குறளின் குரல் – திருக்குறள்
பாவ புண்ணியம் !
கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜூனன் கிருஷ்ணனிடம்,”பாவம் என்றால் என்ன? புண்ணியம் என்றால் என்ன” என்று கேட்கிறான்.
கிருஷ்ணர்,”நான் காட்டுகிறேன் வா” என்று கூறி,தன்னை வயோதிகனாகவும், அர்ஜூனனை இளைஞனாகவும் மாற்றிக்கொண்டு, பூலோகம் சென்றனர்.
ஒரு பேராசை கொண்ட வட்டிக்கு மேல் வட்டி வாங்கும் கோடீஸ்வரனிடம் இருவரும் சென்றார்கள். அந்த பணக்கார வீட்டின் வாசலில் காவலுக்கு இருந்த காவலாளி இவர்களை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தார்.
வாசலில் காவல்காரர் இருவரிடமும் “ஐயா,நான் ஏழை உங்களை உள்ளே அனுப்பினால்,என் வேலை போய்விடும்” என்று கூறி விரட்டினார். எப்படியாவது, தம்மை உள்ளே அனுப்ப இருவரும் கெஞ்சினார்கள்.
“சாயங்காலம் ஐயாவைப்பார்க்கக்கூட்டம் வரும்,கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே போய் விடுங்கள்.எனக்கு ஒண்ணும் பிரச்சனை வராது” என்று காவல்காரர் கூறினார்.
அவர்கள் இருவரும் மாலை வரை அங்கேயே காத்திருந்தனர். மாலை கூட்டத்தோடு கூட்டமாக இருவரும் உள்ளே சென்றனர். உள்ளே பணக்காரரை பார்க்க வந்தவர்கள் அனைவரும் அவரிடம் கடன் வாங்க வந்தவர்கள்.
கோடீஸ்வரன் இந்த இருவரிடமும், “உங்களுக்கு என்ன வேண்டும் ?” என்று கேட்டார்.
முதியவர் “என் பையனுக்கு கல்யாணம் செய்ய பண்ணிரண்டாயிரம் ரூபாய் வேண்டும்” என்று கேட்டார்.
“நீ ஒரு பிச்சைக்காரன்,உனக்கு எதை நம்பி பணம் கொடுப்பது?” என்று கோடீஸ்வரன் முதியவரை இழிவாகப்பேசி, அவரை அடித்து அனுப்பினான்.
வலி தாங்காமல் வயதான முதியவர் துடிப்பதைக் கண்ட அந்த கூட்டத்தில் இருந்த நல்ல உள்ளம் படைத்த ஒருவர், “ஐயா! இந்தக்கோடீஸ்வரனின் தம்பி ஒருவர் இருக்கிறார். அவர் நல்ல உள்ளம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவும் உள்ளம் உடையவர். அவரைப் போய் பார்த்து நீங்கள் அவரிடம் உதவி கேளுங்கள்! நல்லதே நடக்கும். கவலைப் படாதீர்கள். உங்கள் மகனின் திருமணம் கடவுள் அருளால் நல்ல படியாக நடக்கும்!” என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார்.
அதைக்கேட்ட இருவரும் கோடீஸ்வரனின் தம்பியை பார்க்கச் சென்றனர்.
கோடீஸ்வரரின் தம்பி வீட்டில், இவர்களுக்கு ராஜ உபச்சாரம். இவர்கள் இருவரையும் இன்முகத்துடன் வரவேற்று நல்ல விருந்தளித்தார் .இவர்கள் அவருடைய உபசரிப்பை கண்டு உள்ளம் பூரிப்படைந்தனர். வயிறார உணவு உண்டனர். பின்னர் சாப்பிட்டுக்கை கழுவ வந்த இடத்தில் ஒரு மாடும், கன்றுக்குட்டியும் இருந்தது. அதைப் பார்த்த முதியவர், “இவ்வளவு பெரிய மாடாக இருக்கிறதே! கன்றுக்குட்டி அழகாக இருக்கிறதே!” என்று சொன்னார். உடனே மாடும்,கன்றுக்குட்டியும் சுருண்டு விழுந்து இறந்து போனது.
இளைஞனின் வேடத்தில் இருந்த அர்ஜூனனுக்குக்கோபம் வந்து விட்டது. “உன்னை அடித்தவனை ஒன்றும் செய்யாமல், நம்மை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தவரின் மாடையும், கன்றுக்குட்டியையும் கொன்று விட்டாயே?” என்று கேட்டான்.
கிருஷ்ணன் அர்ஜூனனை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே நவரத்தின மாளிகைக் கட்டிக்கொண்டு இருந்தனர்.
அதைக் கண்ட அர்ஜூனன், “இந்த நவரத்தின மாளிகை யாருக்காக கட்டுகிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர், “அந்தக் கோடீஸ்வரரின் தம்பிக்காக!” என்று கூறினார்.
மாளிகையின் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடையும், கன்றுக்குட்டியையும் பார்த்த அர்ஜூனன், “இது யாருடையது?” என்று கிருஷ்ணரிடம் கேட்டான்.
கிருஷ்ணர், “இது கோடீஸ்வரனின் தம்பியுடையது. அவர் வந்த உடன் கொடுப்பதற்குத்தான்!” என்று கூறினார்.
பின்னர் நரகத்துக்கு அர்ஜூனனை கிருஷ்ணர் அழைத்துச் சென்றார்.
அங்கே எண்ணெய்க் கொப்பரையைக் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அர்ஜூனர், “இது யாருக்கு?” என்று கேட்க, கிருஷ்ணர் “இது அந்தக்கோடீஸ்வரனுக்கு!’ என்றார்.
இப்படி கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு பாவ, புண்ணியத்தை நேரடியாகக் காட்டினார்.
ஆகவே! நாம் செய்யும் செயல்களின் பாவ, புண்ணியங்கள் கணக்கிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பாவக்கணக்கு அதிகமுள்ளவன் நரகத்திற்கும் புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கும் செல்கின்றனர்.
“நாம் வாழ்வில் பாவ காரியங்களை குறைத்து, அனைவருக்கும் உதவி செய்து புண்ணியத்தை சேர்த்து வைப்போமாக!”
குறள் :
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. (குறள் எண்:353)
பொருள் :
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு போய்விடும், நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.