அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா

2 months ago
92

ப்பா சிதம்பரம், கொஞ்சம் சோர்வுடன் இருந்தார்! அம்மா கௌசல்யா அதைக் கவனித்தாள்! பொதுவாக கண்டிப்பும் கறாரும் இருந்தாலும், குடும்பம் என்று வந்தால் உருகும் மனிதர் சிதம்பரம்..! இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுயநலவாதியும் கூட. தன் மனைவி, மூன்று மகள்களை தவிர அவருக்கு எந்தச் சிந்தனையும் இல்லை! அவர்கள் நன்றாக இருந்தால் போதும்! தன் உடன்பிறப்புகள், மனைவியின் உறவுகள் என யாரையும் மதிக்க மாட்டார்..! யார் வீட்டு விசேஷங்களுக்கும் போகவும் மாட்டார்..!

“இது சரியில்லீங்க..! நமக்கும் நாலு மனுஷங்க வேணுமில்லையா..? மூணு பொண்ணுகளைப் பெத்து வச்சிருக்கோம்! அதை மறக்கக்கூடாது..!”

“அதுக்காக சொந்தக்காரங்க கால்ல போய் விழணும்னு சொல்றியா..? என் பொண்ணுகளை கரை சேர்க்க எனக்கு யார் உதவியும் தேவையில்லை..!”

வாக்குவாதம் வலுக்க, பெண்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினார்கள்..! வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் கலகலப்பாகத்தான் இருப்பார்..! அவர்களின் தேவைகளைத் தப்பாமல் பூர்த்தி செய்வார்..! ஆனால் கம்பெனி வேலைகள் மூச்சு முட்டும்..! பெரும்பாலும் வீடு திரும்ப இரவு ஒரு மணி கூட ஆகி விடும்..!

“இப்படி நீங்க உழைச்சா, உங்க உடம்பு கெட்டுப்போகும்..!”

“ஒரு குடும்பத்தலைவன் தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டா, அவனுக்கு தலைவனா இருக்கற தகுதியே இல்லை கௌசல்யா..!”

பெண்கள் மூவரும் அப்பாவை நினைத்துப் பெருமிதம் கொள்ளாத நாளே இல்லை..!

அந்த சிதம்பரம், வழக்கத்தை விட சோர்வாக இருந்தார்..! வாசுகி, அவள் வீட்டுக்கு போய் விட்டாள்..! மாலை ஏழு மணிக்குத்தான் பாரதி வீடு திரும்பினாள்..! மேகலா படித்துக் கொண்டிருந்தாள்..! இரவு உணவுக்கு அம்மா அழைக்க, ‘எனக்கு பசிக்கலை..!’ என சிதம்பரம் மறுத்து விட்டார்..! மேகலா சாப்பிட்டு கை கழுவ,

“இப்படி வாம்மா மேகலா…”

“என்னப்பா..?”

“உன்னை எங்கே அடைச்சு வச்சிருந்தாங்கனு தெரியுமா..?”

“கிழக்கு கடற்கரை சாலைனு சொன்னாங்க..! என்னை மீட்டு அவர் கொண்டு வரும் போது ஒரு சர்ச்சை பார்த்தேன்..! எம்.ஜி.எம்.தாண்டி வந்தோம்பா..!”

அவர் முகம் இறுகிக்கிடந்தது.

“அந்த பையன் பேரென்னனு தெரியுமா..?”

“அருள்..!”

பாரதி பதில் சொல்ல, படக்கென திரும்பினார் சிதம்பரம்..!

“உனக்கெப்படித் தெரியும் பாரதி..?”

“அவர் சொன்னார்பா..! காலைல கோயிலுக்கு வந்தாரே..! உங்க முதலாளி மகன்தான் அவர்னு தெரிஞ்சுகிட்டேன்..!”

“என்னது..? முதலாளி மகனா அந்த தம்பி..? அதுக்கு எப்படி தெரிஞ்சுது நம்ம மேகலா கடத்தப்பட்டது..?”

பாரதி ஏதோ பேச வாய் திறந்தாள்..! படக்கென மூடிக்கொண்டாள்..!

