பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம்-2 -காலச்சக்கரம் நரசிம்மா

2. விமானத்தில் கேட்ட அலறல்..!

மார்ச் எட்டாம் தேதி, 2021.

மலேசியத் தலைநகரம், கோலாலம்பூர் விமான நிலையம்..!

அன்றைய தேதியை எண்ணி, கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகளும், பணியாளர்களும், மனதினுள் எழுந்த சோகத்தையும், குழப்பங்களையும், ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தனர். காரணம், ஏழு வருடங்களுக்கு முன்பாக, இதே நாளில்தான், மலேசிய விமானம், எம்எச் 370 மர்மமான முறையில் காணாமல் போயிருந்தது. அது குறித்துப் பேசவும் யாரும் விருப்பப்படாமல், அவரவர் தங்களது பணிகளை இயந்திர கதியில் செய்து கொண்டிருந்தனர்.

புறப்படுவதற்குத் தயாராக நின்றது அந்த எம்எச் 319 விமானம். மொத்தம் 229 பயணிகளும் 12 விமானப் பணியாளர்களும் அதில் இருந்தனர். அந்த 12 விமானப் பணியாளர்களில், அஷ்டலக்ஷ்மிகளாக எட்டு விமானப்பணிப்பெண்கள் இருந்தனர். ஒருவருக்கொருவர் அழகிலும், நளினத்திலும் போட்டி போட்டுக்கொண்டு விமானத்தைச் சொர்க்கபுரியாக மாற்றிக்கொண்டிருந்தனர்.

ஐம்பது பயணிகளுக்கு ஒரு விமானப் பணிப்பெண் என்கிற விகிதத்தில், மொத்தம் ஐந்து பேர்கள், விமானத்தின் தலைப்பகுதியில் இருந்து வால் பகுதி வரை வரிசையாக நின்றிருந்தனர். பயணிகளுக்கு ஆபத்து நேரங்களில் செய்ய வேண்டியது என்ன என்கிற எச்சரிக்கைகளை ஐந்து பெண்களும் செய்கைகளின் மூலம் ஒப்புவித்து விட்ட நிலையில், விமானத்தின் கதவை மூடினாள், மயூரி முத்து.

‘செல்வத்துள் எல்லாம் தலை’ என்பது போன்று அழகிகளுக்கெல்லாம் அவளே தலை. பூம்பாறை நல்லமுத்துவின் பேத்தி என்றால் யாருமே நம்பமாட்டார்கள். பாரிஸ் நகரத்து பாவை என்றுதான் அவளை எண்ணுவர். அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போன்று, ஒரு பிரெஞ்சுப் பயணி கேட்ட கேள்விக்கு பிரெஞ்சு மொழியில் பதிலளித்துவிட்டு, காக்பிட்டின் வாயிலில் நின்றாள்.

தனது பார்வையை விமானத்தின் வால்பகுதி வரை ஓடவிட்டாள்.

Malaysia suspends Shariah-compliant airline | Business| Economy and finance  news from a German perspective | DW | 11.04.2016

‘அனைவரும் தத்தம் ஆசனத்தில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து பயணத்திற்குத் தயாராகி விட்டார்கள்’ –என்று வால்பகுதியில் நின்ற ஏர் ஹோஸ்டஸ் மாய் பெங் அங்கிருந்து கட்டை விரலை உயர்த்திக்காட்ட, ஒவ்வொரு விமானப்பணிப்பெண்ணும், தத்தம் பகுதியில் பயணிகள் தயார் நிலையில் இருப்பதை, தலையசைத்து உணர்த்த, திருப்தியுடன் மயூரி, பைலட்டின் காக்பிட்டினுள் நுழைவதற்காகத் திரும்பியபோது…

‘’ஹோ என்று நடுப்பகுதியிலிருந்து அந்த அழுகுரல் புறப்பட்டது. அனைவரும் திகைத்து திரும்பிப் பார்க்க, பணிப்பெண்கள் பரபரப்புடன் ஓலமிட்டுக் கொண்டிருந்த அந்த மூதாட்டியிடம் ஓடினார்கள். மயூரியும் சற்றும் தாமதிக்காமல் அந்த மூதாட்டியின் இருக்கையை நோக்கி விரைந்தாள்.

அந்த மூதாட்டி அமர்ந்திருந்த மையப்பகுதியின் பொறுப்பாளரான நான்சி அல்புகெர்கோ என்கிற விமானப் பணிப்பெண், அந்த மூதாட்டியை ஆசுவாசப்படுத்த முயன்றாள். சீன நாட்டு மூதாட்டியான அந்த பெண்மணியின் பெயர் போ கைஹங்!

