மிஸ்டர் பிச்சைக்காரர் | ஆர்னிகா நாசர்

 மிஸ்டர் பிச்சைக்காரர் | ஆர்னிகா நாசர்

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில்.

விலையுயர்ந்த ஆடி காரிலிருந்து இறங்கினாள் மத்திய அமைச்சர் அதியமானின் மனைவி அன்னப்பூரணி. பட்டுப்புடவை சரசரக்க கோயிலுக்குள் நடந்தாள். அவளுடன் அர்ச்சனைத் தட்டை தூக்கிக் கொண்டு தொடர்ந்தாள் பணிப்பெண்.

கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் கோரஸாய் “மகராசி! போடுங்கம்மா!” என குரல் கொடுத்தனர்.

அவர்களை அலட்சியபடுத்தியபடி கோயிலுக்குள் நடந்து போனாள் அன்னப்பூரணி. அவளது ஒவ்வொரு அசைவிலும் பணத்திமிரும் அதிகாரத் மமதையும் தெரிந்தன.

கணவனின் பெயருக்கு அர்ச்சனை செய்து முடித்தாள். அர்ச்சகர் தட்டில் 500ரூபாய் நோட்டு ஒன்றை இட்டாள். அர்ச்சகர் “நீங்களும் அமைச்சரும் நூற்றாண்டுகாலம் அமோகமா வாழ்வீங்க!” வாழ்த்தினார்.

அன்னப்பூரணி மீண்டும் கோயிலின் வெளிவாசலுக்கு வந்தாள். மீண்டும் பிச்சைக்காரர் கூட்டம் முண்டியது. “அம்மா! பிச்சை போடுங்கம்மா… அம்மா பிச்சை போடுங்கம்மா!”

முண்டிய பிச்சைக்காரர்களில் இளைஞன் ஒருவன் ஆரோக்கியமாக தெரிந்தான். அவனை பார்த்து கத்தினாள் அன்னப்பூரணி. “உடம்புல ஒரு குறையும் இல்ல… இளைஞன் வேற நீ… எதுக்கு பிச்சை எடுக்ற? எதாவது கூலி வேலைக்கு போலாமில்ல? மக்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி பிச்சைக்காசு சேர்க்கிறாயே… இது நியாயமா?”

அந்த இளைஞன் ஆங்காரமாய் சிரித்தான். “நானாவது… மக்கள்கிட்ட கெஞ்சி கெதறி அம்பதுபைசா ஒருரூபா பிச்சை வாங்றேன். உங்க புருஷன் என்ன செய்றார் தெரியுமா? மக்களுக்கு சேவை செய்யப் போறேன்னு மத்திய அமைச்சராகி மக்களின் பணத்தை கோடிகோடியா சொரண்டுறாரு. உங்க கணவன் உழைச்சு சம்பாதிக்கலாமில்ல?”

கண் சிவந்தாள் அன்னப்பூரணி. “ஏய் ஏய்… நீ ரொம்ப ஒவரா பேசுற…”

“உண்மையைத்தான் சொன்னேன். உங்க வீட்டுக்காரர் மாதிரியான அமைச்சருக மக்கள் பணத்தை சொரண்டிசொரண்டி ஏழைமக்களை எங்க நிலைக்கு தள்ளுராங்க!”

“அதிகப்பிரசங்கி! உன் பேரென்ன?”

“என் பேரைக்கேட்டு என்னம்மா பண்ணப்போற? போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுக்கப் போறியா? தாராளமா பிடிச்சுக்குடு. என் பேரு சுடலை முத்து!”

அன்னப்பூரணி கைபேசி எடுத்து கணவனிடம் பேசினாள். “கேவலம் ஒரு பிச்சைக்காரனுக்கு எவ்ளோ வாய்க்கொழுப்பு? இவனை போலீஸ் பிடிச்சிட்டுப் போய் வாய்லயே உதைக்ற மாதிரி ஏற்பாடு பண்ணுங்க!”

சுடலை முத்துவின் மீதிருந்த கோபத்தில் மற்ற பிச்சைக்காரர்களுக்கும் பிச்சை போட மறுத்தாள் அன்னப்பூரணி.

