அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்

 அந்தாதிக் கதைகள் – 2 | விஜி முருகநாதன்

நானும்தான் காத்திருந்தேன். ஈரோடு செல்லும் பஸ்ஸிற்காக..

“போய் இறங்கினவுடனே கால் பண்ணு ராஜி..”என்றபடியே பஸ்ஸில் ஏற்றி விட்டார் என் கணவர்.

பஸ்ஸில் அவ்வளவாக கூட்டமில்லை.ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்தவுடன் மனம் குதூகலித்தது.எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன இப்படி பண்டிகைக்குப் போய்! கல்யாணத்திற்குப் பிறகு பண்டிகை நாளன்று போய் வந்ததோடு சரி..

..”இந்தத் தரம் நம் வீட்டு முறை ஒருநாள் பண்றோம் ராஜி.குடும்பத்தோடு வந்துருங்க” என்று அத்தை அழைத்து விட்டு மாமியாரிடமும் சொன்னார்.. விடுமுறைக்கு வந்திருந்த நாத்தனார்..”போய்ட்டு வாங்க அண்ணி..நான் பார்த்துக்கறேன்..”என்றாள்.

மாமியார் கணவரும் தலையாட்ட புறப்பட்டு விட்டேன்.ஈரோட்டின் மிகப்பெரிய பண்டிகை வருடாவருடம் பங்குனி மாதச் சாட்டாகத் தொடங்கி பதினைந்து நாட்கள் கொண்டாடப்படும் மாரியம்மன் பண்டிகைதான்.

ஒரு மாதம் ஊரே திருவிழா கொண்டாட்டம் தான்..மூன்று பகுதியில் இருக்கும் மாரிகளுக்கும் ஒரு நேரத்தில் சாட்டி பொங்கல் வைத்து மஞ்சள் நீராட்டுவார்கள்..பலவகைக் கடைகளும், ராட்டினங்களும், ஆர்ச்செஸ்ட்ராக்களுமாக கொண்டாட்டம் தான்.

நான் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அத்தை வீட்டில்தான் படித்தேன்..அப்பாவிற்கு வடக்கே மாறுதல் வர ..”வயசுப் பொண்ணை வைத்துக்கொண்டு அங்கே என்ன செய்வது..?! என்று தவிக்க..

..”ஏன் தம்பி..நாங்கள் இல்லையா..?!தீபா ,உமா வோடு இனி ராஜியும் இங்கேயே படிக்கட்டும்.” அத்தை வீடு எனக்கு எப்போதுமே பிரியமானது என்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போனது..

..”எக்ஸ்கியூஸ்மீ..இங்கே உட்காரலாமா..?!” என்றவளை நிமிர்ந்து பார்த்தேன்.சட்டென்று ஒரு ஜாடைக்கு சுனந்தா டீச்சர் போலவே இருந்தார் அந்தப் பெண்..

என்னுடைய ஒன்பதாம் பத்தாம் வகுப்பு கணக்கு டீச்சர் தான் சுனந்தா டீச்சர்.

..அன்று ..பள்ளியில் நுழைந்தவுடன் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் பூங்கொடி ..”ராஜி ஒரு குட் நியூஸ்..”

..”அப்படி என்ன குட்நியூஸ்..?!”

..”இன்னைக்கு கணக்குப் பாடத்திற்கு வேற மிஸ் போட்டுட்டாங்களாம்..”

“ஏன்..அந்த சிடுமூஞ்சி சித்ரா , கும்பகர்ணி சொர்ணாம்பா..”எல்லாம் என்ன ஆச்சாம்..?”

“அதென்னவோ தெரியலை.முத்தண்ணாதான் சொன்னாரு..! நீதான் அவரு சொந்தக்காரி ..நீ கேட்டா சொல்லுவாரு.”

எங்கள் பள்ளியில். பியூனாக பணிபுரியும் முத்து எங்கள் உறவினர்..

..”முத்துச் சித்தப்பா.. புது மிஸ் வர்றாங்களா..”