“வேண்டாம்..! நான் தெரிஞ்சதைச் சொன்னா, அருளை நான் சந்திச்சதை சொல்லும் படி நேரும்..! அப்பா அதை விரும்ப மாட்டார்..! வீண் பிரச்னை தொடங்கும்..! அருள் சொல்ற நிலத்தடி நிர்வாகத்துக்கு, முதலாளிதான் சொந்தக்காரர்னு அப்பாவுக்கு தெரியாம கூட இருக்கலாம்! நானா வலியப்போய் மாட்டக்கூடாது..!”

“முதலாளிகிட்ட பாரதி என் மகள்தான்னு சொன்னீங்களா..?”

“ம்..! ரொம்ப சந்தோஷப்பட்டார்..! அதை விடு..! முடிஞ்ச பிரச்னை பற்றி ரொம்பப் பேச வேண்டாம்..! நான் படுக்கப் போறேன்..!”

காலிங் பெல் அடித்தது..! சிதம்பரம் திறந்தார்..! கம்பெனி ஊழியர் சீருடையுடன் நின்றார்..!

“என்னப்பா..? முதலாளி வரச்சொன்னாரா..?”

“இல்லீங்க சார்..! இந்த லெட்டரை உங்க மகள் பாரதி கிட்ட தரச்சொன்னார்..!”

“பாரதிக்கு லெட்டரா..? சரி, நான் குடுத்துர்றேன்..!”

அவன் போனதும் அவரே பிரிக்க, குடும்பமே கூடி விட, அது பாரதிக்கு பெரிய பதவி தந்து வேலைக்கான உத்தரவு..! கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் சம்பளம்..! கம்பெனி கார், மற்ற வசதிகள்..! பெரிய பதவி..! கூடவே முதலாளி கைப்பட கடிதம்..!

“பாரதிக்கு..! நீ பெயருக்கேற்ற பெண் தான்..! ஒரே நாளில் உன் தைரியமான பேச்சால் உச்சிக்கு வந்து விட்டாய்..! உன்னை போல எல்லாம் நிறைந்த ஒரு பெண் என் கம்பெனி அதிகாரியாக பதவியேற்றால் அது கம்பெனிக்கே கௌரவம்..! நாளைக்கே நீ வேலையில் சேரலாம்..! காலையில் கார் அனுப்புகிறேன் – மாத்ருபூதம்..!”

அம்மா சிலிர்த்துப் போனாள். தங்கை மேகலா ஆனந்த கூச்சலிட்டாள்.

“பாருடி..! முதலாளி உன் கிட்ட மன்னிப்பு கேட்ட தகவலை மீடியா வெளிச்சம் போட, நானே பயந்துட்டேன்..! ஆனா அவர் இத்தனை நல்ல மனுஷனா இருக்காரே..! உன்னைத் தூக்கி உச்சாணிக்கொம்புல வைக்கறாரே..! யாருக்குடி கிடைக்கும் இந்த பாக்கியம்..? ஏன் நீங்க பேசாம இருக்கீங்க..?”

சிதம்பரம் நிமிர்ந்து பாரதியை பார்த்தார்..!

பாரதிக்கு, அருள் சொன்னது காதுக்குள் ஒலித்தது..!

“அவர் உங்களுக்கு பெரிய பதவி தந்து கம்பெனிக்குள்ள உங்களை இழுக்க முயற்சி செய்வார்..! பகிரங்க மன்னிப்பு கேட்டுட்டார் இல்லை..? இனி அவரோட சாதுர்யமான சதுரங்க விளையாட்டு ஆரம்பமாயிடும்! நீங்க ஜாக்ரதையா இருக்கணும் பாரதி..!”

“நீ ஏண்டீ பேசாம இருக்கே..?”

“அக்காவுக்கு அதிர்ச்சில வாயடைச்சுப் போச்சு..! லட்ச ரூபாய் சம்பளம், கார், பெரிய பதவினா சும்மாவாம்மா..? யாருக்கு அதிர்ச்சி வராது..”

“அப்பா..! நாளைக்குக் காலைல நீங்களும் என் கூட கம்பெனி கார்ல வந்துடுங்க..”

“நீ ஜாயின் பண்ணப்போறியாம்மா..?”

