வாகினி – 10 | மோ. ரவிந்தர்

 வாகினி – 10 | மோ. ரவிந்தர்

வெற்றித்தோல்வி என்பது கனவுகளில் தோன்றி நிழல்களில் முடிகின்ற காட்சி அல்ல. நினைவில் தொடங்கி நிஜத்தில் தொடர்கின்ற கருப்பொருள் அது!. வெற்றி தோல்வி மனிதர்களால் தோன்றக் கூடிய ஒன்று. இரண்டிற்கும் நாமே பொறுப்பு என்று உணரும்போது தான் தோல்வி நமக்குப் புதியதொரு வெற்றி என்கின்ற வெளிச்சத்தைத் தேடித் தருகிறது. அந்த இரண்டு பாடத்தை நமக்குக் கற்றுத் தரக் கூடிய இரண்டு இடங்கள் இங்கு உண்டு. முதலாவது பகுத்தறிவை வளர்க்கும் பள்ளிக்கூடம்.

பத்தாம் வகுப்பு கடந்து செல்லும், மாணவர்களுக்கு இறுதியாண்டின் மேடை இது. தோல்வியால் சில மாணவச் செல்வங்கள் எடுக்கும் சில விபரீத முடிவுகளைக் கலைக்கும் மேடை இது. பத்தாம் வகுப்பு முடித்து இறுதி தேர்வு எழுத காத்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு அறிவு புகட்ட மேடை எனக்கு அமைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தலைமையாசிரியர் கம்பர் மாணவச் செல்வங்களுக்குச் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார்.

அந்த மேடையை அலங்கரிப்பதற்காக அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் தாய் தந்தையர் எனப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மேடையைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

மாணவ செல்வங்களே!, இன்னும் ஓரிரு தினங்களில் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுத உள்ள நீங்கள் கடந்த பத்து வருடங்களாகக் கற்றுத் தேர்ந்த பாடங்களில், இந்தச் சமூகத்தில் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒன்று என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இந்தப் பொதுத் தேர்வு என்பது உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நிச்சயம் எடுத்துச் செல்லும்.

நாளைய சமூகத்திற்கு நீங்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், மருத்துவராகவும், காவல்துறை, அரசியல், கலை, வல்லுநர்கள் எனப் பல்வேறு துறைகளுக்கும் நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள். உங்களுடைய தொண்டு இந்தச் சமூகத்திற்கு நல்ல வழிக்கட்டாக அமைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் எண்ணம்.

வருங்காலங்களில் நீங்கள் பலருக்கு ஏணியாக இருந்து உயர்த்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். நடக்க இருக்கும் இந்தப் பொதுத் தேர்வில் நீங்கள் அனைத்து பாடத்தையும் மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் எழுதுங்கள்” என்று கூறிவிட்டு. மேடையில் அவருக்காக இருந்த நாற்காலியில் போய் அமர்ந்தார், கம்பர்.

தலைமையாசிரியரின் சொற்பொழிவு முடிந்தவுடன் மேடையைச் சுற்றி இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மக்கள் என அனைவரும் தலைமையாசிரியர்களுக்குக் கைகளைத் தட்டி மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் தெரியப்படுத்தினர்.

அவரைத் தொடர்ந்து அதே பள்ளியில் படித்த தமிழ் வெற்றி கட்சியின் உறுப்பினர். திரு, தனஞ்செழியன் கையில் இருந்த சில காகிதத்துடன் அந்த மேடையில் ஏறினார்.

“இப்பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, மாணவச் செல்வங்களே!, உங்கள் அனைவருக்கும் எனது சிறம் தாழ்ந்த முதற்கண் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தலைமையாசிரியர் ஐயா திரு, கம்பர் அவர்கள் இப்பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது அவரிடத்தில் தான், நானும் ஒரு மாணவனாகப் படித்தேன்.

நல்ல தலைவர்களின் பண்புகளையும், பாடத்திட்டத்தில் இல்லாத வரலாற்றையும் நாங்கள் கற்று அறிய வேண்டுமென்று தேடித்தேடி எங்கள் அனைவருக்கும் வழங்கியவர், அவர். நான் இந்த இடத்தில் ஒரு மனிதனாக உங்கள் முன்னால் நிற்கிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்”

இந்த வார்த்தை கூறும்போது தலைமையாசிரியர் கம்பர் முகத்தில் ஒரு ஜுவாலை பொங்கி எழுந்தது. கூடியிருந்த அனைவரும் கம்பர் அவர்களைப் பெருமையாகப் பார்த்து ஆரவாரத்துடன் கைத்தட்டி கரகோஷத்துடன் மகிழ்ந்தனர்.