“ஆமாண்டா..டீச்சர்ஸ் பத்த மாட்டேங்குதாம்..சுனந்தா டீச்சர் ..இன்னைக்கு சார்ஜ் எடுத்துக்கறாங்க..பெருந்துறையில் இருக்கற ஆசிரமத்து ஸ்கூல்ல இருந்து வர்றாங்க..”

..”அப்பாடி” ..என்று இருந்தது எனக்கு.. பூங்கொடிக்கும், கோகிலாவிற்கும் கணக்கு தண்ணீர் பட்ட பாடு..எனக்குத்தான் பாகற்காய் ..

அன்று இரண்டாவது வகுப்பே கணக்குதான்.எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்க..”ஏய் கொசு மருந்து வருது..” காதில் கோகி கிசுகிசுப்பாக..

சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.. அதிகமாக பெர்ப்யூம் போடுவதால் ஹெட்மிஸ்ட்ரஸ் பரிமளத்தின் பெயர் அது.. புனைபெயர் வைப்பதில் கோகி கில்லாடி..

உள்ளே நுழைந்த ஹெட்மிஸ்ட்ரஸ்ஸின் உடனிருந்தார் சுனந்தா டீச்சர்…”டியர்..ஸ்டுடண்ட்ஸ்..இவங்க தான் இன்னைலேர்ந்து உங்க புது கணக்கு மிஸ்..அருமையா சொல்லிக் கொடுப்பாங்க புத்தியோடு படிச்சு ஸ்கூலுக்கு செண்டம் கொண்டு வந்துரணும்..”

..”ஓ.கே.மிஸ்..” என்றோம் கோரஸாக….”அப்படியே கொஞ்சம் கொசு மருந்தை குறச்சுப் போட்டுட்டு வந்தீங்கன்னா நூத்துக்கு இருநூறு என்றாள் கோகிலா மெலிதாக..

உள்ளே வந்து நின்ற சுனந்தா டீச்சரை அப்போது தான் நன்றாகப் பார்த்தேன்.. ஐந்தரை அடி உயரம்.நல்ல சிவந்த நிறம்.உதடுகளை விரித்தாலே கன்னத்தில் குழி விழுந்தது..

அன்றிலிருந்து எங்களின் ஹீரோயின் அந்தஸ்துக்கு அவர் கேட்காமலேயே அமர்த்தி விட்டோம்…எங்கள் டீச்சர்கள் எல்லாம் நடுத்தர வயது ..பெரிய பூப்போட்ட பாலியெஸ்டர் புடவையும் பட்டைச் செயினோடு இறுக்கமாக சிடுசிடுவென்று இருப்பார்கள்.

சுனந்தா டீச்சர் நீளமாக ஒரு செயின் போட்டிருந்தார்.அதன் இரண்டு முனைகளும் மாறுபட்டு இடையில் ஒரு பட்டாம்பூச்சி லாக்கெட் கோர்ந்திருந்தது. அதில் சேலைக்குத் தகுந்த மாதிரி கலரை மாற்றிக் கொள்ளும் தகடுகள் இருந்தன.காதில் பெரிய ரிங்குகள் ஆடின.இது போதாதா எங்களுக்கு.. தினமும் டீச்சர் சேலைக்கு மேட்சாகப் போடும் வளையல் கலர் மாற்றும் லாக்கெட்டுக்கு அடிமையாகவே ஆனோம்.

நாங்கள் மட்டுமா ஆனோம்.எங்கள் திருமணம் ஆகாமல் இருந்த இரண்டு அறிவியல் பாட ஆசிரியர்களும் தான்..அதுவரை நல்ல நண்பர்களாக இருந்தவர்களுக்குள் சுனந்தா டீச்சரின் மனம் கவர்ந்தவர் யார் ..?! என்பதில் போட்டியே போட்டார்கள்.. சம்பத் ஆசிரியர் கறுப்பாக இருந்தாலும் களையாக இருப்பார்.

..”பில்லா ..”என்று பெயரிட்டிருந்தோம் ..மனோகர் ஒல்லியாக உயரமாக சிவப்பாக இருப்பார்.. அதனால் அவர் ஒட்டகம் ..