‘’ஃபாஷேங்களே ஷென்மே” (என்ன ஆச்சு ?) –சீன மொழியில் கேட்டபடி மயூரி அந்த மூதாட்டியை நோக்கிக் குனிந்தாள். இங்கிலிஷ், இந்தி, மலேயா, சீன மொழி, பிரெஞ்சு, மலையாளம், என்று பல மொழிகளை அறிந்து வைத்திருந்த, மயூரி, அந்த மூதாட்டி சீன நாட்டைச் சேர்ந்தவள் என்பதை யூகித்து அவளது மொழியிலேயே பேசத்தொடங்கினாள்.

“மகளே..! ஏழு வருடங்கள் ஓடி விட்டன. இப்படித்தான் என்னைப் பார்ப்பதற்காக ஆசையுடன் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட எனது மகள் காணாமல் போய் ஏழு வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. அவளும் மற்ற பயணிகளும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா –என்றே தெரியவில்லை. அவளது மகளுக்கு அவள் இல்லாமலேயே சென்ற வாரம் திருமணம் நடந்தது. அதற்குத்தான் நான் வந்துவிட்டுப் போகிறேன். இந்த விமானப் பயணம், காணாமல் போன எனது மகளை அதிகம் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் அழுகிறேன்.” — என்று கதற, அந்த மூதாட்டியின் தலையை தனது மார்பின் மீது சரித்து, அவளை தட்டிக்கொடுத்து, நான்சியை பார்த்துக் கண்ணசைக்க, அவள் ஒரு மாத்திரையும், தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தாள்.

“மேடம்..! கவலைப்படாதீர்கள்..! நாம் பத்திரமாக பெய்ஜிங் போகிறோம். இந்த மாத்திரையைப் போட்டுகொண்டு உறங்க முற்படுங்கள். ஆறு மணி நேரத்தில் நாம் பீஜிங்கில் இருப்போம்..!’’ –என்று மூதாட்டியை ஆசுவாசப்படுத்திவிட்டு, மாத்திரையைக் கொடுத்து, அவள் நீர் அருந்தியதும், நான்சியின் வசம் அவளை ஒப்படைத்துவிட்டு, காக்பிட்டை நோக்கி நடந்தாள், மயூரி.

Malaysia Airlines Flight 370 - Wikipedia

எம்எச் 370 விமானம் காணாமல் போனபோது, இவள் சென்னையில்தான் படித்துக் கொண்டிருந்தாள். தான் விமானப் பணிப்பெண் பயிற்சிக்குச் சேர ஆசைப்படுவதாகக் கூறிய போது, அம்மா சத்தியதேவி கோபத்துடன் வெடித்தாள்.

“நத்திங் டூயிங்.! ஒரு விமானமே காணாமப் போயிருக்கு. அந்த வேலைக்கெல்லாம் நான் உன்னை விடமாட்டேன்..! என்னோட கொடைக்கானல் நேஷனல் ஸ்கூலின் முதல்வர் பதவியை உனக்குத் தருகிறேன். நீ எனக்குப் பிறகு எனது ஸ்கூலைப் பொறுப்பாக நடத்த வேண்டும்’’ –என்று அவளது ஆசையில் மண்ணைப் போட்டாள்.

தாத்தா நல்லமுத்துவிடம் கெஞ்சிக் கூத்தாடி, அவரது சிபாரிசின் பெயரில்தான், மயூரி இந்தப் பணிக்கு வந்திருந்தாள். காணாமல் போன அந்த எம்எச் 370 விமானத்தை பற்றி விமானிகள், ஏர்போர்ட் அதிகாரிகள், விமான பணிப்பெண்கள் என்று பலரும் விவாதிக்க இவள் கேட்டிருக்கிறாள். அந்த விமானத்தில் பணிப்பெண்ணாகப் பயணிக்க வேண்டி இருந்து, தந்தை மறைந்ததால், போகாமல் நின்ற இமேல்டா ஆர்தர் என்கிற ஏர் ஹோஸ்டஸ், தன்னை தனது தந்தைதான் காப்பாற்றியதாக இதுவரை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

காணாமல் போன அந்த எம்எச் 370 விமானமும், இதோ இவர்கள் பயணிக்கப் போகும், அதே பாதையில்தான் பயணித்தது. ஏறக்குறைய இதே நேரத்தில்தான் புறப்பட்டது. ஆனால் அதற்கு என்னதான் நேர்ந்தது..?

