வாகினி – 24| மோ. ரவிந்தர்

 வாகினி – 24| மோ. ரவிந்தர்

“அண்ணியோட தலை மறைஞ்சா போதும், இப்படி ஒரு ஃபுல் பாட்டில் வாங்கி வச்சுக்கிட்டு கூத்தடிக்க வேண்டியதே வேலையா போச்சு. இது உங்களுக்குப் போரடிக்கலையா?” எனக் கேட்டான், நல்லதம்பி.

“அட போடா ! அவ எப்ப பார்த்தாலும் பேசி பேசி உயிரை எடுக்ககுறா. அதுக்கு இதுவே தேவல. ஆண்களுக்கு இந்தச் சொர்க்கத்தை விட்டா வேற என்னடா இந்த உலகத்தில இருக்கா என்ன?” என்று பதில் கூறினான், தனஞ்செழியன்.

“சரி அதை விடுங்க, தலைவர் கிட்ட இருந்து ஏதாவது பதில் வந்ததா, இல்லையா?” என்று கூறிக்கொண்டே கையில் வைத்திருந்த தண்ணீரைத் தரையில் கொட்டி விட்டதால், அதைத் துணி வைத்து துடைத்துக் கொண்டே கேள்வி எழுப்பினான், நல்லதம்பி.

“அத சொல்ல தாண்டா உன்னை இங்கே அவசரமாக வர சொன்னேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தலைவர் எனக்குப் போன் பண்ணி அந்தச் சீட்டு எனக்குத் தான்னு சொன்னாரு. எப்படியோ, இத்தனை கால உழைப்புக்கு ஒரு விடிவு காலம் பிறந்திருக்கு. இனிமே இந்தப் பட்டிதொட்டியெல்லாம் என் பெயர் ஒலிக்கும்” என்று தனது இன்பத்தைப் பெரும் குரலாகப் பதிவு செய்தார், தனஞ்செழியன்.

அந்த நேரம்…”மீனா… மீனா” என்ற குரலோடு கஸ்தூரி சில்வர் அன்ன கூடையை எதிர்பார்த்து வீட்டுக்குள் நுழைந்தாள்.

அவளுடைய குரலைக் கேட்டதும் பெரும் குடிமகன்கள் இருவரும் மது பாட்டிலை எடுத்து அவசர அவசரமாக மறைத்து வைத்தனர்.

கஸ்தூரி அந்த வீட்டுக்குள் நுழையும்போது குபீர் என்ற ஒரு வாடை அவள் மூக்கை துளைத்தது இருவரையும் உற்றுப்பார்த்தாள். ‘மீனா வீட்டில் இல்லாததால் இந்தக் குடிமகன்கள் குடித்துவிட்டுப் போதையில் மிதந்து இருக்கிறார்களோ, இந்த இடத்தை விட்டு உடனே திரும்புவது நல்லது’ என்று எண்ணிக்கொண்டு வாசல் படியில் தனது காலை வைத்தாள், கஸ்தூரி.

“என்னங்க எதையோ எதிர்பார்த்து வந்துட்டு, இப்ப. எதையுமே கேட்காம போறீங்களே. உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார், தனஞ்செழியன்.

‘பரவாயில்லை, போதையில் இருந்தாலும் தெளிவோடு தானே பேசுகிறார்கள்’ என்ற எண்ணம் கஸ்தூரி மனதில் உதித்தது.

“ஒண்ணும் இல்லங்க, எங்க அக்கா பெரிய அன்னக்கூடை இருந்தா வாங்கிட்டு வர சொன்னாங்க. அதான், மீனாக்கிட்ட கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்?” என்று அவன் பார்வைக்குத் திரும்பினாள்.

“அவ இல்லனா என்னங்க, நான் எடுத்துட்டு வர சொல்றேன். வாங்கிட்டு போங்க” என்று கூறிவிட்டு, “டேய் கொஞ்சம் சமையலறைக்குப் போய் அவங்க கேட்குற அன்னக்கூடை பார்த்து எடுத்துட்டு வந்து கொடு?” என்று நல்ல தம்பிக்கு கட்டளை பிறப்பித்தார், தனஞ்செழியன்.

