பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 10 | காலச்சக்கரம் நரசிம்மா

10. மூன்றாவது சிலை..!

ல்லமுத்து சென்னைக்குப் புறப்பட ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பள்ளங்கி பவனம் காவலாளி ராஜாபாதரிடம் பலமுறை கூறிவிட்டார்.

“நான் சென்னைக்கு நீண்டகாலம் கழித்துப் போகிறேன். கொஞ்ச நாள் அங்கே தங்கிட்டுத்தான் வருவேன். நான் இல்லாத நேரத்தில் உள்ளே ஒரு ஈ காக்கையைக் கூட நுழைய அனுமதிக்காதே. நான் ஆராதிக்கிற முருகன் சிலையைக்கூட, சென்னைக்கு எடுத்துப் போறேன். அதனால, யாரையும், உள்ளே விடாதே..! குறிப்பா… சஷ்டி சாமி வந்தாக்கூட, நான் சாவியை எடுத்துட்டுப் போய் இருக்கிறதா சொல்லிடு. வேலைக்காரி பூங்காவனம்கூட வர வேண்டாம்ன்னு சொல்லிடு..! நீயே வாரத்துக்கு ஒரு முறை வீட்டைக் கூட்டித் துடைச்சுடு.” என்று கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுத்தான் காரில் ஏறியிருந்தார். வெளியூருக்குப் போகும் போது மட்டும் சுசீந்திரன் என்கிற டிரைவர் வருவான். மற்றபடி ராஜாபாதரேதான் அவருக்கு வண்டி ஓட்டுவது வழக்கம்.

பள்ளங்கியை விட்டுக் கார் புறப்பட்டதும், கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டார். தலைமுறை தலைமுறையாக அப்பா கந்த கோ, தாத்தா நாகரத்தினம் என்று இவர்கள் வசம் இருந்த நவபாஷாணச் சிலையின் கட்டு தளர்ந்து விட்டது. சஷ்டி சாமியே யாராலும் அதை மீண்டும் கட்ட முடியாது என்று கூறிவிட்டார்.

பள்ளங்கி பவனத்தில் இவரும், பேரும் புகழுடன், அரசியல், சினிமா, ஊடகத்துறை, கிரிக்கெட், கல்வித் துறை என்று சீரும் சிறப்புமாக அமோக வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் குடும்பத்திற்கு மங்கலங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தது, அந்த நவபாஷாணச் சிலைதான். இப்போது அதன் கட்டும் தளர்ந்துவிட்டது என்றால், இனி இந்த சுகங்களும், மங்கலங்களும் சௌபாக்கியங்களும் நிலைக்குமோ..?

–யோசித்துக்கொண்டே நல்லமுத்து பயணிக்க, ஏற்கனவே, தனது வாரிசுகளுக்குப் பிரச்சனைகள் தொடங்கிவிட்டன என்பதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

“மூன்றாவது நவபாஷாண சிலை எங்கே இருக்கிறது..?”

சிறுவயதில் நவபாஷாண சங்கல்பம் எடுத்துக் கொண்டபோது, போகர் பாசறையில் தனது தந்தை கந்த கோவிடம், தான் கேட்ட கேள்வி அவருக்கு நினைவுக்கு வந்தது.

“இதைத்தான் பேராசை என்பது..! கையில் ஒரு சிலை இருக்கும்போது, மூன்றாவது நவபாஷாண சிலையைப் பற்றி ஏன் கேட்கிறாய்..? கையில் இருக்கும் நிதியைப் பத்திரப்படுத்திக் கொள்.” –என்று கூறியிருந்தார் அப்பா.

“இப்போதுதான் கையில் அந்த நிதி இல்லையே..! இரண்டாவது நவபாஷாணச் சிலை இனி யாருக்கும் பயன்படப் போவதில்லை என்கிற போது மூன்றாவது சிலையைப் பற்றி நினைத்து பார்ப்பதில் என்ன தவறு..? நமக்கு சௌபாக்கியங்களை அளிக்க வேண்டும் என்றுதானே நவபாஷாணச் சிலை கிடைத்தது..? அப்படி இருக்கும்போது, மூன்றாம் சிலையும் நமது குடும்பத்தை வந்து அடைந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்..?

