30th July 2021
 • தொடர்
 • படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

2 weeks ago
235
 • தொடர்
 • படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

7. வார்த்தைச் சிதறல்

ந்திவர்மர் உத்தரவை ஏற்று மறுநாளே மதுரை புறப்பட்டார் குமராங்குசர். மதுரையை அடைந்தவர் கோட்டை வாயிலை நெருங்கினார். பகல் பொழுதாகையினால் அகழிப்பாலம் திறந்தே இருந்தது. அகழிப்பாலத்தை நெருங்கியவரை மறித்தது இரு வீரர்களின் வேல்.

“ஐயா. தங்களைப் பார்த்தால் வெளியூர் போலத் தெரிகிறது. எந்தக் காரணத்திற்காகக் கோட்டைக்குள் செல்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாமா?” பணிவாகவும், அதே நேரம் கம்பீரமாகவும் கேட்டான் காவல் வீரன்.

“நான் சோழ மன்னன் குமராங்குசன். பல்லவ மன்னரின் தூதுவனாக, பாண்டிய வேந்தரைச் சந்தித்துப் பேச வந்துள்ளேன்” குமராங்குசர் கூறியதும், காவல் வீரர்கள் பரபரப்பானார்கள். வீரனொருவன் தனது புரவியில் ஏறி, குமராங்குசரின் வரவை அறிவிக்க அகழிப்பாலத்தைக் கடந்து உள்ளே சென்றான்.

இன்னும் இரண்டு வீரர்கள் தங்கள் புரவிகளில் ஏறி, குமராங்குசரை வரவேற்று, கோட்டைக்குள் அழைத்துச் சென்றனர்.

குமராங்குசர் மதுரைக் கோட்டைக்குள் சென்றபோது, இவரது வருகையைக் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால், எட்டிச் சாத்தனார் இவரை எதிர்நோக்கிக் காத்திருந்தார்.

“பல்லவ தூதுவராக பாண்டிய நாட்டிற்கு வருகை தந்துள்ள சோழ மன்னருக்கு வந்தனங்கள்” சொல்லியபடி சோழ மன்னரை வரவேற்றார் சாத்தனார். அரண்மனைக்குள் ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபரும், இளவரசர் வரகுணவர்மரும் இருந்தனர். சோழ மன்னரை ஆசனத்தில் அமர செய்தார் சாத்தனார்.

“வரவேண்டும் சோழ மன்னரே” வரவேற்ற ஸ்ரீவல்லபர் நேரடியாக பல்லவ தூதின் நோக்கம் என்னவென்று கேட்டுவிட்டார்.

“பல்லவ மன்னரின் தூதுவராக வந்துள்ளதாக தகவலறிந்தேன். என்ன விஷயமாக வந்துள்ளீரென அறியலாமா?”

“பாண்டிய வேந்தே, நந்திவர்மர் சில காலத்திற்கு முன்பே இராஷ்டிரகூடர்களுடன் போரிட்டு, வென்று, இராஷ்டிரகூடப் பெண்ணையும் மணந்து வந்துள்ளார்” இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார் ஸ்ரீவல்லபர்.

“இப்போது பல்லவ மன்னர், பாண்டியர்கள் தொண்டை நாட்டில் கைப்பற்றியுள்ள இடங்களை திரும்பப்பெற எண்ணுகிறார். படை தயாராக உள்ளது. உதவிக்கு இராஷ்டிரகூடர் மற்றும் கங்கப்படையின் உதவியும் உள்ளது.”

“அனைத்தும் தெரிந்த ஒன்று தான். தாங்கள் வந்த காரணத்தைக் கூறுங்கள் குமராங்குசரே” ஸ்ரீவல்லபர் கூற, தொடர்ந்தார் குமராங்குசர்.