தனஞ்செழியனின் சொல்லைக் கேட்டு உடனே சமையல் அறைக்குச் சென்றான் நல்லதம்பி.

‘வந்ததும் வந்துட்டோம் பாத்திரத்தை வாங்கிட்டே போயிடலாமே’ என்று வாசல்படியை தாண்டாமல் அமைதியாக நின்றாள்.

“அப்புறங்க, பணம் தேவைப்படுதுன்னு எல்லாரையும் கேட்டுட்டு இருந்தீங்களே, கிடைச்சிடுச்சா?” என்று கஸ்தூரியிடம் மெல்ல கேள்வி கேட்டார், தனஞ்செழியன்.

“அதெல்லாம் கிடைச்சிடுச்சுங்க!” என்று கூறி முடிப்பதற்குள். சதாசிவம் பேங்க்ல ஒருத்தரோட ‘ஷுருட்டி’ தேவைப்படுது என்று கூறியது. திடீரென்று, அவளுக்கு நினைவுக்கு வந்தது.

“ஏங்க உங்களால எனக்கு ஒரு உதவியாகனும் முடியுமா?” என்று தனஞ்செழியனிடம் உதவி கேட்டாள்.

“சொல்லுங்க உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும். கேளுங்க நான் தயங்காம செய்கிறேன்” என்ற வார்த்தையுடன் வழிய தொடங்கினார், தனஞ்செழியன்.

“எங்க வீட்டுக்காரர் கடை வைக்கிறதுக்குப் பேங்க்ல கொஞ்சம் லோன் எடுக்கிறதா இருக்காரு. அதற்கு ஒருத்தரோட ஷுருட்டி தேவைப்படுதாம். நீங்க கையெழுத்து போட்டீங்கன்னா எங்களுக்குக் கொஞ்சம் உதவியா இருக்கும்” என்றாள், கஸ்தூரி.

‘ஓ’ அதுக்கு என்னங்க, நான் தாராளமா போட்டுத் தரேன்…!” என்று கூறி முடிப்பதற்குள். நல்லதம்பி சில்வர் அன்ன கூடையைக் கையில் எடுத்துக் கொண்டு வந்து கஸ்தூரி கையில் கொடுத்தான்.

“சரிங்க ரொம்ப நன்றிங்க” என்று கூறிவிட்டு பாத்திரத்துடன் திரும்பி இரண்டு அடி நடந்தாள்.

போய்க்கொண்டிருந்த கஸ்தூரியை பெரும் கள்ள பார்வையில் ரசிக்கத் தொடங்கினார் தனஞ்செழியன்.

திடீரென, அவளுடைய இடது கால் தரையில் வழுக்கி அப்படியே மல்லாக்க கீழே விழ. கையில் வைத்திருந்த சில்வர் அன்னக்கூடை பெரும் சத்தத்துடன் விழுந்து இரண்டு சுத்துச் சுத்தியது.

அவள், அப்படி வேகமாகக் கீழே விழுந்ததில் பின் மண்டையில் அடிபட்டு மயக்கம் வருவதைப் போல் இருந்தது. அந்த வீட்டின் தரை, பளிங்கு தரையாக இருந்ததாலும் சற்று ஈரப்பதத்துடன் காணப்பட்டதினாலும் கஸ்தூரிக்கு இந்த விபரீதம் நடக்க நேர்ந்தது.

கீழே விழும்போது அவளுடைய மாராப்பு சேலை விலகி மீண்டும் அவளுடைய உடலோடு சேர்ந்தது. தனஞ்செழியன், நல்லதம்பி இருவரும் கஸ்தூரி கீழே விழுவதைக் கண்டு பதறியும் போனார்கள். அதேசமயம், அவளை வேறொரு கண்ணோட்டத்தில் அவளைப் பார்க்கவும் செய்தார்கள்.

அதேநேரம், இதுதான் நமக்குச் சரியான நேரம் இதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போதையிலும் துடித்துக் கொண்டிருந்தார், தனஞ்செழியன்.

தனது இடது கையால் பின்னந்தலையைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்திருக்க முயற்சித்தால் கஸ்தூரி. ஆனால், சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை. கீழே விழுந்த பயத்தால் உடலில் ஒருவித நடுக்கத்தைத் தந்தது.

