பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் – 4 காலச்சக்கரம் நரசிம்மா

4. தங்கத்திற்குத் தங்கமுலாம்

பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான
சொல்லக் கேளு கௌரி, கெந்திச்சீலைமால்
தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை பகர்கின்ற
தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த
சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சத்தாலே
நண்ணிநீ ஒன்பதையும் கட்டு கட்டு!

சஷ்டி சாமி தனது கைகளால் அந்த பாறையின் மீது நின்றிருந்த சிலையை வருடிக்கொண்டிருக்க, நல்லமுத்து எரியும் தீயின் ஒளியில், அந்தச் சிலையையே வெறித்துக்கொண்டிருந்தார். வெளியே அருவி பொழியும் ஓசையும், அது பாறையில் மோதித்தெறிக்கும் ஒலியும்தான் கேட்டன. நல்லமுத்துவின் முகத்தில் கவலை தாண்டவமாடியது. சஷ்டி சாமி தனது ஆய்வுகளுக்குப் பிறகு தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போடாமல் இருக்க வேண்டுமே என்கிற கலவரம் அவரது பார்வையில் பிரதிபலித்தது. ஆனால் கேள்விகளால் எதையும் கேட்காமல் மௌனமாக நின்றார். சஷ்டி சாமி மெதுவாகத் தனது சூழ்நிலையை மறக்கத் தொடங்கி, அந்த நவபாஷாணச் சிலையில் ஐக்கியமானார்.

அசல் பழனி தண்டாயுதபாணியின் நவபாஷாண மூர்த்தம்தான் அங்கே இருக்கிறதாக அதைப் பார்ப்பவர்கள் எண்ணுவார்கள். ஆனால் அதே போன்ற நவபாஷாணச் சிலைதான்.

நல்லமுத்துவின் பாட்டனார் நாகரத்தினம், இவரது தந்தை கந்தகோவுக்கு நவபாஷாணக் கட்டு சங்கல்பம் ஒன்றைச் செய்து வைத்தார். குடும்பத்தினர் ஒவ்வொருவரும் நவபாஷாணக் கட்டு சங்கல்பம் எடுத்துக்கொண்டு, இந்த நவபாஷாண முருகன் சிலையைப் போஷித்து வர வேண்டும் என்று இவரது தந்தை கந்தகோ கட்டளையிட்டிருந்தார். நல்லமுத்து இன்னமும் தனது வாரிசுகளுக்கு அந்த சங்கல்பத்தைப் போதிக்கவில்லை. இந்த முறைதான் அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து சங்கல்பம் செய்விக்க வேண்டும்.

இன்றும் நல்லமுத்துவின் மனதில் தான் சங்கல்பத்தை ஏற்றுக்கொண்ட அந்த நாள் நினைவில் உள்ளது. இவரது தந்தை கந்தகோ இந்த இடத்திற்கு இவரை ரகசியமாக அழைத்து வந்து சங்கல்பத்தைச் செய்து வைத்தார். அவரது கரகரப்பான குரல், இப்போதும் இந்தக் குகையின் பாறைகளில் எதிரொலித்து, இவரது செவிகளில் கேட்டுக்கொண்டிருந்தது.

“நல்லமுத்து! இன்னைக்கு உனக்கு நவபாஷாணக் கட்டு சங்கல்பம் செய்யப் போறேன்..!” –என்று தொடங்கினார், கந்தகோ.

“பாஷணமா..? அப்படின்னா..?’’ –சிறுவன் நல்லமுத்து வியப்புடன் கேட்டிருந்தான்.

“நல்லமுத்து..! பட்சணம் சாப்பிடறே இல்லே… பட்சம்-னா சாதகம்னு பொருள். பட்சணம் என்பது சாதகமான நுகர்ச்சி. பாதகமான நுகர்ச்சி பாஷாணம்.