சுனந்தா டீச்சரோ இருவரிடமும் ஒரே மாதிரிதான் சிரித்து சிரித்துதான் பேசினார் .எங்களுக்குள் பந்தயமே நடந்தது.. சுனந்தா டீச்சர் யாரைக் கல்யாணம் செய்து கொள்வாள் என்று..

கோகியும், பூங்காவும் சம்பத் ஆசிரியர் பக்கம்.. நான் மனோகர் ஆசிரியர் பக்கம்.. காரணம் அவர் எனக்கு டியூஷன் ஆசிரியர்..

அந்தப் பதின்பருவத்தில் ஒரு விநோதப் பொறாமை கூட இருந்தது டீச்சர் மேல்..

..”ராஜி..”

..”டீச்சர்..”

..”இன்னைக்கு டியூஷன் போறப்ப சார் கிட்ட இந்த ஆல்பத்தைக் கொடுத்துர்றியா..?!”

“சரிங்க டீச்சர்..”

வீட்டுக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு ஆல்பத்தை பிரித்தேன்..எல்லாமே சுனந்தா டீச்சரின் சின்ன வயதுப் புகைப்படங்கள்..”வாவ்..”சொல்லிக் கொண்டே பார்த்துக் கொண்டே வந்தவள்..ஒரு இடத்தில் போட்டோ தூக்கி இருக்க..சரி செய்தபோது உள்ளே இருந்து ஒரு பேப்பர் கீழே விழுந்தது.அதில் எதுவும் எழுதி இருக்கவில்லை.. ஒரு இதய வடிவம் மட்டுமே வரையப் பட்டிருந்தது..

ஒரு நொடிதான் மறுகணம் அதை சுக்கலாக கிழித்து. ஜன்னல் வழியாக வீசி எறிந்தேன்..

அன்று மாலை ஆல்பத்தை பார்த்த மனோகரால் முகத்தின் பிரகாசத்தை மறைக்க முடியவில்லை.. இரண்டு முறை புரட்டிப் புரட்டிப் பார்த்தவர் ஆல்பத்தை திருப்பி என்னிடமே கொடுத்து விட்டார். முகம் இருண்டு இருந்ததைப் பார்க்க குற்ற உணர்ச்சியாய் இருந்தது..

இது நடந்து ஒரு.மாதம் இருக்கும்.. அன்று பள்ளிக்குப் போனவளுக்கு
ஏக ஆச்சரியம்.. ஹெட்மிஸ்ட்ரஸ் ரூமில் ஏக கூட்டம்….”ராஜி..டீச்சரும் சாரும் கல்யாணம் பண்ணிகிட்டாங்க..”

..”என்னடி..எந்த சாரும்.. டீச்சரும்..”என்று கேட்க வாயைத் திறந்தவள் ஹெட்மிஸ்ட்ரஸ் ரூமில் இருந்து கூட்டமாக வந்தவர்கள் மத்தியில் சிகப்புப்பட்டுத்தி கழுத்தில் மாலையோடு சுனந்தா டீச்சரும் ,சம்பத் ஆசிரியரும் தெரிந்தார்கள்..

..”முத்துச் சித்தப்பா..” என்றேன் வெளியே நின்றவரைப் பார்த்து..

..”சார் வீட்டில் ஒண்ணும் இல்லாதவளக் கட்டிகிட்டு வந்துட்டான்னு பஞ்சாயத்து.. ஹெட்மிஸ்ட்ரஸ் தான் பேசி ஒத்துக்க வச்சாங்க..”

ஒரு வாரம் கழித்து ஸ்கூலுக்கு வந்த சுனந்தா டீச்சரைப் பார்த்து அதிர்ந்து விட்டோம்..பெரிய பூப்போட்ட பாலியெஸ்டர் சீலை.. கழுத்தில் பட்டைச் செயின்.. கையில் தங்க வளையல்கள் என்று உருமாறி இருந்தாள்..

