அந்தாதிக் கதைகள் – 4 | விஜி R. கிருஷ்ணன்
மறக்குமா உந்தன் முகம்
ஆலமரத்து கிளையில் கட்டியிருந்த கோயில் மணி காற்றில் அசைந்து இனிய ஓசையை எழுப்பியது
புதுக்கோட்டை யிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் இருந்தது பெருங்கலூர் என்றொரு கிராமம். அழகான அக்ரஹாரம் நேரே மங்களாம்பிகை குடி கொண்டிருக்கும் கோவில், சச்சதுரமாய் கோவிலை சுற்றி சின்ன தெருக்கள். கோவிலுக்கு பின்னாடி அழகிய பெரிய குளம். குளத்தங்கரையில் ஆலமரம் அதன் கீழ் பிள்ளையார் கோவில் அதன் மணி ஒலிக்கவே அகிலன் பழைய நினைவுகளில் மூழ்கினான்
அவன் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த ஊருக்கு வந்தான், அவனுடைய அப்பா அந்த ஊரில் ஒரு மளிகை கடை ஆரம்பித்து, கடை நன்றாக போகவும் அகிலன், அம்மா, தங்கையுடன் பெருங்கலூர் வந்து பள்ளியில் சேர்ந்தான்
பள்ளியில் முதல் மாணவன், அதனால் அவனிடம் வீட்டு பாடம் எழுத, கணக்கு போட்டு பார்க்க என்று ஒரு கூட்டம் கூடிவிடும்
அந்த ஊரின் நாட்டாமை முத்தையா வின் மூன்றாவது பெண் மீனா அகிலன் வகுப்பில்…
ஊரை விட்டு கொஞ்சம் தள்ளி இருக்கும் அரசாங்க பள்ளிக்கு எல்லாரும் ஒன்றாக நடந்து போய், பின் மதிய சாப்பாடு க்கு வீட்டுக்கு போய், மறுபடியும் பள்ளி வந்து மாலை டியூஷன் போய்விட்டு வீடு வர மாலை 6 மணி ஆகிவிடும்
அனைவரும் 8 ஆம் வகுப்பில் அன்று முதலில் நுழைய, அகிலன் மீனா வை தேடினான்
விடுமுறை யில் தாத்தா வீட்டுக்கு போனதும், அங்கே அடிக்கடி மீனா வின் நினைவுகள் வருவதும் இவனுக்கு வேடிக்கை யாக இருந்தது
மேலும் அவன் வகுப்பில் இருந்த பூங்கொடி, புஷ்பா, மேரி யாரும் இவன் கனவில் வராமல் அவள் மட்டும் ஏன்
சரி இன்னைக்கு அவகிட்ட இத சொல்லி சிரிக்கனும் என்ற ஆவலில் வந்து தேடினால் அவளை காணவில்லை
டேய் மீனா ஊருக்கு போய்ட்டாளா?
இல்லடா போன வாரம் கூட குளத்துல குளிச்சோமே
ஏய் பூங்கொடி மீனா எங்க?