உலகிலேயே இப்போது செல்வாக்கு உள்ள குடும்பங்களில் இவருடையதும் ஒன்று. செல்வந்தர் குடும்பங்களிலும் நல்லமுத்துவின் குடும்பம் ஒன்று. நடிகை, ஏர்ஹோஸ்டஸ், பள்ளி முதல்வர், ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர், கிரிக்கெட் வீரர், தொழிலதிபர், பத்திரிகை எடிட்டர் என்று அவர் குடும்பத்தில் புகழ்பெற்ற அத்தனை பேரும் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தேடினால், மூன்றாவது நவபாஷாணச் சிலை கிடைக்காதா என்ன..?

“இந்தக் காரியத்தில், உனது குடும்பத்தினரை ஈடுபடுத்தாதே…! நீயே தலையிட்டு, மூன்று பாஷாணங்களைத் தேடு.” –என்று சஷ்டி சாமி கூறியிருந்தார். தளர்ந்துவிட்ட மூன்று பாஷாணங்களை இவர் தேடப் போவதில்லை. மூன்றாவது நவபாஷாணச் சிலையைத்தான் தேடப் போகிறார் என்பது சஷ்டி சாமிக்கு தெரியாமலேயே இருக்கட்டும். தெரிந்தால், ரகளை செய்வார்.

உலகில் எங்கு இருந்தாலும், தனது குடும்பத்தினரைக் கொண்டு, அவர்களது செல்வாக்கை வைத்து, எப்படியாவது அந்த மூன்றாவது சிலையைக் கைப்பற்ற வேண்டும் என்கிற தீர்மானத்துடன் சென்னைக்குப் பயணித்துக் கொண்டிருந்தார், நல்லமுத்து.

——————————-

போலீஸ் ஜீப் தனது கொடைக்கானல் நேஷனல் அகாடமி வளாகத்தினுள் நுழைவதைப் பார்த்ததுமே, தனது உடலில் ஓடிக்கொண்டிருந்த ரத்தம் எல்லாம் வற்றிவிட்டது போல உணர்ந்தாள், சத்தியவதி.

“நான் உள்ளே போறேன். போய் லாயர் பிராங்க் ஆண்டனி கிட்ட பேசறேன். நிலைமையை எப்படி சமாளிக்கறதுன்னு அவரைக் கேட்கறேன். நீ அதுவரையில், ‘மேடம் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க’ன்னு சொல்லி அவர்களை உட்கார வை..!” –என்றபடி உள்ளே விரைந்தாள் சத்தியவதி.

இந்த விஷயத்தில் இவள் தலையிட்டு இருக்கவே வேண்டாம். “மாநில ரீதியான கால்பந்து போட்டி மூணாறில் நடக்கிறது. பள்ளிகளில் இருந்து சியர் லீடர்களுக்கு மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உங்கள் பள்ளியில் இருந்து யாரையாவது அனுப்ப முடியுமா..?” என்று போட்டிகளை நடத்தும் கெவின் மெண்டோசா கேட்டபோது, “அதற்கென்ன..! எங்கள் பள்ளியில் எல்லாம் மேட்டுக்குடி மாணவிகள் தான் படிக்கிறார்கள். எல்லோருமே அழகுதான்” என்று கூறி, எலிசபெத், ஓமனா மித்ரா மற்றும் லாவண்யா என்கிற மூன்று பெண்களை அனுப்பியிருந்தார்கள். அந்த மூன்று பெண்களைக் காணவில்லை என்று சற்று முன்பாகத்தான், பி.ஏ. தீபரேகா இவளிடம் தெரிவித்திருந்தாள். என்ன ஏது என்று விசாரிப்பதற்குள்ளாக, இதோ போலீஸ் வந்து நிற்கிறது.

நிலைமையை எப்படி சமாளிப்பது என்று லாயரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்தச் செய்தி பத்திரிக்கைகளுக்கு தெரிய வரக்கூடாது.. பள்ளியின் மதிப்பு என்னாவது..?