“பாஷாணம் என்றால் விஷம், நஞ்சு என்று பொருள். பாஷாணத்தில் 64 வகையுண்டு. நவ பாஷாணம் என்றால் ஒன்பது வகையான விஷங்களை, போகர் வரைந்த முறைப்படி, உபயோகித்துக்கட்டவேண்டும். இதுதான் நவபாஷாணக் கட்டு சங்கல்பத்தில் நீ தெரிந்துகொள்ள வேண்டிய முதல் பாடம்.

“போகர் 18 சித்தர்களில் ஒருவர். வேட்கோவர் வகுப்பைச் சேர்ந்தவர். எல்லாச் சாத்திரங்களையும் கற்றுக்கொண்டவர். சித்தத்தை அடக்கியதால் மட்டும் இவர் சித்தர் ஆகலை. இந்த உலக இயக்கத்தை, இறை ஆற்றலை, உயிர்த் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து, நுகர்ந்து, இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையைத் தனது வசப்படுத்த்தினார். இவரோட குரு பெயர் காலங்கி முனிவர். காலங்கியே, எனது சிறந்த சீடன்-னு போகரைப் பாராட்டினார்.

Nadi Leaf Reading Followup – Davidya.ca

“போகரோட மருத்துவ ஞானம் அளவற்றது. இவருடைய சுவடித் தொகுப்புகள் இந்தக் கால வைத்தியர்களுக்கே உபயோகப்படும். நிகண்டு, வைத்தியம், துவாத காண்டம், ஆன்மீக விஷயமா ஞான சூத்திரம், அட்டாங்க யோகம், ஞான சாராம்சம்னு நிறைய எழுதியிருக்கார்.

“இந்த நவபாஷாணச் சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேகத் தீர்த்தத்தை நாம அருந்தினால், தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும். அது மட்டுமா..! நம்மளோட ஏழு நாடிச் சக்கரங்களை சீர்படுத்தி, இயங்க வச்சு, அரிய சக்திகளைப் பெறலாம். எல்லாத் துறைகளிலும் மன்னனாக நாம இருக்கலாம்.

“உலக மக்களுக்காக நவபாஷாணங்களின் சேர்க்கையில், போகர் மூன்று நவபாஷாண முருகன் சிலைகளை உருவாக்கினார். அதுல முதல் சிலைதான், பழனி மலையில இருக்கிற தண்டாயுதபாணி சிலை.

The Ancient Secret Behind Palani Murugan Idol | Astro Ulagam

“இரண்டாவது சிலையை இங்கே நம்ம கோடைகானலுல பூம்பாறையில மறைச்சு வச்சு, அதனை தன்னோட வம்சத்தையே பார்த்துக்க வச்சார். அதனாலதான் இந்த இடத்தை நாம் போகர் பாசறைனு சொல்லறோம். பல குடும்பங்களுக்கு கைமாறிய அந்த சிலை இப்ப நம்ம குடும்பத்து வசம் வந்திருக்கு. இந்த நவபாஷாண மூலிகைக் கலவையைத்தான் வருஷா வருஷம் தைப்பூசம் அன்னைக்கு உனக்குக் கொடுக்கறேன். நீயும், உனது வாரிசுகளுக்கு வருஷா வருஷம் இதைக் கொடுக்கணும். உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் சரி..! அவர்களை வரவழைச்சு இந்த மூலிகைத் தீர்த்தத்தை அவங்களுக்கு தரணும். இதை அருந்தும்வரை உன் குடும்பம்தான் எல்லாத்திலும் ராஜா..!’’ — என்று கூறியிருந்தார் கந்தகோ.