“நான் பொது இடத்தில் அரசியல் பேசுவதைப் போல் இந்த மேடையில் பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன்.

மாணவச் செல்வங்களே!.

வெற்றி தோல்வி என்றால் என்ன?,

வெற்றி என்றால் பரிசு கோப்பையைத் தட்டிச் செல்வதும். தோல்வி என்றால் ஏமார்ந்து நிற்பது மட்டுமா வாழ்க்கை? என்னைப் பொறுத்தவரை வெற்றியை விடத் தோல்வியே தலை சிறந்தது முதன்மையானது என்று சொல்வேன் நான்.

மிகப்பெரிய பாடத்தைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடம் அது!.

வெற்றியென்பது ஒரு பரிசு கோப்பையைப் போல ஓரிடத்திலே தங்கி விடக் கூடியது. ஆனால், தோல்வி என்பது அப்படியல்ல. நமக்குப் பல பாடத்தைக் கற்று தருவது என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை?.

எடுத்துக்காட்டு, ஓர் ஓட்டப் பந்தையத்தில் பத்து வீரர்கள் பந்தயத்தில் கலந்துக் கொள்கிறார்கள் என்றால்?, வெற்றி பெற்றவன் ஒருவர் மட்டுமே. அவனுக்கு மட்டும் அந்தப் பரிசு வெற்றிச் சின்னமாகக் கிடைக்கும். அவன் அந்த ஒரே இடத்தில் வெற்றியோடு நின்றுவிடுகிறான்.

இப்போது நீங்கள் கேட்கலாம்?, வெற்றி மட்டும் தானே ஒருவரின் குறிக்கோள் என்று.

ஆனால், தோல்வி என்பது அனுதினமும் புதிய தேடலை தேடித்தரும் சுதந்திர பறவை போன்றது. வெற்றி அப்படி அல்ல, கூண்டில் சிக்கி தவிக்கும் பறவை. அடுத்தமுறை சிறகடித்துப் பறக்க முடியாத சிறை பறவை.

மாணவ செல்வங்களே! நாம் அனைவரும் மண்ணில் பிறப்பது ஒரு முறைதான். நமக்கு அது கடவுள் தந்த அற்புதமான வரம், மீண்டும் மனிதனாகப் பிறக்கும் வரம் கிடைக்குமா கிடைக்காதா என்பது நமக்குத் தெரியாது. பிறகு ஏன் தோல்வி கண்டு நாம் அஞ்சி அழவேண்டும். நாம் பிறந்த மண்ணில் உயிரோடு இருக்கும் வரை சிறகடித்துப் பறந்து போகலாமே!

பத்தாம் வகுப்போ பன்னிரண்டாம் வகுப்போ தேர்வு முடிவு நாள் அன்று நானும் தங்களைப் போல் செய்தித்தாளை ஆசையோடும் ஆவலோடும் படிப்பதுண்டு.

நம் மாணவர்கள் அனைவரும் திறன்படத் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள் என்று. ஆனால், தேர்வில் வெற்றி அடைந்தர்வகளை விட அன்று தோல்வியால் துவண்டு விபரீத முடிவுகளை எடுப்பவர்களே அந்தச் செய்தித் தாளில் என் கண்ணில் படுகிறார்கள்.

நீங்கள் கற்றுக் கொண்டது என்ன? தோல்வியைக் கண்டு தற்கொலை செய்து கொள்ளவதுதான் உங்களின் அறிவா?

நான் உங்களைப் பார்த்து ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த மண்ணில் பிறந்தவர்கள் எத்தனை பேர் வெற்றியோடு திகழ்ந்து இறந்திருக்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?. ஒருவரையும் சொல்ல முடியாது.

இரண்டாம் உலகப் போரை வழிநடத்திய சர்வாதிகாரி – அடால்ப் ஹிட்லர். அவர் நினைத்திருப்பாரா நான் பல லட்சம் மனிதர்களைத் தனது சர்வாதிகாரத்தால் ஆளப்பிறந்தவன் என்று.

பெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கொண்ட ரோம் நகர், தீப்பற்றி எரியும்போது ரோம் நகர் மன்னர் நீரோ, பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று படித்துள்ளோம். பெரும் சாம்ராஜ்யம், மக்கள், பொன் பொருள் எல்லாம் அனைத்தும் தீயிலே கருகி அழிந்தும் அவன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை ஏன்?

என்னடா இவன். இந்தியாவில் பிறந்தவர்களை விட்டு விட்டு ஏதோ அயல்நாட்டு வரலாற்றைக் கூறிக்கொண்டு இருக்கிறானே என்று உங்களுக்குள் கேள்வி எழும், அதையும் சொல்கிறேன் கேளுங்கள்!.

