அஷ்ட நாகன் – 6| பெண்ணாகடம் பா. பிரதாப்

 அஷ்ட நாகன் – 6| பெண்ணாகடம் பா. பிரதாப்

-அமானுஷ்ய தொடர்-

நாக சாஸ்திரத்தின் மூலம் நாகங்கள், நம் கனவில் வந்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்த்து வருகிறோம்.நம் புராண, இதிகாசத்தின் படி உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வத்துடனும் நாகங்கள் இணைப்பில் உள்ளதை உணரலாம்.பாம்புகள்,தன் தோலை உரிக்கும் தன்மை உடையதால், அவை அமரத்தன்மை வாய்ந்தவை என்று நம்பப்படுகிறது.இந்து மதக் கோட்பாட்டின் படி மும்மூர்த்திகளின் உருவத்திலும் பாம்பின் அடையாளங்களைக் காணலாம்‌‌.குறிப்பாக, சிவ பெருமானால் பாம்புகள் நேசிக்கப்பட்டன; ஆசிர்வதிக்கப்பட்டன என்பது மிகப்பழமையான நம்பிக்கையாகும்.சிவனைப் போல முருகப் பெருமானுக்கும் நாகங்கள் கட்டுப்படும். முருகப்பெருமான் நாகத்தை தன் காலடியில்,தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.இதில் ஒரு நுட்பமான பொருளும் உண்டு.அதாவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை யோகத்தின் மூலம் நம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் முக்தி என்னும் பேரின்பத்தை அடைய முடியும் என்பதாகும்.நம் கனவில் குட்டி பாம்பைக் கண்டால் விரைவில் முருகன் அருள் கிடைக்கும்.

– நாக சாஸ்திர ஏடுகளிலிருந்து.-

கொல்லிமலை !

கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் முத்தமிட்டுக் கொள்ளும் இடத்தில் நல்ல உயரத்தோடும்,அடர்த்தியான மூலிகை வனங்களோடும் திகழும் மலை ‘கொல்லிமலை’ ஆகும்.உதகை, கொடைக்கானல் போல வெறும் சுற்றுலாத்தலமாக மட்டும் இல்லாமல்,பல அரிய அமானுஷ்யங்களை உள்ளடக்கியது கொல்லிமலை ஆகும்.

சித்தர்களின் புகலிடமாகத் தோன்றும் இம்மையில் பல அரிய மூலிகைகள் காணக் கிடைக்கின்றன.சேர,சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவனும்,வில் வித்தையின் வித்தகனாக விளங்கிய ‘வல்வில் ஓரி’ என்ற மன்னனும் ஆட்சி செய்த பெருமை மிகுந்த மூலிகை மலையாகும்.

வளைந்து வளைந்து மேலேறிக் கொண்டிருந்தது கொல்லிமலையின் பாதை.அதில் திணறலுடன் முன்னேறிக் கொண்டிருந்தது அந்த அரசு பேருந்து.அரசு பேருந்தின் ஜன்னல்லோரமாய் நந்தன் !

மலையழகை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் குழப்பத்துடன் அதீத யோசனையில் காணப்பட்டான்.

அவன் மனதிற்குள் நாகங்கள் குறித்த சிந்தனையே பிரதானமாக இருந்தது.

அவ்வப்போது நடராஜன் தாத்தாவின் அஸ்தியை நல்ல முறையில் ‘ஆகாய கங்கை’ அருவியில் கரைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை துளைத்தது.

பொதுவாகவே நம் எல்லோர் வாழ்விலும் சில அமானுஷ்யங்களும்,சில அதிசயங்களும் அவ்வப்போது நடந்த வண்ணம் தான் உள்ளது.ஆனால்,அந்த அமானுஷ்ய அதிசயங்களை உணர்ந்துக் கொள்ள நமக்கு நுட்பமான புரிதல் தேவை.

அரவிந்தன் மனம் முழுக்க,தனக்கு ஏற்பட்ட கனவின் தாக்கம் பனிக்குளிரோடு முகத்தில் மோதிக் கொண்டிருந்தது.அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த யோகினி மஃப்ளரால் காது மடலை மூடிக்கொண்டிருந்தாள். ஜன்னலோரமாக அமர்ந்திருந்த நந்தன்,ஜன்னல் தடுப்பை ஏற்படுத்தி கொஞ்சம் குளிரால் நடுங்கவும் செய்தான்.

