பேய் ரெஸ்டாரெண்ட் – 4 | முகில் தினகரன்
தாங்கள் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போகும் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு தற்காலிக ஆபீஸ் அறையை அமைத்து, அதில் வைத்து பணியாட்களை அப்பாயிண்ட் செய்வதற்கான இண்டர்வியூவை நடத்தினான் திருமுருகன்.
முதலாவதாக வந்த இளைஞன் பார்வைக்கு ஒரு ஹீரோ போல் இருந்தான்.
“இவ்வளவு அழகான முகத்துக்கு…பேய் வேஷம் போடலாமா?” திருமுருகனுக்கே அது தர்ம சங்கடமாயிருந்தது. இருந்தாலும் கேட்க வேண்டிய கடமைக்காக கேட்டான். “மிஸ்டர் சங்கர்…எங்க ஹோட்டல்…மத்த ஹோட்டல்களை மாதிரி இல்லை!…ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஹோட்டல்…!…நீங்க இங்க சர்வர் வேலைக்காக வந்திருக்கீங்க!…அந்த வேலைல நீங்க சேருவதற்கு எங்க மேனேஜ்மெண்ட் போடுற முதல் கண்டிஷன் என்ன?ன்னா…” சொல்லி விட்டு நிறுத்தி, அவன் முகத்தையே கூர்ந்து பார்த்தான் திருமுருகன்.
“சொல்லுங்க சார்…எதுவானாலும் நான் செய்யத் தயாராயிருக்கேன்”
“வந்து…நீங்க…இதே உடைல…இதே கெட்டப்ல…சர்வர் வேலை பார்க்க முடியாது”
“ஹோட்டல் ரூல்ஸ்படி நீங்க என்ன யூனிஃபார்ம் கொடுத்தாலும் அதைப் போட்டுக்கறேன் சார்” உடனே சொன்னான் அந்த இளைஞன்.
“ம்ம்ம்…நீங்க யூனிஃபார்ம் போட வேண்டியதில்லை மிஸ்டர் சங்கர்…அதுக்கு பதிலா வேஷம் போட்டுக்கணும்”
“வேஷமா?…என்ன சார் சொல்றீங்க?…என்ன வேஷம் நான் போட்டுக்கணும்?”
“பேய் கெட்டப்…அல்லது எலும்புக் கூடு கெட்டப்” என்று திருமுருகன் சொன்னவுடன் “விருட்”டென்று தன் சேரிலிருந்து எழுந்த அந்த இளைஞன், “என்ன சார்?…என்ன நெனைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல?…நீங்க திறக்கப் போறது ஹோட்டலா?…இல்லை…நாடகக் கம்பெனியா?”.
“மிஸ்டர்…மொதல்ல் உட்காருங்க…நான் என்ன சொல்றேன்!னு கேளுங்க..கேட்டுட்டு அப்புறமா கோபப்படுங்க” என்றான் திருமுருகன்.
யோசித்தவாறே அமர்ந்தான் அந்த இளைஞன். தாங்கள் ஆரம்பிக்கப் போகும் ரெஸ்டாரெண்ட் குறித்த விபரங்களை திருமுருகன் அவனுக்கு விவரிக்க, ”அடப் போங்கய்யா நீங்களும் உங்க ஐடியாவும்” என்று சத்தமாய்ச் சொல்லி விட்டு, வேகமாய் ந்ழுந்து அதே வேகத்தில் அறையை விட்டு வெளியேறினான் அந்த சங்கர்.
அவன் சென்றதும் அமைதியாய் யோசித்தான் திருமுருகன்,. “என்ன இது?…முதல் ஆளே…இப்படி கத்திட்டுப் போறான்?…இதைப் பார்க்கும் போது…எவனுமே எங்களோட ஐடியாவுக்கு ஒத்துக்க மாட்டானுக போலிருக்கே?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, அடுத்த ஆளை வரவழைத்தான்.
முதல் இளைஞனிடம் தான் பேசியவற்றை அப்படியே இரண்டாவது ஆளிடம் சொல்ல, அவனோ சற்றும் யோசிக்காமல், “சார்…கிரேட் சார்!…உங்களோட இந்த வித்தியாசமான ஐடியா நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தரும் சார்…நான் ரெடி சார்!…” என்றான்.
திருமுருகன் மனதில் சரிந்து போயிருந்த ஆர்வம், மெல்ல நிமிர்ந்தது.
“உங்களோட பேர்…என்ன சொன்னீங்க?”
“மணிவண்ணன் சார்”
“ஓ.கே மணிவண்ணன் இண்டீரியர் வொர்க் முடிய எப்படியும் இன்னும் ஒரு வாரம் பத்து நாள் ஆகும்…அது முடிஞ்சதும்…நானே உங்களைக் கூப்பிட்டுச் சொல்றேன்” என்றான் திருமுருகன்.
அவனைத் தொடர்ந்து வந்த ஆட்கள் அனைவருமே சந்தோஷமாய் திருமுருகனின் கண்டிஷன்களை ஏற்றுக் கொள்ள, அன்றே தேவையான ஆட்களை மொத்தமாய் பேசி முடித்தான்.