அப்புறம் எங்களுக்கும் சுனந்தா டீச்சர் மேல் இருந்த ஆர்வம் போய் விட்டது. பத்தாம் வகுப்பு முடிவதற்குள் ஒரு குழந்தைக்கு தாயும் ஆகி விட்டார்..

நான் ஏன் அப்படி செய்தேன்..?! கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல் அந்தக் கடிதத்தை ஏன் கிழித்துப் போட்டேன்.. டீச்சரும் ஏன் ஆல்பத்தில் வைத்துக் கொடுத்தார்கள்.. ஒருவேளை அந்தக் கடிதம் மனோகரிடம் சேர்ந்து இருந்தால் யாருமே இல்லாத மனோகருடன் டீச்சர் சுதந்திரமாக அதே லாக்கெட் செயின் ஷிபான் சேலையுடன் வாழ்ந்திருப்பாளோ..?! என்றெல்லாம் உறுத்தும்..

காலப்போக்கில் எல்லாம் மாறினாலும் அவ்வப்போது தொண்டையில் முள் சிக்கியது போல் உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது..

..”ராஜி.. என்னம்மா தூங்கிட்டியா..”என்று குமார் மாமாவின் குரல் கேட்கவும் தான் பஸ் ஈரோடு நிலையத்தில் நிற்பதே தெரிந்தது.. பரபரப்பாக இறங்கி நடந்தேன்..

..”வா..வா..இப்பதான் வழி தெரிஞ்சுதா..மாப்பிள்ளையும் கிருத்திகாவும் வந்திருக்கலாம் ..” என்றார் அத்தை..

..”என்ன அத்தை குண்டடிச்சுட்ட..”என்று கிண்டல் பண்ணினேன்..

தீபாவும், உமாவும் குழந்தைகளோடு வந்து விடவே நேரம் பறப்பதே தெரியவில்லை. கோவிலுக்குப் போவதும் கடைவீதி போவதுமாக பொழுது குதூகலமாகியது.

..”ஏண்டி ..பொண்ணுகளா..போனமா ..வந்தமான்னு இருக்கணும்.. இன்னைக்கு ஆத்தாளைப் பார்க்கக்கூடாது ஞாபகம் வச்சுக்கங்க..”

தலையாட்டி விட்டு நடந்தோம்.. கம்பத்தை மாரியம்மன் கணவனாக பாவித்து அதை ஆற்றில் விடும் அன்று அம்மன் வெண்மை ஆடை உடுத்தி கைம்பெண் கோலத்தில் காட்சியளிப்பதால் பெண்கள் அதைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.

பொங்கல் நாளின் கடைசி நாளான அன்று கூட்டம் கட்டுக்கடங்காது. மஞ்சள் நீர் விளையாட்டு வேறு.. ஆண்கள் ஒருவர் சட்டை.கூட மஞ்சள் பூசாமல் இருக்காது..

எதை பார்க்கக்கூடாது என்று சொல்வார்களோ அதை கண்டிப்பாகப் பார்க்கும் நம் கண்கள்.. கோவில் தாண்டும் போது சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.. ஆத்தாளின் வெள்ளை உடை கண்ணில் படவே சட்டென்று திரும்பிக் கொண்டேன்.

..”ஏய்..ராஜி ..எப்படி இருக்க..”என்றபடி குதூகலக் குரலில் கேட்டபடி தோள் தொட்டுத் திருப்பினார் அவர்..

..”சுனந்தா டீச்சர்..”

..”நல்லா இருக்கேன்.. டீச்சர்..சார்..குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்காங்க..”என்றேன் அதே குதூகலக் குரலில்..

..”நல்லாயிருக்காங்க..மூத்தவ வெளிநாடு போயாச்சு..” மீதி இரண்டு பேரும் இங்கதான் படிக்கறாங்க..”என்ற டீச்சரை ஆராய்ந்தேன்

கடைசியாக எனது திருமணப் பத்திரிகை கொடுக்கும் போது பார்த்தது.. இப்போது தலை முடி நரைத்திருக்க வேண்டும்.. ஹென்னா போட்டிருந்தார்.. அதேமாதிரி கை நிறைய வளையல்கள்.. வகிட்டிலும் நெற்றியிலும் நீளக் குங்குமம்..