அவ்வப்போது குறுக்கும் நெடுக்குமாய் நடந்து சென்ற கண்டக்டர்,மூவரையும் பார்த்துவிட்டு வியப்பதும் பின் விலகுவதாகவும் இருந்தார்‌.

பக்கவாட்டில் கொல்லிமலை உச்சிக்கு இன்னும் எட்டு கிலோமீட்டர் தூரம் என்கிற மைல்க் கல்லின் அறிவிப்பு.

அதன் மேல் ஒரு ‘வெள்ளை நாகம்’ அமர்ந்திருப்பதைப் பார்த்து பஸ்ஸில் இருந்தவர்கள் “அதோ வெள்ளை பாம்பு” என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்பி பார்த்தனர்‌.அந்த வெள்ளை நாகம் படமெடுத்த நிலையில்,தன்னை கடந்து சென்ற பஸ்ஸையே பார்த்துக் கொண்டிருந்தது.

பஸ்சும் வளைந்து மேலேற, கீழே பக்கவாட்டில் அந்த மைல்கல் தெரிந்தது.பலரும் வெள்ளை நாகத்தை பார்த்தபடி இருந்தனர்‌.அதுவும் பஸ்ஸைப் பார்த்துக் கொண்டே அடர் வனத்திற்குள் மறைந்தது.பக்கவாட்டில் உள்ள மரக்கூட்டம் பிரமிப்பை ஏற்படுத்தியது.வானில் ஆங்காங்கே சாம்பிராணிப் புகை போட்டது போல மேகப் பொதிகள் ! வெள்ளை நாகம் கண்ணிலிருந்து மறைந்தவுடன் ஒவ்வொருவரும் அதைப் பற்றியே அதிசயமாக பேசிக் கொண்டனர்.

“நானும் பத்து வருஷமா இந்த மலைப்பக்கம் வந்துட்டு போறேன்.மலை பாம்பு பார்த்திருக்கேன்.ரெண்டு தலை பாம்புக்கூட ஒரு முறை பார்த்திருக்கேன்.ஆனா,முதல் முறையாக இப்போ தான் வெள்ளை நாகத்தை பார்க்குறேன்” என்று கண்டக்டர் சொன்னதை பஸ்ஸிலிருந்த அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

கண்டக்டர் ஒரு புது செய்தியைப் பகிர்ந்து கொள்ள ‘கடா…புடா’ என்கிற சப்தத்துடன் பஸ்சும் தன் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தது.

“இந்த மலைல ஒரு பாம்புக் கோயில் இருக்குதாம்.ஒவ்வொரு பெளர்ணமிக்கும் தெய்வீக சக்தி வாய்ந்த நாகங்களும்,இச்சாதாரி நாகங்களும் அந்த கோயில்ல இருக்குற ‘அஷ்ட நாகேஸ்வர லிங்க’த்தை வணங்கி பூஜை பண்றதாக ஒரு தகவல் உண்டு” என்றார் கொல்லிமலையை சேர்ந்த ஒரு வயதான மலைப்பளியர்.

“ஏது ! இச்சாதாரி நாகங்களா?அஷ்ட நாகேஸ்வர லிங்கமா?” என்று அரவிந்த் அந்த மலைப் பளியரிடம் அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமா தம்பி ! ஆனா,நம்ம மாதிரி மனுஷாளுங்க அங்க போக முடியாதாம்.நாக இனத்தை சேர்ந்தவங்க மட்டும் தான் அங்கன போக முடியுமாம்.”

“நீங்க சொல்றதைக் கேட்டால் எனக்கு அதிர்ச்சியாகவும், அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கு‌.அந்த பாம்பு கோயில் எங்க இருக்கு?” என்று நறுக்காக கேட்டான் நந்தன்.

“அதுவெல்லாம் எனக்கு தெரியாது தம்பி.அந்த கோயில் ரகசியம் ‘ஏலக்காய் சித்தர்’ சாமிக்கு மட்டும் தான் தெரியும்.”

