வாகினி – 25| மோ. ரவிந்தர்

 வாகினி – 25| மோ. ரவிந்தர்

சதாசிவம் வீட்டுக்குள் செல்லாமல் வெளியே இருந்த வேப்ப மரத்துக்கு அடியில் நின்றுக்கொண்டு கண்ணில் நீர் கசிய கஸ்தூரியை நினைத்து அழுது கொண்டிருந்தார்.

வீட்டு வாசலில் எரிந்துகொண்டிருந்த மஞ்சள் விளக்கின் வெளிச்சத்தில் சதாசிவத்தின் உருவம் நிழல் போல் தென்பட்டது.

‘கடவுளே! கணவன்-மனைவி வாழ்க்கை என்பது இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய ஒன்று. நான் மட்டும் உனக்கு என்ன தவறு செய்தேன்? நம்பிக்கை இல்லாத வாழ்க்கையைக் கொடுத்து இப்படித் தவிடு பொடியாக்கி சிரித்துக் கொண்டிருக்கிறாய்.

தொழிலிலும் சுகம் பெறவில்லை, வாழ்க்கையும் சரிப்படவில்லை, எனக்கென்று இதுவரை எதுவும் சேர்த்து வைத்தது இல்லை. ஆனால், என் கனவு ஏன்? கானல் நீராய் கரைந்து விடுகிறது. உனக்கு என்ன நான் பாவம் செய்தேன்? கடவுளே !

அவளுக்கு நான் ஏற்றவன் தானா? அவளுக்கு என்ன தேவை என்று இன்னும் யோசித்து… யோசித்துச் செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கைக்கு என்ன தேவை என்று தேடித்தேடி கொடுத்திருக்கிறேன். இத்தனை வருஷத்தில் அவளுக்கு என்மீது கொஞ்சம் கூடவா நம்பிக்கை இல்லை. இச்சை சுகத்திற்காக இத்தனை காலம் அவள் என்னிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்? அப்போ, நான் இத்தனை காலம் கஷ்டப்பட்டு எல்லாம் வீண் தானோ? இதற்கு மேல் நான் ஏன் உயிர் வாழ வேண்டும்?’ என்று கண்ணீர் சிந்தி கொண்டிருக்க.

கையில் அழுக்குப் பாத்திரங்களுடன் வெளியே வந்த கஸ்தூரி கண்ணில் பெரும் சோகத்தையும், காயத்தையும் சுமந்துக்கொண்டு வந்தாள்.

அவள் கன்னத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த கூந்தல் முடி ஒன்று அவளுடைய கன்னத்தில் படர, அந்த முடியை இடது கையால் நீவி விடும் பொழுது, வேப்ப மரத்தடியில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தை நிழல்போல் கவனித்தாள்.

பாத்திரங்களைச் சுத்தம் செய்யும் தண்ணீர் தொட்டிக்குப் பக்கத்தில் போட்டுவிட்டு, சதாசிவம் இருந்த இடத்திற்குச் சென்று.

“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று மெதுவான குரலில் கேட்டாள். எப்போதும் இல்லாத அளவிற்கு அவளுடைய குரலில் பயம், நடுக்கம் முகம் பொலிவிழந்து காணப்பட்டது.

“ஒண்ணும் இல்ல, சும்மாதான் நின்னுட்டு இருக்கேன்” என்று கூறிவிட்டு, தனது கன்னத்தில் வழிந்த கண்ணீரை இடது கைகளால் துடைத்தார், சதாசிவம்.

வேப்ப மரத்தடியில் மங்கலான வெளிச்சம் விழுந்த கொண்டிருந்ததால் சதாசிவத்தின் முகம் கஸ்தூரியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

“சரிங்க, ஃபங்க்ஷன் எப்படி முடிந்தது?” எனக்கேட்டாள்.

“அதற்கு என்ன? அது நல்லபடியா தான் முடிந்தது” என்று ஒரு வார்த்தையுடன் பேச்சை நிறுத்தினார், சதாசிவம்.

“சாப்பிட்டீங்களா?”

