பேய் ரெஸ்டாரெண்ட் – 8 | முகில் தினகரன்
“ஏய் சங்கீதா!…” என்று அழைத்தவாறே அந்த அறைக்குள் வந்த அவள் தாய் கோகிலா, அவள் எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, “என்னடி எங்கியோ கிளம்பிட்டே போலிருக்கு?” கேட்டாள்.
“ஆமாம்மா…கோயமுத்தூர் வரைக்கும் போகணும்”
“எதுக்குடி?”
“என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்திக்கு இன்னிக்கு பர்த் டே!…அவ டிரீட் தர்றா…அதுக்குத்தான் கிளம்பிட்டிருக்கேன்” சாதாரணமாகச் சொன்னாள் சங்கீதா.
“என்னது….டிரீட்டா?…அது செரி…பசங்க தான் ஆன்னா…ஊன்னா டிரீட் குடுத்துக்குவாங்க!…எங்காச்சும் போய் தண்ணியடிப்பானுக…தம்மடிப்பானுக!…இப்ப பொண்ணுகளும் கிளம்பிட்டீங்களா?”
“அம்மா…இது அந்த மாதிரி டிரீட் அல்ல?…எல்லோரும் சேர்ந்து ஏதாவதொரு நல்ல ஹோட்டலுக்குப் போய் நல்ல திருப்தியா சாப்பிடுவோம்…அப்புறம் ஏதாச்சுமொரு சினிமாவுக்குப் போவோம்!….ஈவினிங் வீடு திரும்பிடுவோம்!….அவ்வளவுதான்” என்றாள் சங்கீதா.
“அதுக்காகச் சொல்லலைடி!…இப்பத்தான் கோயமுத்தூரிலிருந்து ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து…உன்னைப் பார்த்திட்டு “சம்மதம்!”னு சொல்லிட்டுப் போயிருக்காங்க!…இந்த நேரத்துல நீ பாட்டுக்கு கோயமுத்தூர்ல போய்…சினிமா…..ஹோட்டல்னு சுத்தப் போக…அவங்க சம்மந்தப்பட்டவங்க யாராச்சும் கண்ணுல பட்டுட்டா…நல்லாவா இருக்கும்?” யதார்த்த உண்மையை தெளிவாய்ச் சொன்னாள் கோகிலா.
“ம்…நீ சொல்றதும் சரிதான்!…ஆனா நான் என் ஃப்ரெண்ட்ஸ்க கிட்ட கண்டிப்பா வர்றதா வாக்குக் குடுத்திட்டேனே?…போகாட்டி…என் கல்யாணத்துக்குக் கூட எவளும் வரமாட்டாளுக” என்று ஒரு அஸ்திரத்தை எடுத்து வீசினாள் சங்கீதா.
சில நிமிடங்கள் யோசித்த கோகிலா, “சரி…சரி…போயிட்டு இருட்டறதுக்கு முன்னாடி வீடு வந்து சேர்ந்திடு…என்ன?” அன்புக் கட்டளையிட்டாள்.
“ம்மா…மேட்னிஷோ….எப்படியும் அஞ்சே கால்… அஞ்சரைக்கு… விட்டுடுவான்…. கோயமுத்தூரிலிருந்து இந்தக் கிணத்துக்கடவுக்கு வர மீறிப் போனா ஒரு மணி நேரமாகும்!…அதாவது ஆறரை…ஆறே முக்காலுக்கு வீட்டுக்கு வந்திடுவேன்…போதுமா?”
“சரி…பார்த்துப் போயிட்டு வா!…கைல காசு வெச்சிருக்கியா?” தாய் கேட்க,
“ம்…இருக்கு” சொல்லியவாறே வாசலுக்குச் சென்று செருப்பணிந்தாள் சங்கீதா.
தெருவில் இறங்கும் போது குறுக்கே வந்த பூனையொன்று நின்று இவளை முறைத்து விட்டுச் செல்ல, பின்னாடியே வந்த கோகிலா அதைப் பார்த்து விட்டு, “ஏய்…பூனை குறுக்கால போகும்…கொஞ்சம் இரு…ஒரு வாய் தண்ணீர் தர்றேன் குடிச்சிட்டுப் போ” என்று சொல்லி விட்டுத் திரும்ப,
பஸ் ஹார்ன் சத்தம் கேட்டது.
