அஷ்ட நாகன் – 10| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 10| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாக வழிபாடு, சூரிய வழிபாடு போலவே உலகம் முழுவதும் பரவியிருந்தது. நம் பாரத நாட்டில் வட மாநிலங்களில் உள்ள காஸ்மீர் பள்ளத்தாக்குகளில் ‘காங்கரா’ மற்றும் ‘சாம்பா’ பகுதியிலுள்ள கோயில்களில் சாந்தன நாகம், இந்துரு நாகம், கார்ஷ் நாகம், கார்க்கோடக நாகம், சாபிர் நாகம், பிரிதம் நாகம், டாகட் நாகம், பசக் நாகம் மற்றும் சேஷ நாகம் முதலிய நாகங்கள் மனித உருவில் வணங்கப்படுகின்றன. நாகங்களில் பெரிய பாம்புகளை விட, சிறிய பாம்புகளே ஆபத்தானவை.பெரிய வகை பாம்புகள் யாரையாவது அல்லது எதையாவது தீண்டும் போது குறிப்பிட்ட அளவு நஞ்சினை மட்டுமே எதிராளியின் மீது பாய்ச்சும்‌.ஆனால், குட்டி பாம்புகள் தன் வசமுள்ள முழு விஷத்தையும் எதிராளியின் மீது பாய்ச்சி விடும். இதன் மூலம் பெரிய பாம்புகளை விட சிறிய பாம்புகள் மிக ஆபத்தானவை என்பதை உணர முடிகிறது.ஒருவரின் கனவில் ஆயிரக்கணக்கான குட்டி பாம்புகளை அடிக்கடி காண நேர்ந்தால்,அந்த நபருக்கும்;அந்த நபரின் வம்சத்திற்கே நாக தோஷம் உள்ளதாக அர்த்தம்.தகுந்த பரிகாரம் செய்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

 

ஐந்து தலை நாகம் பற்றி அவர்கள் கேட்டதும் முருகேசனுக்கு உடல் குப்பென்று வியர்த்து விட்டது.வியர்வைத் துளிகள் அவன் கழுத்தில் பாம்பு போல நெளிந்து ஓடியது.

அவன் கண்களில் அப்படியொரு அசாத்திய மிரட்சி தெரிந்தது.

“முருகேசன்…முருகேசன் பேசுங்க” என்று முருகேசனின் தோளைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினான் நந்தன்.

“”ஆமாங்க.இந்த கொல்லிமலை வனத்துல இருக்குற ‘கோரக்கர் குகை’க்கு பக்கத்துல தான் நான் அந்த அஞ்சு தலை நாகத்தை பார்த்தேன்” என்று உணர்ச்சி பொங்க கூறினான் முருகேசன்.

” நீங்க சொல்றது ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு.இந்த ஹைடெக் யுகத்துல யாராவது இதை நம்புவாங்களா?” என்று கேலிச்சிரிப்புடன் நந்தன் கேட்டான்.

“நம்பமாட்டாங்க தான்.எனக்கு அந்த அஞ்சு தலை நாகத்தை பார்க்குற வரைக்கும் நம்பிக்கை இல்லை.ஆனால்,அதிசயம்…அற்புதம்…அபூர்வம் அப்டிங்குறதெல்லாம் உணர்ந்தால் தான் புரியும்.நான் பார்த்தேன்.உணர்ந்தேன்.நம்புறேன்” என்று நறுக்காக பதிலளித்தான் முருகேசன்.

முருகேசனின் பதிலைக் கேட்ட நந்தனுக்கு ‘சுரீர்’ என்றது.இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன் அடுத்த கேள்விக் கணையை தொடுத்தான் நந்தன்.

“நீங்க அஞ்சு தலை நாகத்தை பார்த்தப்போ உங்கக்கூட யாராவது வந்தாங்களா?” நந்தன் சி.பி.ஐ போஸீஸ் மாதிரி துருவி துருவி முருகேசனை கேள்விகள் கேட்டான்.

“ஆங்…என் கூட்டாளி ‘மாடசாமி’யும் அப்போ என் கூட தான் இருந்தான்.ஆனால்,அவன் அஞ்சு தலை நாகத்தை பார்க்கல.”

