பத்துமலை பந்தம் | 8 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 8 | காலச்சக்கரம் நரசிம்மா

8. வில்லங்க விமானி

காபலிபுரம் செல்லும் வழியில் திருவிடந்தை கோவில்.

‘ஸ்வீட் ட்ரீம்ஸ்’ என்கிற படத்தின் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் முகாமிட்டிருந்தனர். படத்தின் ஹீரோ மிதுன் ரெட்டிக்கு அவனது ஒப்பனையாளர் கேரவனில் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார். அருகே, இருந்த மற்றொரு கேரவனில் கதாநாயகி நடிகை கனிஷ்காவின் கூந்தலுக்கு ஹேர் ட்ரெஸ்ஸர் ஹேர் ட்ரையரரைப் போட்டுக் கொண்டிருந்தார். கனிஷ்காவின் எதிரே நின்று, உதவி டைரக்டர் செந்தில் அன்றைய காட்சியை கனிஷ்காவுக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.

“காட்சிப்படி முதன்முறையா நீங்களும் ஹீரோ மிதுன்-னும் கோவிலில் சந்திக்கப் போறீங்க. ரெண்டு பேரும் ஒரே சமயத்துல சாமி கும்பிடறீங்க. அர்ச்சகர். அர்ச்சனைத் தட்டை மாற்றிக் கொடுத்துடறாரு. பிறகு தவறை உணர்ந்து தட்டை திருப்பி மாத்தி கொடுக்க, அப்ப, நீங்களும் மிதுன்-னும் முதன்முறையா சந்திக்கிறீங்க. ஆனால் ரெண்டு பேரும், ஏற்கனவே ஒருவரை ஒருவர் கனவுல பார்த்திருக்கீங்க..! முகத்துல வியப்பைக் காட்டறீங்க.” –செந்தில் உணர்ச்சியுடன் கூறினான்.

சலிப்புடன் செந்திலைப் பார்த்தாள், கனிஷ்கா! “செந்தில்..! இதே மாதிரிக் காட்சியை, நானும் மிதுனும் ஏற்கனவே செஞ்சிருக்கோம்..! கொடைக்கானல் கனவு-ங்கிற படம். குறிஞ்சியாண்டவர் கோயில்-ல சந்திக்கிறோம். இதே மாதிரி சீக்வன்ஸ்..! உடனே ஒரு டூயட் வேற பாடுவோம்..!” –கனிஷ்கா சொல்ல, தயக்கத்துடன் செந்தில் தலையைச் சொறிந்தான்.

“மேடம்..! நான் கூட வசனகர்த்தா விக்னேஷ் பாலா கிட்டே சொன்னேன். அவரு சொல்றாரு..! அந்தக் காட்சி முருகன் கோவில்..! இந்தக் காட்சி பெருமாள் கோவில்..! அதுல குருக்கள் திருநீறு பூசி இருப்பார். இதுல பட்டர் நாமம் போட்டிருப்பார். காட்சியே வேறு-ன்னு சொல்றார், மேடம்..!” –செந்தில், கூற, பொங்கி வந்த கோபத்தை கனிஷ்கா ஹேர் ட்ரெஸ்ஸரின் மீது காட்டினாள்.

“இடியட்..! என் தலை என்ன தார் ரோடு மாதிரியா இருக்கு..? தார் ரோட்டுல ரோட் ரோலரை உருட்டற மாதிரி, ஹேர் ட்ரையரை தலையில தேய்க்கிறே..! எரிச்சலா வருது..!” –என்று கோபத்துடன் செந்திலைப் பார்த்தாள்..!

“நான் பேச வேண்டிய டயலாக் என்ன..? இரு…இரு…! அதையும் நானே சொல்றேன்..! குருக்களே..! தட்டை மாற்றிக் கொடுத்துடீங்க..! கரெக்டா..?”

“மேடம்..! கரெக்டா சொல்லிட்டீங்க..!” –செந்தில் சொல்ல, கனிஷ்கா உரத்த குரலில் கத்தினாள்.

“வாட் நான்சென்ஸ்..! இந்த மாதிரி பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாத ஆளுங்களை எல்லாம் திரைக்கதை வசனம் எழுதச் சொல்றீங்க. அந்த நீலச் சட்டைக்காரர் எங்களை அரைச்ச மாவுன்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவாரு..! வேர் இஸ் தி டைரக்டர்..?” –அவள் விட்ட டோஸில், செந்தில் நிமிடத்தில் காணாமல் போனான்.

