை மாதிரி ஒரு மகனை கடவுள் எனக்குத் தரலை!”

“ஏன் சார் தரலை? பாரதி பத்து மகன்களுக்கு சமம்! நியாயத்தை பேச கொஞ்சமும் பயப்படாத பெண்! அதனால தானே பூதம் அவங்களை நிரந்தர அடிமையாக்க திட்டம் போட்டிருக்கு! பெரிய சம்பளம், பதவி, கார்னு தந்தப்ப அதை ஏற்காம பாரதி மறுத்த காரணமா அவங்களை நிரந்தர அடிமையாக்கறது தான் திட்டம்!”

“ஒரு நொடி தப்பியிருந்தாலும் பாரதி கையெழுத்து போட்டிருப்பா! கடவுள் மாதிரி வந்து நீங்க காப்பாத்திட்டீங்க! எங்க குடும்பமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கு தம்பி!”

“சார்! இனிமே அவரோட வெறி அதிகமாகும்! அவர் தொடர்ந்து அவமானப்பட்டா, அதை அவரால தாங்கிக்க முடியாது! உடனே அடுத்த கட்ட, பழி வாங்கற நடவடிக்கை தொடங்கும்! நீங்க கம்பெனில இருக்கற காரணமா உங்களை வச்சு காய்களை நகர்த்துவார்!”

“அதனால என்னை உடனே ராஜினமா பண்ணச்சொல்றீங்களா?”

“மாட்டேன் சார்! அது உங்களால முடியாதுனு எனக்கு தெரியும்!”

“தம்பி! என்ன சொல்றீங்க? உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”

“நீங்க அப்பா கிட்ட ஆயுள் தண்டனை கைதினு தெரியும்! உங்களால விடுபட முடியாது! அதே சமயம், அப்பாவும் உங்களை எதிர்க்க முடியாதுனும் எனக்கு தெரியும்! நான் எங்கம்மா வீடுங்கற உரிமைல மட்டும் தான் வாழறேன் அங்கே! அவர் மகன்னு சொல்லிக்க நான் வெக்கப்படறேன்! ஆனா அவருக்கு இப்ப பெரிய குடைச்சலே நான் தான் சார்!”

“எல்லாம் தெரிஞ்சும் நீங்க என் கிட்ட…?”

“சார்! உங்க சர்வீஸ் அப்பா கம்பெனில முப்பது வருஷம் கடந்து! என் வயசு இருபத்தி எட்டு! அதனால எதையும் நான் பேசி லாபமில்லை! இனி நீங்க அங்கிருந்து விடுபடறது தான் உங்க பெண்களுக்கு நல்லது! என்னையே எங்கப்பா எத்தனை காலம் உயிரோட விட்டு வைப்பார்னு தெரியலை! நான் வர்றேன் சார்! உங்க மூணாவது மகள் மேகலாவை கடத்தினதும் அவர் தான்! நான் வர்றேன் சார்!”

அவன் பைக்கை எடுக்க பல வித அதிர்ச்சிகள் தாக்கி சிதம்பரம் செயலிழந்தார்! அவரால் நடக்கக்கூட முடியவில்லை!

ஃபீசில் இருக்க பிடிக்காமல் பூதம் வீட்டுக்கு வந்து விட்டார்! உடம்பு முழுக்கப் பற்றி எரிந்தது!

‘எப்படி இவனுக்கு எல்லாம் தெரிகிறது? எங்கிருந்து தகவல்களைத் திரட்டுகிறான்? என்னை அருள் கண்காணிக்கத் தொடங்கி விட்டான்! இதற்குள் இவன் வராமல் இருந்திருந்தால் பாரதி எனக்கு அடிமையாகி இருப்பாள்! அவளை வைத்துப் பல சங்கதிகளை சாதித்திருக்க முடியும்! கடைசி நொடிகளில் காப்பாற்றி விட்டான்! அதுவும் நான் பேசியதை ஸ்பீக்கரில் போட்டு என் தோலை உரித்து விட்டான்! நாளைக்கு அடுத்த நடவடிக்கை என்னானு தெரியலியே?’

கோபத்துடன் ஒரு நடுக்கமும் பரவியது! நடுக்கம் வந்த போது உள்ளே அவமானமாக இருந்தது!

‘எமனுக்குக் கூடப் பயப்படாத நான், என் பிள்ளைக்குப் பயப்படுவதா? என்னை எதிர்த்தவர்கள் யாரையும் வாழவிடாதவன் நான். இந்த பாரதியை, அருளை அழிப்பதா கஷ்டம்?’

“என்னப்பா? ஏன் டென்ஷனா இருக்கீங்க?” அஞ்சு வந்து கேட்க,

“இல்லைம்மா! இது பிசினஸ் டென்ஷன்! உனக்கு தேவையில்லை!”

“அப்பா! நீங்க வீட்ல இல்லாத நேரத்துல நானும் இல்லைனு நெனச்சு, அண்ணன் உங்க ரூமுக்கு ஒரு ஆளோட வந்தான்!”

“எதுக்கு?”

