தமிழக அரசு 300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்றத் திட்டம்

 தமிழக அரசு 300 சுற்றுலா தலங்களை சர்வதேச தரத்துக்கு மாற்றத் திட்டம்

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தனித்துவத்தை நிலைப்படுத்துதல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் காலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசின் சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.

தனியார் மற்றும் அந்நிய முதலீட்டை உருவாக்குதல், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலா பெருந்திட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு சுற்றுலாத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு மற்றும் பாரம்பரிய உணவு முறையை பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவு ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

இவை அனைத்தையும் 300 சுற்றுலாத்தலங்களில் செயல்படுத்தி சர்வதேச தரத்துக்கு இணையாக மாற்றும் விதமாக சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்று பேரவையில் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டப்படும். தமிழ் பண்பாடு, பாரம்பரிய சின்னமாக விளங்கிய பூம்புகார் சீரமைக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 300 சுற்றுலாதலங்களில் சர்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும். அணைக்கட்டு கள், நீர்த்தேக்கங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்படும்.

சுற்றுலாக் கொள்கை உருவாக்கப்படும். சுற்றுலா இடங்களை மேம்படுத்த, ‘சுற்றுலாத் தலங்கள் வளர்ச்சித் திட்டம்’ உருவாக்கப்படும்.

முக்கிய சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் மதுரை, கொடைக்கானல், ராமேசுவரத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்க ரூ.1 கோடியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்படும்.

கொல்லிமலை, ஜவ்வாது மலை, ராமேசுவரம் ஆகியவை முக்கிய சுற்றுலா தலமாக மேம்படுத்தப் படும். ஏலகிரி, ஒகேனக்கல் மேம்படுத்தப்படும். முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் உணவகம் அமைக்கப்படும்.

மலைவாழிடங்கள், வனப்பகுதி, கடற்கரைப் பகுதிகளில் சாகச சுற்றுலா இடங்கள், சுற்றுச்சூழல் திறந்தவெளி முகாம்கள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதிகளை இணையதள பயண நிறுவனங்களான Make MyTrip, Yatra, Goibibo போன்ற நிறுவனங்களின் இணைய தளத்தில் இடம்பெறச்செய்து பிரபலப்படுத்தி, வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிச்சாவரம் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்படும். முதலியார்குப்பம் படகு குழாம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதி கூடுதல் வசதிகளுடன் ரூ. 50 லட்சத்தில் மேம்படுத்தப்படும். கோவை மாவட்டம், உக்கடம் மற்றும் வாலாங்குளம் ஏரியில் புதிய படகு குழாம்கள் ஏற்படுத்தப்படும்.

சுற்றுலா விருந்தோம்பல் திறன்மேம்பாடு மற்றும் சான்றிதழ் திட்டம் தொடர்பான படிப்பு அறிமுகம் செய்யப்படும். சுற்றுலா சார்ந்த தொழில்முனை வோரை ஊக்குவிக்க சுற்றுலா விருது வழங்கப்படும்.

ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் வழங்கப்படும் Blue Flag அங்கீகாரத்தைப் பெறும் வகையில் மெரினா, கோவளம், மாமல்லபுரம், முதலியார்குப்பம், மனோரா, அரியமான், முட்டம் மற்றும் பல்வேறு கடற்கரைகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிராமிய, மலைத் தோட்டப் பயிர் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவச் சுற்றுலா பல்வேறு தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மேம்படுத்தப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...