உண்மைதான்.! நவபாஷாண சங்கல்பத்தை எடுத்துக்கொண்ட பிறகு, இவரது குடும்பம் எல்லாத்துறையிலும், கொடி கட்டிப் பறக்கிறது. சினிமாத் துறை, அரசியல், கிரிக்கெட், பத்திரிக்கைத்துறை, தொழில்துறை, ஊடகத்துறை என்று ஒரு துறையை விடாமல் புகுந்து புறப்பட்டு, பணத்தை அள்ளுகிறது இவர் குடும்பம். அனைத்துக்கும் காரணம் இதோ இந்த நவபாஷாணச் சிலைதான். இன்னும் குடும்பத்தினருக்கு இந்த ரகசியத்தைப் பற்றிக் கூறவில்லை. ஆனால், அவர்களது அத்தனை சாதனைகளுக்கும் காரணம், தன்னிடம் உள்ள ஒரு அபூர்வ சக்தி என்பதை மட்டும் அவ்வப்போது அவர்களிடம் வலியுறுத்தி வருகிறார். அந்தச் சக்தி என்ன என்று அவர்கள் கேட்டும், இவர் இதுவரையில் பதிலைக் கூறாமல், மழுப்பி வருகிறார்.

“அப்பா..! மொத்தம் மூணு சிலைன்னு சொன்னீங்களே..! ஒண்ணு பழனியில் இருக்கு. ரெண்டாவது, இதோ நம்ம போகர் பாசறையில் இருக்கு. மூணாவது எங்கே இருக்கு..?’’ — நல்லமுத்து கேட்டதும், கந்தகோ சிரித்தார்.

“இதுதான் மனுஷனோட அற்பத்தனம். கையில் ஒரு நவநிதி இருக்கு. இருந்தாலும், மூணாவது சிலை எங்கே இருக்குனு கேட்கிறே பாரு..! அதுதான் நம்ம பேராசை. அது எங்கே இருக்குனு யாருக்குமே தெரியாது. நம்ம கிட்டே இருக்கிற சிலையை ஆராதிச்சு, போஷிக்கணுமே தவிர, மூன்றாவது சிலையைப் பத்தி நினைக்கக்கூடாது. கையோட அதை மறந்துட்டு, ஆகவேண்டியதைப் பாரு..!’’ கந்தகோ கூறியிருந்தார். அதன்பிறகு நல்லமுத்து அந்த மூன்றாவது சிலையைப் பற்றி நினைக்கவேயில்லை.

சென்ற தைப்பூசத்தின் போது, தனியாக வந்து நவபாஷாண முருகன் சிலைக்கு அபிஷேக பூஜை செய்து விட்டு, மூலிகை நீரைச் சேகரித்து, வீட்டிற்கு எடுத்துச்சென்று குடும்பத்தினருக்குக் கொடுத்தார். மருமகள் சத்தியதேவிதான் உடனே கூறினாள்.

“மாமா..! வழக்கமா நீங்க கொடுக்கிற மாதிரி இல்லை. சுவையில் எதோ மாறுபாடு தெரியுது. ஏதோ குறையுது..!” என்றாள். சொல்லி வைத்தாற்போல, அனைவருக்கும் அன்று உடல்நிலை சரியில்லாமல் போக, அவர்களது சிகிச்சைக்காக வந்த டாக்டர் சுந்தர பாஷ்யம், ‘எதையோ சாப்பிட்டதால், ஃபுட் பாய்சன் ஆகிவிட்டது’ என்று கூறி மருந்து கொடுத்துவிட்டு சென்றார்.

அனைவரும் கண்களில் கேள்விக்கணைகளுடன் நல்லமுத்துவை வெறிக்க, இவர் தனது அறைக்குள் பூட்டிக்கொண்டு, யோசித்துக் கொண்டிருந்தார். என்ன நடந்திருக்கும்..? ஆனால் உடனேயே தங்கையின் வீட்டில் நடைபெற்ற திருமணக் கோலாகலங்களில் இதைப்பற்றி சுத்தமாக மறந்தே விட்டிருந்தார். இன்று தைப்பூசத்தை பற்றி நினைவுபடுத்தப் பட்டதும்தான் சென்ற வருடச் சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. இதோ…. கவலையுடன் புறப்பட்டு வந்திருக்கிறார். நல்லவேளையாக, சஷ்டி சாமி உடனே கண்ணில் போட்டுவிட்டார்.