அவ இனிமே வரமாட்டா டா
ஏண்டி, உடம்பு சரியில்லை யா
இல்ல டா உனக்கு சொன்னா புரியாது பேசாம போடா
ஏய் சொல்லுடி, எங்க கடைலேர்ந்து உனக்கு சாக்லேட் வாங்கி தரேன் சரியா
நிசமா
பக்கத்துல வாடா
சொல்லுடி
அவ, அவ தாவணி போட்டா, இனிமே ஸ்கூல்க்கு அனுப்ப மாட்டாங்க
தாவணி போட்டா என்னடி, நம்ம ஸ்கூல்ல ஒம்பதாப்பு, பத்தாப்பு, படிக்கிறவங்க தாவணி போட்டு தான் வராங்க
டேய், போடா, உனக்கு தான் புரியாது னு சொன்னேன் ல ஆமா நாளை க்கு மறக்காம சாக்லேட் எடுத்து ட்டு வந்து குடுத்துடு,
வீடு வந்துடுச்சு, யோசனை யுடன் உள்ளே போனான். கனவுல மீனா வந்ததை அவகிட்ட எப்படி சொல்றது
அவங்க அப்பா சினிமா வில்லன் மாறில்ல வாசல்ல நிப்பாரு
ஏய் அகிலா கைய கால, கழுவிட்டு கொஞ்சம் கடை வரைக்கும் போய் கல்லால இரு அப்பாவும், நானும், நாட்டாமை வீட்டு விஷேசத்துக்கு போகணும்
அவங்க வீட்ல என்னம்மா விஷேசம்
அட, அதான் உன்கூட படிக்கிற மீனா பிள்ளைக்கு சடங்கு சுத்துறாங்க அந்த பெரிய மனுஷனே படியேறி வந்து குடும்பத் தோட வாங்கனு கூப்புட்டு போனாரு உங்கப்பா என்னடா னா கடைய விட்டுட்டு வரமாட்டேன் ங்கறாரு
அம்மா, அம்மா நானும் வரேன் மா, அவ என்கூட தான படிக்குறா
அப்போ சரி, என்னோட வந்து, சாப்டுட்டு, கடைக்கு ஓடு, அப்பாவ அப்பறம் சாப்பிட அனுப்பு
அஞ்சு நிமிசத்துல அழகா தல சீவி புது சட்டை போட்டு ரெடியாகி அம்மாவோட போனான்
ஆத்தாடி எவ்ளோ பெரிய வீடு, கல்யாண மண்டபம் மாதிரி வாய பிளந்தான் அகிலன்
அவனோட கிளாஸ் பசங்க 4, 5 பேர் வந்திருக்க அவர்களோடு சேர்ந்து கொண்டான்
டேய் கதிர் சடங்குன்னா என்னடா, எங்கம்மாவ கேட்டா முறைக்கிறாங்க
தெர்லடா, சாப்பாடு நல்லா இருக்கும்னு வந்தேன்
டேய், டேய் எனக்கு தெரியும் டா
சொல்லுடா, சொல்லுடா
பெரிய மனுஷி ஆகிட்டாளாம் மீனா, அதான் சடங்கு சுத்துறாங்க
அவ்ளோ பெருசா ஆகிட்டாளா, வாங்கடா உள்ள போய் பாப்போம்
நைசா உள்ள போனா நடு ஹால்ல பெரிய சேர் போட்டு புடவை கட்டி, நகை போட்டு மீனா உக்காந்து இருக்க, சுத்தி உள்ள பெண்கள் அவ கன்னத்துல, கழுத்து ல சந்தனம், குங்குமம் வைக்க அகிலன் மெல்ல அவன் அம்மா அருகில் போய் அமர்ந்தான்
மீனா எப்போ வாவது நிமிர்ந்து தன்னைப் பார்ப்பாள் என்று காத்திருக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள், டேய் அகிலா எப்ப வந்த என்று கேப்பா னு எதிர் பார்த்த அகிலன் ஏமாந்தான்
அவள் சிரிக்க கூட இல்லை
சரி னு சாப்பிட்டு கடைக்கு ஓடினான்
இரவு தூங்கும் முன் அம்மா விடம் கேட்டான்
அம்மா மீனா மாதிரி நானும் பெரிய மனுஷன் ஆவேனா எனக்கும் இது மாதிரி செய்வீங்களா
அம்மா வீடே அதிரும் படி சிரிக்க, அதோட ஏங்க, இங்க வாங்க உங்க பையன் என்ன சொல்றானு கேளுங்க
ஐயோ என்னால சிரிக்க கூட முடியல வயிறு வலிக்குது அவள் சிரிப்பில் அவரும் கலந்து கொள்ள அகிலன்,
தூங்கு இப்போ உனக்கு சொன்னா புரியாது
ஒரு வாரம் கழித்து மீனா பள்ளிக்கு வந்தாள் ஆனா முந்தி மாதிரி ரோடில் ஆடி கொண்டோ, அகிலன் கை கோர்த்து தட்டாமாலை சுத்தி கொண்டோ இல்லாமல்