“அய்யோ….பஸ் வந்திடுச்சு…நான் போறேன்” சொல்லி விட்டு மகள் ஓட,
“ஹும்…என்ன பொண்ணோ?… “போயிட்டு வர்றேன்”ன்னு சொல்லாம… “போறேன்”ன்னுட்டுப் போகுது” தலையிலடித்துக் கொண்டே வீட்டிற்குள் திரும்பினாள் கோகிலா.
அன்னபூர்ணா பார்க்-இன் ஹோட்டலில் பாம்பே மீல்ஸ் சாப்பிட்டு விட்டு, பக்கத்து கே.ஜி.தியேட்டரில் “சூது கவ்வும்” படம் பார்த்து விட்டு, வெளியே வந்தது அந்த டீன் ஏஜ் யுவதிகள் கூட்டம். டிரீட் கொடுக்கும் பர்த்டே பேபி ஸ்வேதாவைச் சேர்த்து மொத்தம் பத்து பேர்.
“என்னடி?…படம் ஓ.கே.வா?” ஸ்வேதா கேட்க,
“சூப்பர் படம்டி…சும்மா மசாலா படங்களையே பார்த்துப் பார்த்து சலிச்சுப் போச்சு…இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு” என்றாள் சங்கீதா.
“சரி….அடுத்த புரோக்ராம் என்ன நேரா வீடு தானே?…இல்லை எங்காச்சும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போறோமா?” ஒருத்தி கேட்க,
“அய்யோ வேண்டாம்டி…மணி அஞ்சரை ஆச்சு…நான் இப்பக் கிளம்பினாலே கிணத்துக்கடவு போய்ச் சேர ஆறரை…ஏழாயிடும்” என்றாள் சங்கீதா.
அவர்களனைவரும் பஸ் நிறுத்தத்தில் வந்து நின்றனர். வழக்கமாய் அந்த நேரத்தில் அதிக கூட்டம் இருக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் இப்போது காலியாயிருந்தது.
நீண்ட நேரமாகியும் எந்த பஸ்ஸும் வராமல் போக, “ஏய் சுஜி…ஆட்டோல போயிடலாமா?” ஒருத்தி கேட்க, நாலைந்து பேர் தலையாட்ட,
கடந்து சென்ற ஆட்டோவைக் கை தட்டி அழைத்த ஸ்வேதா, தானும் கூட நான்கு சிநேகிதிகளையும் ஏற்றிக் கொண்டு, “ஓ.கே….பை…பை…!.ஸீ யூ” சொல்லி விட்டுப் பறந்தாள்.
தொடர்ந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும் பஸ் எதுவும் வராததால் குழம்பிப் போயினர் மீதியிருந்த ஐந்து பேரும்.
அப்போதுதான் அவர்களை நோக்கி வந்தனர் அந்த இளைஞர்கள் இருவரும். பார்வைக்கு ஏதோ ஐ.டி.கம்பெனியில் பணி புரியும் இளைஞர்கள் போன்ற தோற்றத்தில் அவர்கள் இருக்க, ஐந்து பேரில் ஒருத்தி அவர்களிடம் சென்று கேட்டாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ!….ரொம்ப நேரமாகியும் இந்த ஏரியாவுக்கு எந்த பஸ்ஸுமே வரலை…ஏன்?…என்னாச்சு?”
“ஓ…ஸாரி!…உங்களுக்கு விஷயமே தெரியலை போலிருக்கு!…முன்னாள் முதலமைச்சரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க!…அதுக்காக அவங்க கட்சிக்காரங்க ரோடு மறியல் பண்ணிட்டு….பஸ்களை அடிச்சு நொறுக்கிட்டு இருக்காங்க!…அதனால பஸ்ஸெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே டெப்போவுக்குப் போயிடுச்சுக…” என்றான் ஒரு இளைஞன்.
“குப்”பென்று வியர்த்துப் போனது சங்கீதாவுக்கு. “கடவுளே” என்று சொல்லிக் கொண்டு நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.
“ஏய்…நாமும்….ஆட்டோ பிடிச்சுப் போயிடலாம்டி” என்று ஒருத்தி சொல்ல,
“க்கும்…உங்க வீடு காந்திபுரம் நீ போய்க்குவே?….நான் கிணத்துக்கடவு போகணும்!…அவ்வளவு தூரம் எந்த ஆட்டோக்காரனும் வர மாட்டான்!…அப்படியே வந்தாலும் “ஆயிரம் குடு…ரெண்டாயிரம் குடு”ன்னு கேட்பானுக!” அழுகை குரலில் சொன்னாள் சங்கீதா.