அடுத்த பத்துநிமிடங்களில் போலீஸ் ஜீப் பாய்ந்து பறந்து வந்தது. இன்ஸ்பெக்டர் அன்னப்பூரணியிடம் வந்து, “உங்ககிட்ட வம்பு பண்ணின பிச்சைக்காரன் எங்கம்மா இருக்கிறான்?” வினவினார்.

அன்னப்பூரணி சுடலைமுத்துவை அடையாளம் காட்ட நான்கைந்து கான்ஸ்டபிள்கள் சேர்ந்து அவனை அடித்து துவைத்து ஜீப்புக்குள் விசிறினர். “நாட்ல இருக்ற பிச்சைக்காரங்களுக்கு ஈவு இரக்கம் காட்டமாட்டீங்க! எங்க வாய்லயும் வயித்லயும் அடிச்சு என்ன சந்தோஷம் காணப் போறீங்களோ?”

ஜீப் மறையும் வரை சுடலைமுத்துவின் புலம்பல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அன்னப்பூரணி தனது காரில் எறிக்கொள்ள கார் புறப்பட்டது.

ந்யூ டெல்லி பிரதமரையும் அமைச்சரவை சகாக்களையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு கோப்பை பிரித்தார் நிதிஅமைச்சர் அதியமான்.

“நம் நாட்டின் ஜனத்தொகை 135கோடி. ஜனத்தொகையில் 50லட்சம் பேர் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் வருடத்திற்கு 500கோடி ரூபாய் பிச்சை மூலம் சம்பாதிக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் ஆதிகாலத்திலிருந்தே எல்லா சமூகங்களிலும் இருந்து வருகிறார்கள். பிச்சைகாரர்கள் பிச்சை எடுப்பதை நாகரிகமாக ஒரு தொழிலாக ஒரு பொழுதுபோக்காக ஒரு சிறப்புரிமையாக கருதுகிறார்கள். பிச்சை எடுப்பதை அமெரிக்கா, கனடா, ரோமானியா போன்ற நாடுகள் தடை செய்திருந்தாலும் பின்லாந்து போன்ற நாடுகள் சட்டரீதியாக அனுமதிக்கின்றன. பிச்சைகாரர்கள் மறுவாழ்வுக்காக மத்தியஅரசாங்கம் வருடத்திற்கு 100கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்கிறது”

மற்ற அமைச்சர்கள் கூர்ப்பாகினர்.

“பிச்சை எடுப்பது ஒரு கலை. அதை இந்தியா முழுக்க நமது அரசு சட்டரீதியாக அனுமதித்தால் என்ன? உலக நாடுகளிலுள்ள எல்லா பிச்சைக்காரர்களும் இந்தியா வந்து பிச்சை எடுக்க அனுமதிக்கலாம் என நினைக்கிறேன். 500கோடி வருமானத்தை 50000 கோடி வருமானமாய் பெருக்கலாம். வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து பிச்சை எடுக்க விரும்பும் பிச்சைக்காரர்கள் அரசாங்கத்திடம் ஒரு தொகை கட்டி அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பிச்சை எடுப்பதில் பத்து சதவீதத்தை அரசிற்கு வரியாக கட்டிவிட வேண்டும்!”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் தங்கள் பிச்சையை பங்கு போடுவதை இந்திய பிச்சைக்காரர்கள் ஏற்றுக் கொள்வார்களா?”

“எல்லாத் தொழில்களிலும் போட்டிகள் நுழையும் போது பிச்சையிலும் போட்டிகள் நுழைவது யதார்த்தம்தானே!”

“எதிர்கட்சிகள் நம்மை தாளித்துக்கொட்டி விடும்கள்!”