ஆர்ப்பரித்து ஓடும் காட்டு ஆறு, அமைதியான நதியானது போல் தலை குனிந்து நடந்தாள்
ஏய் மீனா நில்லேன் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
சீக்கிரம் சொல்லுடா, ஆம்பள பசங்க கூட பேச கூடாதுனு எங்க அம்மா சொல்லிட்டாங்கடா, அப்போ தான் ஸ்கூல் க்கு அனுப்புவேன் னு சொன்னாங்க, அதான்டா உன்னை பாத்துட்டு பேசல மன்னிச்சுக்கோடா
ஓ சரி சரி நான் லெட்டர் எழுதி கணக்கு நோட் ல வைக்கிறேன் நீ படிச்சுக்கோ
சரிடா என்ற மீனா தாவணியை இழுத்து பிடித்து கொண்டு ஓடி விட்டாள்
அன்றில் இருந்து ஆரம்பமானது கடித போக்குவரத்துகள்
ஒரு வேளை அன்று அவள் எப்பவும் போல் பேசியிருந்தால் இவனும் தான் கண்ட கனவை சொல்லி சிரித்து பின் மறந்திருப்பான்
இப்படி வளர்ந்த கடித காதல் இருவரும் +2 முடித்த அன்று எப்படியும் நேரில் பேச வேண்டும் என முடிவு செய்து கோவில் பிரகாரம் ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள பவள மல்லி மரத்தின் அடியில் நின்று பேசிக்கொண்டிருக்க
அதை பார்த்த கோவில் குருக்கள் நாட்டாமையிடம் சொல்ல
அதற்கு பிறகு அகிலன் மீனாவை சந்திக்கவே இல்லை
இதோ இன்று இருபது வருடங்கள் கடந்து, அகிலன் அப்பா வாங்கிய நிலத்தை விற்க இந்த ஊருக்கு வந்தான்
இந்த ஆலமரத்தில் ஒரு நாள் மழைக்கு ஒதுங்க, துளி, துளி, துளி துளி
மழை துளி என்ற பாடல் வந்த திசையை நோக்கி மெல்ல நகர, இவனை பார்த்த மீனா சட்டென்று வெட்கப்பட அவன் அவள் கரத்தை பற்றி மெல்ல இதழில் முத்தமிட்டது நினைவுக்கு வந்தது
மீனா எங்க இருக்கானு யாரையும் கேட்க முடியாது அந்த காலத்தில் காதல் தண்டனை குரிய குற்றம்
அப்போது குளத்து படிக்கட்டில் ஒரு உருவம் அமர்ந்துருக்க, ஒரு வேளை இது மீனா வாக இருக்க கூடாதா
உள்ளுணர்வு உந்த மெல்ல அருகில் சென்றான்
நிழலை பார்த்து சற்றே நிமிர்ந்து புருவம் சுருக்கி, அகிலா என்று அழைத்து, எழுந்து அருகில் வந்தாள்
எப்படி இருக்க மீனா
என்ற குரலில் இளகினாள், கண்ணீர் துளி எட்டி பார்த்தது
ஏன் என்ன பாதில விட்டுட்டு போன அகிலா
உங்க அப்பா எங்க அப்பா கிட்ட வந்து சத்தம் போட்டு கடைய காலி பண்ணிட்டு ஊரை விட்டு போக சொல்லிட்டாரு மீனா
மறுபடியும் தஞ்சாவூர் போய் கடை பிடிச்சு வியாபாரம் ஆரம்பிக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க
என்னால தான இவ்ளோ கஷ்டம் னு தெரிஞ்சும் எங்க அப்பாவும், அம்மா வும் என்ன எதுவுமே கேக்கல ஒன்னுமே சொல்லல
அவங்க பட்ட கஷ்டத்தை பாத்துட்டு என் காதல மறந்துட்டேன் ஆனா உன்ன மறக்கல மீனா
உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு பாரதி சொன்னான்
ஆமா அகிலா நானும் கல்யாணம் ஆகி கொஞ்ச நாள் தஞ்சாவூர் ல தான் இருந்தேன் எங்க வீட்டுக்காரரும், அப்பா வும் கார்ல ஹாஸ்பிடல் போகும் போது லாரி மோதி அவரு இறந்திட்டாரு, அப்பா அப்பறம் ஒரு வருசமா படுத்த படுக்கையா இருந்து அவரும் போய்ட்டாரு
இப்போ இங்க அண்ணா, அண்ணி கூட இருக்கேன்
குழந்தைங்க
இல்லை, அவரு கல்யாணம் ஆகி மூணு மாசத்துலயே போய்ட்டாரு..
