படைத்திறல் பல்லவர்கோன் | 8 | பத்மா சந்திரசேகர்
8. ஆத்திரம்
காஞ்சிபுரம் அரண்மனையில் பின்மாலை நேரத்தில் தனது தனியறையில் இருந்தார் மன்னர் நந்திவர்மர். அறையின் மையத்தில் ஒரு பெரிய கட்டில் போடப்பட்டு, இலவம்பஞ்சிலான மெத்தை போடப்பட்டிருந்தது. அதன் மேல் வெண்பட்டு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அறை தீபங்களின் ஒளியால் நிறைந்திருந்தது. விழிகள் மூடி சுகந்தத்தை அனுபவித்துக் கொண்டிருத்த நந்திவர்மரை கலைத்தது நூபுரத்தின் ஒலி.
“ஐயனே, பால் கொண்டு வந்துள்ளேன்” சங்கா மெல்லிய குரலில் கூற, மஞ்சத்திலிருந்து எழுந்து அமர்ந்து, பாலை அருந்திய நந்திவர்மர், சங்காவை உற்று நோக்கினார். வெட்கத்தில் தலை குனிந்து நின்றிருந்தாள் சங்கா.
“சங்கா” அவளை கையை பிடித்து இழுத்து தனது மடியில் அமரச் செய்தார். நாணத்தில் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள் சங்கா.
“இந்த அறை இப்போது எப்படியுள்ளதென்று அறிவாயா சங்கா?” நந்திவர்மர் கேட்க, தனது முகத்தை மெல்ல உயர்த்தி, அறையைச் சுற்றிப் பார்த்தாள் சங்கா.
“எப்போதும் போல் தானே உள்ளது ஐயனே..? இன்னும் கொஞ்சம் அகல்களை ஏற்றச் சொல்லவா..?”
“இல்லையில்லை. இன்னும் விளக்குகள் தேவையில்லை” சொன்ன நந்திவர்மர் தொடர்ந்தார்.
“இந்த அறை இப்போது உன்னைப்போலவே உள்ளது தேவி” விளங்காமல் பார்த்தாள் சங்கா.
“ஆம் சங்கா. உன் மேனி வாசம் போல அகில் புகை சுகந்தம். உன் விழிகளின் ஜொலிஜொலிப்பாய் அகல் விளக்குகள். உன் அன்பின் சாரலாய் மெல்லிய தென்றல். உன் இமைகளின் துடிப்பாய், மெல்லச் சரியும் சாளரத் திரைச்சீலைகள்” சொல்லிக்கொண்டே போக, முகம் சிவந்தாள் சங்கா.
“ஆனால், ஒரு வேறுபாடும் உள்ளது” நந்திவர்மர் கூற, என்ன என்பது போல விழிகளை உயர்த்திப் பார்த்தாள் சங்கா.
“இந்த அறையின் அழகை என்னால் ரசிக்க மட்டுமே இயலும். ஆனால், உன் அழகையோ…” சொல்லி ஒரு கணம் நிறுத்திய நந்திவர்மர் தொடர்ந்தார்.
“அள்ளிப்பருக இயலும்.” சொன்னபடி அவளது கன்னங்களை தன்னிரு கரங்களால் தாங்கிப் பிடித்தார். சங்காவின் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்த்தார். அவரது பார்வையை தாங்கவியலாத சங்கா விழிகளைக் கீழே தழைத்தாள். சரியாக அதே நேரம் ஒரு மணியோசை கேட்டது.
“ஹூம்” ஒரு பெருமூச்சு வந்தது நந்திவர்மரிடமிருந்து. “அரச குலத்தில் பிறந்ததற்கான பலனை நான் அனுபவிக்கத்தான் வேண்டும். அரசனை மணந்ததின் பலனை நீயும் அனுபவித்துத்தானாக வேண்டும்” சொல்லிவிட்டு சங்காவை விடுவித்தார்.
“ஏதோ அவசரத் தகவல் வந்துள்ளது சங்கா. நான் சென்று என்னவென்று பார்த்து வருகிறேன்” சொல்லிவிட்டு எழுந்து அறையை விட்டு வெளியே சென்றார் நந்திவர்மர்.
தனியறையில் மனைவி சங்காவுடன் தனித்திருந்த நந்திவர்மர், அவசரத் தகவலைத் தெரிவிக்கும் மணியோசையை கேட்டு வெளியே வர, அறைக்கு வெளியே பாண்டிய நாட்டிற்குத் தூதுவராகச் சென்றிருந்த சோழ மன்னர் குமராங்குசர் நின்றிருந்தார்.