..”ராஜி..உனக்குத் தெரியுமா..?! என்று எதோ சொல்ல வந்தார்.. அதற்குள் எங்கிருந்தோ ஓடி வந்தார் சம்பத் சார்..

..”அடடே ..ராஜியா எப்படி இருக்கே..சுகந்தானே..”என்றபடி பதிலை எதிர்பார்க்காமல் ..”வா..வா..அந்தப்பக்கம் கூட்டம் கம்மியாக இருக்கிறது.. அப்படிப் போயிருவோம்..”என்று கைபற்றி இழுத்தார்.

“இப்படியேதான் ராஜி.. உங்க சார்.. இருப்பியா.. வீட்டுக்கு வாயேன்..”என்றபடியே வேகமாக நடந்தார்.

ஊர்வலம் ஆற்றை நெருங்கிக் கொண்டிருந்தது..அப்போது தான் அந்தப் போஸ்ட்டரைப் பார்த்தேன். கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. மனோகர் சார் அதில் சிரித்துக் கொண்டிருந்தார்.. ஒரு மாதத்திற்கு முந்தைய தேதி அது.

அதிர்ச்சியுடன் பக்கத்தில் வந்து கொண்டிருந்த குமார் மாமாவைப் பார்த்து ..”மாமா..மனோகர் சார் இறந்துட்டாங்களா..?! எப்படி..?!”. பதறினேன்..

..”ஆமா..ராஜி..உங்கிட்ட சொல்லணும் நினைத்தேன் மறந்து போச்சு.. காலையில வாக்கிங் போனவர் மேல பிரேக் பிடிக்காம லாரி மோதி..ஸ்பாட் அவுட்..! சாகுற வயசா ..? விதிய யார் தடுக்கறது..?!”
என்றார் பெருமூச்சுடன்..

பேச்சே வரவில்லை..”ஆக்ஸிடெண்டா..?!”.

என்றோ ஆல்பத்தை ஆவலுடன் புரட்டிய மனோகர் சாரின் முகம் வந்து போனது..

கொஞ்சம் முன்னால் பார்த்த சுனந்தா டீச்சரின் கை நிறைய வளையல்கள்.. ஆத்தாளின் கைம்மைக் கோலம்.. விதியை யார் தடுக்கிறது என்ற குமாரின் மாமாவின் வாசகங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வர..

என் மனதிற்குள் சிக்கியிருந்த கிழிந்த காகிதம் வெளியே வந்து மெதுவாக பறக்க ஆரம்பித்தது..

நிம்மதியுடன் நடக்க ஆரம்பித்தேன். ●

ganesh

8 Comments

  • விதி வலியது என்பதை நிருபிக்கிறது கதை விஜி . யாருக்கு யார் என்பது கடவுள் போடும் முடிச்சு . மீண்டும் ஒரு அருமையான கதைக்கு நன்றி ! எழுத்துப்பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • கதை மிகவும் விறுவிறுப்பு. கடிதத்தை கிழித்து விட்டபோது ஏற்படும் அதிர்வு முடிவில் விதி போட்ட கணக்கில் அமைதி ஆகிறது.
    சிறப்பான எழுத்தோட்டம். வாழ்த்துகள்

    • அருமையாக உள்ளது. சில செயல்களினால் ஏற்படும் விளைவுகள், அச்செயல்கள் நடக்காமல் இருந்தாலும் நடக்கலாம்.

  • முடிவு அருமை

  • Nice one
    God is Great

    • அருமை

  • அருமையானதொரு கதையோட்டம். “”ராஜி..உனக்குத் தெரியுமா..?! என்று எதோ சொல்ல வந்தார்..” என்ன சொள்ளவிருக்கிறார் என்ற ஆர்வத்தை தூண்டி ..கடைசியில் குற்ற உணர்வில் தவித்த ராஜியையும், சுனந்த டீச்சரின் வாழ்வையும் விதி எப்படி அமைத்தது என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் கொண்டு சென்றது சிறப்பு. அருமை அருமை.

  • நன்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...