வாகினி – 20| மோ. ரவிந்தர்
வான்வெளியில் தவம் செய்துகொண்டிருந்த பொன் மேகங்கள் யாவும் பல வண்ணம் எழுதாத இருளுக்குள் அடைப்பட்டு மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது.
பகலில் இயற்கை அழகாய் காட்சியளித்த மரம், செடி, கொடிகள் எல்லாம் இந்தக் கும்மிருட்டுக்குள் ராட்சச உருவம்போல் காட்சியளித்தது. மனிதர்கள் அனைவரும் பறவைகளைப் போல வீட்டுக்குள் அடைபடத் தொடங்கினர்.
இந்த நேரத்தில் மகாலட்சுமியை சந்தித்துவிட்டு தனது வீட்டுக்குத் திரும்பினான், கபிலன்.
அதேநேரம் டீக்கடையில் பார்த்த செல்லையா, கபிலனின் அம்மா ரேகாவிடம், கபிலன் மகாலட்சுமியை விரும்புவதையும், கபிலன் அங்கேயே சுத்திக் கொண்டு இருப்பதையும் ஒன்றுவிடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தார்.
திடீரெனக் கபிலன் வீட்டுக்கு வந்து சேர, அந்த இடத்தில் செல்லையா தனது அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் கபிலனுக்கு நெஞ்சம் ‘பகீரென்று’ என்று பதறிப் போனது.
செல்லையாவும். கபிலனை வீட்டு வாசலில் திடீரென எதிர்பார்த்திருக்க மாட்டான். கபிலன் அங்கு வந்துசேர தன்னைச் சுதாரித்துக் கொண்டு வீட்டு வாசலிலிருந்து தன் நடையைக் கட்ட ஆரம்பித்தார்.
கபிலன் பெரும் கேள்வி பயத்துடன் சைக்கிளை விட்டு மெல்ல கீழே இறங்கி வந்ததும் வராததுமாகத் தனது தாய் ரேகாவிடம் கேள்வி கேட்க தொடங்கினான்.
“என்னம்மா, செல்லையா வீட்டுக்கு வந்துட்டுப் போறாரு. என்ன விஷயம்மா?” அவன் முகத்தில் பயத்தின் ரேகை ஓடியது.
அவனைக் கோப கனலுடன் பார்த்து முறைக்க ஆரம்பித்தாள் தாய்.
“என்னம்மா, நான் கேட்டுட்டு இருக்கேன் என்ன பார்த்து இப்படி முறைச்சிட்டே இருக்கீங்க”
“அது கிடக்கட்டும், நீ எதுக்காக அந்தத் தெருவிலேயே பூனை மாதிரி சுத்திட்டு இருக்குற. வர்றவன் போறவன் எல்லாம் வந்து புத்திமதி சொல்லிட்டுப் போறான். உன்னோட விஷயம் தான் என்ன, சொல்லு?” என்று தாய் ரேகா ஒரே போடாகப் போட்டாள்.
‘கருவா பையன், அதுக்குள்ள எல்லா விஷயத்தையும் பத்த வச்சுட்டு போய்ட்டானா?’ என்று நினைத்துக்கொண்டே.
“அது ஒண்ணும் இல்லம்மா, வேலை விஷயமா சதாசிவம் அண்ணனே போய்ப் பாத்துட்டு வரும்மா” என்றான்.
“பொய் சொல்லாத கபிலா. எல்லா விசயமும் எனக்கு நல்லாவே தெரியும். எதையும் மறைக்காத?” என்று அதட்டும் குரலில் கூறினாள் தாய்.
“என்னம்மா, சின்னப் பிள்ளைங்க கேள்வி கேட்கிற மாதிரி என்னையும் கேக்குறே. சத்தியமா வேலை விஷயமாகத் தான் போய்ப் பார்த்து கேட்டுட்டு வாரேன்” என்று சத்தியம் செய்தான், கபிலன்.
“பொய் சொல்லாதடா, எனக்கு எல்லாமே தெரியும். நீ கொஞ்ச நாளா அந்த டீச்சர் பொண்ணுக் கூடச் சுத்திட்டு இருக்குறது. எனக்குத் தெரியாதுன்ணு நெனச்சியா? தாமரை தவிர இந்த வீட்டுக்கு யாராவது மருமகளா வந்தான்ணு வச்சிக்க, அப்புறம் என்ன உயிரோடவே நீ பார்க்க மாட்ட பாத்துக்க” என்று தாய் கபிலனை கோபித்தாள்.
தாய்க்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது என்று பயத்தால் கபிலனுக்குச் சற்று முகம் மாறியது. என்ன செய்வது என்றே தெரியாத வண்ணம் தத்தளிக்கத் தொடங்கினான். அதேசமயம், ‘எப்படியோ ஒரு வழியா மகாலட்சுமி விஷயம் அம்மாவுக்குத் தெரிந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சும் ஓடியது.
அதேநேரம், எப்படியாவது அம்மாவை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதிற்குள் ஆழமாக ஓடத்தொடங்கியது.
“இங்க பாரும்மா, தாமரைய என்னால கட்டிக்க முடியாது. மகாலட்சுமி தான் என்னோட உசுரு. கல்யாணம்ணு ஒண்ணு நடந்தா அது அவ கூடத் தான் நடக்கும். அவளுக்காக நான் உசுர விடவும் தயாராக இருக்கேன். நீயும் சரி, மகாவும் சரி எனக்கு எப்பவும் ஒண்ணு தான். நீ எதுக்காகமா சாகணும். நானே சாகிறே” என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் வேகமாக நடையைக் கட்டினான், கபிலன்.