“அதெப்படி, மாடசாமி உங்கக்கூட இருந்தார்ன்னு சொல்றீங்க.அவரு அஞ்சு தலை நாகத்தை பார்க்கலைன்னு சொல்றீங்க.இடிக்குதே” என்றான் அரவிந்தன்.

“நாங்க ஒரு முக்கியமான விஷயத்திற்காக கோரக்கர் குகை பக்கம் போனோம்.அதுவும் இராக்காலம் அப்டிங்கறதால, கையில் தீப்பந்தம் வச்சிக்கிட்டு இடுப்பளவு ஓடுற ஒரு ஓடையைக் கடந்து அங்க போனோம்.எனக்கு தண்ணி போடுற பழக்கமில்லை ! ஆனால்,என் கூட்டாளி மாடசாமி மட்டும் பயம் தெரியாமல் இருக்கறதுக்கு தண்ணி போட்டுட்டு வந்தான்(மது அருந்துதல் உடலுக்கும் உயிருக்கும் கேடு).அதனால் அவனுக்கு கொஞ்சம் நிதானம் குறைஞ்சுப் போச்சி.”

“அது சரி.அந்த நடு இராத்திரி ஏன் அங்க போனீங்க?” என்று தன் எழுத்தாளர் மூளையோடு
கேள்வி கேட்டாள் யோகினி.

முருகேசனை, மூன்று பேரும் வளைத்து வளைத்து கேள்வி கேட்டதில் முருகேசனும் சற்று தடுமாற ஆரம்பித்தான்.

“அது…அது…அது வந்து” என்று ‘நா’ தழதழக்க தந்தி அடித்துக் கொண்டே பேச தடுமாறினான் முருகேசன்.

“எது வந்து? நீங்க எதையோ மறைக்குற மாதிரி தெரியுது” என்று மீண்டும் தன் வார்த்தைகளால் யோகினி,முருகேசனை பேச தூண்டினாள்.

முருகேசன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு,”இந்த கொல்லிமலையில பல இரகசியம் இருக்கு.கொல்லிப்பாவை,சித்தர் சாமிங்க,மாய மூலிகைகள், அமானுஷ்ய ஆவிங்க,இச்சாதாரி கோயில் மற்றும் சித்திரக் குள்ளர்கள்.சித்திரக் குள்ளர்கள் இந்த கொல்லிமலை காட்டுல நடமாடுறதாக சொல்லுவாங்க.எங்க பாட்டன்,பூட்டன் காலத்துல சித்திரக் குள்ளர்கள் எங்க பாட்டனுக்கும் பூட்டனுக்கும் நிறைய சொக்கத் தங்கம் கொடுத்ததாக எங்க அப்பாரு சொல்லியிருக்காரு.சித்தரக் குள்ளர்களை புடிச்சி நம் வீட்டுல வச்சி சகலவித மரியாதையும் பூஜையும் செஞ்சி பார்த்துக்கிட்டா,அள்ள அள்ள குறையாத பொன்னும் பொருளும் சேரும்னு சொல்லுவாங்க.அந்த சித்தரக் குள்ளர்ங்க, கோரக்கர் குகை பக்கம் இராக்காலத்துல உலா வருவாங்கன்னு ஒரு நம்பிக்கை உண்டு ! அதை நம்பித்தான் சித்தரக்குள்ளர்களை பிடிக்க நானும் மாடசாமியும் அந்த பக்கம் போனோம்” என்று ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்தான் முருகேசன்.

முருகேசனின் பேச்சைக் கேட்டதும் நந்தனும் யோகினியும் “ஹா…ஹா…ஹா” என்ற சத்தமாக சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

முருகேசனுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.அது, அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அரவிந்தன் மட்டும் முருகேசனிடம் ஆர்வத்தோடு ஒரு கேள்வி கேட்டான்.

“நீங்க ஏதோ ‘இச்சாதாரி கோயில்’ அப்படின்னு சொன்னீங்களே ! அதைப் பற்றி சொல்லுங்க” என்றான் அரவிந்தன்.