“இல்ல, சாப்பிடணும்” சதாசிவத்தின் குரல் ஒலிக்க முடியாத ஓசையாய் இருந்தது.

“சரி, வாங்க சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு, சதாசிவத்தை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

‘நிம்மதி இல்லாத வாழ்க்கையில் சாப்பாட்டுக்கு தான் கேடு’ என்று நினைத்துக்கொண்டே மெல்ல வீட்டுக்குள் சென்றார், சதாசிவம்.

கஸ்தூரியின் உதட்டில் மறுமொழி வார்த்தைகள் எதுவும் உதிக்காமல் மௌனத்துடன் காணப்பட்டாள்.

சமையலறைக்குச் சென்று சதாசிவத்திற்குத் தேவையான உணவு, பாத்திரம், ஒரு தட்டையும் கையில் எடுத்துக்கொண்டு சதாசிவம் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

‘வாழ்க்கை பூரா உன்ன நம்பி இருந்த எனக்கு இப்படி ஒரு ஏமாற்றத்தை தந்துதிட்டியே’ என்ற கோபம் கலந்த பார்வையுடன் கஸ்தூரியின் முகத்தை வெறுப்போடு பார்க்கத் தொடங்கினார், சதாசிவம்.

அவருடைய பார்வை இவளுக்குத் தண்டனை தருவதைப் போல் இருந்தது. பெரும் குற்ற உணர்ச்சியால் நிற்கமுடியாமல் வளைந்து நெளிந்து கைதியை போல் காணப்பட்டாள், கஸ்தூரி.

அவரிடம் எதுவும் பேசாமல் சாதத்தை எடுத்துத் தட்டில் மெதுவாக வைத்துக் கொண்டு, அலங்கோலமாகக் கலைந்து கிடந்த தனது தலை முடியை இடது கையால் கோதிவிட்டாள்.

சாதத்தில் கையை வைத்துக்கொண்டு கஸ்தூரியை பார்த்துக் கேள்வி எழுப்பினார்.

“ஏன் கஸ்தூரி, நிச்சயதார்த்தம் நடக்கிற இடத்திலே உன்னைய ரொம்ப நேரமா ஆளையே காணோமே, நிகழ்ச்சி முடியறதுக்குள்ள எங்க போன?”

இந்தக் கேள்வி அவளைச் சுட்டு விடுவதைப் போல் இருந்தது.

‘வாழ்க்கையில் ஒரு முறை கூட என்னைப் பார்த்துக் கேள்வி எழுப்பாதவர். திடீரென, இப்படிக் கேட்கிறாரே’ என்று எண்ணிக் கொண்டாள். அது அவளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது.

‘நான் கேட்கும் கேள்விக்கு உன்னிடம் பதில் கிடைக்குமா? கிடைக்காதா?’ என்ற எண்ணத்துடன் கஸ்தூரி முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், சதாசிவம்.

“கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருந்ததுங்க. அதான், அங்கிருந்து சீக்கிரமா வந்துட்டேன்! இப்பதான் படுத்து எழுந்து வெளியே வந்து உங்களைப் பார்த்தேன்” என்றாள்,கஸ்தூரி.

அப்படியே தட்டில் வைத்த கையை எடுத்து கஸ்தூரியின் கன்னத்தில் ‘பளார் பளார்’ என ஓங்கி அடித்து விட்டு,

‘ஏண்டி ஓடுகாலி சிரிக்கி, என்ன நம்ப வச்சு இப்படிக் கழுத்தை அறுத்துடியே. நீ எல்லாம் நல்ல பெண்தானா? உன்னை எல்லாம் சும்மா விடலாமா? என்று முடியைப் பிடித்து, உருட்டி பிரட்டி அடிக்க வேண்டும்’ என்பதைப் போல் சிந்தையில் ஒரு காட்சி ஓடியது.