அவள் சொன்னதைக் கேட்டு, அந்த இளைஞர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
மேற்கு வானில் சூரியன் மெல்ல மெல்ல இறங்கத் துவங்க, இருள் கவிய ஆரம்பித்தது.
கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த அந்தப் பெண்களை நோக்கி வந்த இளைஞர்கள், “மேடம்…நீங்க எத்தனை நேரம் இங்க நின்னுட்டிருந்தாலும் எந்த வித பிரயோஜனமுமில்லை!…இதுக்கு மேலே இங்க எந்த பஸ்காரனும் வரமாட்டான், எந்த ஆட்டோக்காரனும் வரமாட்டான்!…பேசாம…ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிடுங்க…அங்க ஆட்டோ இருந்தாலும் இருக்கும்” என்றான் ஒருவன்.
“அதுக்கு…எவ்வளவு தூரம் நடக்கணும்?” சங்கீதா கேட்டாள்.
“ஜஸ்ட் ரெண்டு…ரெண்டரை கிலோ மீட்டர்தான்”
“டேய்…பாவம்…இவங்களை ஏண்டா நடக்க வைக்கறே?…இவங்க இங்கியே நிற்கட்டும்…நான் போய் ஒரு ஆட்டோ கூட்டிட்டு வர்றேன்!…நீ இவங்களுக்கு துணையா கூடவே இரு” சொல்லி விட்டு அந்த இளைஞர்களில் ஒருத்தன் கிளம்ப,
“சார்…ரெண்டு ஆட்டோ வரச் சொல்லுங்க” அவசரமாய்ச் சொன்னாள் சங்கீதா.
“ஏய்…எதுக்குடி ரெண்டு ஆட்டோ?” உடனிருந்தவள் கேட்க,
“நீங்க எல்லோரும் பேரும் ஒரே ஏரியாதானே?…அதனால ஒரு ஆட்டோவுல ஏறி காந்திபுரம் சைடு போயிடுங்க!…நான் இன்னொரு ஆட்டோவுல இந்த சைடு போயிடறேன்.…” என்று தன் ஊரான் கிணத்துக்கடவு இருக்கும் திசையைக் கை காட்டிச் சொன்னான் சங்கீதா.
“மேடம்!…ஒரு ஆட்டோ கிடைக்குமா?ங்கறதே சந்தேகமாயிருக்கு…இதுல ரெண்டு ஆட்டோ…அதுவும் கிணத்துக்கடவு வரைக்கும் போக…கிடைக்குமா?ன்னு தெரியலை” புலம்பிக் கொண்டே சென்றான் அந்த இளைஞன்.
சிறிது தூரம் நடந்து சென்ற அந்த இளைஞன் தன் மொபைலை எடுத்து யாருக்கோ போன் செய்தான். “டேய்…சோமு…வகையா ஒரு கிளி மாட்டியிருக்கு…ஆட்டோ எடுத்திட்டு வந்தேன்னா…இன்னிக்கு “விருந்தோம்பல்”தான்!…வரியா?”
“டேய் ரவி…என்னடா சொல்றே?…கொஞ்சம் விளக்கமா சொல்றா” எதிர்முனை ஆட்டோக்காரன் சற்றுக் குழறலாய்க் கேட்டான்.
“ஒரு கிளி…தனியா கிணத்துக்கடவு வரைக்கும் போகணும்னு…தவிச்சிட்டிருக்கு!….இங்கதான் பஸ் போக்குவரத்து நின்னு போச்சல்ல?…அதனால ஆட்டோ தேடிட்டிருக்கு!…இன்னிக்கு மறியல்…அதுஇதுன்னு ஒரே கலவரமா இருக்கறதினால…போலீஸ் கவனமெல்லாம்…அந்தப் பக்கம் திரும்பியிருக்கு…உன்னோட ஆட்டோவுல கிளியைக் கூட்டிட்டுப் போனா…போற வழில விருந்தோம்பல் பண்ணிடலாம்…என்ன சொல்றே?”
“ஓ.கே….இப்ப நான் எங்க வரணும்?” எதிர்முனை ஆட்டோக்காரன் தயாரானான்.
