அவ(ள்)தாரம் | 4 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 4 | தேவிபாலா

சிதம்பரம் லேசான பதட்டத்துடன், உள்ளே நுழைந்தார்! ஒன்பது மணியே ஆகியிருந்ததால் ஆஃபீசில் யாரும் வந்திருக்கவில்லை! தன் அறைக்கு வந்த சிதம்பரம், கம்ப்யூட்டரை இயக்கி, மேஜையைச் சுத்தம் செய்து, தன் வேலைகளை தொடங்கி விட்டார்! சிதம்பரம் அலுவலக ஆட்களை பெரும்பாலும் வீட்டுக்கு அழைப்பதில்லை! இங்கே முப்பது வருஷங்களாக வேலை பார்க்கிறார்! ஆரம்பம் முதலே குடும்பம் வேறு, ஆஃபீஸ் வேறு என தனித்தனியாகப் பிரித்து விட்டார்! ஆஃபீசில் நடக்கும் விழாக்களுக்கு கூட குடும்பத்தை அழைத்துப் போவதில்லை! நாலு குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சுற்றுலா போக நேர்ந்தால், இவர் மட்டும் ஒதுங்கி விடுவார்!

“என்ன சிதம்பரம்? உங்க மனைவி, மூணு பெண்களை எங்க கண்லயே காட்ட மாட்டீங்களா?”

“எதுக்கு? தேவைனா காட்டலாம்!”

பெண்கள் பருவமடைந்ததும், அதை யாருக்குமே சொல்லவில்லை! சொந்த அத்தை மாமா என உறவுக்காரர்களுக்கு கூட அறிவிக்கவில்லை!

“என்னங்க! மஞ்சள் நீராட்டு விழாவை எல்லாரும் விமரிசையா நடத்தறாங்க! நம்ம புள்ளைங்களுக்கு அது குறையா இருக்காதா? ரத்த பந்தங்கள் கூடவா வரக்கூடாது?”

கௌசல்யா ஆதங்கமாக கேட்க,

“தேவையில்லை! இது, பெண் உடல்ல உண்டாகக்கூடிய இயற்கையோட வரம்! இதை எதுக்கு விளம்பர படுத்தணும்? காலம் கெட்டு கிடக்கு! ஆபத்துக்கு அழைப்பிதழ் அனுப்பச்சொல்றியா கௌசல்யா?”

“இப்படி யாரும் யோசிச்சதில்லீங்க! எனக்கே ஆச்சர்யமா இருக்கு!”

அம்மா, பெண்களுக்கு வண்டி குறை இருந்தாலும், அவரை எதிர்த்து பழக்கமில்லை! அதனால் அங்கே மாற்றுக்கருத்து இல்லை!

அடுத்தபடியாக மூத்தவள் வாசுகி கல்யாணம் நிச்சயமான போது, பிள்ளை வீட்டார் திருப்பதியில் பிரார்த்தனை என்று சொன்னது சிதம்பரத்துக்கு வசதியாகி விட்டது! குடும்ப உறவுகளை மட்டும், அதுவும் மிக நெருங்கிய உடன்பிறப்புகளுக்கு மட்டும் அழைப்பு! அதுவும் குறைந்த அளவுக்கு! இதனால் பல பேரின் அதிருப்திக்கு ஆளாகி விட்டார் சிதம்பரம்!

“திருப்பதில கல்யாணம்னா சென்னைல ஒரு ரிசப்ஷன் தரக்கூடாதா?”

பல பேரின் கேள்விக்கு, சிதம்பரத்திடம் பதிலே இல்லை!

“சரியான கஞ்சன்பா! காசை வெளில எடுக்க மாட்டான்!”

“சரிப்பா! மூணு பொண்ணுகளை கரை சேர்க்கணும் இல்லை? கவனமா இருந்தாத்தானே நல்லது!”

