கிறித்தவம் இரத்தக் கறை – 1 | மு.ஞா.செ.இன்பா 

 கிறித்தவம் இரத்தக் கறை – 1 | மு.ஞா.செ.இன்பா 

இயேசு பெண்மைத் தன்மை உடையவரா?

கிறித்தவம் இரத்தக் கறை’ என்ற தலைப்பில் எழுதப்படும் இந்நூலின் முதல் அத்தியாயம் கேள்வி கணைகளோடு ஆரம்பித்திருப்பது மாறுபாடாகத் தென்படலாம். ஆரம்பப் புள்ளியை விமர்சனக் கண்ணோட்டத்தோடு பதிவு செய்யும் வேளையில் தேடல்களின் களம் விரிந்து நிற்கும் வானம் போல, பலத் திசைகளைக் கொண்டு அமையும். அதில் ஏற்புடைய கருத்துகளும், எதிர் கருத்துகளும் வாதம் செய்யும். அந்த வாதம் கிறித்தவத்தின் இன்னொரு முகத்தை உங்களுக்கு அடையாளப்படுத்த வழி அமைக்கும்.

நெடுங்காலமாக யூதர்கள் கடைபிடித்து வந்த மத வழிபாட்டு முறைமைகளைத் துணிச்சலுடன் எதிர்த்த நாத்திகவாதி இயேசுவின் தொலைநோக்குப் பார்வையில் இருந்து கிறித்தவம் ஆரம்பிக்கிறது. இயேசுவின் மீது திட்டமிட்டு பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. சில விமர்சனங்களுக்கு இன்றுவரை கிறித்தவம் சரியான பதிலை முன் வைக்கவில்லை.

‘நாத்திகவாதி இயேசு’ என என் பேனா முன் வைக்கும் கருத்தை, கிறித்தவ மதத்தின் மீது தீவிரப் பற்று உடையவர்களாகக் கருதுபவர்கள் எதிர்க்கக் கூடும். இயேசு எப்போது நாத்திகம் பேசினார்? என்ற வினா மனதில் எழும்பி குடைச்சலை எழுப்பும். உண்மைகளை ஏற்றுக் கொள்ள மதவாதிகளால் முடியாது என்பதை நாடுஅறியும். ஆயினும் காலச் சுவடுகள் கட்டியமைக்கும் விடைகள் உண்மைகளை உரக்கக் கூவிக்கொண்டே இருக்கும்.

‘‘மதவாதிகளே… நீங்கள் இல்லாதவரை இவ்வுலக மக்களின் ஆன்மா அப்பழுக்கற்ற தன்மை உடையதாக இருந்தது. அவர்களின் ஆன்மா ஆண்டவருடன் நேரடித் தொடர்பில் இருந்தது. அப்பொழுது சிலையோ, விலங்கோ, நெருப்போ இறைவனைத் தொடர்பு கொள்ளத் தேவைப்படவில்லை.

கதிரவனை வணங்க வேண்டும், நல்ல ஆவிகளை வணங்க வேண்டும் என நீங்கள் எழுப்பிய கோட்பாடுகள் முற்றிலும் பொய்யானவை. கதிரவனுக்கென்று தனிப்பட்ட ஆற்றல் இல்லை. அது படைத்தவனின் ஆற்றலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரைத் தொழ எந்த மதமும், எந்த மதவாதியும் தேவையில்லை’’ என முன்மொழிந்த இயேசு அகிலத்தின் முதல் நாத்திகவாதி என்பது அறிவுப் பூர்வமான உண்மை. அதற்காக இயேசுவின் மீது எழுப்பப்பட்ட விமர்சனங்களில் மிகவும் இழிவான விமர்சனம் இயேசு பெண்மைத் தன்மை கொண்டவர் என்ற சொற்றொடர்.

கிறித்தவம் இந்த விமர்சனத்திற்குத் தந்த பதில் சில நேரங்களில் கிறித்தவத்திற்கு முதுகு எலும்பு உண்டா? என்ற வினாவை எழுப்பிவிடும்.

‘‘இறைவனை ஆண், பெண் எனப் பிரித்துப் பார்க்கக் கூடாது, அவர் பாலினத்திற்குஅப்பாற்ப்பட்டவர், என்ற விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, அமைதியாகிக் கொண்டு பணம் பார்க்கும் வேலையைத் தொடர்ந்தது.

இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்களை உள்ளடக்கிய இப்பிரபஞ்சக் கூட்டில், தனிப் பாலினமாகத் திருநங்கைகளும் இடம் பிடித்துக் கொண்டனர். குரொமோசோம்கள் நடத்தும் சித்து விளையாட்டில் தனிப் பாலினமாக திரு நங்கைகள் உருவாகிறார்கள். அறிவியலின் கோட்பாட்டில் இயற்கையாக நடைபெறும் ஓர் வேதியல் மாற்றமிது, வலியைச் சொல்லும் கூற்றுமிது.

முற்ப்பிறவியில் ஒருவன் செய்த பாவத்தின் வினைதான், இப்பிறவியில் திருநங்கையாகப் பிறக்க வைத்துள்ளது, பாவம் தந்த வினைப்பயன் இதுவென… குருட்டுச் சித்தாந்தத்தைக் கூறி, மக்களின் மனதில் அச்சத்தைத் திணிக்கிறார்கள் மதவாதிகள். மதம் என்ற துருப்பிடித்த கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு சமுதாயத்தின் கழுத்தில் அறுவை நடத்தும் மதவாதிகளுக்குப் பிழைப்பு நடத்திட இது போன்ற கட்டுக் கதைகள் தேவைப்பட்டன.

மதத்தின் மடமைகளுக்கு எதிராக களம் கண்ட இயேசு, புதிய விடியலை எழுத முனைந்து நின்ற காரணத்தினால், யூத மதவாதிகளுக்குக் கிலி பற்றிக் கொண்டது. இயேசுவைத் தாக்கிட பல கற்களை எறிந்தனர். எறியப்பட்ட கற்கள் பூமராங் போல் திருப்பி வந்து அவர்களையே தாக்கிட. கருத்து மோதல்களில் இயேசுவை வெல்ல முடியாது என்ற சூழல் உருவான போது, இயேசுவின் மீது உடல் தொடர்பான கருத்துக் கணைகளை எறிந்தனர்.

முற்ப்பிறவியில் பாவ மனிதனாக இயேசு வாழ்ந்து இறப்பைத் தழுவியதால், பாவத்தின் சம்பளமாக இப்பிறவியில் பெண் தன்மை உடையவராக பிறப்பெடுத்துள்ளார், என்று கதையைத் திரித்தனர். திருநங்கையாக இயேசு உள்ளார் என்பதை மறைமுகமாக முன் வைத்த யூதர்கள், இதை பெரிய செய்தியாகப் பரப்பவும் செய்தனர்.

புரட்சித் தத்துவத்தோடு, புதிய சிந்தனையும் கலந்து, இயேசு உருவாக்கிய மெய்யறிவுப் பரப்புரை, அடித்தட்டு மக்கள் மனதில் நம்பிக்கை விதைகளைத் தூவ, நாடு கடந்து நாயகனாகப் பார்க்கப்பட்டார் இயேசு.

இமய மலைக்கும் நேபாளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பரப்புரை மேற்கொண்டிருந்த இயேசு, நண்பர்களின் அழைப்பை ஏற்ற்று, பாலஸ்தீனம் திரும்ப முடிவெடுத்தார். மேற்குத் திசையில் வளம் மிக்கப் பகுதியாக விளங்கிய பாலஸ்தீனம் செல்ல இயேசுவுக்குக் காட்டு வழிப்பாதை ஒன்றுதான் இருந்தது. இப்பாதையில் தனியாக யாரும் செல்வதில்லை. கொடிய காட்டு விலங்குகள் வாழும் பகுதி என்பதால், படை வீரர்களின் துணையுடன்தான் மக்கள் இக்காட்டுப் பகுதியைக் கடந்து மேற்கு திசை சென்றனர்.