அவன் வேகத்தைப் புரிந்து கொண்ட தாய் ரேகா தவறாக ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் என்ற பெரும் அச்சத்தில் அவன் பின்னாலே வீட்டுக்குள் ஓடினாள்.
அதற்குள் கபிலன் சமையல் பாத்திரங்கள் இருந்த இடத்திற்குச் சென்று, மண்ணெண்ணெய் கேனை எடுத்து அவசர அவசரமாகத் தலையில் ஊற்றிக் கொண்டே தீப்பெட்டியை தேடினான்.
அந்தக் தீப்பெட்டி அடுப்பின் ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது.
மண்ணெண்ணெய் கேனை “விடுடா.. விடுடா…” என்று பெரும் குரலோடு வாதம் செய்து கொண்டிருந்தாள் தாய்.
‘எதற்காக ரேகாம்மா இப்படிக் கத்துகிறார்’ என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டுக்குள் ஒரு நொடியில் படையெடுக்கத் தொடங்கினர்.
தாய் கதறுவதும், மகன் உடல் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு நிற்பதைக் கண்டே இங்கு என்ன நடந்திருக்கும் என்று அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது.
அதற்குள், அங்கு வந்த ஒருவர் கபிலனின் கண்ணத்தில் படாரென அடித்துவிட்டு, கபிலன் கையில் இருந்த தீப்பெட்டியை தன்கையில் பிடுங்கினார்.
“ஏண்டா, உனக்கு என்ன அறிவு எதுனா மங்கி போச்சா என்ன?. ஒரே பிள்ளை என்று செல்லமாக வளர்த்தா இப்படியா பண்ணிட்டு நிப்ப. அவங்களுக்கு உன்ன விட்டா யார் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார், அந்த நபர்.
கபிலன் பதில் சொல்லும் நிலவரத்தில் இல்லை அமைதியாக நின்று கொண்டிருந்தான். இவனுடைய விஷயங்கள் அனைத்தும் அங்கு இருக்கும் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருந்ததால். ஒரு பெண் இருவருக்கும் சமாதானம் கூறும் வகையில் பேச ஆரம்பித்தாள்.
“ஏம்மா ரேகா, உனக்கு இருக்கிறதே ஒரே மகன். அவங்கிட்ட இப்படி வீம்பு பிடிச்சு இருந்தா எப்படி? அவன் ஆசைப்பட்ட மாதிரி அந்தப் பிள்ளையைத் தான் கட்டி வைக்கக் கூடாதா?” என்றாள், ஒருத்தி.
“அவனோட ஆசையைவிட, உன்னோட ஆசை பெருசா? விட்டு தள்ளிட்டு வேற வேலைய போய்ப் பாரும்மா” என்றாள், இன்னொருத்தி.
இவர்களெல்லாம் அறிவுரை கூறுவதைப் பார்த்த தாய் ரேகாவுக்கு ஏதோ ஒரு மாதிரி ஆகிவிட்டது.
‘இவர்கள் எல்லாம் அறிவுரை கூறும் வகையில் நம்மை வைத்து விட்டானே, இவன்’ என்று புத்தியில் உறைத்தது.
‘இதற்குமேல் இவன் இடத்தில் வீம்பு பிடிச்சுட்டு இருக்கிறது சரியில்லை. என்னதான் நான் தாயாக இருந்தாலும் அவனுக்குன்ணு ஒரு ஆசை இருக்காதா?. பேசாமல் அவளையே இவனுக்குக் கட்டி வச்சிட வேண்டியது தான்’ என்று நினைத்துக்கொண்டே அமைதியாகக் கூறினாள், தாய் ரேகா.
“சரிடா, உன் இஷ்டம் போலவே நீ இனி எதை வேண்டுமானாலும் செஞ்சிக்க. இனிமேல் நான் எதுலயும் தலையிட மாட்டேன்” என்று மனக் கலக்கத்துடன் கூறிவிட்டு, கண்ணைக் கசக்கிக்கொண்டே வீட்டை விட்டு மெல்ல வெளியே நடந்து வந்தாள், ரேகா.
“அப்புறம் என்னப்பா, நீ ஆசைப்பட்டது ஒருவழியா உனக்குக் கிடைச்சிடுச்சு. சரி… சரி… இனிமே நடக்கிற வேலையைப் பாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்த அனைவரும் கபிலன் வீட்டை விட்டு மெல்ல வெளியேறினர்.
பட்டென்று தாய் இப்படி ஒரு பதிலை கூறியதும், கபிலனுக்குத் துள்ளி குதித்து வானத்தில் பறப்பதைப் போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. இருந்தாலும், என்ன செய்வது? திடீரென இப்படி ஒரு செயலை செய்து விட்டோமே என்ற குமுறலுடன், வெளியில் இருந்த தாயைத் தேடிக் கொண்டு வீட்டுக்கு வெளியில் வந்தான், கபிலன்.
தொடரும்…
1 Comment
செல்லையா தன் வேலையை காட்டிவிட்டான்.கபிலனின் காதல் கைக்கூடும் என்று மனதார நம்புகிறேன்.அருமை மற்றும் வாழ்த்துகள் நண்பரே…