“இது என்னங்க கேள்வி..? உங்க முதலாளி, வீட்டுக்கே கார் அனுப்பி வேலை தர்றார்னா மறுப்பாளா பாரதி..?”

“அம்மா..! அவசரப்படாதே..! நான் வேலையை ஏத்துக்கப் போகலை..! வேண்டாம்னு சொல்லத்தான் போறேன்..!”

“பைத்தியமாடீ உனக்கு..?”

“இல்லைம்மா..! அவசியமில்லை..! ஒரு சின்ன சம்பவத்துக்கு முதலாளி நெகிழ்ந்து போயிருக்கலாம்..! ஆனா அதுக்காக இத்தனை பெரிய பதவி எனக்கு அவசியமில்லை..! படிப்படியா உயரணும்..! அது தான் நிலைக்கும்..! ஒரே நாள்ள ஆகாயத்தைத் தொடற வாய்ப்பு வர்றது தப்பு..! விழுந்தா எலும்பு கூட மிஞ்சாது..! மேலும் அப்பா வேலை பாக்கற கம்பெனில நானும் சேர விரும்பலை..! அது ரெண்டு பேருக்குமே நல்லதில்லை..! அவர் வேலை தந்த மரியாதைக்கு, நான் நேர்ல போய் நன்றி சொல்லி அதை மறுக்கறது தான் பண்பாடு..! சரியாப்பா..?”

அவர் நெருங்கி வந்து அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்..!

“நீ என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான்மா இருக்கும்..! அதுல குறை காணவே முடியாது..!”

“இவ மறுக்கற காரணமா முதலாளி அவமானப்பட மாட்டாரா..? அந்த கோபம் உங்க மேல திரும்பினா நமக்கது நல்லதா..?”

“கௌசல்யா..! நான் அவருக்கு ஊழியன், அவ்ளோதான்..! அடிமையில்லை..! என் மகள் சுதந்திரத்துல எப்படி நான் தலையிட முடியும்..?”

“நீ நல்ல வாய்ப்பை இழந்து பொல்லாப்பையும் தேடிக்கற மாதிரி எனக்கு தோணுது பாரதி.”

“உனக்கு பணத்தாசையா கௌசல்யா..?”

“இல்லீங்க! ஆனா பெரியவங்க மதிக்கும் போது அதை ஏத்துக்கலைனா அவங்க கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்..! அப்புறம் உங்க இஷ்டம்..!”

சிதம்பரம் முகத்திலும் ஒரு நொடி கலவரம் தோன்றி மறைந்ததை பாரதி பார்த்தாள். அதற்கான காரணம் அவளுக்கு புரியவில்லை.

காலை ஆறு மணிக்கு, வாசுகி வந்து நின்றாள்..!

“என்னடீ வாசுகி..? இத்தனை சீக்கிரமா வந்து நிக்கற..?”

“அம்மா நேத்து ராத்திரி பத்து மணிக்கு ஃபோன் பண்ணினாங்க..! அவ்ளோ பெரிய மனுஷன் வீட்டுக்கே பெரிய பதவி தந்து ஆர்டர் அனுப்பறார்..! காரு, ‘ல’கரத்துல சம்பளம், பெரிய பதவி, வேண்டாம்னு சொல்ல பைத்தியமாடீ பாரதி உனக்கு..? ஏன்பா, நீங்களும் அவ சொல்றதை சரினு சொல்றீங்க..?”

“வாசுகி..! அவ இந்த வேலைல சேர்ந்தா நான் தடுக்கப்போறதில்லை..! வேண்டாம்னு அவ சொல்லும் போது எதுக்காக நான் அவளை கட்டாயப்படுத்தணும்..? அவளுக்குனு ஒரு சுதந்திரம் இருக்கில்லையா..? படிக்கற நாட்கள்ள, உங்க யாரையும் இந்த க்ரூப் எடு, நீ இதைத்தான் படிக்கணும்னு கட்டாயப்படுத்தி இருக்கேனா..? உங்க ஒழுக்கத்தை மட்டும் தான் நான் வலியுறுத்துவேன்..! வேற எதுல நான் குறுக்கே வந்திருக்கேன்..?”

“உங்க கம்பெனில, உங்களை விட பெரிய பதவில பாரதி வர்றது உங்களுக்கு பொறாமையா இருக்கா..?”

