30th July 2021

வாகினி – 11 | மோ. ரவிந்தர்

3 weeks ago
1467

பள்ளி ஆண்டு விழாவில் பார்த்த வாகினியின் ஆசிரியையான மகாலட்சுமி தன்னுடைய வரவை எதிர்பார்த்து, கபிலன் இந்நேரம் வெளியே காத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டே பள்ளிக்கூடத்தை விட்டு அவசர அவசரமாக வெளியே வந்து கொண்டிருந்தாள்.

அவள், எதிர்பார்த்ததைப் போல் கபிலனும் பள்ளிக்கூட முன்வாசலில் சைக்கிளில் காத்திருந்தான்.

அதே நேரத்தில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் வீட்டுக்கு செல்வதற்காக ஒருவரை ஒருவர் முந்தியடித்துக்கொண்டு வேகமாக வெளியே ஓடி வந்தனர்.

அதில் வாகினியும் ஒருத்தி.

அந்தக் குழந்தைகளை எல்லாம் முந்தியடித்துக்கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த மகாலட்சுமியின் பக்கத்தில் ஓடிவந்து நின்றாள், வாகினி.

‘என்னடா இது? எதற்காக மகா பக்கத்தில் வந்து வாகினி நிற்கிறாள் என்ற கேள்வி உங்கள் எல்லோருக்கும் எழும்.’

மகாலட்சுமிக்கு, வாகினி யார் என்றால்? மகாலட்சுமியின் சித்தப்பா ‘சதாசிவ’த்தின் பெண்தான் வாகினி. சதாசிவம் வீட்டின் வீதியில் அண்ணன் இளங்கோவனின் வீடு இருக்கிறது.

அதனால், சதாசிவம் வாகினியை காலையில் பள்ளிக்கு அழைத்துச் செல்வார். மாலை நேரத்தில் அண்ணன் மகள் மகாலட்சுமி ஆசிரியைப் பணி முடிந்தவுடன் வாகினியை உடன் அழைத்து வருவது வழக்கம்.

மகாவிற்கு, கபிலனின் வருகையால் இந்த நேரத்தில் சற்றுச் சங்கடத்தைத் தந்தது. அதனால், இன்று வாகினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் ஒரு சிக்கல் மகாலட்சுமிக்கு ஏற்பட்டது.

என்ன செய்வது என்று புரியாமல் திக்குமுக்காடிக் கொண்டே, ‘வாகினியை கூட்டிட்டு போக யாராவது இருக்காங்களா?’ என்று சுற்று முற்றும் திரும்பி பார்த்தாள்.

அவளுக்குப் பின்புறத்தில் அதே தெருவில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருத்தி மகாவிற்குப் பின்னால் வந்துகொண்டிருந்தாள். அவளிடமே உதவி கேட்கலாம் என்று எண்ணிக்கொண்டு அவளைத் தனது பக்கத்தில் அழைத்தாள், மகாலட்சுமி.

“ஏய்… காயத்ரி இங்க கொஞ்சம் வாயேன்.”

டீச்சர் அழைத்ததால் காயத்ரி பட்டாம் பூச்சியைப் போல் ஒரு நொடியில் அங்கு வந்து நின்றாள்.

“சொல்லுங்க டீச்சர்..?”

“காயத்ரி, வாகினியை இன்னைக்கு மட்டும் வீட்டில் விட்டுறியா. எனக்குக் கொஞ்சம் வெளியே வேலை இருக்கு, ப்ளீஸ்?” என்றாள், மகாலட்சுமி.

“ஓ…” அதுக்கு என்ன டீச்சர். நா அந்த வழியா தானே போறேன். நானே அவள வீட்ல விட்டுறேனே” என்று மகாலட்சுமியிடம் கூறிவிட்டு வாகினியை வீட்டிற்கு அழைத்துச் சென்றாள், காயத்ரி.

வாகினியை காயத்ரியுடன் அனுப்பிவிட்டு அவசர அவசரமாகக் கபிலன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள், மகாலட்சுமி.

“என்னங்க சார், நேத்து மாதிரியே இன்னைக்கும் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கீங்கன்னு தெரியுது!” என்று இன்முகத்துடன் கூறிவிட்டு…

“இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்றாள்.

‘ஆமாம், விஷயம் இருக்கு’ என்பதைப் போல் மெதுவாகத் தலைகுனிந்தான், கபிலன்.

“வேற ஒண்ணு மில்ல மகா, உன்ன பாக்காமா இருக்க முடியல. ஒரே பீலிங்கா இருந்தது. அதான், உடனே கிளம்பி வந்துட்டேன். ஏன் உன்ன பார்க்க நான் வரக்கூடாதா?” என்று காதல் கீதம் பாடினான், கபிலன்.