“நாம் கொண்டு வரும் எந்த விஷயத்தையும் அவர்கள் ஆதரிப்பதில்லை. இதனையும் அவர்கள் எதிர்த்து விட்டு போகட்டுமே…”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவர். நான்கைந்து பேர் குழுவாய் சேர்ந்து கச்சேரி பண்ணி பிச்சை எடுப்பர். தொடர்ந்து ஒரு மாசம் பிச்சை போடுவோருக்கு பரிசுதிட்டம் அறிவிப்பர். வெளிநாட்டு பிச்சைக்காரன் உள்நாட்டு பிச்சைக்காரனை விட ஆரோக்கியமாய் வெள்ளைத் தோலாய் இருப்பான். ஒருவெளிநாட்டு பிச்சைக்காரன் ஐம்பது உள்நாட்டு பிச்சைக்காரனின் வருமானத்தை விழுங்கி விடுவான்…”

“ஸோ வாட்… உள்நாட்டு பிச்சைக்காரன்களின் வருமானம் பறிபோவதை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“பிரபலமான கோயில்கள் சுற்றுலாதலங்களில் பிச்சை எடுக்க உரிமக் கட்டணத்தை உயர்த்துவோம்!”

“இது நல்ல யோசனை!”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்களின் வருமானம் அவரவர் நாட்டுக்குத் தானே செல்லும். நம் நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு செல்வதை எதிர்கட்சிகள் எப்படி அனுமதிப்பர்?”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் முதல் ஐந்து வருடங்களுக்கு பணத்தை தங்கள் நாட்டுக்கு அனுப்பக்கூடாது என்று நிபந்தனை விதிப்போம்”

“சபாஷ்!”

“வருஷம் பத்தாயிரம் ரூபாய் பிச்சை போடுவதற்கு வருமானவரி விலக்கு அளிக்கலாம். பிச்சை போடுவதை ஊக்குவிக்க பல உபாயங்களை கையாள்வோம். பிச்சை போட்டால் பாவங்கள் வண்டிவண்டியாக மன்னிக்கப்படும் சொர்க்கம் எக்ஸிக்யூட்டிவ் கிளாஸ் கிடைக்கும் என மதவாதிகளை விட்டு பிரச்சாரம் செய்வோம். ‘பிச்சை போடுவதில் உள்நாடு வெளிநாடு பாரபட்சம் காட்டாதே’ போன்ற வாசகங்களை சந்திமுனையில் எழுதி வைப்போம்!”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுவதில் ஒரு சௌகரியம் உள்ளது. ஒரு அமெரிக்க பிச்சைக்காரனுக்கு பிச்சை போடும் போது ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கே பிச்சை போடுவதாய் அகமகிழலாம். வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் தத்தம் மொழிகளில் பாட்டுபாடி பிச்சை கேட்பர். அதனை கேட்டு மகிழும் நமக்கு ஒரு அழகிய கலாசார பரிமாற்றம் கிடைக்கும். இந்திய மக்களுக்கு உலகின் பல்வேறு மொழிகள் பரிட்சயமாகும். இந்திய பிச்சைகாரனும் வெளிநாட்டு பிச்சைக்காரியும் திருமணம் செய்து கொண்டால் புதுவகை பிச்சைக்கார சமூகம் பரிணாமம் பெறும்…”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் துப்பாக்கி வைத்திருப்பர். பிச்சை போடாதவர்களை சுட்டு கொன்று விடுவர். அதனால் நாட்டில் க்ரைம் ரேட் கூடுமே?” ஒரு அமைச்சர் சந்தேகம் கேட்டார். அவருக்கு அமைச்சர் அதியமானை அறவே பிடிக்காது. எப்போது பார்த்தாலும் அதியமானை மட்டம் தட்டவே பார்ப்பார்.

“வெளிநாட்டு பிச்சைக்காரர்களை அனுமதிப்போம் அவர்களின் துப்பாக்கிகளை அனுமதிக்கமாட்டோம்!”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்ககளின் வருகையால் எய்ட்ஸ் போன்ற வியாதிகள் பெருகுமே… போதை பொருள் கலாசாரம் விஸ்வரூபிக்குமே!”

“இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாய் மறுக்கிறேன்!”

“குழந்தைகள் கடத்தல் பருவப்பெண்கள் கடத்தல் அதிகரிக்குமே!”

“அதிகரிக்காது!”

“வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் வருகையால் வருமானம் இழக்கும் உள்நாட்டு பிச்சைக்காரர்கள் தற்கொலை செய்து கொள்வர் அல்லது பல கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவர்!”

“அதனை ஏன் அப்படி பார்க்கிறீர்கள்? பிச்சை எடுப்பதில் வருமானம் இல்லாத உள்நாட்டுப் பிச்சைக்காரன் உழைத்து சம்பாதிக்க ஆரம்பித்து விடுவான்”

இன்னும் பலவிதமாய் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வெளிநாட்டு பிச்சைக்காரர்களை இந்தியாவுக்குள் பிச்சை எடுக்க அனுமதிக்கும் மசோதாவை வடிவமைத்தனர்.

பிரதமர் மௌன குருவாய் அமர்ந்திருந்தார்.

பாராளுமன்றம் அல்லோலகல்லோலப்பட்டது. மசோதாவை ஆதரித்தும் எதிர்த்ததும் குரல்கள் எழுப்பப்பட்டன. நாற்பத்தியைந்து ஒட்டுகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியது. இருநூற்றி சில்லரை நாடுகளிலிருந்து பிச்சைக்காரர்கள் இந்தியா வந்து பிச்சை எடுக்க விண்ணப்பம் அளித்தனர்.

வெளிநாட்டு பிச்சைக்காரர்களை இந்தியாவுக்கு அனுப்பும் ஏஜென்ஸிகளிடமிருந்து இந்திய அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில். ஒரு பிஎம்டபிள்யூ கார் வந்து நின்றது. அதிலிருந்து ஏழெட்டு அமெரிக்கா பிச்சைக்காரர்கள் இறங்கினர். பிச்சை எடுக்கும் இடத்தில் ஒரு அலங்கார குடை பிரித்தனர். அமெரிக்க பிச்சைக்காரனும் தலையில் அமெரிக்க தேசியக்கொடி வரையப்பட்ட தொப்பி அணிந்திருந்தான்.

மடிகணினி கொண்டு வந்திருந்தனர். கோயிலுக்கு வழக்கமாய் வரும் பக்தர்களின் பெயர்களும் முகவரிகளும் ஒடின. பக்தர்களின் பிச்சை போடும் இரக்கக்குணத்துக்கு சர்வே நடத்தி ரேட்டிங் போட்டிருந்தனர்.

விஸ்கி சூப்பியபடியே கிடார் இசைத்து ஒரு மேற்கத்திய பாட்டு இசைத்தனர்.

அமைச்சர் அதியமானின் மனைவி கோயிலிலிருந்து வெளிப்பட்டாள்.

“மேம்! ப்ளீஸ் பே அஸ் எ ஹன்ட்ரட் ருப்பீஸ்!”

“உங்களை எல்லாம் இந்தியாவுக்குள் பிச்சை எடுக்க அனுமதித்த அமைச்சர் அதியமானின் மனைவிநான். என்கிட்டயே பிச்சை கேக்றீங்களா?”

“பிச்சைக்காரங்க எங்ககிட்டயே கமிஷன் வாங்கிட்டுதான் எங்களை இந்தியாவுக்குள் பிச்சை எடுக்க அனுமதிச்சான் உன் புருஷன். மரியாதையா பிச்சை போடுறியா, இல்ல உன்னை சுட்டுக்கொல்லவா?”

ரிவால்வரை அன்னப்பூரணியின் நெற்றிப்பொட்டில் பொருத்தினர்.

வெலவெலத்துப் போய் பணத்தை எடுத்து நீட்டினாள்.

வாங்கிக் கொண்ட வெளிநாட்டு பிச்சைக்காரன் பொளேர் என்று அறை அறைந்தான். பொறி கலங்கிப் போனாள்.

அவளால் காவல்நிலையம் சென்று உதை வாங்கி தின்ற சுடலைமுத்து பகபகவென சிரித்தான். “வினை விதைச்சு வினை அறுக்ற அமிச்சர் பொண்டாட்டி!” தெய்வமும் சிரித்தது.

கமலகண்ணன்

1 Comment

  • செம…. 😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...