படைத்திறல் பல்லவர்கோன் | 11 | பத்மா சந்திரசேகர்

 படைத்திறல் பல்லவர்கோன் | 11 | பத்மா சந்திரசேகர்

11 தெள்ளாறு

ந்திவர்மர் உத்தரவிட்டபடி பல்லவப்படைகள் தெள்ளாறு சென்று தனது பாசறையை அமைத்தன. புரவிப்படை ஒரு பக்கத்திலும், யானைப்படை ஒரு பக்கத்திலும் முகாமிட்டிருந்தன. ஒரு புறம் இரதங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இன்னொரு புறம் காலாட்படை வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

சற்று தொலைவில், சிலர் சமையல் செய்து கொண்டிருந்தனர். பெரிய பெரிய பாத்திரங்களில் அரிசி, கேழ்வரகு, சோளம் ஆகியவை கஞ்சியாக சமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மாமிசம் தயாராகிக் கொண்டிருந்தது. இன்னொரு புறம், காய் வகைகள் நீரில் வெந்து கொண்டிருந்தன.

ஆதவன் மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். வீரர்கள் கொம்புகளில் துணியைச் சுற்றி தீவர்த்திகளைத் தயார் செய்து கொண்டிருந்தனர். எதேச்சையாகத் தென்திசையில் பார்த்த வீரனொருவன் உரக்கக் கத்தினான்.

“அதோ, பாண்டியப்படை வந்துவிட்டது” அவன் சுட்டிக்காட்டிய திசையில் அனைவரும் பார்த்தனர். அந்த வீரன் படை வருவதாகக் காட்டிய இடத்தில், வானில் தூசு பறந்து கொண்டிருந்தது.

“அனைவரும் சற்று அமைதியாக இருங்கள்” தளபதி எழிலன் கூற, அங்கிருந்த அனைவரும் அமைதியானார்கள். சில கண நேரத்தில், அங்கு முழு அமைதி நிலவியது. மூச்சு விடும் ஓசையைத் தவிர எதுவும் அங்கு கேட்கவில்லை.

பல்லவப்படையில் முழு அமைதி நிலவியபோது, அந்த ஓசை கேட்டது. முரசு ஒலிக்கும் ஓசையும், எக்காளங்கள் முழங்கும் ஓசையும் மெலிதாகக் கேட்டன. நேரம் செல்ல செல்ல அந்த ஓசை அதிகரித்து, படை நெருங்கி வருவதை உணர்த்தியது.

பாண்டியப்படை வரும் ஓசை கேட்டதும் தளபதி எழிலன் தனது புரவியில் ஏறி, விரைந்து காஞ்சிபுரம் அரண்மனை நோக்கி விரைந்தான். ஆதவன் ஆழியில் மறைந்து, சுக்கிரன் சற்று மேலேறிய நேரத்தில் அரண்மனையை அடைந்தான். விரைந்து சேனாதிபதி கோட்புலியாரிடம் சென்றான்.

“சேனாதிபதியாரே… பாண்டியப்படை நம்மை நெருங்கிவிட்டது” எழிலன் சொல்லவும், அதை எதிர்பார்த்திருந்த கோட்புலியார் மேற்கொண்டு தகவல்களை விசாரிக்கு முன்னர் மன்னர் நந்திவர்மரைச் சந்திக்க எண்ணி, எழிலனை அழைத்துக்கொண்டு சென்றார்.

“மன்னரே… பாண்டியப்படை நெருங்கிவிட்டதாம்” சுருக்கமாக, தெரிவிக்க வேண்டிய தகவலை நேரடியாகத் தெரிவித்தார் கோட்புலியார்.

“நல்லது கோட்புலியாரே. இவர் தெள்ளாற்றிலிருந்து வருகிறாரா?” எழிலனைக் காட்டிக் கேட்டார்.

“ஆம் மன்னரே” கோட்புலியார் பதிலளித்ததும், எழிலனிடம் திரும்பினார் நந்திவர்மர்.

“பாண்டியப்படை எவ்வளவு தூரத்தில் உள்ளது வீரனே..?”

“நடுநிசிக்குள் தெள்ளாறு அடையலாம் மன்னரே”

“நமது படை அங்கு தயாராக உள்ளதா..?”

“நமது அனைத்து படைகளும் தயாராக உள்ளன மன்னரே” எழிலன் சொன்னதும் சில கணங்கள் அமைதி காத்தார் நந்திவர்மர்.

“கோட்புலியாரே. நாமும் தெள்ளாறு புறப்படலாம்”

“இப்போதே தாக்குதலை தொடங்கப் போகிறோமா மன்னரே?”

“இல்லை கோட்புலியாரே. களைத்து வந்த பாண்டியப்படை இன்றிரவு ஓய்வெடுக்கட்டும். நாளைக் காலை நமது தாக்குதல் தொடங்கும்” சொன்ன நந்திவர்மர் தொடர்ந்தார்.

“சோழ மன்னர் குமராங்குசர் மற்றும் முத்தரையர் தெள்ளாறு வந்துவிட்டனரல்லவா..?”

“ஆம் மன்னரே. அவர்கள் தெள்ளாற்றில் கூடாரமமைத்துத் தங்கியுள்ளனர்” எழிலன் கூறினான்.

“நல்லது. நீங்கள் சென்று நாம் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள். நான் சங்காவைச் சந்தித்து வருகிறேன்” சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு வெளியேறினார் நந்திவர்மர்.