பொதுவாக சிதம்பரம் சிடுமூஞ்சி, ஆட்களை சேர்க்க மாட்டார், நண்பர்களே இல்லை என பல வித விமர்சனங்கள்! எதையும் அவர் பொருட்படுத்துவதில்லை! கௌசல்யாவும் அவருக்கு ஏற்ற மனைவி, வம்பு பேச மாட்டாள்! தான், தன் கடமை என வாழும் பெண்மணி! முதலில் பேசித் தீர்த்த கூட்டம் ஓய்ந்து போனது! பெண்களும் அதே வழியைக் கடைப்பிடிக்க, மூத்தவள் வாசுகி அப்படியே சிதம்பரத்தின் குணம்! அதனால் அதற்கு நேர் மாறான கலகலப்பான குணம் கொண்ட அவள் கணவன் சூரியுடன் அவளுக்கு ஏற்படும் தாம்பத்ய மோதல்கள் தனி அத்தியாயமாக வருகிறது!

சிதம்பரம் பதட்டம் நிறைந்து, தன் அலுவலக வேலைகளைத் தொடங்க, முதலாளி பூதம் வந்து விட்டதால் ஒரு பரபரப்பு உண்டானது! பதினொரு மணிக்கு வரும் சேர்மன் இன்று ஒன்பதே காலுக்கே வந்து விட்டதால், பல பேருக்கு அல்லு கிளம்பியது! வந்தவர் மூட் அவுட்டிலும் இருந்ததால், ஆஃபீஸ் ஏரியாவே ஒரு மாதிரி நடுக்கத்துக்கு உள்ளானது! அவர் வந்து சில நொடிகளில், சிதம்பரத்தை அழைத்தார்! சிதம்பரம் வந்து வணங்கினார்!

“சார்! மதுரைல…!”

“உங்ககிட்ட ஒப்படைச்ச வேலைகள் சரியா நடக்கும்னு எனக்கு தெரியும்! இப்ப விவகாரம் அது இல்லை!”

ஃபோன் அடிக்க, பூதம் எடுத்தார்!

“தேங்க்யூ! தப்பு நம்முது இல்லை! நம்ம ஆட்கள் ஓவர் பக்தி காட்டிட்டாங்க! ஆனா அந்தப்பொண்ணு கேட்டது நியாயம் தானே? அதனால தான் நான் மன்னிப்பு கேட்டேன்! அவளும் மீடியா கவரேஜ் கூடாதுனு தான் சொன்னா! அப்படியும் வந்துடுச்சு! இதைப் பெரிசாக்கி என்னை புகழ வேண்டாமே!”

வைத்து விட்டு நிமிர்ந்தார்!

“பாருங்க! நேத்திக்கு நானே எதிர்பாராத ஒரு நிகழ்வு! அந்த பொண்ணை..!”

“சார்! ஒரு தாழ்மையான தகவல்! அந்த பாரதி, என்னோட ரெண்டாவது மகள் தான்!”

குபீரென எழுந்து விட்டார் பூதம்!

“அப்படியா சிதம்பரம்? ஆச்சர்யமா இருக்கு! உங்க மனைவி உட்பட உங்க மூணு பொண்ணுகள்ள யாரையும் நான் பார்த்ததில்லை! வெரிகுட்! ரொம்ப ஸ்மார்ட்டா வளர்த்திருக்கீங்க! என்ன பண்றா பாரதி?”

“வீனஸ் ஃபைனான்ஸ் கம்பெனில அசிஸ்டன்ட் மானேஜரா இருக்கா!”

“எந்த வீனஸ்? ஓ! நம்ம கோபாலன் கம்பெனியா? நகை லோனுக்கு பேர் வாங்கின கம்பெனியாச்சே! நம்ம வீட்டு பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்டது எனக்கு பெருமை தான்!”

“சார்! இது ஒரு பக்கம்னா, என் கடைசி மகளைக் கடத்திட்டுப் போய் யாரோ விற்க பார்த்திருக்காங்க! அவளைக் காப்பாற்றி ஒரு பையன் மீட்டு கொண்டு வந்திருக்கான்!”