அவசரமாகத் தனது அலைபேசியை எடுத்து, காண்டக்ட்ஸ் லிஸ்டில் இருந்த பிராங்க் ஆண்டனியின் அலைபேசி எண்ணிற்கு அழைத்தாள்.

பிராங்க் ஆண்டனி உடனே தனது போனை எடுக்க, சத்தியவதி தனக்கு யானை பலம் வந்தது போல உணர்ந்தாள்.

“பிராங்க்..! நான் சத்தியவதி பேசறேன். ஒரு முக்கியமான விஷயம்..! நான் நேஷனல் கால்பந்து சாம்பியன்ஷிப்-காக சியர் லீடர்ஸ் கேட்டாங்கன்னு மூணு மாணவிகளை எங்க ஸ்கூல் சார்பாக அனுப்பி வச்சேன். அவங்களைக் காணலைன்னு நியூஸ் வந்திருக்கு. என்ன ஏதுன்னு விசாரிக்கறதுக்குள்ளாற போலீஸ் வந்து நிக்கிறாங்க. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. யூ டெல் மீ..! வாட் ஷுட் ஐ டூ..?” –படபடப்புடன் சத்தியவதி பேசினாள்.

“உங்களுக்கு யார் விஷயத்தைச் சொன்னாங்க..?” –பிராங்க் ஆண்டனி கேட்டார்.

“என்னோட பி.ஏ. தீபரேகாதான் ஸ்கூல் உள்ளே நுழையறப்பவே சொன்னா..!” –சத்தியவதி கூற, அவள் பேசி முடிப்பதற்குள் அடுத்த கேள்வியை எழுப்பினார் பிராங்க்.

“அவளுக்கு யார் சொன்னாங்களாம்..?”

“அந்த பொண்ணுங்ககூட துணைக்கு போன எங்க பி.டி. மிஸ் சாரம்மா வில்சன்தான் போன் செஞ்சாங்களாம்..!” –சத்தியவதி கூறினாள்.

“நான் சொல்றபடி செய்யுங்க சத்தியவதி..! போலீஸ் சொல்லித்தான் உங்களுக்கு விஷயம் தெரிஞ்ச மாதிரி அதிர்ச்சியைக் காட்டுங்க. அவங்க எதிரே அந்த தீபரேகாவை காச்மூச்சுன்னு விஷயத்தைச் சொல்லாம விட்டதற்காகக் கத்துங்க, போலீஸ் எதிரேயே அந்த சாரம்மா வில்சனுக்கு போன் போட்டு, ‘எனக்கு ஏன் விஷயத்தைச் சொல்லலை?’ன்னு கத்துங்க. ‘விஷயத்தைப் போலீஸ் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா..?’ன்னு அந்த பி.டி. மிஸ்ஸைப் பிடிச்சுத் திட்டுங்க..! அப்படிச் செஞ்சீங்க… இந்த விஷயம் பூதாகாரமாக வளர்ந்தாக்கூட, போலீஸ் சொல்லித்தான் உங்களுக்கு விஷயமே தெரியும்கிறது உங்களுக்கு பெரிய அளவில் உதவும்..! இப்போதைக்கு இப்படிச் செய்யுங்க. நான் நேராக வரேன்” –என்றபடி போனை வைத்தார், பிராங்க்.

“எஸ்..!” –என்றபடி அலைபேசியைத் துண்டித்த சத்தியவதி, பிராங்க் ஆண்டனி ஒப்புவித்த வசனங்களைப் பேசுவதற்குத் தயாரானாள்.

இன்ஸ்பெக்டர் தயானந்த் இரண்டு கான்ஸ்டபிள்கள் உடன் தீபரேகா முன்வர, இவளது அறைக்குள் நுழைந்தபோது, இன்டர்காமில் பயாலஜி மேடம் அமண்டா டிசௌஸாவை வேண்டும் என்று அழைத்தாள்.