ஏலக்காய் சித்தர் என்ற பெயரைக் கேட்டதும் யோகினி கூர்மையானாள்.

“என்ன சொன்னீங்க…என்ன சொன்னீங்க? ஏலக்காய் சித்தரை உங்களுக்கு தெரியுமா?” என்று ஆவலுடன் கேட்டாள் யோகினி.

“தெரியும்மா ! அந்த மகராசனை ரெண்டு முறை பார்த்திருக்கேன்.ஒரு நாள் தீடீரென என் இடது கண் பார்வை சுத்தமாக போயிடிச்சு.கொல்லி மலை ‘அறப்பாளீஸ்வரர் சாமிக்கிட்ட மனசார வேண்டிக்கிட்டேன்.அப்போ கோயிலுக்கு வந்த ஏலக்காய் சித்தர் என் குறையை தீர்த்து வச்சார்.இப்ப எனக்கு ரெண்டு கண்ணும் நல்லா தெரியுது” என்று ஆனந்தக் கண்ணீர் பொங்க கூறினார்.

“நீங்க சொல்றதைக் கேட்டால் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருக்கு.எங்களுக்கு, ஏலக்காய் சித்தர் இருக்குற இடத்தை காட்ட முடியுமா?” என்றாள் யோகினி.

” காத்துக்கு ஏது இடம்,பொருள்,ஏவல்.இல்ல தாயி ! சித்தர் சாமி நினைச்சா தான் அவரை நாம பார்க்க முடியும்.அவரை நினைச்சு நம்பிக்கையோடு மனசார வேண்டிக்கோங்க.நிச்சயமாக சாமியோட தரிசனம் உங்களுக்கு கிடைக்கும்” என்ற நம்பிக்கையான வார்த்தைகளை மலைப்பளியர் கூறினார்.

அவரின் பேச்சைக் கேட்ட அரவிந்தன் குழப்பத்துடன் காணப்பட்டான்‌.ஆனால், யோகினி முழு நம்பிக்கையுடன் மனதிற்குள் “ஏலக்காய் சித்தரே எங்களுக்கு வழிக்காட்டுங்க” என்று வேண்டிக்கொண்டாள்‌.

“ஐயா ! நீங்க சொன்ன தகவலுக்கு ரொம்ப நன்றிங்க” என்று அரவிந்தும், யோகினியும் கூறினர்.

அந்த மலைப்பளியர் பதிலுக்கு ஒரு காந்தப் புன்னகை மட்டும் சிந்தினார்.

“இந்த மலைல இப்படி இன்னும் என்னவெல்லாம் அதிசயங்கள் இருக்கோ !” என்றான் அரவிந்த்.

“கொல்லிமலை இறங்கு ! கொல்லிமலை இறங்கு ! என்றார் கண்டக்டர்.

நந்தன் மட்டும் வெறித்த விழிகளுடன் காணப்பட்டான்.

– தொடரும்…

< ஐந்தாம் பாகம் | ஏழாம் பாகம் >

கமலகண்ணன்

3 Comments

  • தொடர் மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது மிக அருமை தொடருங்கள் நண்பரே

    • மிக்க நன்றி இனிய நண்பரே… மனம் மகிழ்கிறேன்.

  • அழகான அருமையான கதைக்களம் 👌 அதை ரசித்தே இவ்வளவு அழகாக உங்கள் எழுத்துருக்களில் விறுவிறுப்பாக எழுதி வருகிறீர்கள் சகோதரர் அவர்களே 💐

    இயற்கையின் வர்ணனைகள் அவ்வளவு அழகு அதைவிட சுவாரஸ்யம் குறையாமல் கொல்லிமலையின் அழகை ஆராதித்து எழுதுவதுடன் ஏலக்காய் சித்தர் பற்றி ஆர்வம் தூண்டும் விதமும் அவ்வளவு அழகு 👌

    வெள்ளை நாக கண்டதும், அதை முதல் முறையாக பார்க்கிறேன் என்று கண்டெக்டர் சொல்வது என அவ்வளவு அழகு 👌

    அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய ஆசைப்படுகிறேன்.. வாழ்த்துக்கள் சகோ 💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...