‘முட்டாள்… இதற்குப் பெயர் தான்டா காதல்’ என்று மனதுக்குள் சொல்லி சிரித்துக்கொண்டே…

“என்னால உங்களுக்குப் பைத்தியம் பிடிக்குதுன்னு சொல்ல வரீங்க, அதானே?” என்று சிரித்தாள்.

அவனும், சிரித்துக்கொண்டு வெட்கத்தால் மீண்டும் தலைக் குனிந்தான்.

‘ஆமா…, அதற்கென்ன என் அழகியே!’ என்றான்.

இருவரும் காதல் பறவையாய் ஒரு நிமிடம் மௌனமாக அந்தச் சாலை வீதியில் நடக்கத் தொடங்கினர்.

உண்மைதான்! இந்தப் பூவுலகில் காதல் மட்டும் இல்லையென்றால். இந்த உலகத்தின் சரித்திரத்தில் பல மாற்றங்கள் நடந்திருக்காது.

லைலா-மஜீனு. அம்பிகாபதி-அமராவதி. ஷாஜகான்-மும்தாஜ். ரோமியோ-ஜூலியட் எனப் பல நாகரீக காதல் இந்தப் புவியில் தோன்றியிருக்காது. காதல் இல்லையென்றால் மனிதன் இந்தப் புது நாகரீகத்தில் நிச்சயம் நுழைந்திருக்க மாட்டான். கற்கால மனிதனில் தொடங்கிய காதல் இன்று எந்திர மனிதன் காதல் வரை தனது ராஜ்யத்தை நிலைநாட்டிக் கொண்டே இருக்கிறது, இந்தப் பொல்லாத காதல்.

சரி, கபிலனும் மகாலட்சுமி இருவரும் சாலையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வீடு போய்ச் சேர்வதற்குள் நாம் அவர்களைப் பின் தொடர்வோம் வாருங்கள்!.

“மகா, உன்கிட்ட நான் ஒண்ணு சொல்லணும், சொல்லட்டுமா?”

“சொல்லு, எதுக்கு இந்தக் கேள்வி?”

“அது வந்து…” முதலில் தயங்கினான், கபிலன்.

“என்ன வந்து போய். இந்தத் தகத் திமி தோம் தாளம் எல்லாம் என்கிட்ட போடாதீங்க. வந்த விஷயம் என்னவோ அத சீக்கிரம் சொல்லுங்க எனக்கு நேரம் ஆகுது” என்றாள், மகாலட்சுமி.

“மகா, உன்னப்போலவே என் அம்மாவும் ஒரு டீச்சர்… அது உனக்கு நல்லாவே தெரியும் இல்லையா?”

“ஆமா!, அது இங்க இருக்க எல்லாருக்குமே தெரிந்த விஷயம் தானே. அதுக்கு என்ன இப்ப?”

“நானும், டீச்சர் ட்ரெயினிங்க முடிச்சிட்டு ரொம்ப நாளா வேலைக்காகக் காத்துட்டு இருக்கேன்?”

“இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க சுத்தி வளைக்காம நேரா விஷயத்துக்கு வாங்க” என்று சற்றுக் கோபம் அடைந்தாள், மகாலட்சுமி.

“மகா. என்னோட மாமா பொண்ணு தாமரையை எனக்குக் கட்டி வைக்கிறதுக்கு வீட்ல எனக்கும் எங்க அம்மாவுக்கும் ஒரு வாக்குவாதமே நடந்துட்டு இருக்கு. வர வர அம்மா தொல்லை என்னால தாங்க முடியல. இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாமுன்னு எவ்வளவு சொல்லியும் அவங்க கேட்கிறதா இல்ல.”

இந்த விஷயத்தைக் கேட்கும்போது மகாவின் மனம் அவளைஒருநிமிடம் நிலநடுக்கத்தில் தள்ளியது. கண்களில் முந்தி வந்த கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்டே தனது கால்களுக்குத் தடைபோட்டு அப்படியே நின்றாள்.

“இந்த நேரத்துல எனக்கு மட்டும் வேலை இருந்திருந்தால், உன்ன இங்கிருந்து எப்பவோ தூக்கிட்டு போயிருப்பேன்?” என்றான், கபிலன்.

“தன் மகன் எந்த ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது எந்தத் தாய்க்கு தான் பிடிக்கும். அது சரி, உங்க மாமா பொண்ண நீங்க கட்டிக்கப் போரிங்களா? இல்லையா…?” என்று கூறி பிறகு மீண்டும் தொடர்ந்தாள்.

“சரி, நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே, அத சொல்லுங்க” என்று பேச்சை நிறுத்தினாள்.

இடையிடையே நீ! வா! போ! என்று வார்த்தையால் கூறிக் கொண்டிருந்தவள். திடீரென நீங்கள் என்று மரியாதையை முன்வைத்தாள்.