நல்லமுத்து தொடர்ந்து, அந்த இரண்டாவது நவபாஷாணச் சிலையின் மீது சஷ்டி சாமியின் கைகள் படர்ந்து கொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நல்லமுத்து..! கட்டுத் தளர்ந்திருக்கு..! ஒரு பாஷாணம் வேலை செய்யவில்லை’’ –என்றதும் அதிர்ந்து போனார்.

“என்ன சாமி சொல்றீங்க..? கட்டுத் தளர்ந்திருக்கா..?”

“ஆமா! கௌரி பாஷாணம், கந்தக பாஷாணம், சீலை பாஷாணம், வீரபாஷாணம், கச்சாலை பாஷாணம், வெள்ளை பாஷாணம், தொட்டி பாஷாணம், சூத பாஷாணம், சங்கு பாஷாணம்னு ஒன்பது பாஷாணங்களால கட்டுப்பட்டிருக்கிற இந்தச் சிலையில ஒரு பாஷாணத்தோட கட்டு தளர்ந்திருக்கு.” –சஷ்டிசாமி கூறினார்.

நவபாஷாணம்

“அதெப்படி தளரும்..? போகரே செஞ்ச சிலைதானே..?’’ –நல்லமுத்து பதறினார்.

“அவர் செஞ்சாரு..! பராமரிக்கிறது நீதானே..!”

“அவர் கட்டு தளரக்கூடியதா என்ன..? எவ்வளவு பெரிய மகான்..?”

“நல்லமுத்து! Zn + H2SO4 → ZnSO4 + H2 -னு பார்முலா-னு ஆசிரியரா சொல்லி செஞ்சு காட்டுவேன். அந்த மாணவர்கள் அந்த பார்முலாப்படிதான் செய்யணும். யாராவது தப்பு செஞ்சா நான் எப்படி பொறுப்பாவேன்..? அதுபோல போகர் பார்முலாவை வச்சு பரிசோதனை செஞ்சு வெற்றியை அடைஞ்சிருக்கார். உனது அதிர்ஷ்டம் உனக்கு ஒரு சிலை கிடைச்சுது..! ஆனா நீ அதைச் சரியா பராமரிக்கலை..! பழநியிலேயே எம்ஜிஆர் ஆட்சிக் காலத்துல அபிஷேகத்தை நிறுத்தினாங்கனு நினைவு..!” –சஷ்டி சாமி கூற, நல்லமுத்து வெலவெலத்துப் போனார்.

“எந்த பாஷாணம் குறையுது..?’’ –நல்லமுத்து கேட்க, யோசித்தார் சஷ்டி.

“இன்னைக்கு ஒரு ராப்பொழுதை இங்கே கழிக்கலாமா..? நான் கண்டுபிடிச்சுச் சொல்லிடுவேன்.’’ –சஷ்டி சாமி சொல்ல, தலையசைத்தார் நல்லமுத்து.

“நான் திரும்பிப் போகலேன்னா கேட்பார் இல்லே..! பள்ளங்கி பவனத்து காவல்காரன் ராஜாபாதர் மட்டும்தான் யோசிப்பான். ஆனால் அவனும் தேட மாட்டான்..! எனது ரகசியப் பயணங்கள் அவனுக்குப் புதுசு கிடையாது.” –நல்லமுத்து கூறியதும், சஷ்டி சாமி தலையசைத்தார்.