அன்று காலை தூங்கி எழுந்தது முதலாகவே, கனிஷ்கா கடுப்பில் தான் இருந்தாள். தூக்கம் கலைந்தும், படுக்கை அறையிலேயே சோம்பலுடன் இவள் கிடக்க, சமையல்காரி மனோகரி ஒரு தட்டில் பிஸ்கெட்ஸ் மற்றும் ஏலக்காய் டீயுடன், இவளது அம்மா குணசுந்தரி ஆசிரியராக இருக்கும் ‘பொய்கை’ இதழின் பிரதியையும் கொண்டு வந்துதர, படுக்கையில் இருந்தபடியே, டீயை ஒரு வாய் அருந்திவிட்டு, ‘பொய்கை’ இதழைப் புரட்டியிருந்தாள். ‘கொலிவூட் கார்னர்’ என்கிற சினிமா பகுதியில், இவளுடைய புகைப்படத்துடன், நிருபர் ஒருவர் சேதி வெளியிட்டிருந்தார்.

கோடிக்கு அலையும் கனிஷ்கா தெருக்கோடியில் நிற்பாரா..?

நடிகை கனிஷ்கா நழுவவிட்ட பெரிய பட்ஜெட் படமான ‘பாலைவனம்’ படத்தில் இப்போது தெலுங்கு நடிகை மித்ரா ராவ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘பாலைவனம்’ படத்தில் நடிப்பதற்கு நடிகை கனிஷ்கா ஐம்பது கோடிகளைக் கேட்டதால், புகழ் பெற்ற படநிறுவனம், ஒண்டர்லாண்ட் பிக்சர்ஸ், ‘பாலைவனம்’ திரைப்படத்தின் கதாநாயகி பாத்திரத்திற்கு புதுமுக நடிகை மித்ராவை ஒப்பந்தம் செய்துள்ளது. தெலுங்குப் படத்தில் அறிமுகமான மித்ரா ராவ் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. கோடிக்கு அலையும் கனிஷ்கா தெருக்கோடியில் நிற்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெகு விரைவில் தமிழ் திரையுலகில் முதல் இடத்தை பிடிப்பார் மித்ரா.”

–என்று செய்தி போட்டிருக்க, கனிஷ்காவின் கண்கள் ஆவேசத்தில் சிவந்தன. ஏலக்காய் டீ கப்பை விசிறி அடித்த கனிஷ்கா , அம்மா குணசுந்தரியின் மொபைலுக்கு போன் செய்தாள் .

குணசுந்தரி பதில் தந்தாள். “குட்மார்னிங் பேபி..! நான் ஜிம்மில் இருக்கேன்..!”

“வாட் இஸ் குட் அபவுட் திஸ் மார்னிங்..? எனக்கு மிக மோசமான விடியலை கொடுத்திருக்கே. நீ எடிட்டரா இருக்கிற பத்திரிக்கையில் என்னைக் கேவலப்படுத்தற மாதிரி ஒரு செய்தி போட்டிருக்காங்க..? எடிட்டரா நீ என்னதான் செய்யறே..?” –கனிஷ்கா கோபத்தில் அலறினாள்..

“டோன்ட் ஷவுட் பேபி..! ஒண்டர்லாண்ட் பிக்சர்ஸ் இந்த செய்தியைப் போட ரெண்டு லட்சம் கொடுத்தாங்க. விளம்பரங்களையும் நிறைய கொடுக்கிறதாச் சொல்லி இருக்காங்க. எனது பத்திரிகைக்கு எது நல்லதோ அதைத் தான் நான் செய்வேன்.”

“அதுக்காக நீ பெத்த பெண்ணுக்கு எதிராகக்கூட செய்தி போடுவியா..?” –கனிஷ்கா கேட்க, குணசுந்தரி நிதானமாக பதிலளித்தாள் .

“மந்திரி ஜெகன் பாண்டியன் லஞ்சம் வாங்கினார்ன்னு செய்தி போட்டு, அவர் எனக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கார். அதுக்காக நான் என்ன அதிர்ச்சியா அடைஞ்சேன்..? கொஞ்சம் நெகட்டிவா நமக்கு பிரச்சனைகள் வந்தாதான், நாம் போராடி முதல் இடத்தைத் தக்க வைப்போம். நமக்கு பிரச்சனைகளே இல்லைன்னா நாம அலட்சியமாக இருந்து, முதல் இடத்தை நிரந்தரமாக இழந்துடுவோம். உன்னை எச்சரிக்கத்தான் நான் அந்த செய்தியைப் போட்டேன். பாலைவனம் படத்தை நீ நழுவ விட்டு இருக்கக் கூடாது. பத்துக் கோடிகளை நீ குறைத்திருக்கலாம்..” –என்றதும் மௌனம் சாதித்தாள், கனிஷ்கா.