உனக்கு எத்தனை குழந்தை ங்க அகிலன்
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
ஏண்டா…
ஏய், உனக்காக எல்லாம் இல்லை, அப்பா வுக்கு ஸ்ட்ரோக், தங்கைக்கு கல்யாணம் பண்ணோம், நான் M.com படிச்சேன் ஆனா, அப்பா வோட பிசினஸ் ல பிஸி ஆகிட்டேன்
சரி, வீட்டுக்கு வாயேன்
ஓ, இந்த ஊரும், மக்களும் திருந்திட்டங்களா என்ன?
இல்லடா, இப்பவும் ஊரு கட்டுப்பாடு இருக்கு ஆனா அத யாரும் மதிக்கிறது இல்ல
கோவிலுக்கு போவோமா
ம்…
அதே பவள மல்லி மரத்துக்கு அடியில் அன்று போலவே இன்றும் கைகளை கோர்க்க
குருக்கள் வந்தார்
யாரு தம்பி ஊருக்கு புதுசா, உங்க புக்காத்து மனுஷாளா
என்ன மீனா, முத்து குருக்கள் தான இவரு, இன்னும் வயசே ஆகல, அப்படி யே…. இருக்காரே
டேய் அகிலா இது அவரோட பையன்…. டா
ஓ, ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல
வீட்டுக்கு நுழைந்து, அண்ணா இவன், சீ இவரு தான் அகிலன் என் கூட படிச்ச…
ஓ நம்ம மளிகை கடை காரர் பையனா, வாங்க உக்காருங்க, அப்பா எப்படி இருக்காரு
இங்க இருக்கப்போ நாங்க வாங்குன இடம் ஒன்னு கிடக்கு அதான் அத விக்கலானு
ஓ அதுக்கென்ன நானே வாங்கி போடுறேன் மீனா பேர்ல இடப்பத்திரத்தை கொடுங்க
இதற்கிடையில் உள்ளே, மீனா எங்க போய் ஊரு சுத்திட்டு வர, வீட்ல எவ்ளோ வேலை கிடக்கு என்ற அதிகார குரலும் மன்னிச்சுக்கோங்க அண்ணி என்ற அடிமை குரலும் கேட்க
சார், உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா மீனாவ கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி, யோசிச்சு சொல்லுங்க
உள்ளே நடக்கும் பூசல் தெரிந்தும் வேறு வழி தெரியாம இருந்த மீனாவின் அண்ணன் தலை உடனே சம்மதம் எனும் நோக்கில் ஆட
கையில் மோர் கொண்டு வந்த மீனா விக்கித்து நிற்க மீனாவின் கையில் ஒரு கடிதத்தை திணித்து விட்டு விடை பெற்றான்
காலம் மாறலாம் காதல் மாறுமோ, மறக்குமோ உந்தன் முகம்
கடிதம் சிரித்தது.
2 Comments
அந்தாதி கதை யில் எனது கதை வெளி வந்ததில் மகிழ்ச்சி, மின் கைத்தடி ஆசிரியர் கமலக்கண்ணன், மற்றும் தோழி லதா சரவணனுக்கு நன்றிகள்
நல்லாயிருக்கு..👌