‘அடப்பாவி! அதுவும் உன் மகளா! அவளை விற்க பார்த்தது நான்னு தெரிஞ்சா நீ சும்மா இருப்பியா..?’

மனசுக்குள் பூதம் பேச,

“என்ன சார்? ஷாக்கா இருக்கா?”

பூதம் ஏதோ பேச வாய் திறக்க, அவருக்கு அழைப்பு வந்தது! பசவப்பா தான் அழைத்தான்!

“சார்! நேத்து நீங்க கடத்தினது நம்ம சிதம்பரத்தோட மகளை!”

“தெரியும்! இப்பத்தான் நானே தெரிஞ்சுகிட்டேன்! இது சிதம்பரத்துக்கு நம்ம ஆட்கள் மூலம் தெரியக்கூடாது! இங்கே தான் இருக்கார்! நான் அப்புறமா பேசறேன்!”

தனியாக வந்து, தாழ்ந்த குரலில் பேசியவர், இந்த பக்கம் வந்தார்!

“சரி! நீங்க உங்க வேலைகளை பாருங்க! ஒரு நிமிஷம்! உங்க பொண்ணு பாரதி, புத்திசாலியா இருக்கா! நம்ம கம்பெனில பர்ச்சேஸ் டிவிஷன்ல பெரிய வேகன்சி ஒண்ணு இருக்கே! வீனஸை விட அதிக சம்பளம் கிடைக்கும்! ஒரு அப்ளிகேஷன் தந்து இங்கே ஜாயின்ட் பண்ண சொல்றீங்களா?”

சிதம்பரம் தயங்கினார்!

“ ஏன் யோசிக்கறீங்க சிதம்பரம்?”

“இது அவ விருப்பம்! நான் சொல்லி பாக்கறேன்! அவளுக்குச் சம்மதம்னா கூட்டிட்டு வர்றேன்!”

“நம்ம கம்பெனில ஊழியர்னா, சமூகத்துல ஒரு கௌரவம் உண்டுனு எல்லாருக்கும் தெரியுமே!”

சிதம்பரம் வெளியே வந்து விட்டார்! அவர் முகம் சிவந்து கிடந்தது!

‘நான் ஒருத்தன் படற வேதனை போறாதா? என் மகளும் இந்த நரகத்துக்கு வரணுமா என்ன? இதை நான் அவ கிட்ட சொல்லவே போறதில்லை!”

சிதம்பரம் தன் இருப்பிடம் வர,

“என்ன சிதம்பரம்? சேர்மனையே மன்னிப்பு கேக்க வச்சு ஒரே நாள்ள உங்க மகள் உலகப்புகழை அடைஞ்சிட்டாளே!”

சிதம்பரம் இதற்கும் பதில் தரவில்லை!

காலை தன் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வழக்கம் போலக் கோயிலுக்கு வந்து விட்டாள் பாரதி! இன்று அந்த கோயில் வளாகத்தில் பூக்காரி முதல் அர்ச்சனைத் தட்டுக்களை விற்கும் கடைக்காரர் என சகல பேரும் அவளை ஒரு கதாநாயகியாகப் பார்க்க, பாரதிக்கு கூச்சமாக இருந்தது! பேப்பரில் ஃபோட்டோ வந்து, சோஷல் மீடியாவிலும் அவள் பிரபலமாகி விட்டதால், அவளை சுற்றிக் கூட்டமே கூடி விட்டது! அவளிடம் ஆட்டோகிராஃப் வாங்காத குறை தான்!

“வேண்டாம்! யாரும் தப்பா நினைக்காதீங்க! கோயில்ல என்னிக்குமே தெய்வம் தான் உசத்தி! அதைத்தாண்டி மனுஷங்களுக்கு தனி மரியாதை கூடாது! நேத்திக்கு வந்த முதலாளிக்கு என்ன நியாயமோ, அது தான் எனக்கும் நியாயம்!”