“மிஸ்ஸ் டிசௌசா..! நீங்க கேட்ட லாப் உபகரணங்கள் டெலிவரி ஆயிடுச்சு. ஸ்கூல் முடிஞ்ச உடனே செக்லிஸ்ட் எடுத்து வந்தீங்கன்னா செக் பண்ணிடலாம்..!” –சத்தியவதி கட்டளையிட்டுவிட்டு, இன்ஸ்பெக்டர் தயானந்த்தைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“வெல்கம் இன்ஸ்பெக்டர்..! வாட் கன் ஐ டூ பார் யூ..?” — நுனிநாக்கில் சற்றே கவர்ச்சி உச்சரிப்பை ஏற்றி, தான் விசாரணைக்கு எல்லாம் அப்பாற்பட்ட செல்வாக்கு மிகுந்த மேட்டுக்குடியைச் சேர்ந்தவள் என்பதை நாசூக்காக சுட்டிக்காட்டினாள்.

தயானந்த் இதையெல்லாம் பார்த்திராதவரா என்ன..? சற்றும் அசராமல், தனது இமைகளின் வழியே அவளை வெறித்தார்.

“மேடம் பிரின்சிபல்..! லேப் உபகரணங்களை செக்லிஸ்ட் வச்சு செக் பண்றதுக்கு முன்னாடி, உங்கள் பள்ளி ஸ்டுடென்ட்ஸ் எல்லோரும் பத்திரமா இருக்காங்களான்னு செக் பண்ண வந்திருக்கேன். லாவண்யாங்கிற ஸ்டூடெண்ட்டோட அப்பா தனது மகள் போனை எடுக்க மாட்டேங்கறா. கவலையா இருக்குன்னு புகார் கொடுத்திருக்காரு..! நீங்க அவங்களை மூணாறு அனுப்பி இருக்கிறதா சொன்னாரு..! எதுக்காக அவர்களை மூணாறு அனுப்பினீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?”

எச்சரிக்கையுடன் சொற்களை தேர்ந்தெடுத்தாள் , சத்தியவதி.

“ரிடிக்குலஸ்..! ஒரு ஸ்போர்ட் ஈவண்டுக்காக சியர் லீடர்ஸ் தேவைப்படறாங்கன்னு குழுவினர் கேட்டாங்க. ஆர்வம் உள்ள பொண்ணுங்க போகலாம்னு சொன்னேன். மூணு பேரு முன்வந்தாங்க. அவங்கள்ல லாவண்யாவும் ஒருத்தி..! அவங்களை யாரும் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தலை. அவங்களாவே ஒரு த்ரில்லுக்காகப் போயிருக்காங்க. மேலும், அவங்க பத்திரமா எங்க பி.டி. மிஸ் சாரம்மா வில்சன் பொறுப்புல இருக்காங்க. அந்த லாவண்யாவின் அப்பா, சின்ன விஷயத்தை போலீஸ் வரைக்கும் எதுக்குக் கொண்டு வந்தார்ன்னு தெரியலை. பொண்ணுங்க ஜாலியா ஊரைச் சுத்தி பார்க்கவோ, இல்லை ஷாப்பிங்கோ போயிருக்கலாம்..!” –சத்தியவதி சொன்னாள்.

“சாரி..! மூணு பேருமே மூணாறுல காணும்னு மூணார் ஃபுட்பால் பெடெரேஷன் செக்ரட்டரியும் புகார் கொடுத்திருக்கிறார். அவங்க தங்கியிருந்த ஹோட்டல் வெஸ்ட்லான்ட் ரூமில் தேடிப் பார்த்தா, அவங்க லக்கேஜ் எல்லாம் அப்படியே இருக்கு. ஆனா அவங்க மூணு பேரையும் காணும்.”

“வாட் நான்சென்ஸ்..! சாரம்மா ஏன் என்கிட்டே சொல்லல..? பொறுப்பா நடந்துக்க வேண்டாமா..? தீபரேகா..! கனெக்ட் மீ டு சாரம்மா..!” –சத்தியவதி கூரையை முட்டும் அளவுக்கு எகிறிக் குதித்தாள்.