“பாண்டிய வேந்தரைச் சந்தித்தீரா குமராங்குசரே..?” நேரடியாக வந்த வினாவிற்கு நேரடி விடை கூறலாமா என யோசித்துக் கொண்டிருந்தார் குமராங்குசர். ஒரு கணநேர யோசனைக்குப் பிறகு அவரும் நேரடி பதிலைத் தந்தார்.
“பல்லவப் படை தயாராகட்டும் மன்னரே” சோழ மன்னர் சொன்னதைப் பல்லவ மன்னர் புரிந்து கொண்டார். பல்லவ மன்னர் எதிர்ப்பார்த்திருந்த பதிலை, மாறன்பாவையின் காதலர் எதிர்பார்க்கவில்லை. பாண்டிய இளவரசியுடன் விரைவில் விவாகம் முடிந்து விடுமென எண்ணியிருக்க, இப்போது போருக்குத் தயாராக வேண்டுமெனச் சோழ மன்னர் கூறியதும் சற்று ஏமாற்றமடைந்தார்.
“ஸ்ரீவல்லபர் பாண்டிய இளவரசியை விவாகம் செய்துதர மறுத்து விட்டாரா?”
நந்திவர்மர் கேட்க, ஸ்ரீவல்லபர் பேசியதில் மிகுந்த சினத்திலிருந்த குமராங்குசர், நடந்தது அனைத்தையும் கூறத்தொடங்கினார். ஸ்ரீவல்லபர் சங்காவைப் பற்றி கூறியதை கேட்டதும், சினத்தில் முகம் சிவந்தார் நந்திவர்மர்.
“என்ன, இராஷ்டிரகூட இளவரசியும், பல்லவ அரசியுமான சங்காவை அவமானப்படுத்தும் விதமாக பேசினாரா ஸ்ரீவல்லபர்..?” தன் செவிகள் கேட்டதை மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார் நந்திவர்மர்.
“ஆமாம் மன்னரே” குமராங்குசர் அழுத்தமாகக் கூற, சினத்தின் எல்லைக்கு சென்றார் நந்திவர்மர். அவரது நெற்றிச் சுருக்கம் அவரது சினத்தைத் தெரிவித்தது.
“கோட்புலியாரை உடனே வரச்சொல்லுங்கள்” நந்திவர்மர் கூற, வீரனொருவன் உடனே விரைந்தான். அடுத்த சில கணங்களில் கோட்புலியார் வேக நடையிட்டு வந்தார்.
“கோட்புலியாரே. பல்லவப்படை போருக்குத் தயாராக எவ்வளவு நாட்கள் பிடிக்கும்?” நந்திவர்மரின் குரலில் தெரிந்த ஆக்ரோஷம் கோட்புலியாருக்கு பாண்டிய வேந்தரின் பதிலை யாரும் கூறாமலே உணர்த்தியது. நந்திவர்மர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே புரவி ஒன்று விரைந்து வரும் ஓசை கேட்டது.
“படை தயாராகவே உள்ளது மன்னரே. நாளையே போர் என்றாலும் தயாராகவே உள்ளோம்” கோட்புலியார் விடை பகன்ற போது புரவி ஓசை நின்று, யாரோ வேகமாக நடந்து வரும் ஓசை கேட்டது.
பல்லவ மன்னர் நந்திவர்மர், சோழ மன்னர் குமராங்குசர் மற்றும் சேனாதிபதி கோட்புலியார் மூவரும் வந்து நின்ற அந்த உருவத்தைப் பார்த்து அதிசயமும், அதிர்ச்சியும் அடைந்தனர். இராஷ்டிரகூட சக்கரவர்த்தி அமோகவர்ஷரின் மகனும், பல்லவ அரசி சங்காவின் சகோதரனுமாகிய, இராஷ்டிரகூட இளவரசர் கன்னரதேவர் கோபமான முகத்துடன் நின்றிருந்தார்.
“வாருங்கள் இராஷ்டிரகூட இளவரசே” வரவேற்றார் பல்லவ மன்னர் நந்திவர்மர்.
“நான் இங்கு உங்கள் வரவேற்பு நாடி வரவில்லை நந்திவர்மரே” சினமான குரலுடனேயே பேசினார் இராஷ்டிரகூட இளவரசர்.
“எதற்காக இந்த ஆவேசம் கன்னரதேவரே?”