பாலஸ்தீனம் செல்ல முடிவெடுத்த இயேசு இக்காட்டுப் பகுதி வழியாகப் பயணத்தை மேற்கொண்டார். இயேசுவின் நண்பர்கள் தடுத்துப் பார்த்தனர், ஆனால், இயேசு நண்பர்களின் மறுப்பைப் புறம்தள்ளிவிட்டு தனியொருவராக துணிவுடன் பயணித்து,குறிப்பிட்ட நாளில் பாலஸ்தீனம் வந்தடைந்தார். நோடோவிட்சின் பயணக் குறிப்பில் இயேசு இமய மலைப் பகுதியில் பரப்புரை செய்தது குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி மனிதராகக் கொடிய காட்டுப் பாதையில் பயணம் செல்லும் இயேசு உயிருடன் பாலஸ்தீனம் வந்தடையப் போவதில்லை, எதாவது காட்டு விலங்கு அவரைக் கொன்றொழித்து விடும் என இயேசுவின் மீது பொறாமை கொண்டோர் நினைத்து, அந்நிகழ்வுக்காகக் காத்திருந்தனர். ஆனால், எந்தவிதப் பாதிப்புமின்றி இயேசு பாலஸ்தீனம் வந்தடைந்தார்.

எங்களின் மீட்பர் வந்துவிட்டார், ஆண்டவரின் திருவுளம் அவரைப் பத்திரமாகப் பாதுகாத்துள்ளது என, இயேசுவின் சீடர்கள் மகிழ்வடைந்தனர். தனி மனிதனாகக் காட்டுப் பாதையில் அச்சமின்றிப் பயணித்த இயேசுவிடம் பெண்மைத் தன்மை மேலோங்கியிருந்தது என்றால் அது நகைப்புக்குரிய செய்தி. யூதர்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியில் இயேசுவைத் திருநங்கையாக கற்பனை செய்து மகிழ்ந்து கொண்டார்கள் என்பது தெளிவானது. ஆனால், கிறித்தவம் யூதர்களின் பொய்ப் பரப்புரைக்கு இன்றுவரை தெளிவான மறுப்பை வழங்கவில்லை. மவுன சாமியார் போல அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.

இயேசுவின் துணிவை ஒப்புக் கொண்டால், இந்தியாவில் பரப்புரை மேற்கொண்டிருந்த இயேசுவைக் குறித்த தகவலையும் ஏற்க வேண்டி வரும் என்ற நெருக்குதலில், இயேசு பெண்மைத் தன்மை கொண்டவர் என்ற யூதர்களின் குற்றச்சாட்டிற்குப் பதில் அளிக்காமல் வேடிக்கை பார்த்தது கிறித்தவம்.

இயேசுவின் மீதுதிட்டமிட்டு கட்டுக் கதைகளைப் பரப்பிய யூதர்கள், இயேசுவின் தாயார் மரியாளையும் விட்டு வைக்கவில்லை. இயேசுவைப் பெண்ணாக வர்ணித்தவர்கள், மரியாளை விபச்சாரி எனக் கடுமையாகச் சித்தரித்தார்கள்.

விவிலியமும், குரானும் மரியாளைப் புனிதத் தாயென உயர்வாக வைத்துள்ள நிலையில், காசுக்கு எழுதும் சில மனிதர்களால் யூதர்கள் உருவாக்கிய ஆய்வு நூல்களில், மரியாள் பெண் இனத்தின் களங்கம் எனக் குறிக்கப்பட்டன.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூதரான செல்சஸ், மத நிகழ்வுகளைக் குறித்த செயல்களை ஆராய்வதாகக் கூறி, யூத மதத்திற்கு முட்டுக் கொடுக்கும் வேலைகளைச் செய்தார். யூத மதத்தை விட வலுவான நிலைக்குக் கிறித்தவம் முன்னேறிக் கொண்டிருந்தது செல்சசுக்கு ஒப்பவில்லை. கிறித்தவத்தைக் குறித்த தவறான தகவல்களை தான் எழுதிய நூலில் குறிப்பிட்டார்.

மனிதக் குருதியைச் சுவைத்த காட்டு விலங்குகளைவிடக் கொடூரமான மனநிலையில், கிறித்தவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை கிறித்தவர்கள் என்ற பெயரில் மட்டும்தான். அன்பின் விருந்தில் இணைந்து மதமாக மாறிய இவர்களிடம் அன்பு குறைபட்டு உள்ளது. சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடியவர்கள் கிறித்தவர்கள் என மதக் காழ்ப்புணர்வை செல்சஸ் முன்வைத்திட, அந்தக் கூற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. கிறித்தவ மதம் வளர்ச்சிப் பாதையில் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

இயேசுவின் தாய் மரியாளை வழிபடத் தொடங்கினர் ஒருபிரிவினர், பொறுக்காத செல்சஸ் மரியாள் மீது அடுத்த பாய்ச்சலை எய்தினார். நெசவுத் தொழிலை மையமாகக் கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த மரியாளை, தச்சுத் தொழிலாளியான சூசை என்ற இளைஞனுக்கு மணம் முடித்தனர்.