“படை தயாராக இருந்தாலும், நந்திவர்மர் பாண்டிய நாட்டுடன் போரிட்டு இழந்த பல்லவ பிரதேசங்களை வெல்வதை விட, தங்களுடன் உறவுபூண்டு தாம் இழந்த பகுதிகளை வெல்ல எண்ணுகிறார்” இப்போது ஸ்ரீவல்லபர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. தொடர்ந்து பேசினார் குமராங்குசர்.

“பாண்டிய இளவரசி மாறன்பாவையை மணமுடிக்க விரும்புகிறார் பல்லவ மன்னர் நந்திவர்மர்” சோழ மன்னர் கூறியதும், தான் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து சினத்துடன் எழுந்தார் பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர். உடனே இளவரசர் வரகுணரும், சாத்தனாரும் தங்கள் ஆசனங்களிருந்து எழுந்தனர். சோழ மன்னரும் தனது ஆசனத்திலிருந்து எழுந்தார்.

பாண்டிய வேந்தர் சினத்திலிருக்கிறார் என்பது தெரிந்தாலும், சாத்தனார் மனதில் ஒரு சிறு நம்பிக்கை தெரிந்தது.

‘நான் முன்னரே கூறிய ஆலோசனை, பாண்டிய வேந்தர் முன்னெடுக்கத் தேவையின்றி, பல்லவ மன்னர் விருப்பமாக வந்துள்ளது. இந்த வாய்ப்பை ஸ்ரீவல்லபர் பயன்படுத்திக்கொண்டால், இரு பெரும் சாம்ராஜ்ஜியங்கள் ஒன்றாக இணையும். அதை விட, தற்போது ஒரு போர் தவிர்க்கப்படும்’ மனதிற்குள் துளிர்த்த நம்பிக்கையை, ஸ்ரீவல்லபரின் சினம் கொண்ட முகம் உடைத்தது. சாத்தனார் எண்ணியபடி, அவரது நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் வெளிவந்தது ஸ்ரீவல்லபரின் வார்த்தைகள்.

“குமராங்குசரே. தாங்கள் பல்லவ மன்னரின் தூதுவராக வந்துள்ளீர். தூதாக வந்தவரைத் துன்புறுத்தும் வழக்கம் தமிழ் மக்களிடம் இல்லை. அந்த ஒரு காரணத்திற்காவே தாங்கள் பேசிய பேச்சிற்குத் தங்களை மன்னித்து, உடலில் தங்கிய உயிருடன் தங்களை அனுப்புகிறேன்” சீற்றமான குரலில் கூறினார் ஸ்ரீவல்லபர்.

“மன்னிக்க வேண்டும் பாண்டிய வேந்தே. எங்கள் மன்னர் கூறியதை யோசித்துப் பாருங்கள். பாண்டியரும், பல்லவரும் ஒன்று சேர்வது பலவிதங்களில் நல்லது. வடபுலத்து மன்னர்கள் தெற்கு நோக்கிப் போர் தொடுத்தால், நமது ஒற்றுமை நம்மைக் காக்கும்”

“இராஜ்ஜியத்தைக் காக்க வேண்டியது முக்கியமே. அதனினும் முக்கியம், என் மகளின் உள்ளத்தைக் காப்பது. இராஷ்டிரகூட இளவரசியை மணந்த ஒருவனை மணக்க என் பெண் எப்படி விரும்புவாள்? பல்லவ மன்னன் என்றாலும், பணிப்பெண் போல இரண்டாவது மனைவியாக என் மகள் விரும்புவாளா? அவள் உள்ளத்தைக் கொன்று, ஒற்றுமை வளர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை” இன்னமும் சினம் குறையாத குரலில் கூறினார் ஸ்ரீவல்லபர்.

பல்லவ மன்னர் நந்திவர்மர் பாண்டிய இளவரசியை சந்தித்ததையோ, இருவரும் தங்கள் உள்ளத்தை பரிமாறிக் கொண்டதையோ அறியாத பாண்டிய வேந்தர் வினாவெழுப்ப, அவரைப் போலவே நடந்ததை அறியாத சோழ மன்னர் குமராங்குசர், பாண்டிய வேந்தரின் வினாக்களுக்கு என்ன விடை கூறுவதெனத் தெரியாமல் தடுமாறினார்.