“நான் கேள்விப்பட்டது நிஜம் தானா நந்திவர்மரே? தாங்கள் பாண்டிய இளவரசியைக் காதலிப்பதாகவும், அவளையே விவாகம் புரியவுள்ளதாகவும் அறிந்தேனே, அது உண்மையா நந்திவர்மரே?” நேரடியாக கேட்கப்பட்டதும் சற்று சங்கடமடைந்தார் நந்திவர்மர்.
“பதில் கூறுங்கள் நந்திவர்மரே” இராஷ்டிரகூட இளவரசர் மீண்டும் கேட்க, பதில் சொல்லத் தொடங்கினார் நந்திவர்மர்.
“தாங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை இராஷ்டிரகூட இளவரசே” சொன்ன நந்திவர்மர் தொடர்ந்தார்.
“ஆம், நான் பாண்டிய இளவரசியைக் காதலித்தேன். தங்கள் தங்கையிடம் சம்மதம் பெற்று, பாண்டிய வேந்தருக்குத் தூதும் அனுப்பினேன். எனினும், இப்போது எனக்கு மாறன்பாவையை விவாகம் புரியும் எண்ணம் எதுவும் இல்லை” சொல்லிவிட்டு தான் மாறன்பாவையை சந்தித்ததிலிருந்து, பாண்டிய நாட்டிற்கு குமராங்குசரைத் தூது அனுப்பிய வரை அனைத்தையும் தெரிவித்தார்.
“பாண்டிய வேந்தர் தங்கள் தங்கையை அவதூறாக பேசிவிட்டார். எனவே, இனி மாறன்பாவையுடன் விவாகம் என்ற பேச்சிற்கு இடமே இல்லை. அத்துடன், என் மனைவியைத் தவறாக பேசிய ஸ்ரீவல்லபர் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். எனவேதான், பாண்டிய நாட்டின் மீதான படையெடுப்புப் பற்றி சேனாதிபதி கோட்புலியாரிடம் பேசிக்கொண்டிருந்தேன்” நந்திவர்மர் கூற, இன்னமும் ரௌத்திரமானார் இராஷ்டிரகூட இளவரசர் கன்னரதேவர்.
“எனில், உடனே படையெடுப்பைத் தொடங்க வேண்டியது தானே?”
“பாண்டிய நாட்டிற்கு சென்றிருந்த சோழ மன்னர் குமராங்குசர் தற்போது தான் காஞ்சி திரும்பினார். மதுரையில் நடந்ததை இப்போதுதான் சொல்லிக்கொண்டிருந்தார். தங்களைப் போலவே எனக்கும் ஆத்திரம் தோன்றியது. படையெடுப்பைப் பற்றியே நாங்களும் விவாதித்துக் கொண்டிருந்தோம்”
“இதில் பெரிதாக விவாதிக்கவோ, சிந்திக்கவோ ஒன்றும் இல்லை நந்திவர்மரே. இராஷ்டிரகூட இளவரசியை அவமதித்தவன் மீது படையெடுத்துச் செல்ல இராஷ்டிரகூடமும் தங்களுக்கு உதவும். இராஷ்டிரகூடப் படை விரைந்து புறப்பட்டு காஞ்சிபுரம் அடையும். உடனே படையெடுப்புக்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்”
இராஷ்டிரகூட இளவரசர் கூறியபடியே அடுத்த சில நாட்களில் பல்லவப்படை போருக்குத் தயாரானது. எனினும், அதற்கும் முன்னரே பாண்டியப்படை எடுத்த முடிவுகளை அறிவிக்க ஒற்றனொருவன் காஞ்சியை நெருங்கிக்கொண்டிருந்ததை காலம் அவர்களிடம் அறிவிக்கவில்லை.
7 Comments
கதையின் மையம் இப்போது தான் புரிய ஆரம்பிக்கிறது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வழக்கமான போர் அல்ல. பாரதத்தில் வந்தது போல ஒரு பெண்ணிற்காக இல்லையில்லை இரண்டு பெண்களுக்காக ஏற்பட போகும் போர்… காதல் ஒருபுறம், தன்மானம் ஒருபுறம்.. வீரம் ஒருபுறம், வேகம் ஒருபுறம்.. பார்ப்போம் அடுத்த என்ன நடக்க இருக்கிறது என்பதை..
போருக்கு தயாராகுங்கள்… 🙂🙂
Mikka arumai…
மகிழ்வுடன் நன்றி… 🙂🙂
Waiting for next
அடுத்த பகுதிக்காக நகக்கடிப்புடன்…
விறுவிறுப்பாக உள்ளது அக்கா.. வாழ்த்துகள்