நமது நாட்டின் சிறந்த மனிதர், மெட்ராஸ் என்று இருந்த மாநகரத்தை சென்னை என்று மாற்றிய பெரும் வள்ளல் அறிஞர் அண்ணா.

தான் படிக்கும் காலத்தில் ஆங்கிலப் பாடத்தில் பல முறை தோல்வியைக் கண்டாலும். பலநாள் முயற்சி ஒருநாள் வெற்றியைத் தரும் என்பதைப் போல். அதே பாடத்தில் பட்டம் பெற்று ஆசிரியராகவும், தமிழ்நாட்டின் முதல்வரகாவும் சாதித்துக் காட்டிய தலைவன் அல்லவா, அவர்?

இல்லை, படிக்காத மாமேதை காமராஜர். மாணவர்களுக்குப் படிப்பும் மதிய உணவும் கொடுக்க எவ்வளவு அலைந்து திரிந்தார் என்பது மக்களுக்குத் தெரியும். அவரே! மாணவர்களை உயர்த்திக் கர்மவீரர் என்று போற்றப்படுபவர் அல்லவா?

மூன்றாவது வரை படித்த எம். ஜி ராமச்சந்திரன், முத்தமிழ் கண்ட கலைஞர் கருணாநிதி, இவர்களெல்லாம் பெரிதாக என்ன படித்தார்கள். சினிமாவிலும்,

வரலாற்றிலும் சாதிக்கவில்லையா? பிறகு எதற்காக நீங்கள் தோல்வியைக் கண்டு அஞ்ச வேண்டும்.

மாணவ மணிகளே! வெற்றியும், தோல்வியும் நாம் தான் முடிவு செய்வது மற்றவர்கள் அல்ல?. நமக்கான ஒரு பாதை உண்டு அந்தப் பாதையில் ஒரு குடும்பம் உண்டு. தயவுசெய்து தேர்வுக்குப் பிறகு தோல்வியைக் கண்டால் அஞ்சி விடாதீர்கள். அது மட்டும் வாழ்க்கை பாடம் அல்ல. நம்முடைய பலமே நாம்தான் என்ற நம்பிக்கை நமக்குள் பிறக்க வேண்டும். அந்தத் தெளிவு நம்மிடம் இருந்தால் நமது வாழ்க்கை எப்போதும் வெற்றிதான், தோல்வி அல்ல!.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிவிட்டுச் செல்கிறேன். நாம் பிறப்பது வாழ்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும், இறப்பதற்காக அல்ல. என்று நன்றி கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கங்கள் பல!”

தனஞ்செழியன் மேடையில் பேசி அமரும்போது கூடியிருந்த ஆசிரியர் மாணவர்கள் என எல்லோரும் கைகளைத் தட்டி பெரிதாக ஆரவாரம் செய்து தன்னுடைய அன்பை அவருக்குத் தெரிவித்தனர்.

அந்தக் கூட்டத்தில், கபிலனின் கனவு நாயகி ஆசிரியர் “மகா” என்கின்ற மகாலட்சுமியும். அவளின் மாணவர்களின் ஒரு மாணவியான நமது வாகினி அந்தக் கூட்டத்தில் தான் இருந்தனர்.

வாகினிக்கு மேடையில் அவர் என்ன பேசுகிறார், எதற்காக இவர்கள் அனைவரும் இப்படிக் கைகளைத் தட்டுகிறார்கள் என்று பெரிதாக எதுவும் தெரியாது. ஆனாலும், அவளும் கூட்டத்தோடு கூட்டமாகக் கையைத் தட்டிக் கொண்டிருந்தாள்.

ஆனால், ஒன்று மட்டும் வாகினிக்கு நன்றாகத் தெரியும். மீனா அக்காவின் கணவர் தனஞ்செழியன் தான் இப்போது மேடையில் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று.

தனஞ்செழியன், பேசி முடித்ததும் அங்கிருந்த மாணவர்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. எதிர்க்கொள்ளும் தேர்வை திறன் பட எழுதவேண்டும். அப்படி, தோல்வி வந்தாலும் அதைக் கண்டு அஞ்சக்கூடாது என்ற நம்பிக்கை அவர்களுக்குள் பிறந்தது.

அடுத்து அடுத்து அந்த மேடையை அலங்கரித்த ஆசிரியர்களும் மாணவர்களும் நம்பிக்கை கூட்டும் விதமாகப் பேசி அரங்கத்தை நிறைவுச் செய்தனர்.

–தொடரும்…

< ஒன்பதாவது பகுதி | 11வது பகுதி>

கமலகண்ணன்

8 Comments

  • மிக அற்புதமான கருத்துக்கள்

  • Sirppana Story continue Pannunga Bro

  • Good story keep it up Brother

  • Good story 👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...