“கே.ஜி.தியேட்டருக்கு லெப்ட்டுல…ரேஸ் கோர்ஸ் பஸ் ஸ்டாப் இருக்கல்ல?…அங்க வா”
இணைப்பைத் துண்டித்து விட்டு, வேக வேகமாகச் சென்று ரயில்வே ஸ்டேஷன் அருகே வேறோரு ஆட்டோவைப் பிடித்து வந்து, அதில் மற்ற பெண்களை ஏற்றி அனுப்பி விட்டு, தன்னுடைய ஆட்டோ தோஸ்த் ரவிக்காக காத்திருந்தான்.
“என்ன சார்…கிணத்துக்கடவு வரை போக யாரும் வரலையா?”
“ஆமாம் மேடம்…அந்த இருந்த ஆட்டோக்காரங்க யாருமே வரலைன்னுட்டாங்க!…என் ஃப்ரெண்ட் ஒருத்தன் ஆட்டோக்காரன் இருக்கான் நான் அவனுக்குப் போன் பண்ணி…உங்க நிலைமையைச் சொன்னேன்…வர்றேன்னிருக்கான்!” என்றான் அந்த இளைஞன்.
நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது.
சாலையில் மனித நடமாட்டம் சுத்தமாகவே நின்று போயிருந்தது.
சங்கீதா தன் மொபைலில் நேரம் பார்த்தாள்.
07.50
“பட…பட”வென நெஞ்சு அடித்துக் கொண்டது.
அப்போது வேகமாக வந்து அவர்களுக்கு எதிரில் நின்றது அந்த ஆட்டோ.
“என்ன ரவி?…இவ்வளவு நேரமா?…பாவம் மேடம் ரொம்ப டென்ஷனாயிட்டாங்க” என்று ஒரு இளைஞன் சொல்ல,
“கிணத்துக்க்கடவு வரைக்கும் போகணும்!னு சொன்னியல்ல?…அதான் கொஞ்சம் பெட்ரோல் போட்டுட்டு வந்தேன்”
“மேடம் ஏறிக்கங்க”
“ரொம்ப தேங்க்ஸ்ங்க!” நன்றி சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.
“டேய் ரவி…மேடத்தை பத்திரமா கொண்டு போய்ச் சேர்த்துடு…அநியாயத்துக்கு ஆட்டோ வாடகை கேட்டு அவங்களை பயமுறுத்தி விடாதே”
“ஓ.கே.டா”
ஆட்டோ கிளம்பியதும், அந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்து சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டனர். “இனி நம்ம பைக்கை எடுத்துக்கிட்டு அந்த ஆட்டோவைப் பின் தொடர வேண்டியதுதான்” என்றான் ஒருத்தன்.
“டேய்…எந்த ஏரியாவுல விருந்து நடக்கப் போகுது?”
“ம்ம்ம்…சுந்தராபுரம் தாண்டியது…ரோட்டோரமா நிறைய கட்டிடங்கள் பாதி கட்டிய நிலையில் இருக்கு!…அதுல ஒண்ணுல வெச்சு சாப்பிட வேண்டியதுதான்”
“ம்ம்ம்…கொஞ்சம் சரக்கு இருந்திருந்தா சும்மா “கும்”முன்னு இருக்கும்”
“ஹா…ஹா…ஹா…இதெல்லாம் தெரிஞ்சுதான் ரெண்டு குவாட்டர் வாங்கி பைக்கோட டேங்க் கவர்ல வெச்சிருக்கேன்”
“அப்ப இன்னிக்கு ஒரே மஜா தான்!…வா…வா…சீக்கிரம் கிளம்பிடலாம்!…இன்னேரம் ஆட்டோ ரவி உக்கடம் தாண்டிப் போயிருப்பான்”
இருவரும் வேகமாகச் சென்று ஒரு மரத்தின் பின்னே நிறுத்தி வைத்திருந்த பைக்கில் ஏறிப் பறந்தனர்.
போகும் வழியில் ஆட்டோக்காரனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தாள் சங்கீதா.
“என்ன பண்றது?ன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தேன்…கடவுள் மாதிரி நீங்க வந்தீங்க?….எங்க வீட்டுல இன்னேரம் என்னைக் காணோம்!னு பயந்து கிடப்பாங்க”
ஆட்டோ ரவி பதிலே பேசவில்லை.