பதட்டமாக ஒலித்தது அவர் குரல்!

“நான் போய் பார்த்தேன்பா! உங்க மேஜைக்கடில, சுவர்ல சில எலக்ட்ரானிக் டிவைஸ்களை ஃபிக்ஸ் பண்றதை பார்த்தேன்!”

“அதை நீ காட்ட முடியுமா?”

அஞ்சு வந்து காட்ட, அவர் பார்த்தார்! முகம் மாறியது!

“உங்களை அண்ணன் வேவு பாக்கறானா?

“தெரியலைம்மா! நான் பாத்துக்கறேன்! நீ போம்மா!”

அவர் யாருக்கோ ஃபோன் செய்தார்! அரை மணியில் ஆள் வந்தது! அவர் உத்தரவின் பேரில் பரிசோதனை நடத்தியது!

“சார்! நீங்க இந்த ரூம்ல என்ன பேசினாலும் அது உடனே பதிவாகி, யாருக்கோ போகுது! இதோட லிங்க் இங்கிருந்த படியே உங்க ஆஃபீஸ் ரூமுக்கும் கனெக்ட் ஆகுது! ஸ்பை ஓவர் டிவைஸ் இது!”

“சரி! எல்லாத்தையும் டீஆக்டிவேட் பண்ணிடுப்பா!”

அந்த அறை முழுக்க அவன் பரிசோதித்து, செயலிழக்க செய்தான்! அவன் போனதும் பூதம் அப்படியே உட்கார்ந்தார்!

அருள் விலகி நின்ற மகன் தான்! அவனது பட்டப்படிப்பை முடித்ததுமே அவனை நிர்வாகத்துக்கு கொண்டு வரப்பார்த்தார் பூதம்! அவன் சம்மதிக்கவில்லை!

“உங்க வர்த்தகத்துல, வாழ்க்கைல நிறைய தப்புக்கள் இருக்கு! குற்றங்கள் தொடருது! பெண்கள் கண்ணீர்ல, சாபத்துல கட்டப்படற எந்த மாளிகையும் நிலைக்காது! பாவத்துல பங்கெடுக்க எனக்கு சம்மதமில்லை!”

“என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்! உனக்காக என்னை நான் மாற்றிக்க தயாரா இல்லை! நீ வளர்ந்ததும் இந்த பாவப்பணத்துல தான்!”

“அது நான் அறியாத பால பருவம்! தெரிஞ்ச பிறகு அதை ஒப்புக்க நான் தயாரா இல்லை!”

“அப்படீன்னா, வீட்டை விட்டு போயிடு! என் மகன் செத்துட்டான்னு நெனச்சுக்கறேன்!”

“போக முடியாது! காரணம் இது எங்கம்மா வீடு! உன் சொத்துக்கள் எனக்கு வேண்டாம்! ஆனா எங்கம்மா வீட்ல எனக்கு பங்கு உண்டு! எங்கம்மா ரயில் விபத்துல சாகலை! அவங்க சாவுக்கான காரணத்தை கண்டு பிடிக்காம நான் இங்கிருந்து போக மாட்டேன்!”

மாத்ருபூதம் கலைந்தார்! வியர்வையை துடைத்து கொண்டார்! ஒதுங்கி நின்றவன் நேரடியான மோதலுக்கு, களத்தில் இறங்கி விட்டான்! இவனை உசுப்பி விட்டவள் அந்த பாரதியா?

மனைவி ராஜலஷ்மி படத்துக்கு நேரே வந்து நின்றார்!

“உன் பிறந்த நாள்ள கோயில்ல வச்சு விவகாரம் தொடங்கியிருக்கு! அடுத்தடுத்து அந்த பாரதியால அவமானம்! அருள், உன் பிள்ளை, எனக்கெதிரா போர்க்கொடியை தூக்கிட்டான்! காரணம் நீயா? என் மேல உள்ள ஆத்திரத்துல, பாரதி ரூபத்துல நீதான் வந்திருக்கியா? உன் மகனை கிளப்பி விடறியா?”

காற்றடித்தது! வெளியே மழைக்கான அறிகுறிகள் பலமாக இருந்தது! மேகம் கறுத்து மின்னல் ஒன்று வெட்டியது! தொடர்ந்து பலத்த இடியோசை! மழை ஆரம்பமாகி விட்டது!

இதே மாதிரி ஒரு பலத்த மழை நாளில் தான் அது நடந்தது! ராஜலஷ்மியின் புகைப்படம் பார்த்தார்! அந்தக் கண்களில் ஒரு தீவிரம் தெரிந்தது! படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த புகைப்படக் கண்களிலிருந்து ஒரு ஜ்வாலை வேகமாக வெளியே வந்தது! அதைப் பார்க்க முடியாமல் கண்கள் கூச, அந்த அறையில் நிற்க முடியாமல் வேகமாக வெளியே வந்தார் பூதம். எதிரே அருள் வந்து நின்றான்!

–தொடரும்…

ganesh

1 Comment

  • தினமும் தொடர் வராதா???!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...