ஸ்ரீவல்லபரின் சினம் கண்டு, இளவரசர் வரகுணவர்மரும், எட்டிச் சாத்தனாரும் அமைதியாக இருந்தனர். எனினும், சாத்தனாரின் விழிகள் ஸ்ரீவல்லபரிடம் ரகசியமாகப் பேசின.

‘வேந்தே. இந்த உறவு பாண்டியருக்கு நல்லது. நாம் பேரரசாக நீடித்திருக்க உறவுகளை வளர்க்க வேண்டும். பல்லவ மன்னரே நம்மிடம் பெண் கேட்டு தூது அனுப்பியிருக்கும் போது, அதை ஏற்றுக்கொள்வதே நமக்கு நலம் பயக்கும்.’

சாத்தனாரின் விழிமொழி புரிந்த போதும், அவரது கண்களைக் கடந்ததின் மூலமாக அவரது விருப்பத்தை நிராகரித்தார் ஸ்ரீவல்லபர். சில கணங்கள் அங்கு நிலவிய மௌனத்தை பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் உடைத்தார்.

“குமராங்குசரே, பெண்ணைக் கொடுத்து, உறவை வளர்க்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்ல. எங்களிடம் படைபலம் உள்ளது. பாண்டிய நாடு பல்லவர்களை வென்ற சரித்திரமும் உள்ளது. பாண்டியர்கள் வென்ற பல்லவப் பிரதேசங்களை மீட்க வேண்டுமாயின், படைபலம் கொண்டு மீட்கலாம். குறுக்கு வழி தேட வேண்டாமெனப் பல்லவ மன்னர் நந்திவர்மரிடம் கூறுங்கள்” ஆக்ரோஷமாகக் கூறினார் ஸ்ரீவல்லபர்.

“தாங்கள் கூறியதை அப்படியே பல்லவ மன்னரிடம் கூறி விடுகிறேன் வேந்தே” சற்று ஏமாற்றத்துடன் கூறினார் குமராங்குசர்.

“இன்னமும் சேர்த்துக் கூறுங்கள் குமராங்குசரே” ஸ்ரீவல்லபர் கூற, நிமிர்ந்து அவரை பார்த்தார் சோழ மன்னர்.

“பெண்ணைக் காட்டி போரை முடிவுக்குக் கொண்டுவர நான் இராஷ்டிரகூடச் சக்கரவர்த்தி அல்ல. அத்துடன், போரைத் தவிர்க்க விவாகம் புரிந்து தர என் மகள் மாறன்பாவை, இராஷ்டிரகூட இளவரசி சங்காவைப் போல பலியாடும் அல்ல. மொத்தத்தில், இந்த ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் இராஷ்டிரகூடர்களைப் போல மானம் கெட்டவணும் அல்ல”

மாறன்பாவை பல்லவ மன்னரை சந்தித்ததைப் பற்றியோ, இருவரும் மனம்திறந்து பேசியதைப் பற்றியோ, நந்திவர்மருக்கு விவாகமாகி விட்டதை மாறன்பாவை அறிந்தே மனதைப் பறிகொடுத்தாள் என்பதையோ அறியாத ஸ்ரீவல்லபர், மகளின் வாழ்வை அரசியல் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாதென்னும் எண்ணத்தில் சற்று அதிகமாகவே பேசினார்.

கௌரவர்கள் சூதாட்டத்தில் வென்ற பின்னர், பாஞ்சாலி அவர்களுக்கு அடிமையென கூறப்பட்டாள். ஆங்காரம் கொண்ட துரியோதனன், பாஞ்சாலியை தனது தொடையில் வந்து அமரும் படி அழைத்தான். பேச்சின் பலனைப் போரின் முடிவில் கண்டான். அதைப் போலவே இன்றும், தனது மகளை அரசியலாக்க சொன்ன பல்லவ மன்னர் மேல் கோபம் கொண்ட ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபர் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளித் தெளித்தார். பாண்டியர்களின் எதிர்காலத்தையே புரட்டிப் போடும் வார்த்தை ஒன்றை குமராங்குசரை நோக்கி வீசினார்.