குறிச்சிக் குளத்தருகே மேடேறி, தார் சாலையில் “பட…பட”வென்று ஓடியது ஆட்டோ.
சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல, அந்த ஏரியாவே மயான அமைதியில் கிடந்தது.
“என்ன பிரச்சினை?…எதுக்காக கட்சிக்காரங்க இன்னிக்கு பஸ் மறியல் பண்ணினாங்க?” சங்கீதா கேட்க,
அவனிடமிருந்து பதிலே இல்லை.
சுந்தராபுரத்தை தாண்டிச் சென்றதும், தெரு விளக்குகள் கூட எரியாமல் கனத்த இருள் கொட்டிக் கிடக்க,
ஆட்டோவின் வேகம் மட்டுப்பட்டது.
“என்ன டிரைவர்…என்னாச்சு?” சங்கீதா கேட்டாள்.
அவன் பதிலேதும் தரவில்லை.
ஆட்டோ இடப்புறமாய்த் திரும்பி, தார் சாலையை விட்டு, மண் பாதையில் இறங்கி ஓட, “டிரைவர்…இந்தப்பக்கம் எங்கே போறீங்க?” கத்தலாய்க் கேட்டாள் சங்கீதா.
பதிலில்லை.
ஆட்டோவிலிருந்தவாறே இரு புறமும் தலையை நீட்டி வெளியே பார்த்தாள்.
எங்கும் இருட்டு.
அரைகுறையாய்க் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மங்கலான வெளிச்சத்தில் தெரிய, “ஏதோ தவறு நடக்கப் போகின்றது” என்பதை யூகித்து விட்ட சங்கீதா, “என்ன மேன்?..…உன் நண்பர்கள் ரெண்டு பேரும் உன் மேல் நம்பிக்கை வெச்சுத்தானே என் கூட என்னை அனுப்பிச்சாங்க…நீ இப்படிப் பண்றியே?…என்ன வேணும் உனக்கு?” கத்தலாய்க் கேட்டாள்.
இதுவரையில் பேசாதவன் இப்போது பேசினான். “எனக்கு நீ வேணும்?…சத்தம் போடாம ஒத்துக்கிட்டேன்னா…ஒரு சின்ன கீறல் கூடப் படாம ஹேண்டில் பண்ணிட்டு விட்டுடுவேன்!…அடம் பிடிச்சேன்னா…அப்புறம் கீறல்…காயம்…கடி…எல்லாமே இருக்கும்!…என்ன சொல்றே?” போதை விழிகளை உருட்டிக் கொண்டு கேட்டான் ஆட்டோ டிரைவர்.
இப்போதைக்கு இவன் கிட்டேயிருந்த தப்பிக்க ஒரே வழி, இறங்கி…இருட்டில் ஓடுவதுதான், என்று முடிவு செய்த சங்கீதா, அதைச் செயல் படுத்தத் துவங்கும் போதுதான் அந்த வெளிச்சப் புள்ளி அவர்களை நோக்கி வந்தது.
“ஆஹா…யாரோ வர்றாங்க…” என்று சந்தோஷத்தோடு அந்த வெளிச்சத்தை நோக்கி, “என்னைக் காப்பாத்துங்க!…என்னைக் காப்பாத்துங்க” என்று கத்திக் கொண்டே ஓடினாள்.
அந்த வெளிச்சத்தை நெருங்கியதும்தான் தெரிந்தது, அது ஒரு பைக் என்றும் அதில் வந்த இருவரும் அவளை ஆட்டோவில் ஏற்றி விட்ட இளைஞர்கள் என்றும்.
“அண்ணா…அண்ணா!…தெய்வம் போல வந்தீங்கண்ணா!…நீங்க எவ்வளவு நம்பிக்கையோட என்னைத் தனியா அனுப்பி வெச்சீங்க!…இந்த ராஸ்கல் பாதி வழில வந்து…வண்டியை வேற ரூட்டுல ஓட்டிட்டு வந்து…என் கிட்ட என்னென்னமோ பேசறான்” என்றான் படபடப்பாய்.
“அப்பாடியா?…என்னென்னமோ பேசறானா?…வா…வா…என்ன?ன்னு கேட்போம்” என்றபடி இளைஞர்கள் இருவரும் முன்னே நடக்க, அப்பாவி ஆட்டுக் குட்டி பின்னால் சென்றது.