படைத்திறல் பல்லவர்கோன் | 10 | பத்மா சந்திரசேகர்

 படைத்திறல் பல்லவர்கோன் | 10 | பத்மா சந்திரசேகர்

10. பல்லவப்படை

காஞ்சிபுரத்தில் சேனாதிபதி கோட்புலியார் பல்லவப்படையை தயார் செய்து கொண்டிருந்தார். வெகு சமீபத்திலேயே குறுகோட்டில் இராஷ்டிரகூடப் படையை தோற்கடித்து, இராஷ்டிரகூட இளவரசி சங்காவை மணமுடித்து வந்திருந்தார் நந்திவர்மர். எனவே அப்போரில் ஈடுபட்டிருந்த பல்லவப் படையினர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். பல்லவ மன்னர் நந்திவர்மர் நேரடியாக படைகள் பயிற்சி செய்து கொண்டிருந்த திடலுக்கு வந்து, படையினரைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

“கோட்புலியாரே. வீரர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகத் தோன்றுகிறதே…”

“ஆம் மன்னா. குறுகோட்டு போர் சமீபத்திலேயே முடிந்துள்ளதால், வீரர்களில் சிலர் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். எனவே தற்போதையை படையில் வீரர்கள் குறைவாக உள்ளனர்”

“அவர்களை அழைக்க ஏற்பாடு செய்துள்ளீரா கோட்புலியாரே?”

“ஆம் மன்னா. பல்லவ அரசுக்குட்பட்ட எல்லா ஊர்களிலும் வீரர்களை உடனே காஞ்சிபுரம் வரசொல்லி முரசொலித்து அறிவித்துள்ளோம். வீரர்களில் சிலர் படைக்கு திரும்பியுள்ளனர். இன்னும் சில நாட்களில் படை எண்ணிக்கை அதிகரிக்கும்” கோட்புலியார் கூற சற்று யோசனையில் ஆழ்ந்தார் நந்திவர்மர். பின்னர் தொடர்ந்தார்.

“வீரர்களின் எண்ணிக்கையைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை கோட்புலியாரே. இராஷ்டிரகூடப் படை நமக்கு உதவிக்கு வரும். அத்துடன் சோழர்களின் படை மற்றும் முத்தரையர் படையும் நமக்கு உதவிக்கு வரும். அத்துடன், படையின் வெற்றி என்பது படையின் எண்ணிக்கையைச் சார்ந்தது அல்ல, படையினரின் வீரத்தைச் சார்ந்தது.” நந்திவர்மர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வீரனொருவன் தனது புரவியில் வேகமாக வந்தான்.

சற்று தூரத்திலிருந்தே மன்னர் நந்திவர்மர் அங்கிருப்பதைக் கண்டு, புரவியை விட்டு இறங்கி, கோட்புலியாரை நோக்கி நடந்து வந்தான்.

“புகழி, ஏதேனும் அவசரத் தகவலா?” கோட்புலியார் அந்த வீரனைக் கேட்டார்.

“ஆம் கோட்புலியாரே. பாண்டியப் படை மதுரையிலிருந்து புறப்பட்டு விட்டது” அந்த வீரன் சொன்னதைக் கேட்டு, கோட்புலியார் சற்று அதிர்ச்சியடைந்தார். நந்திவர்மரைச் சற்று குழப்பத்துடனேயே நோக்கினார்.

“இப்போது என்ன செய்யலாம் மன்னா?”

“என்ன செய்யவேண்டுமெனக் கருதுகிறீர் கோட்புலியாரே?”

“பாண்டியப்படை புறப்பட்டுவிட்டதாக அறிந்தபின், சற்றுக் குழப்பம் உண்டாகிறது மன்னா”

“தேவையில்லாத குழப்பம் கோட்புலியாரே. இது நமக்கு நலமே பயக்கும். இங்கிருந்து நமது படையை மதுரை வரை கொண்டு செல்வதை விட, மதுரையிலிருந்து வரும் பாண்டியப் படையை தொண்டை நாட்டிற்குள் வரவழைத்து போர் புரிவது நல்லது தானே?” நந்திவர்மர் கூறியதும் கோட்புலியார் சற்றுத் தெளிவடைந்தார்.

“பாண்டியப்படை எப்போது புறப்பட்டது வீரனே?”

“நேற்று முன்தினம் காலை மதுரை விட்டுப் புறப்பட்டது மன்னா”

“பாண்டிய வேந்தர் ஸ்ரீவல்லபர் இந்த போரில் கலந்து கொள்கிறாரா? அல்லது இளவரசர் வரகுணர் மட்டும் படையை முன்னெடுத்து வருகிறாரா?”

“பாண்டிய வேந்தர், இளவரசர் இருவரும் வருகின்றனர் மன்னா”

“எனில், பாண்டிய வேந்தர் படைகளுக்கு முன்னணியில் வருகிறாரா? அல்லது படைகளை அனுப்பிவிட்டு இறுதியாக வருகிறாரா?”

