போக்சோ சட்டத்தின் கீழ் பெண் ஆசிரியைகள் பாரதி, தீபா மீது வழக்கு
பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது பெண் சீடர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேளம்பாக்கத்தில் இயங்கும் சுஷில் ஹரி பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபா மற்றும் அவரதுபள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியைகள் பாரதி, தீபா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், தொழில்நுட்ப தகவல் சட்டம் உட்பட 9 பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
பின்னர் செங்கல்பட்டு போக்சோநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக, அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், சிவசங்கர் பாபாவின் பெண் சீடர்கள் மற்றும் ஆசிரியைகள் சிலரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரித்தனர். பின்னர்,மாணவிகளை மூளைச் சலவைசெய்து சிவசங்கர் பாபாவிடம்அழைத்துச் சென்றதாகவும், சிவசங்கர் பாபாவின் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் பெண் சீடர் சுஷ்மிதா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் அந்த பள்ளியில் ஆசிரியையாகவும் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
பாஸ்போர்ட் முடக்கம்
இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வரும் திங்கட்கிழமை இந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் பாஸ்போர்ட்டை போலீஸார் முடக்கிஉள்ளனர்.
பள்ளியில் விசாரணை
சிவசங்கர் பாபாவின் பள்ளியில் சிபிசிஐடி குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், பள்ளியின் முக்கிய அறை ஒன்றை போலீஸார் பூட்டி சீலிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸார் சேகரித்துள்ளனர். அப்போது பள்ளியின் முன்பு கூடியிருந்த பெற்றோர் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக காத்திருப்பதாக தெரிவித்தனர்.