அவளுக்கே தெரியாமல் செல்ஃபோனில் பலர் அவளை படம் பிடித்தார்கள்! தரிசனம் முடித்து அவள் வெளியே வர, பைக்கில் சாய்ந்து அருள் நின்றான்! ஏனோ அவள் மனசு அவனை எதிர்பார்த்தது! பார்த்ததும் குபீரென ஒரு மலர்ச்சி பொங்கியது! இது பாரதிக்கு முற்றிலும் புத்தம் புதிய உணர்வு!

“என்னை எதிர்பார்த்தீங்களோ?”

கண்களின் வழியாக மனசைப் படித்து விட்டான்! எம காதகன்!

“எனக்குப் பொய் சொல்லத்தெரியாது! ஆமாம்!”

“என் மனசுல பட்டதால வந்தேன் பாரதி! என் பேரு அருள்னு நான் உங்களுக்கு சொன்னதா ஞாபகம் இல்லை! இங்கே இருக்க வேண்டாம்! ஆனா உங்க கிட்ட முக்கியமா சில சங்கதிகளை நான் பேசியாகணும்! அப்படியே சிவன் பார்க் போயிடலாம்! வருவீங்களா?”

“அதுல என்ன சந்தேகம் அருள்?”

இருவரும் அவரவர் வண்டிகளில் சிவன் பார்க் வந்து சேர, தனியிடம் பார்த்து உட்கார,

“வீட்ல உள்ளவங்களுக்கு பயம் போச்சா பாரதி?”

“காலைல அப்பா வந்ததும் சொன்னோம்! அப்பா ரொம்ப அதிர்ச்சி ஆயிட்டார்! அவரால, மேகலா சங்கதியை ஜீரணிக்கவே முடியலை! அது மட்டுமில்லை, பேப்பர்ல, மீடியால கோயில் மேட்டர் வந்து..”

“அதை பேசத்தான் நான் வந்தேன்! அவர் தன்னை சமூகத்துல தூக்கிப்பிடிக்க இது ஒரு விளம்பரமாச்சு! அதைப் பயன்படுத்திக்கிட்டார்!”

“போகட்டும்! உங்களுக்கு மேகலாவை கடத்தின சங்கதி எப்படி அருள்?”

“அதை செஞ்சதும் இந்த மாத்ருபூதம் தானே!”

“என்ன சொல்றீங்க? அத்தனை மோசமானவரா?”

“இதுவும் ஒரு தொழில்! க்ரூப் கம்பெனி நல்ல தொழில்களை நடத்தும்போது அண்டர்க்ரவுண்ட் அரசாங்கம் ஒண்ணு தனியா நடக்குது! இதுல பெரும் புள்ளிகள் பல பேருக்குப் பங்கு உண்டு!”

“நீங்க யாரு? இதெல்லாம் உங்களுக்கு எப்படீ?”

“மிஸ்டர் பூதத்தோட மகன் சின்ன பூதம் தான் இந்த அருள்!”

“நீங்க சொல்றது நிஜமா?”

“நான் ஏன் பாரதி உங்க கிட்ட பொய் சொல்லப்போறேன்? எங்க வீட்ல வச்சு ஒரு பொண்ணைக் கடத்தற திட்டம் பேசப்பட்டப்ப, நான் கேட்டேன்! உங்க தங்கச்சினு உங்க வீட்ல கொண்டு வந்து விட்ட பிறகு தான் தெரியும்! எங்கப்பா பல முறை விருது வாங்கின ஒரு பெரிய தொழிலதிபர்தான்! ஆனா எல்லாத் தப்புக்களும் அவர் கிட்ட இருக்கற காரணமா அது எனக்கு பிடிக்காம நான் தட்டிக்கேட்க, அவரோட முதல் எதிரி நான் தான் பாரதி! நான் என் வீட்ல எப்படிப்பட்ட வாழ்க்கை வாழறேன் தெரியுமா?”

என ஆரம்பித்து சகலமும் அவன் சொல்ல, ஒரு பிரமிப்புடன் கேட்டாள் பாரதி!