“மெதுவா…மெதுவா எழுந்திருங்க” என்று கூறிக்கொண்டே நல்லதம்பியை பார்த்து கண்ணடித்துவிட்டு. “நல்லதம்பி, அவங்க குடிக்க உள்ள போய்க் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா…” என்று ஒரு அழுத்தமான வாக்கியமாக முடித்தார் வார்த்தையை, தனஞ்செழியன்.

அந்த வாக்கியத்தைப் புரிந்து கொண்டதைப் போல், ‘சரி’ என்று தலையாட்டிக் கொண்டே சமையலறைக்கு ஓடினான், நல்லதம்பி.

“அவசரப்படாதீங்க கொஞ்சம் நேரம் அப்படியே உட்காருங்க. குடிக்கத் தண்ணி எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்” என்று கஸ்தூரியை சாந்தப்படுத்திக் கொண்டிருந்தார், தனஞ்செழியன்.

சமையலறைக்குச் சென்ற நல்லதம்பி, தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த போதை மருந்தை எடுத்து, இடது கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் அவசர அவசரமாகக் கலந்து கொண்டே வெளியிலிருந்து கஸ்தூரி கையில் கொடுத்தான்.

கஸ்தூரி இடது கையில் தலையைப் பிடித்துக் கொண்டு, வலி தாங்க முடியாமல் வலது கையை நீட்டினாள். ஆனால், ‘மனம் அந்தத் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றது’ பின் மண்டை வலியை தாங்க முடியாமல் அந்தத் தண்ணீரை வாங்கி மெதுவாகக் குடித்தாள்.

அதற்குள், நல்லதம்பி வீட்டின் கதவை மெதுவாகப் போய் உள்புறமாகத் தாழிட்டான்.

கஸ்தூரிக்கு முன்னைவிட இப்பொழுது தலை அதிகமாகச் சுத்துவதைப் போல் போலிருந்தது. இரண்டு கைகளாலும் எடுத்து தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்திருக்க.

அந்த நேரம் தனஞ்செழியன் அவளுடைய சேலை முந்தானையைப் பிடித்து வேகமாக இழுக்க ஆரம்பித்தான். கஸ்தூரிக்கு மயக்கத்திலும் இந்த விஷயம் பேரதிர்ச்சியும் பயத்தையும் தந்தது. தன்னைச் சுதாரித்துக் கொண்டு மாராப்பு சேலையை அவன் கையிலிருந்து அழுத்தமாகப் பிடித்துத் தன் பக்கம் இழுத்து, அந்தப் போர்க்களத்தில் தன்னைக் காத்துக்கொள்ள முயற்சியைத் தொடங்கினாள்.

பக்கத்திலிருந்த நல்லதம்பியும், தனஞ்செழியன் பிடித்திருந்த சேலை முந்தானையை அவன் பலத்திற்கும் பிடித்து இழுக்க ஆரம்பித்தான். இருவரின் வலிமையால் அந்த மாராப்பு சேலை அவளின் உடலை விட்டு பிரிந்து இவர்கள் கையில் வந்தடைந்தது.

உண்மைதான், குழந்தைக்குப் பால் ஊட்டும் பெண்ணின் மார்பகத்தை ! பசி தீர்க்கும் கடவுளின் இருப்பிடம் என்று பார்க்காமல். ஒரு சில மிருகங்கள் இன்னும் அதைக் காம வெறியோடு தன் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கஸ்தூரி கையிலிருந்து தவறிவிழுந்த அன்னக்கூடையை ஒரு ஓரத்தில் கிடப்பதை அவள் கண்டாள். இடது கையால் தன் உடலை மூடி மறைத்துக்கொண்டு, அந்த அன்னக்கூடையைக் கையில் எடுத்து வெறி வெறிபிடித்த வேங்கையைப் போல் தனது கண்களை மூடிக்கொண்டு, அந்த இரண்டு மிருகங்களையும் மொத்து… மொத்து.. எனக் கோபம் பொங்க அடித்து மிதித்து வெளுத்து வாங்கினாள், கஸ்தூரி.