“ஏண்டீ இப்படிப் பேசற..? அப்பாவே தன் மகளை பார்த்து பொறாமைப்படுவாரா..? இதை நானே ஏற்க மாட்டேன் வாசுகி!”

“அக்கா! என் முடிவுல மாற்றமில்லை..!”

“யாருக்கும் எதிரியா இல்லாம இருந்தே, மேகலாவை யாரோ கடத்தியிருக்காங்க..! இப்ப பெரிய மனுஷனை அவமதிக்கறது நமக்கு பிரச்னைகளைக் கொண்டு வரும்னு எனக்கு தோணுது..! அப்புறம் உங்க இஷ்டம்! நான் வர்றேன்..!”

வாசுகி கோபமாகப் புறப்பட்டு போக, அம்மா திரும்பவும் பாரதியிடம் இது தொடர்பாகப் பேச, வாசலில் கம்பெனி கார் வந்து நின்றது..!

“அப்பா..! நான் குளிச்சிட்டு வந்திர்றேன்..! நீங்க ரெடி ஆகுங்க..!”

“நான் எதுவும் சமைக்கலைடி..!”

“நாங்க வெளில பாத்துக்கறோம்மா..!”

சிதம்பரமும், பாரதியும் அரைமணியில் தயாராகி புறப்பட்டு விட்டார்கள்..! அப்பா வாசலை நெருங்க, தடுமாறி விழப்போக மேகலா பிடித்து விட்டாள்..!

“என்னப்பா ஆச்சு..?”

“கொஞ்சம் தலைசுத்தல்..! நேத்து ராத்திரி பீப்பி மாத்திரை போடலை..! கொஞ்சம் உட்கார்ந்து ஒரு டீ சாப்ட்டு, புறப்பட்டா சரியாகும்..!”

அம்மா தேனீர் கொண்டு வந்தாள்..!

“இதப்பாருங்க..! பாரதி இந்த வேலையை மறுக்கறதுல உங்களுக்கும் பதட்டமும் பயமும் இருக்கு..! வாசுகி காரணமில்லாம சொல்ல மாட்டா..! பாரதி, உன் முடிவு தப்புனு ஏதோ ஒரு சிக்னல் காட்டுது..! அதை மதிக்காம பிடிவாதம் பிடிக்காதீங்க..!”

“பாரதி..! போகலாம். எனக்கு இப்ப எந்த பிரச்னையும் இல்லை..!”

ருவரும் கம்பெனி காரில் ஏறி விட்டார்கள்..! கார் புறப்பட்டுப் போவதை அம்மா கவலையுடன் பார்த்தாள்..!

கம்பெனி வளாகத்துக்குள் கார் வந்து நிற்க, இரண்டு அதிகாரிகள் இவளைப் பூச்செண்டு தந்து வாசலில் வரவேற்க, சிதம்பரமே இதை எதிர்பார்க்கவில்லை..! மீடியா ஆட்கள், அன்றைக்கு கோயிலில் இருந்தவர்கள், காமிராவுடன் நிற்க ஃபோட்டோ ஃப்ளாஷ் இவள் மேல் விழ, சிதம்பரம் இன்னும் பதட்டமானார்..!

“சேர்மன் காத்துக்கிட்டு இருக்கார்..!”

தகவல் வர, ஒரு அதிகாரி வந்து அழைத்துப்போக, மீடியா ஆட்களும் உள்ளே நுழைய, பூதம் எழுந்து நின்று பாரதியை வரவேற்க, உடனே காமிராக்கள் வெளிச்சக்கொத்துக்களை வீச,

“வா பாரதி..! எல்லாம் தயார்..! நம்ம கம்பெனி உயர் அதிகாரிகள் எல்லாரும் ஆஜர்..! இப்ப நல்ல நேரம்..! உனக்கு பதவிப் பிரமாணம் செய்ய எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காங்க..!”

“சார்..! ஒரு நிமிஷம்..! நான் கொஞ்சம் பேசணும்..!”

“தாராளமாப் பேசு..! நீதான் இனி நிறையப் பேசணும்..!”