ந்திவர்மரின் தனியறையில் வழக்கம் போல தீபங்கள் ஏற்றப்பட்டு, இருளுடன் போர் நடந்து கொண்டிருந்தது. அறைக்கு வெளியே சுவரில் செருகப்பட்டிருந்த தீவர்த்திகளின் ஒளி மெலிதாக அறைக்குள் எட்டிப்பார்த்தது. அறையின் மையத்திலிருந்த மஞ்சத்தில் அமர்ந்திருந்தாள் பல்லவ மகாராணி சங்கா. அறைக்கு வெளியே யாரோ வரும் ஓசை கேட்டு, அது நந்திவர்மராகவே இருக்கக்கூடுமென யூகித்து, மஞ்சத்திலிருந்து எழுந்து நின்றாள்.

“சங்கா… போருக்கான நேரம் நெருங்கிவிட்டது”

தெள்ளாறு புறப்படும் அவசரத்தில் பேசினார் நந்திவர்மர். “இன்னமும் உனது பிறந்த வீட்டு படை வந்து சேரவில்லை. நேரடியாக தெள்ளாறு வரசொல்லி தகவல் அனுப்பியுள்ளேன். ஒரு வேளை தகவல் கிட்டுமுன் புறப்பட்டு, காஞ்சி வந்தால், தெள்ளாறு அனுப்பிவைக்கும் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்” வேகமாகப் பேசினார் நந்திவர்மர்.

“தகவல் சேர்ந்திருக்கும் ஐயனே. கன்னரதேவர் நேரடியாக போர்க்களம் வந்து விடுவார்” சொன்ன சங்கா தொடர்ந்தார்.

“சென்று வாருங்கள் ஐயனே. என் பிறந்த நாடான, மாபெரும் இராஷ்டிரகூடத்தையே வெற்றிக் கண்ட தாங்கள், இந்த போரிலும் வெற்றி பெறுவீர்” தலை நிமிராமலே கூறினாள் சங்கா.

“என்னை நிமிர்த்து பார்க்க மாட்டாயா சங்கா?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஐயனே. ஏதோ மனச்சஞ்சலம்”

சொன்ன சங்காவின் விழிகளிலிருந்து இரு துளி நீர் தரையில் விழுந்தது.

“நீ சொன்னவாறு, இராஷ்டிரகூடர்களையே வென்றவன் நான். எனக்கு ஒன்றும் நேராது சங்கா. சங்கடத்தை விடு”

“தங்களுக்கு ஒன்றும் நேராது, தாங்கள் வெற்றி வீரராக திரும்பி வருவீரென தெரியும் ஐயனே. என் சஞ்சலம் அதுவல்ல”

“வேறென்ன சஞ்சலம் சங்கா?” சற்று அழுத்தமான குரலில் நந்திவர்மர் கேட்க, விழிகளில் நீருடன் பதில் சொன்னாள் சங்கா.

“ஐயனே. போரில் வெற்றிக்கொண்டு, மாறன்பாவையை விவாகம் செய்து அழைத்து வருவீர்களல்லவா?”

“என்ன சொன்னாய் சங்கா?” சற்று ஆத்திரத்துடன் வந்தது நந்திவர்மரின் குரல்.

“என் உயிரினும் மேலானவள் நீ. உன்னை அவமானப்படுத்தும் சொற்களை பேசிய பாண்டிய வேந்தரின் மகளை நான் விவாகம் புரிவது, கனவிலும் நடக்காது. இனி அந்த சஞ்சலம் உனக்கு வேண்டாம் சங்கா” கூறிவிட்டு சங்காவின் கண்ணீரைத் துடைத்து, அவளை மார்போடு அணைத்துக்கொண்டார் நந்திவர்மர்.

சில கண நேரத்திற்குப் பின்னர் விலகியவர், சங்காவின் நுதலில் முத்தமிட்டுப் புறப்படத் தயாரானார். பணிப்பெண்கள் ஒரு தட்டில் விளக்கு, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை எடுத்து வர, சங்கா நந்திவர்மருக்குச் சந்தனமிட்டு, அதன் மேல் குங்குமமிட்டு ஆலாத்தி சுற்றினாள். தட்டிலிருந்த மாலையை எடுத்து நந்திவர்மர் கழுத்தில் அணிவித்தாள்.

கோட்புலியார் மற்றும் எழிலன் தங்கள் புரவிகளில் தயாராக இருந்தனர். பணியாட்கள் நந்திவர்மரின் புரவியைக் கொண்டுவர பாண்டியப்படையை எதிர்கொள்ள, தெள்ளாறு நோக்கி புறப்பட்டார் பல்லவ மன்னர் நந்திவர்மர்.

-தொடரும்…

< பத்தாவது பகுதி

ganesh

5 Comments

  • சிறப்பு 💐💐💐

  • அற்புதமான காட்சி கண் முன்னே கொண்டு வந்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 💐

  • போரின் காரணமாக கதாபாத்திரங்கள் நறுக்கென சுருக்கமாக பேசுவது பலே. மூளையின் வேலை போரில் இருக்கவேண்டும் , பேச்சுகளில் அது களைப்படையக்கூடாது என ஆசிரியர் சொல்ல வருவதாக நினைக்கிறேன்.

    தெள்ளாறை நோக்கி பல்லவருடன் நானும் பயணிக்க தயாராகிட்டேன்

  • எப்பொழுதும் போல் அடுத்தது என்ன என்ற ஆவலை தூண்டுகிறது அக்கா.. வாழ்த்துகள்

  • Traveling with them

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...