அரவிந்தன் கேள்விக்கு பதில் கூறாமல்,நந்தனையும் யோகினியையும் வெறித்த விழிகளுடன் பார்த்த முருகேசன்…”சிரிங்க ! நல்லா சிரிங்க.நான் சொல்றது உங்களுக்கு விளையாட்டாக தெரியலாம்.ஆனால், நீங்களும் கண்ணால பார்த்து அனுபவிச்சாதான் உண்மை புரியும்” என்று கோபம் பொங்க கூறினான்.

“நாங்க,நீங்க சொன்னதைக் கேட்டு சிரிச்சதை தப்பாக எடுத்துக்காதீங்க,முருகேசன்.நீங்க சொன்னதை யார் கேட்டிருந்தாலும் இப்படி தான் சிரிச்சிருப்பாங்க” என்றாள் யோகினி.

“நான் உங்களை நம்புங்கன்னு கட்டாயப்படுத்துல.ஆனால், மத்தவங்களோடு உணர்வுக்கு மரியாதை கொடுங்கன்னு தான் சொல்றேன்” என்று முருகேசன் உணர்வுப்பூர்வமாக பேசினான்‌.

முருகேசனின் பேச்சைக் கேட்டு மூவரும் மனம் கலங்கினர்‌.திகைத்து நின்றனர்.அரவிந்தன் மட்டும் மீண்டும் இச்சாதாரி கோயில் பற்றி முருகேசனிடம் கேட்டான்.

“இச்சாதாரி கோயில் இந்த கொல்லிமலை காட்டுல இருக்குறதாக காலம் காலமாக ஒரு பலத்த நம்பிக்கை இருக்கு.அந்த கோயில்ல தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களும் இச்சாதாரி நாகங்களும் மட்டும் தான் போக முடியுமாம்.அந்த கோயிலை ஒரு முறை ‘ஏலக்காய் சித்தர்’ பார்த்ததாகவும்…அவருக்கு ஒரு இச்சாதாரி நாகம் ‘நாக சாஸ்திரம்’ அப்படிங்குற ஏட்டுக்கட்டையை கொடுத்ததாகவும் அவரே ஒரு முறை என்கிட்ட சொல்லியிருக்கார்.”

முருகேசனின் பேச்சைக் கேட்ட மூவரின் நெற்றியிலும் ஆச்சர்ய குதிரை ஓடியது.

“ப்ளீஸ்…எங்களை ஏலக்காய் சித்தர்கிட்ட அழைச்சிட்டு போக முடியமா?என்று யோகினி கேட்டாள்.

“இல்லைங்க.நான் முதல்ல சித்தர் சாமியை பார்த்து பேசிட்டு,அவரு அனுமதி கொடுத்தாருன்னா உங்களை
அவரு இருக்குற இடத்துக்கு அழைச்சிட்டு போறேன்” என்றான் முருகேசன்.

“முருகேசன்’நான் உங்களை ஒரு சகோதரனாக தான் பார்க்கிறேன்.நான் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட கனவு,நந்தன் கழுத்துல கருநாகம் விழுநதது,நாக சாஸ்திரம் பற்றி யோகினி சொன்னது என நடந்ததையெல்லாம் முழசாக உங்கக்கிட்ட சொல்லிட்டேன்.நீங்க கண்டிப்பாக எங்களுக்கு உதவி செய்யனும்” என்ற அரவிந்தன் மிக உருக்கமாக பேசினான்.

அரவிந்தனின் பேச்சு, முருகேசனின் மனதை உருக்கி விட்டது. அரவிந்தனின் கைகளை பிடித்துக் கொண்டு நம்பிக்கை ஊட்டும் வகையில்”கண்டிப்பாக நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றான் முருகேசன்.

முருகேசனின் நம்பிக்கையான வார்த்தைகளை கேட்ட மூவரும் அகம் மகிழ்ந்தனர்.

யார் அந்த ‘ஏலக்காய் சித்தர்’?…விடை அறிய காத்திருப்போம்.

– தொடரும்…

< ஒன்பதாம் பாகம் | பதிணொன்றாம் பாகம் >

கமலகண்ணன்

4 Comments

  • யார் அந்த ஏலக்காய் சித்தர் விடை கிடைக்குமா.

    • மிக விரைவில் விடை காண்போம் நண்பரே… மிக்க நன்றி

  • Interesting one

    • Thanks sister

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...