“பாண்டிய வேந்தர் மற்றும் இளவரசர் இருவருமே படைகளை முன்னே அனுப்பிவிட்டுக் கடைசியாகவே புறப்பட்டுள்ளனர்”

“நீ மதுரையிலிருந்து வருகிறாயா..? எவ்வாறு வந்தாய்..?”

“ஆம் மன்னா. நான் மதுரையிலிருத்தே வருகிறேன். படையினர் புறப்பட்டு, பாண்டிய வேந்தரும், இளவரசரும் புறப்பட்டதைக் கண்ட பின்னர், எனது புரவியில் அங்கிருந்து புறப்பட்டேன். இராஜபாட்டை வழியாக வந்தால், அதிக நேரமெடுக்கும் என்பதால், குறுக்குப் பாதைகளின் வழியாக வந்துவிட்டேன்”

“எனில், பாண்டியப்படை எப்போது காஞ்சிபுரம் வந்தடையும்..?”

“நாளை இரவு அல்லது நாளை மறுநாள் காலை காஞ்சிபுரம் வந்தடையலாம் மன்னா” புகழி சொன்னதும் சற்று யோசனையில் ஆழ்ந்தார் நந்திவர்மர். சற்றுநேரச் சிந்திப்புக்கு பிறகு கோட்புலியாரிடம் பேசத் தொடங்கினார்.

“கோட்புலியாரே… பாண்டிய வேந்தர் படைகளுக்கு பின்னர், இறுதியாகப் புறப்பட்டு வருகிறாரென்றால், அவர் வரும் வரை வீரர்கள் காத்திருப்பர். அவர் வந்த பின்னரே படையெடுப்புத் துவங்கும்” சொல்லிவிட்டு ஒரு கணம் தாமதித்து பின்னர் கூறினார்.

“கோட்புலியாரே, நமது படை நாளை புறப்படுகிறது. பாண்டியப்படையை எதிர்கொள்ள, நாம் வெகுதூரம் செல்லத் தேவையில்லை. தெள்ளாற்றில் நமது படை காத்திருக்கட்டும்.” சொல்லிவிட்டு புகழியை பார்த்தார்.

“வீரனே… உனது பயணம் இன்னமும் முடியவில்லை. சோழ மன்னர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். எனினும், சோழப்படை தற்போது புறப்பட்டு காஞ்சிபுரம் வர நேரமில்லை. எனவே, அவர் அனுமதி பெற்று, நீ சோழ நாட்டிற்கு சென்று, அவரது படையை அங்கேயே காத்திருக்கச் சொல். தேவைப்பட்டால் வருவதற்குத் தயாராக, பழையாறையில் காத்திருக்க சொல்”

“உத்தரவு மன்னரே” புகழி வணங்கி, விடைபெற்றுத் தனது புரவி நோக்கி நடந்தான்.

“புகழி. நீ செல்லும் முன்னர் சோழ மன்னரிடம் அனுமதி பெற்று, அவரிடம் ஓலை பெற்றுச் செல்ல மறந்து விடாதே”

“உத்தரவு மன்னா” மீண்டும் வணங்கி சோழ மன்னர் குமராங்குசரை சந்திக்க, காஞ்சி அரண்மனை நோக்கி தனது புரவியில் விரைந்தான் புகழி.

“கோட்புலியாரே… எவரேனும் தூதுவரை அனுப்பி, இராஷ்டிரகூட மன்னரிடம் அவர்கள் படையை நேரடியாக தெள்ளாறு வரும்படி சொல்லி விடுங்கள்” சொல்லிவிட்டு தனது புரவியில் ஏறி அரண்மனை நோக்கி விரைந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர்.

ன்னர் உத்தரவுப்படியே மறுநாளே பல்லவப்படை புறப்பட்டு தெள்ளாற்றை அடைந்தது. இரத, கஜ, அஸ்வ படையினரும், காலாட்படையினரும், பலவித ஆயுதங்களுடனும், மனதில் தமது மண்ணை பாண்டிய ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டுமென்ற வெறியுடனும் தெள்ளாற்றில் பாண்டியப் படையையும், பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரையும் எதிர்நோக்கி காத்திருந்தது.

-தொடரும்…

ganesh

10 Comments

 • அருமை சகி

  • நன்றி ப்பா..

  • You have to make quick decisions without panic
   Time alone will tel, whether he has made correct or wrong moves

 • முழுமையான விறுவிறுப்பு தொற்றிவிட்டது. பாண்டியனிடம் இல்லாத ஒரு அமைதி திட்டமிடல் பல்லவனிடம் தெரிகிறது. பார்ப்போம்

  • பதறாத காரியம் சிதறாதே…. ☺️☺️

 • கதைக்களம் சூடு பிடிக்கிறது அக்கா.. வாழ்த்துகள்

  • நன்றி தம்பி… ☺️☺️

 • போருக்காக காத்திருக்கிறேன்

  • விரைவில்…

 • Good going…

Leave a Reply

Your email address will not be published.