“இல்லை சார்..! நீங்க வீட்டுக்கேஆர்டர் அனுப்பினீங்க..! பெரிய பதவி, பெரிய சம்பளம், கார் எல்லாம் தந்ததுக்கு நன்றி..! ஆனா இதை ஒப்புக்க நான் தயாரானு கேக்காம இத்தனை ஏற்பாடுகளை நீங்க செஞ்சிருக்க வேண்டாம்..! அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்னு ஒண்ணு தந்தா, அக்செப்டன்ஸ்னு ஒண்ணு உண்டு..! தர்றது உங்க பெருந்தன்மை..! ஆனா ஏத்துக்கறது என் உரிமையில்லையா..?”

“நீ என்ன சொல்ற பாரதி..?”

“இதை நீங்க எங்கிட்ட அல்லது அப்பா கிட்ட சொல்லி சம்மதம் கேட்டிருக்கணும்..!”

“நான் உங்கப்பா கிட்ட நேத்திக்கே சொன்னேனே..!”

“என் மகள் சம்மதிக்கணும்னு நானும் உங்க கிட்ட சொல்லலியா சார்..?”

அவர் முகம் மாறி விட்டது.

“நீ இப்ப பாக்கற வேலையை விட பல மடங்கு இது உசத்தி..! பதவி, சம்பளம், சௌகர்யங்கள் எல்லாமே அதிகம்..!”

“வேண்டாம் சார்..! நான் கேக்கலை..! எனக்கு இருக்கறது போதும்..! என்னை மன்னிச்சிடுங்க..! இதை ஏத்துக்கற மனநிலை இப்ப எனக்கில்லை..! நான் வர்றேன்..!”

திரும்பினாள். மீடியா ஆட்கள் நிற்க,

“ப்ளீஸ்! இதையெல்லாம் வெளிச்சம் போடாதீங்க..!”

“பாரதி..! உன்னை நான் கட்டாயப்படுத்தலை..! நீ மட்டும் இரு..! ரெண்டு வார்த்தைகள் பேசணும்..!”

சிதம்பரம் உட்பட அத்தனை பேரும் வெளியேற, அருகில் வந்தார் மாத்ருபூதம்..!

“அன்னிக்கு கோயில்ல வச்சு என்னை அவமானப்படுத்தினே..! நான் மன்னிப்பு கேட்டு எனக்கதை சாதகமா மாற்றினேன்..! இன்னிக்கு என் இருப்பிடத்துக்கே வந்து அசிங்கப்படுத்தற..! ஏன்..? இத்தனை உயரத்தை உன்னைக் கூப்பிட்டு தரும் போது உனக்கு கசக்குதா..?”

“பிள்ளையைக் கிள்ளிட்டு தொட்டிலை ஆட்டறீங்களா..? என் தங்கச்சியைக் கடத்தி வியாபாரம் பேசிட்டு எனக்கு பதவியா..?”

“உங்கப்பா உன்னைத் தடுக்கறாரா..?”

“அவர் பாவம், நேர்மையான மனுஷன்..! உன் ஊழல்கள் எதுவும் அவருக்குத் தெரியாது..! பெரிய தொழிலதிபர்னு முகமூடியை மாட்டிட்டு, நிலத்தடில பெண்களை வச்சு வர்த்தகம் நடத்தறது அவருக்கு தெரியாது..! பெண்களோட கற்பை கடவுளா நினைச்சு தான் எங்களை அவர் வளர்த்திருக்கார்..! உன்னோட இன்னொரு முகம் அவருக்குத் தெரிஞ்சா, அடுத்த நொடியே ராஜினமா தந்துட்டு, உன் முகத்துலகாறி துப்பிட்டு வெளில போயிடுவார்! நான் சொல்லப் போறதில்லை..! இதுக்கு மேல நாம பேசவேண்டாமே..! உன் உண்மையான முகத்தை எனக்கு உரிச்சு காட்டினது யாரு தெரியுமா..?”

“யாரது..?”

“உன் மகன் அருள்… அருள்… அருள்..!”

வேகமாக வெளியேறினாள் பாரதி..! எரிமலையாக நின்றார் பூதம்..!

-தொடரும்…

1 thought on “அவ(ள்)தாரம் | 5 | தேவிபாலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31