“எப்படியாவது, அந்த மித்ரா ராவ்காரியை ஓரம் கட்டிட்டு திரும்பி அந்த வாய்ப்பைப் பிடுங்கப் பாரு..! அது கிடக்கட்டும்..! தாத்தா நல்லமுத்து போன் செஞ்சார். பள்ளங்கியில ஏதோ பிரச்னை. இந்த தடவை தைப்பூசம் பூஜை நடக்க போறது இல்லையாம். அப்படின்னா, நம்ம குடும்பத்துக்குக் கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சுன்னு அர்த்தம் கனிஷ்கா..! உனக்கு பாலைவனம் படம் நழுவிடுச்சு. எனக்கு மந்திரி நோட்டீஸ் விட்டிருக்காரு..! அதனால, அடுத்த ஞாயிற்றுக்கிழமை, உன்னை ஃப்ரீயா வச்சுக்கோ..! நல்லமுத்துத் தாத்தா சென்னை வர்றாரு..! குறிஞ்சி பார்ம் ஹவுஸ்ல நம்ம குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சந்திக்கிறோம்..” –குணசுந்தரி சொல்ல, “ம்ம்” என்று மட்டும் கூறிவிட்டு, கனிஷ்கா அலைபேசியைத் துண்டித்தாள். முதல்தடவையாக, கோலிவுட்டின் முதலிடத்தை நழுவ விட்டு விடுவோமோ என்கிற அச்சம் எழுந்தது.

அந்தக் கோபத்தில்தான் அன்றைய ஷூட்டிங்கிற்காக திருவிடந்தை வந்திருந்தாள். எல்லார் மீதும் காரணம் இல்லாமல் கோபம் வந்தது. வந்த இடத்தில் படப்பிடிப்புக் காட்சி அமைப்பும் சரியில்லை.

“அந்த டிவியை போட்டுத் தொலை..!” உதவியாளர் வசந்தியிடம் சொல்ல, அவள் ரிமோட்டை எடுத்து கேரவனில் இருந்த டிவியை ‘ஆன்’ செய்தாள்.

செய்தியாளர், செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். “ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேஜஸ் சரவணபெருமாள் நேற்றைய ஆட்டத்தில் ரன் ஓடும்போது விழுந்து காயமடைந்தார். இன்று அவருக்கு லிகமெண்ட் டேர் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடும் தகுதியை இழக்கிறார்.” — என்று செய்தியாளர் அறிவிக்க, அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள். இவளது தம்பி தேஜஸ் இதனை எப்படித் தாங்கப் போகிறான்..?

“மேடம்..!” அவசரமாக உள்ளே நுழைந்தான், கனிஷ்காவின் பிஆர்ஓ சுனில்.

“உங்கப்பாவோட SP கார்ஸ் ஷோரூமில் தீ விபத்துன்னு என் ஜர்னலிஸ்ட் நண்பன் ஜெயேஷ் வாட்சப் செஞ்சிருக்கான்.” –என்றதும், கனிஷ்காவின் மேனி நடுங்கத் தொடங்கியது.

————————

பீஜிங்கின் ஷுன் யீ பகுதி..! குகன்மணியின் விஸ்தாரமான எஸ்டேட்டின் மாளிகை டைனிங் அறையில் அமர்ந்திருந்தனர் எரிக் மற்றும் மயூரி. மயூரிக்கு அவன் முன்பாக அமர்ந்திருப்பது, முள்ளின் மீது நிற்பது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது.

அவனிடம் ஏதோ பிரச்சனை இருக்கிறது. மயூரி அவனை நிச்சயம் மில்லினியம் கிராண்ட் ஹோட்டலில் பார்த்திருந்தாள். ஆனால் அவன் இல்லை என்று சாதிக்கிறான். மேலும், அவனது வெறித்த பார்வையும் ஆணவப் பேச்சும் சந்தேகத்தை எழுப்புகின்றன.

இவளுடைய தோழி இமெல்டா கூறியது போன்று, இவனும், யாராலோ வசியம் செய்யப்பட்டிருக்க வேண்டும். காணாமல் போன எம்எச் 370 விமானத்தின் 27 வயது பைலட் பாரிக் ஹமீத் இப்படித்தான் வெறித்த பார்வையும், ஆணவப் பேச்சுடன் விமானம் புறப்படுவதற்கு முன்பு வரையிலும் வளைய வந்தானாம்..! குகன்மணியும் ஏதாவது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தால்..?

இந்த எண்ணம் தோன்றியதும், அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆரஞ்சு, ஆப்பிள் மற்றும் இஞ்சி ரசம் கலந்த சாற்றை பட்லர் கொண்டு வந்த வைக்க, தலைவிதியே என்று அதை உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

குகன்மணி செலுத்தும் விமானத்தில், பயணிகளும், விமானப் பணிப்பெண்களான இவர்களும் எப்படிப் பயணிப்பது..?