“நீ சோழ மன்னனல்லவா? பல்லவர்களுக்கு அடங்கி, அவர்கள் அடிவருடிப் பிழைப்பவர்கள் தானே சோழர்கள்! நீ உன் மன்னனுக்கு சேவகம் செய்யலாம். எனது மகள் செய்யத்தேவையில்லை” ஸ்ரீவல்லபர் கூற, குமராங்குசர் குருதி கொதித்தது. அவர் மனதிற்குள் ஒரு சபதம் தோன்றியது.

‘ஸ்ரீவல்லபரே. இந்த குமராங்குசனை மட்டும் நீங்கள் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த சோழ தேசத்தையும், சோழ மக்களையும் அவமதித்துள்ளீர். இன்று என் மனம் பெற்ற வேதனையைப் பாண்டிய தேசம் அடையும். அதுவும், நீங்கள் அவமதித்த சோழ தேசத்தினாலேயே, பாண்டிய தேசம் வேதனையை அனுபவிக்கும். இன்னும் நூறாண்டுக் காலத்திற்குள் பாண்டிய நாட்டை வெல்லும் அளவு சோழம் வளரும். இது பாண்டிய தலைநகராம் மதுரையில் கோவில் கொண்டுள்ள என்னாட்டிற்கும் உரியவனான ஈசன் ஆலவாயுடையார் மீது ஆணை’ குமராங்குசர் உள்ளம் சபதம் ஏற்றது.

“உறவு எனது மகளை விவாகம் புரிவதால் மட்டுமே வருமென்றில்லை. இராஷ்டிரகூட இளவரசியை நான் அடைந்தாலும் உறவு பிறக்கும். இதையும் நான் கூறியதாக பல்லவ மன்னரிடம் கூறு” தொடர்ந்து பேசினார் ஸ்ரீவல்லபர்.

சினத்தில் வார்த்தைகள் உதிர, அவர் வீசிய வார்த்தைகளின் உட்பொருள் உணர்ந்து, விக்கித்து திகைத்து நின்றனர் இளவரசர் வரகுணவர்மரும், எட்டிச் சாத்தனாரும். முகத்தில் கோபம் கொப்பளிக்க, அந்த அறையை விட்டு வெளியேறினார் பல்லவ தூதராக வந்த சோழ மன்னர் குமராங்குசர்.

நடந்தது எதுவும் தெரியாமல் ஆலவாயுடையார் ஆலயத்தில் தன் மனம் கவர்ந்த மன்னரை தனக்கு மணாளனாக அருளும்படி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் மாறன்பாவை.

–தொடரும்…

10 thoughts on “படைத்திறல் பல்லவர்கோன் | 7 | பத்மா சந்திரசேகர்

 1. வல்லபரின் கோபம் கண் முன் வந்து பயமுறுத்துகிறது, குமாரங்குசர் பட்ட அவமானத்தை நினைத்து சோழனாக உள்ளம் கொதிக்குது. கதையின் போக்கில் காதல், வீரம் தாண்டி ஆத்திரம் அழிவை தரும் என்னும் நீதியையும் சொல்லிவிட்டது…

  இவ்வா 💐💐

  1. குமராங்குசர் எடுத்த சபதம் நிறைவேறிடுச்சே.. அடுத்தடுத்த தலைமுறைகளில் சோழம் தலையெடுத்து விட்டதே…..

   1. ஆம்.. அதித்தகரிகாலர் அதை நிறைவேற்றிவிட்டார்..

 2. சிறப்பு
  விறுவிறுப்பு
  அழகிய நடையில் வீரம் விளைந்து நிற்கிறது.

  “அடிவருடி” என்ற சொல் புத்தம் புதிதாக அதேசமயம் மிகவும் அழகாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031