திருமணமான சில நாட்களில் மரியாளின் நடத்தைப் பிடிக்காமல், வீட்டைவிட்டு சூசை வெளியேற்றிவிட, ‘போந்த்ரா’ என்ற உரோமை வீரனுடன் மாறுபட்ட உறவில் ஈடுபட்டு, குழந்தைக்குத் தாயாளாள் மரியாள் அந்தக் குழந்தைதான் இயேசு என, யூத மத விரும்பிகளின் விருப்பத்தை நிறைவேற்ற மரியாள் மீது விபச்சாரி பட்டத்தைத் திணித்தார்.

யூத வழக்கத்தின் படி, விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணைக் கல்லெறிந்து கொலை செய்ய வேண்டும் என்பது மதச் சட்டம். செல்சஸ் கூற்றுப்படி மரியாள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால்

அவளைக் கல்லெறிந்து மக்கள் கொன்றிருப்பார்கள். ஆனால், தாய்மைப் பேறு அடைந்து வீடு திரும்பிய மரியாளை, முன்பைவிட அதிக அன்போடு ஏற்றுக் கொண்ட சூசை மரியாளுக்காக வாழ்ந்தார் என பலக்குறிப்புகள் மெய்ப்பிக்கின்றன. யூத மதத்திற்காக செல்செஸ் பொய்யான கருத்தை வரலாறு என்றாக்கி மகிழ்ந்து கொண்டான்.

உரோமைப் பேரரசின் குடியுரிமை பெற்ற பிலேவியஸ் ஜோசப், யூத வரலாற்றைப் பதிவு செய்ய, யூதர்களால் அமர்த்தப் பட்டான். யூதர்களின் பழம்பெரும் நடைமுறைகள் என்ற தலைப்பில் உருவாக்கிய நூலை பிலேவியஸ், எந்த இடத்திலும் இயேசுவின் பெயர் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கில் அந்நூலின் கருத்துகளைக் கட்டமைத்தான்.

இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் கிறித்தவ மதம் யூதேயா பகுதிகளில் காட்டுத் தீயெனப் பற்றிக்கொள்ள, தனிக்காட்டு அரசனாக ஆளுமை செய்த யூத மதம் தள்ளாட்டத்தைக் காணத் தொடங்கியது.

மதத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி யூதர்களுக்கு ஏற்பட, வரலாற்று ஆய்வுகள் என்ற பெயரில் யூத மத நிகழ்வுகளை முன்னிலைப் படுத்தி பதிவுகளை உருவாக்கத் தொடங்கினர். அந்த நோக்கில் யூதர்களின் பழம்பெரும் நடைமுறைகள் என்ற நூல் உருவாக்கப் பட்டது.

உயிர்கள் படைக்கப்பட்ட காலத்தில் இருந்து நீரோ மன்னன் ஆட்சி காலம் வரை ஆய்வு செய்த பிலேவியஸ், திட்டமிட்டு இயேசு என்ற கதாநாயகனைத் தவிர்த்தான். யூத மதம் அரசியல், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்வியல் முறைமைகள், தட்ப வெப்பம், கள நிலவரங்கள் என அனைத்தையும் நூலின் கருவாக்கிய பிலேவியஸ், எதிர்காலத்தில் அகிலத்தையே ஆட்டி வைக்கப் போகும் கிறித்தவத்தின் தலைமகனான இயேசுவை புறம் தள்ளி யூத மத்ச் சார்பானவன் என தன்னை மெய்ப்பித்துக் கொண்டான். செல்சஸ், பிலேவியஸ் போன்ற எழுத்தாளர்கள் இயேசுவுக்கு எதிரான கருத்துகளை முன் வைத்து யூதப் பற்றாளர்களாக மாறி நின்றனர். அதனை உண்மை என்று சிலர் நம்பி ஆய்வுகளில் வேறு திசை நோக்கியும் பயணித்தனர்.

கறை விலகும்…

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...