ஹோட்டலுக்குப் போனதும், மற்ற விமானப் பணிப்பெண்களான நான்சி அல்புகர்கோ, மாய் பெங், மாடில்டா, சாண்ட்ரா அனைவரையும் திரட்டி, குகன்மணி செலுத்தும் விமானத்தில் தாங்கள் பணிபுரிய முடியாது என்று ஏர்போர்ட் பேஸ் மேனேஜரிடம் புகார் கொடுத்தால் என்ன..?

மயூரி மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்த அதே வேளையில், திடீரென்று, குகன்மணி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

“மிஸ் மயூரி..! எனக்கு உங்கள் ஊர் பள்ளங்கி மற்றும் போகர் பாசறையைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்கிறீர்களா..?” –குகன் மணி கேட்டதும், மயூரிக்கு தூக்கிவாரிப் போட்டது.

குகன்மணியின் தூய தமிழ், மயூரியை அச்சுறுத்தியது. எதற்காக இவன் பள்ளங்கியைப் பார்க்க வேண்டும் என்கிறான்..? போகர் பாசறையில் இவனுக்கு என்ன வேலை..?

“அங்கே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை, கேப்டன் குகன்மணி..! வெறும் பாறைகளும், குகைகளும் தான் இருக்கு..!” –மயூரி கூற, அவன் கடகடவென்று சிரித்தான்.

“பள்ளங்கி மலையில் நின்று கொண்டு சுற்றிப் பார்த்தால், உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. இங்கே பத்து மலை உச்சியில் நின்று, மேற்கே பார்த்தால், போகர் பாசறையின் மர்மங்கள் தெரியும். இங்கே இருப்பவர்களுக்குத்தான் அந்த அருமை தெரியும். உங்களுக்குத் தெரியாது..!” –குகன்மணி சொல்ல, மயூரிக்கு எரிச்சலாக வந்தது.

‘என்னோட நல்லமுத்துத் தாத்தாவுக்கு தெரியாததா உனக்கு தெரிய போகிறது..?’ –மனதில் நினைத்தாள், மயூரி.

“இது குறித்து நீங்க என்னோட தாத்தா கிட்டத்தான் பேசணும்..! நான் விமானத்தில் பறக்கிறவ..! எனக்கு எங்க ஊரை பற்றி எவ்வளவோ தெரியாது..” –மயூரி சொல்ல, திடீரென்று குகன்மணியின் முகம் சீரியஸாக மாறியது.

“நிறையக் கேள்வி கேட்கணும். குறிப்பாக, உங்க தாத்தா கிட்டே..! பார்க்கலாம்..! எனக்கு நேரம் கிடைக்கிறப்ப நிச்சயம் உங்க தாத்தாவைச் சந்திப்பேன்.”

அதற்குப்பின் எரிக்கும், குகன்மணியும் பேசிக்கொண்டே உணவருந்த, மயூரி அவர்களது பேச்சில் ஆர்வம் இல்லாமல், மௌனமாக அமர்ந்திருந்தாள்.

டின்னர் முடிந்ததுமே, மயூரி தனது கடிகாரத்தை பார்த்துவிட்டு, எரிக்கை நோக்கினாள்.

“இட்ஸ் கெட்டிங் லேட், எரிக்..! கிளம்பலாமா..? தேங்க்ஸ் போர் தி இன்விடேஷன், கேப்டன் குகன்மணி..” –மயூரி விடைபெற்றாள்.

“நீங்கதான் ஒண்ணுமே சாப்பிடலையே..! ஜூஸ் மட்டும்தானே குடிச்சீங்க..? அதையும் முழுசாக் குடிக்கலை..! அதனால், உங்க தேங்க்ஸ் வேண்டாம்..!” –குகன்மணி புன்னகைத்தான்.

“முதல் தடவையா, நீங்க ஓட்டற பிளைட்ல நான் சர்வீஸ் செய்யப் போறேன். அதுக்குத் தேங்க்ஸ் சொன்னதா நினைச்சுக்கோங்க..!” –மயூரி கூற, குகன்மணி அவளை உறுத்துப் பார்த்தான்.

“விமானம் டேக் ஆப் ஆகும் வரையில், யார் விமானத்தை ஓட்டப் போறாங்க, யார் பிளைட் அட்டெண்டன்ட்டா இருக்கப் போறாங்கன்னு நிச்சயம் இல்லை. நாளைக்கே நான் பிளைட் ஓட்டக் கூடாதுன்னு யாராவது சொல்லலாம்.” — குகன்மணி கூற, எரிக் திகைப்புடன் மயூரியை நோக்கினான்.

மயூரியின் முதுகு தண்டு சில்லிட்டது.

–தொடரும்…

< ஏழாவது பகுதி

ganesh

3 Comments

  • விதியின் வேலை ஆரம்பமாகி விட்டது.நல்லமுத்து குடும்பத்தினர் தப்பிப்பார்களா? வீ வில் வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபிஸோட்.

  • Interesting one sir

  • Very nice..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...