இத்தனை காலத்தில் எத்தனையோ தடவை நமக்குள் வாய் சண்டை ஏற்படும். ஆனால், ஒருமுறைகூடக் கையை வைத்து அடித்ததில்லை. காரணம், பெண்ணும் ஒரு ஆண்மகனைப் போல் இந்த உலகில் சரிக்கு சரி சமமாக மதிக்கப்பட வேண்டியவள். பெண்ணை அடிப்பவன், ஒரு நல்ல ஆண் மகனுக்கு ஏற்றவன் அல்ல என்று ஒரு விரதத்தைக் கடைப்பிடித்து வந்தார், சதாசிவம்.

ஆனால், இந்த நேரத்திலும் அவருடைய ஆழ்மனதில் ஒரு கேள்வி குதித்துக் கொண்டிருந்தது.

‘ஒத்தையடி பாதையில யார் கிட்ட நின்னு பேசிட்டு இருக்குன்னு நான் அன்னைக்கே உன் கிட்ட கேட்டு இருக்கணும். நீ என் சொக்கத்தங்கம் நல்லவள் என்று உன்னைச் சந்தேகிக்காமல் எதுவும் போய்விட்டேன். அதுதான் இந்த அளவுக்கு வந்து நிற்கிறேன் நினைக்கிறேன். நீ மூணு குழந்தைக்குத் தாயானவள். அந்த மூன்று குழந்தைகளோட வாழ்க்கையை ஒருமுறையாவது நீ நெனச்சு பாத்தியா?’ எனக் கேட்கத் தோன்றியது. தன்னை அறியாமலே கண்களில் கண்ணீரும் அலை மோதத் தொடங்கியது, சதாசிவத்திற்கு.

‘அப்படி எல்லாம் என்னைக் குற்ற உணர்ச்சியோடு பார்க்காதீங்க, உங்கள் பார்வையே என்னைச் சுட்டு விடுவதைப் போல் தெரிகிறது. நான் எந்தத் தப்பும் செய்யல, தப்பும் நான் செய்ய மாட்டேன். என் உயிர் இந்தப் பூமியில் இருக்கும் வரை, உங்கள் காலடியிலேயே தான் இருக்கும். நம்மளோட வாழ்க்கை முன்னேற வேணும்னுதான் உங்களிடம் போராடிக் கொண்டிருந்தேனோ தவிர, மற்றபடி எதற்கும் ஆசைப்படல. செப்பல் செய்யவும் மாட்டேன். சத்தியமாக எந்த நாயின் நிழலும் என்மீது படவும் படாது’ என்று கஸ்தூரியின் கண்களும் கண்ணீரால் மிதக்கத் தொடங்கியது.

இருவரின் மனங்களும் பேச முடியாத மௌனத்தில் உறைந்து பார்வையினாலேயே பதிலைப் பரிமாறிக் கொண்டது.

இதற்கு மேல் சதாசிவத்தால் அந்தப் பார்வையை நேருக்கு நேர் எதிர் நோக்க முடியவில்லை. சாப்பாடு தட்டில் வைத்த கையை விர்ரென்று எடுத்து வெளியே புறப்பட்டார்.

‘சாப்பாட்டில் கையை வைத்து விட்டு எதற்காக இப்படி வெளியே போறீங்க’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், நா எழவில்லை. தன்னைச் சுற்றி கொழுந்துவிட்டு எரியும் அக்கினி தீயை வளர்த்து விட்டு, அதில் தன்னை மூட்டி எடுப்பதைப் போல் இருந்தது, அவள்.

‘நடந்த விஷயத்தை இவரிடம் சொல்லி விடலாமா. அப்படிச் சொன்னால் வீடே குத்துயிர் குலையுயிருமாக ரெண்டுபட்டு நிற்கும்.’ என்று நினைக்கத் தோன்றியது. அதேசமயம், ஏதோ பெரும் தவறு செய்து விட்டோமோ என்ற பெரும் குற்ற உணர்ச்சியில் விம்மி விம்மி அழத்தொடங்கினாள், கஸ்தூரி.

தொடரும்…

< இருபத்தி நான்காம் பாகம் | இருபத்தி ஆறாம் பாகம் >

கமலகண்ணன்

2 Comments

Leave a Reply

Your email address will not be published.