தீபரேகா லாண்ட் லைன் ரிசீவரை எடுக்க, சட்டென்று அதனைப் பிடுங்கி மீண்டும் அதன் கிரெடேலில் வைத்தார், தயானந்த்.

“சாரி மேடம்..! சாரம்மா கிட்டே அப்புறம் பேசுங்க. உங்க நடிப்புல கொஞ்சம் கூட சாரம் இல்லை.! முதல்ல உங்க செல்போனை இப்படிக் கொடுங்க..!” –தயானந்த் கேட்க, தயக்கத்துடன் அலைபேசியை நீட்டினாள், சத்தியவதி.

‘சின்ன விஷயம் பூதாகரமாக மாறுகிறதோ..!’ மாமனார் விடுத்த எச்சரிக்கைதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது.

அவளது அலைபேசியை வாங்கி ஆய்வு செய்த தயானந்தின் முகம் பரபரப்படைய, அவள் முன்பாக ஒரு பதிவைச் சுட்டிக்காட்டினார்.

“லாவண்யா தன்னோட ஹோட்டல் ரூம்ல செல்போனை மறந்து வச்சுட்டுப் போயிட்டா. மாலை மூணு மணிக்கு உங்ககிட்டே போன் பேசிட்டு, குளிக்கறப்ப பாத்ரூம் வாஷ் பேசின்ல வச்சு, தவறிப் போய் டஸ்ட் பின்னுல போன் விழுந்திருக்கு. அதை எடுத்துக்க மறந்துட்டா. அப்புறம் கிளம்பற அவசரத்துல, போனைத் தேடி, கிடைக்காம போக, பேசாம கிளம்பி போயிருக்கா. பாத்ரூம் கிளீன் செய்யறப்ப, பணிப்பெண் இதை ரிசப்ஷன்ல கொடுக்க, அவங்க என்கிட்ட கொடுத்தாங்க. கடைசியாக அவ மூணு மணிக்கு உங்ககிட்டே போன்ல பேசியிருக்கா. இப்ப உங்க போன்லயும் சரியா மூணு மணிக்கு கால் பதிவு ஆகியிருக்கு. ஆதவ்ன்னு ஒரு ஆளு, மூணு பெண்களையும் அழைச்சிட்டு போயிருக்கான். லாவண்யா உங்ககிட்டே போன் செஞ்சு கேட்க, நீங்களும் ‘அவனோட போங்க’ன்னு சொல்லி இருக்கீங்க. யார் இந்த ஆதவ்..?” –தயானந்த் கேட்க, அதிர்ச்சியில் உறைந்து போனாள், சத்தியவதி. இவளது பள்ளிக்கு டொனேஷன்களாக, நிலங்களாக பரிசளிக்கும் பள்ளி ஆலோசகர், கீர்த்தி தாஸ் மகன்தான் ஆதவ். தான் வசமாக சிக்கிக் கொண்டு விட்டதை உணர்ந்து விட்டாள், சத்தியவதி.

பூனையை விரட்டிச் செல்லும்போது ஒரு மூலையில் அது சிக்கிக்கொண்டு போவதற்கு வழி இல்லாமல் இருந்தால், விரட்டுபவனைப் பார்த்துச் சீறுமே..! அது போல, தயானந்த்தை இறுக்கமான முகத்துடன் நோக்கினாள், சத்தியவதி.

“யு கேன் டாக் டு மை லாயர்..! ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்ல முடியும். உப்புப் பெறாத விஷயத்தைப் பெரிசாக்கி, எனது செல்வாக்கை பத்திரிக்கைகள் மூலமா நீங்க குலைச்சீங்கனா, உங்க சர்வீஸ் முழுக்க நீங்க வாங்குற சம்பளத்தைக் கொடுத்தாலும், நான் கோர்ட்டுல க்ளைம் பண்ணுற டாமேஜஸ் பணத்தை உங்களால கொடுக்க முடியாது.” –சத்தியவதி கூற, சரியாக இன்ஸ்பெக்டரின் அலைபேசி அழைத்தது.

முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் அலைபேசியில் பேசிவிட்டு, இணைப்பைத் துண்டித்தவர், அமைதியாக சத்தியவதியை பார்த்தார்.