“ஆமாம்…என்னைய வேலைக்கு சேர்த்துக்க மாட்டியா?” அதே பெண் குரல் திருமுருகனின் காதருகே ஒலிக்க,
திடுக்கிட்டு எழுந்தவன் சுற்றும்முற்றும் தேடினான். யாருமேயில்லை. “என்ன இது…இப்ப அந்தப் பெண் குரல் கேட்டிச்சே?”
அறைக்கு வெளியே வந்து யாராவது கண்ணில் படுகிறார்களா என்று தேடினான். யாராவது இருந்தால்தானே?
அன்று மாலை, தன் சாதனையை தன் நண்பர்களிடம் காட்டிப் பெருமையும் பட்டுக் கொண்டான்.
“பரவாயில்லையே…ஒரே நாள்ல மொத்தமாய் எல்லோரையும் அப்பாயிண்ட் பண்ணிட்டியே?” ஆனந்தராஜ் பாராட்ட,
“ஆனந்து…ஒரு விஷயம்…”சன்னக் குரலில் தயங்கியவாறே சொன்னான்.
“என்ன விஷயம்…சொல்லு”
“இன்னிக்கு மதியம் எல்லா ஆட்களையும் அப்பாயிண்ட் பண்ணி அனுப்பிட்டு தனியா உட்கார்ந்திருந்தேன்…அப்ப அந்தக் குரல் கேட்டிச்சு”
“பெட்டிக்கடை ரஞ்சிதா குரலா?” இதழோரம் இழைந்தோடும் இளக்காரப் புன்னகையோடு விஜயசந்தர் கேட்க,
“ச்சூ…”என்று சொல்லி அவனை அடக்கிய ஆனந்தராஜ், திருமுருகனைப் பார்த்து, “டேய்…திருமுருகா…நானும் மூணு நாளா பார்த்திட்டிருக்கேன்…நீயும்… “ஏதோ பெண் குரல் கேட்டிச்சு…கேட்டிச்சு”ன்னு புலம்பிக்கிட்டே இருக்கே…என்னடா விஷயம்?…என்ன பிரச்சினை உனக்கு?” நிதானமாய்க் கேட்டான். அதுதான் சந்தர்ப்பம் என்று, தனக்கு ஏற்பட்ட அந்த பெண் குரல் அனுபவத்தை தெளிவாய் விளக்கினான் திருமுருகன்.
“டேய்…நாம் ஒரு வித்தியாசத்துக்காகத்தான் “பேய் ரெஸ்டாரெண்ட்”ன்னு பேர் வெச்சிருக்கோம்… நீ அதை நிஜமாக்கிடுவே போலிருக்கே?” என்றான் விஜயசந்தர் மீண்டும்.
“இல்லை விஜயசந்தர்…நாம முருகன் சொல்றதை அப்படியே அலட்சியப்படுத்தி விட முடியாது!…ஏன்னா…அவன் பொய் சொல்லும் ரகமில்லை…” என்று சொன்ன ஆனந்தராஜ், “டேய் அடுத்த தடவை அந்தக் குரல் கேட்கும் போது சொல்லு…என்ன ஏது?ன்னு ஆராய்ந்து பார்த்திடுவோம்” என்றான்.
“அப்பாடா…இப்பவாது என்னை நம்புனீங்களே…இது போதும்” என்றான்.
“ம்ஹும்…இது போதாது” பெண் குரல்.
“இப்ப…இப்ப…கேட்டிச்சு…நான் “இது போதும்”ன்னு சொன்னதுக்கு “ம்ஹும்…இது போதாது”ன்னு பதில் சொல்லிச்சு” பரபரப்பாய்ச் சொல்லி விட்டு நாலாப்புறமும் தேடினான் திருமுருகன்.
அவன் தோளைத் தொட்டு நிறுத்திய ஆனந்தராஜ், “டேய்…இப்ப…இங்க நாம மூணு பேரு மட்டும்தான் இருக்கோம்…அதெப்படி உனக்கு மட்டும் குரல் கேட்குது…எங்களுக்குக் கேட்காமல்?” கேட்டான்.
“அதான் எனக்கும் புரியலை” என்றவாறே சுற்றும்முற்றும் பார்த்தான் திருமுருகன்.
“த பாரு…முடிஞ்சா சீக்கிரமே போய் ஒரு நல்ல மெண்டல் டாக்டரைப் பாரு…ஏன்னா….இதுதான் ஆரம்ப ஸ்டேஜ்…இப்ப விட்டுட்டேன்னா…அப்புறம் முழுப் பைத்தியமாயிடுவே” என்று ஆனந்தராஜ் சீரியஸாய்ச் சொல்ல,
நொந்து போனான் திருமுருகன்.
அப்போது அவன் காதருகே, “க்ளுக்” என்ற பெண் சிரிப்பு ஒலித்தது. ஆனால் திருமுருகன் அதைத் தன் நண்பர்களுக்குச் சொல்லவில்லை. சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை என்பது அவனுக்குத்தான் தெரியுமே?
(தொடரும்)
3 Comments
தொடக்கத்திலயே திகில்! அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நல்லா கொண்டு போறாரு…😍
அருமையாக இருக்கு