“இப்ப அவருக்கு என்னைக் கொல்ற ஆத்திரம்! ஆனா வெளில செய்தி வந்துடும்னு பயந்து பேசாம இருக்கார்! நான் இவரோட அக்ரமங்களைப் பார்த்தா தோலுரிக்காம விடமாட்டேன்!”

பாரதி பிரமிப்பின் உச்சிக்கே போனாள்!

“சரி விடுங்க! என் சுய புராணம் போதும்! நான் விஷயத்துக்கு வர்றேன்! மேகலா இனி ஜாக்ரதையா இருக்கணும்! அவளுக்கு உடனடியா பிரச்னை வராது! ஆனா அவ உங்க தங்கச்சினு அப்பாவுக்கு தெரிஞ்சா, பிரச்னை ஆரம்பமாயிடும்! மீடியால உங்களை பாராட்டி விளம்பரம் தேடற அவர் அடுத்து என்ன பண்ணுவார்னு உங்களுக்குச் சொல்றேன்! தன் கம்பெனில பெரிய பதவி தந்து உங்களை உள்ளே இழுப்பார்! அது சீக்கிரம் நடக்கும்! அவரோட சதுரங்க ஆட்டம் நிச்சயம் தொடங்கும்! ஒருத்தர் கிட்ட அவர் மன்னிப்பு கேட்டுட்டா, அது தப்பான ஒரு தொடக்கத்துக்கு வழி!”

“இதுல இத்தனை இருக்கா அருள்?”

“பெரிய மனுஷங்க சிரிப்புக்கு பின்னால எப்பவுமே ஒரு விஷம் இருக்கும் பாரதி! நீங்க எங்கே வேலை பாக்கறீங்க?”

“வீனஸ் ஃபைனான்ஸ் கம்பெனில!”

“சரி பாரதி! புறப்படலாம்!”

“மறுபடியும் நான் உங்களை எங்கே சந்திக்கலாம் அருள்?”

“எதுக்கு பாரதி? நாம திரும்பவும் சந்திக்கணுமா?”

“எங்களுக்கு ஆபத்து வந்தா?”

“கடவுள் காப்பாத்துவார்! பை!”

அவன் புறப்பட்டு போய் விட்டான்! பாரதிக்கு பிரமிப்பாக, ஆச்சர்யமாக, கொஞ்சம் கோபம் கூட வந்தது!

“நான் கோயிலுக்கு வருவேன் என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு இணக்கமாக நாலு வார்த்தைகள் பேச வராதா? ஹீரோனா ஃபைட் மட்டும் போதாது! புத்திசாலித்தனம் நிறைய இருக்கு, அழகு, ஆண்மை எல்லாம் இருக்கு! வயசுக்குள்ள மென்மை, எதிர்பார்ப்பு ஏன் உங்கிட்ட இல்லை? நீ எந்திரனா? எந்திரனை விட இந்திரனைத்தான் பெண்களுக்கு பிடிக்கும்!”

பைக்கை ஓட்டிக்கொண்டு வந்த அருள் ஒரு ஓரமாக நின்று, சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான்!

“ஸாரி பாரதி! எங்கிட்ட உள்ள ஒரே கெட்ட பழக்கம் இந்த சிகரெட் தான்! இதை விட முடியலை! ஒரு வேளை நாம நெருங்கி பழக நேர்ந்து நீ விடச்சொன்னா நான் சிகரெட்டை விட்டுர்றேன் பாரதி! என்னை நீ ஜடம்னு நெனச்சிருப்பே! ஆனா யார் மனசிலும் ஆசைகளை விதைக்க நான் விரும்பலை பாரதி! நான் ரொம்ப நேசிச்ச என் அம்மா, என் கூட வாழ கொடுத்து வைக்கலை! அந்த வரிசைல நீ சேர வேண்டாம் பாரதி!”

-தொடரும்…

3 வது அத்தியாயம் | 5 வது அத்தியாயம் >

ganesh

1 Comment

  • தினமும் தொடர் படிக்க. ஆவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...