கொலைவெறி தாக்குதல் என்பார்கள்! அதை இப்படித்தான் சொல்ல வேண்டும். எதிரி யாரென்று தெரியாது தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு, நான்கு திசைகளில் சுத்தி சுத்தி அடிப்பார்கள். அப்படிதான் இவர்கள் இருவரையும் உச்சி முதல் பாதம் வரை துவைத்து மிதித்துப் புரட்டி எடுத்தாள், கஸ்தூரி.

இருவரும் போதையில் இருந்ததால் அவளிடம் பெரிதாக மல்லுக்கட்ட முடியவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலை அவர்களுக்கு உண்டானது. கையில் வைத்திருந்த சேலையைக் கீழே போட்டுவிட்டு இடது கையில் எலும்பு உடைய, மண்டையில ரத்தம் சொட்ட சொட்ட ஒரு மூலையில் போய் விழுந்தான், தனஞ்செழியன். உடம்பில் பெரும் காயங்களை வலிகளை வாங்கிக்கொண்டு நடைப்பிணமாய் விழுந்தான் நல்லதம்பி.

இருவரையும் அக்னி குண்டத்தில் தள்ளி எரித்து விடுவதைப் போல் ஒரு பார்வை அவர்கள் மீது தள்ளிவிட்டு, கீழே கிடந்த தனது சேலையைக் கையில் எடுத்து உடலில் இழுத்துப் போர்த்தி மூடிக் கொண்டு, வேர்வை சொட்ட சொட்ட அந்த வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வேகவேகமாகத் தனது வீட்டுக்கு ஓடிவந்தாள்.

ஊர் மக்கள் மகாலட்சுமி நிச்சயதார்த்தத்தில் இருந்ததாலும், அந்தத் தெருவே இருள் சூழ்ந்த இடமாக அமைந்ததினாலும் இவளுடைய நிலையை அவளுடைய நிழல் கூடக் கவனிக்க முடியாத நிலையில் இருந்தது. அப்படி, இவளுடைய நிலையை யாரேனும் கண்டிருந்தால், இந்த நேரம் அதற்குக் கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லாம் வைத்து அவளை ஒரு வழி செய்து இருப்பார்கள். நல்லவேளை அப்படி எதுவும் நடக்காமல் காலம் செய்து விட்டது.

கஸ்தூரி வீட்டு வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கு உரிமையாளர்களின் வரவை எதிர்பார்த்து வெளிச்சத்துடன் காத்துக் கிடந்தது.

கஸ்தூரி அலங்கோலமான கோலத்துடன் வீட்டை நோக்கி வர, தனது அண்ணன் வீட்டு விழாவில் வேலை எல்லாம் முடித்துக்கொண்டு சதாசிவம் தனது சிந்தையில் ஏதோ ஒரு பெரும் கவலையைப் போட்டுக்கொண்டு இருட்டுப் பாதையில் மெல்ல தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரம், எதிர்திசையில் அலங்கோலமான தோற்றம், கலைந்த கூந்தல் முடி காற்றில் பறந்து பிரிய, உடலில் சரியாகக் கட்டாத சேலை, பயத்தால் உடல் நடுக்கத்தோடு வேர்வை துளிகளுடன் கஸ்தூரி வந்து கொண்டிருப்பது அவர் பார்வைக்குப் பேரதிர்ச்சியாகத் தென்பட்டது. சதாசிவம் வந்துகொண்டிருந்த பாதையின் தூரம் பத்துப் பதினைந்து அடி தூரம் தான் இருக்கும். கஸ்தூரியை இந்தக் கோலத்தில் கண்டவுடன் பேச முடியாத ஊமையாய் பேரதிர்ச்சியில் உறைந்து காணப்பட்டார்.

அவருடைய பார்வையில் தீக்கனல் கோபம், சிவனின் நெற்றிக் கணையாகப் பொங்கி வழிந்தது.

கஸ்தூரி, கதவு வாசல்படியில் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து விட்டு வேகமாக வீட்டுக்குள் ஓடினாள்.

சதாசிவம், அவளைத் தவறாகப் புரிந்து கொண்டு வீட்டுக்குள் செல்லாமல் இடது பக்கம் இருந்த வேப்ப மரத்தடிக்குப் போய்ச் சோகத்துடன் நின்றார்.

தொடரும்…

< இருபத்தி மூன்றாம் பாகம் | இருபத்தி ஐந்தாம் பாகம் >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...