“சில கேள்விகளுக்கு எல்லாம் நாங்க பதில் சொல்லவே வேண்டாம் மேடம்..! விதியே பதில் சொல்லிடும். நீங்க கேக்குற டேமேஜஸ் அமௌண்ட்டை எனது சர்வீஸ்ல நான் வாங்கும் சம்பளத்தை வச்சுக் கொடுக்க முடியாதுதான்..! ஆனா இப்ப வந்திருக்கிற செய்தியால, உங்க பள்ளியின் சர்வீஸ் முழுக்க அது வாங்கின நல்ல பெயருக்கு ஏற்பட்டுள்ள டேமேஜை இனிமே நீக்கவே முடியாது.” என்றார்.

சத்யவதியின் நா உலர்ந்து போனது. அவரைத் திகைப்புடன் பார்த்தாள்.

“எலிசபெத், லாவண்யா, ஓமனா மித்ரா மூணு பேரோட பாடியும் ஒரு புதைகுழில இருந்து மீட்கப்பட்டிருக்கு.”’ –என்றதும், தன்னையும் அறியாமல் தீபரேகா ‘வீல்’ என்று அலற… சத்தியவதியின் முகம் பேயறைந்தது போல மாறியது.

——————————-

கோலாலம்பூருக்குச் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் பீஜிங் இன்டர்நேஷனல் கேப்பிடல் விமான நிலையத்தில் தயாராக இருக்க, விமானத்தின் முன்வாயிலில் நின்று மயூரி நல்லமுத்து அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று கொண்டிருந்தாள்.

ஃபேஸ் மானேஜரிடம், குகன்மணியைப் பற்றி ஐயங்களை எழுப்பியதன் விளைவு அவன் விசாரிக்கப்பட்டு வந்தான் என்னும் தகவல் வந்ததும், சற்றே மனதில் நிம்மதி பரவியது. நிச்சயம் அவனுக்குப் பதிலாக வேறு ஒரு விமானியை அனுப்புவார்கள். எரிக் விடுமுறையில் மனைவியுடன் ஸ்விட்ஸர்லாந்து போக முடிவு செய்திருப்பதால், அவனை எதிர்பார்க்க முடியாது. அநேகமாக டெரிக் வாங் வரலாம்.

யோசித்தபடி பயணியரை வரவேற்க, அதோ, ஏர்போர்ட் பஸ் ஒன்றிலிருந்து விமானி ஒருவன் வந்து இறங்கினான். கம்பீர நடை போட்டு அவன் வந்த விதத்திலேயே தெரிந்து விட்டது, குகன்மணி தான் வந்து கொண்டிருக்கிறான் என்று.

துள்ளிக்குதித்துப் படிகளில் ஏறி வந்தவன், விமானத்தின் நுழைவாயிலில் நின்றுகொண்டிருந்த, மயூரியை அலட்சியக் குறுநகையுடன் பார்த்தான்.

“எனது விசாரணை முடிந்துவிட்டது. ஆனால் இன்னொரு விசாரணை நீண்டு கொண்டே போகிறது..! மயூரி..! நீ பாவம்..!” –என்றபடி காக்பிட் உள்ளே நுழைந்து மறைந்தான்.

மயூரி, திகைத்து போய் நின்றிருந்தாள்.

–தொடரும்…

< ஒன்பதாவது பகுதி

ganesh

6 Comments

  • Aha. மயூரி எதிர்பாக்காதெல்லாம் நடக்கிறதே.குகன் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியா. மயூரிக்கு என்ன காத்திருக்கு விமான பயணத்தில். ஸத்தியவதிக்கு கெட்டநேரம் தொடங்கியாச்சு

  • மிக அருமையாக உள்ளது ஐயா…மூன்றாவது நவபாஷாண முருகன் சிலை கிடைக்குமா?

  • Interesting one sir

  • Trouble has started and he has his own ideas

  • அடகடவுளே! மயூரி க்கும் சோதனையா?

  • விறுவிறுப்பாக போகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...