“மகா, கொஞ்ச நாள் போகட்டும் எங்க அம்மாகிட்ட நானே நம்ம விஷயத்தைப் பத்தி பேசுறேன்” என்று பேச்சை நிறுத்தினான், கபிலன்.

‘காதல் என்னும் பெரும் கோபுரம் மீது கருங்கல் விழுந்து, கோபுரம் நொறுங்கி உடைந்ததைப்போல் இருக்கிறது. உன்னுடைய சொல்’ என்று எண்ணிக்கொண்டாள்.

சற்று நேரத்திற்கு முன் சிரித்த உதடுகள். இனி உன் பார்வையில் சிரிக்க முடியுமா என்ற ஐயம் தோன்றியது, அவளுக்கு.

“இங்க பாருங்க கபிலன், சொன்னா கோவப்பட மாட்டீங்களே? நீங்க வேலையில்லாம ஊர சுத்திட்டு இருந்தா, சுத்தி உள்ளவங்க உங்கள இப்படித்தான் பேசுவாங்க. இதையெல்லாம் விட்டுட்டு ஒரு நல்ல வேலையா பார்த்து லைஃப்ல செட்டிலாகப் பாருங்க. அதுதான் உங்களுக்கு நல்லது” என்றாள் சற்று சோகத்துடன்.

“மகா நீ சொல்றதும் ஒருவகையில் சரிதான். ஆனா, இப்போ நான் என்ன செய்றது. நேத்தி கூட உன் சித்தப்பாக் கிட்ட வேலை இருந்தா சொல்லுங்கன்னு கேட்டிருக்கேன். அவரும், ஒரு கம்பனியில வேலை வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்காரு. அதுவும் கிடைக்கலன்னா, நான் நினைச்ச மாதிரி வெளியூர் வேலைக்கு தான் போகப் போறேன்.” என்று வாக்கியத்தை முடித்தான், கபிலன்.

‘தன் இதயத்தில் இப்படிப்பட்ட ஒரு வெடிகுண்டை வீசி விட்ட பிறகு உன்னிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது.’ என்று நினைத்துக்கொண்டே…

“சரி, எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன்.” என்று கபிலனிடம் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு அவசரமாகப் புறப்பட்டாள், மகாலட்சுமி.

“என்ன மகா, நான் பேசிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு கிளம்பிட்டே இருக்க” என்று அவளிடத்தில் கேள்வி எழுப்பினான், கபிலன்.

“ஒரு அவசரமான வேலை இருக்கு மறந்துட்டேன். இப்பதான் என் புத்திக்கு நினைவுக்கு வந்தது.” என்று கூறிக் கொண்டு வேகமாக நடக்கத் தொடங்கினாள், மகாலட்சுமி.

நான் சொன்ன வார்த்தையினால் தான் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என்று கபிலன் மனதிற்கு நன்றாகவே புரிந்தது. இருந்தும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நான் மட்டும் என்ன செய்ய முடியும்?என்று பெரும் யோசனையுடன் சாலையில் போய்க் கொண்டிருந்த மகாலட்சுமியை பார்த்துக்கொண்டிருந்தான், கபிலன்.

மகா, அவனுக்கு அறிவுரை கூறினாளே தவிர, அவளுடைய மனமும் நெருப்பில் பொசுங்கிய பஞ்சைப் போல் துடிதுடித்துப் பொங்கிக் கொண்டிருந்தது.

என்ன செய்வது ஆணின் இதயமானது எத்தனை சுமைகள் வேண்டுமானலும் தாங்கிக்கொள்ளும். ஆனால், ஒரு பெண்மையின் இதயமானது அப்படி அல்ல. பூ தாங்கும் தேன் துளியை போல் கண்ணீர் மட்டுமே சிந்தத் தெரியும், அவர்களுக்கு. போர்க்களத்தில் நின்று விளையாடத் தெரியாத குணம் படைத்தவர்கள் அவர்கள்.

அவன், தன்னைக் கை பிடிப்பானா? இல்லையா? என்ற பெரும் சோகத்தில் அந்தப் பெரும் சாலையோரத்தில் கண்ணீருடன் நடந்துக்கொண்டிருந்தாள், மகாலட்சுமி.

–தொடரும்…

< பத்தாவது பகுதி | பதிணொன்றாவது பகுதி >

4 thoughts on “வாகினி – 11 | மோ. ரவிந்தர்

  1. எழுத்தாளா் திரு.மோ.ரவீந்தா் அவா்களது படைப்புகள், தனித்துவமானது, அவரது எழுத்து நடையில் வாசகரை வசியம் செய்யும் மந்திரம் உள்ளது போல.. தோன்றுகிறது. பணி சிறக்க வாழ்த்துகள் தோழரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031