“நான் ஆராய்ச்சி பண்ணியிருக்கேன் நல்லமுத்து..! கெமிஸ்ட்ரி படிச்சவங்களுக்குத் தெரியும். என்னவோ வெள்ளைக்காரன் வந்து நமக்கு ஸயன்ஸைப் போதிச்சதா சில தற்குறிங்க சொல்லிட்டுத் திரியுதுங்க. உண்மையில, எல்லாமே நம்ம சித்தருங்க கண்டுபிடிச்சதுதான். அவங்க கண்டுபிடிப்புகள்தான் சொக்கத் தங்கம். அந்தச் சொக்கத் தங்கத்துக்கு ஆங்கில தங்கமுலாம் பூசி இப்ப நாம உபயோகிச்சிட்டு இருக்கோம். நானே பல உண்மைகளை ஆராய்ச்சி பண்ணிட்டு, இப்ப இங்கே வந்து உண்மைகளைத் தெரிஞ்சுக்கிட்டு இருக்கேன். உண்மையில. கௌரிப் பாஷாணம்தான் ஆங்கிலத்துல, Arsenic Penta sulphite கெந்தகப் பாஷாணம்தான் Sulphur; சீலைப் பாஷாணம்: Arsenic Di Sulphite, வீரப் பாஷாணம்: Mercuric Chloride, வெள்ளைப் பாஷாணம்: Arcenic Tri Oxide, சூதப்பாஷாணம்: Mercury..! இதெல்லாம் நவபாஷாணத்துல இருக்கு..! ஆனால் சங்குப் பாஷாணம், கச்சால பாஷாணம், தொட்டிப் பாஷாணம் இந்த மூன்றும் என்னன்னுதெரியலை..! அது நம்ம சித்தர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்..! அந்த மூணு பாஷாணத்துல ஏதாவது ஒண்ணு தளர்ந்து போயிருந்தாகூட உனக்கு இனிமே இந்தச் சிலை பிரயோஜனப்படாது..! உன்னால இந்தத் தடவை தைப்பூச பூஜை செய்ய முடியாது.” — சஷ்டி சாமி சொல்ல, நல்லமுத்துவின் நாக்கு உலர்ந்து போனது.

-தொடரும்…

< மூன்றாவது பகுதி | ஐந்தாவது பகுதி >

ganesh

13 Comments

  • தங்கத்துக்கு தங்கமுலாம். நல்ல விளக்கம்.– சுதா சிம்மன்

  • அருமை! இப்படி உங்களைப் போல் விபரம் அறிந்தவர்கள் சித்தர்களுக்கும் இன்றைய அறிவியலுக்குமான தொடர்பை ஆராய்ச்சி செய்து அறிவித்தால் உலகிற்குப் பயனுள்ளதாக அமையும்.நன்றி சார்!

  • நவபாஷாணம் நவபாஷாணம் பற்றிய விளக்கம் அற்புதம் நம்மிடம் இருக்கும் பொக்கிஷங்களை விட்டு அந்நியர்களிடம் இருக்கும் பொக்கிஷங்கள் ஆசைப்படுவதும் அதை உயர்த்திப் பிடிப்பதும் நம்மவர்களின் சித்தாந்தம் நிஜத்தை தொலைத்துவிட்டு நிழலை தேடிக் கொண்டிருக்கிறோம் இருக்கிறதை விட்டு இல்லாத ஒன்றுக்காக ஆசைப்படுவதும் நம் வழக்கம் தான் நவ பாஷாணம் கட்டு தளர்ந்து இருப்பது ஏன் எதனால் யாரால்

  • Interesting one
    Learnt a lot
    Waiting for next

  • இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞான தங்கமே!

  • Really very interesting to study and looking for the next issue

  • Really the story (incident) is very interesting and looking for the next issue

  • எதிர்பார்ப்பு கூடிகிட்டே போவுது…😍

  • மிகவும் விறுவிறுப்பாக போகுது.

  • Very interesting.

  • மிக அருமையாக இருக்கிறது. படிக்கும் ஆவலை தூண்டும் வண்ணம் கதையின் நகர்வு மிக அருமை

  • Very good information.. Detailed research as well….

  • நவபாஷாண விளக்கமும் போகர் பற்றிய குறிப்புகளும் சிறப்பு! அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...