இமேல்டா இவளிடம் கதை கதையாகச் சொல்லியிருக்கிறாள். அந்த விமானத்தைச் செலுத்திய பாரிக் ஹமீத்துக்கு 27 வயதுதானாம். அந்த விமானத்தைப் பயிற்சிக்காக ஓட்டியிருக்கிறார். அந்த விமானத்தைச் செலுத்தியதும், அவருக்கு விமான பைலட் லைசென்ஸ் கிடைத்திருக்க வேண்டியது. அவருக்குப் பயிற்சி அளித்த, ஜாரி அஹ்மத் என்பவர்தான் உடன் விமானத்தைச் செலுத்தி இருக்கிறார்.

‘’ஆயிற்று..! மார்ச் எட்டாம் தேதியான இன்றோடு, எம்எச் 370 விமானம் காணாமல் போய் ஏழு வருடங்கள்தான் ஆகி விட்டன..!’’ — மனதில் சிறு குழப்பம் ஏற்பட, காக்பிட்டின், கதவைத் திறந்து, உள்ளே நுழைந்து, தனக்குப் பின்பாக கதவை மூடிக்கொண்டாள்.

‘’கேப்டன் எரிக்..! எவ்ரிதிங் இஸ் இன் கண்ட்ரோல்..!’’ –என்றதும், கேப்டன் எரிக் புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு, தனது பக்கத்தில் கைகாட்டினார்.

Malaysia Airlines Welcomes First Female Pilots – ALNNEWS

‘’மீட் குகன் மணி..! ரைசிங் ஸ்டார்..! இப்போதைக்கு ஃபஸ்ட் ஆபீசர்..! இவர்தான் இந்த விமானத்தைத் திரும்பி கோலாலம்பூருக்கு ஓட்டி வரப்போறாரு. எனவே நல்லா பிரெண்டு பிடிச்சு வச்சுக்க.” –என்று ஜோக் அடிக்க, மயூரி கேப்டன் குகன் மணியைப் பார்த்து, தலையை அசைத்தாள்.

‘’குட்மார்னிங் கேப்டன்..!’’ –என்றவள் அதிர்ந்து போனாள்..!

என்ன கம்பீரம்..! என்ன தேஜஸ்..? சற்றுமுன் எம்எச் 370 விமானத்தை செலுத்திய பாரிக் ஹாமித் பற்றி நினைத்திருந்தாளே..! இந்த குகன் மணிக்கும் அதே 27 வயதுதான் இருக்கும். இந்த நிறமும், கம்பீரமும், அழகும், கண் பார்வையின் தீட்சண்யமும், மயூரியைப் பிரமிக்க வைத்தன.

‘’குகா..! ஷி ஐஸ் மயூரி..! சென்னையைச் சேர்ந்தவள். இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துல பல தேவதைகள் பறந்தாலும், இவதான் கிளியோபாட்ரா ! நீங்களும் நல்லாக் காக்கா பிடிச்சு வச்சுக்கங்க..! உதவி செய்யற மனப்பான்மை கொண்டவங்க..!’’

குகன் தனது பெரிய கண்களைத் திறந்து ஒருமுறை மயூரியை ஏற இறங்கப் பார்த்தான். ஆனால் பேசவோ, புன்னகைக்கவோ செய்யாமல், கேப்டன் எரிக்கைப் பார்த்தான்.

“டாக்சி-இங் செய்யத் தொடங்கலாமா..? அவங்களை வெளியில போகச் சொல்லுங்க. அவங்க போட்டிருக்கிற ஜாய் பெர்பியூம் எனக்கு அலர்ஜி.’’ — குகன் கூற, மயூரியின் முகம் சிவந்தது. யாருமே இவளை இப்படி அவமானப்படுத்தியதில்லை.

பாரிஸ் நகரத்திற்குச் சென்றிருந்தபோது, அங்கே வாங்கியிருந்த உயர்ரக சென்ட் ஜாய்..! பத்தாயிரம் மல்லிகை பூக்களையும், முன்னூறு ரோஜாக்களையும் அரைத்து சாறெடுத்து தயாரிக்கப்பட்டது. ஒரே வார்த்தையில் அலர்ஜி என்று கூறி விட்டானே…

அவனிடம் கோபத்தைக் காட்ட முடியாமல், மௌனமாக காக்பிட்டை விட்டு வெளியேறினாள், மயூரி. விமானம் நகரத்தொடங்கி, ரன்வேயை நோக்கி மெதுவாக ஊர்ந்து, ரன்வேயில் நிதானமாக ஓடி, திடீரென்று வேகத்தை எடுத்து, வீர்ர்.. என்று வானில் பறந்தது.

உயரத்திற்குச் சென்று அந்தமான் கடலின் மீதாக பீஜிங்கை நோக்கி பறந்து கொண்டிருந்தபோது, திடீரென்று மீண்டும் ஒரு அலறல்.

அந்த சீன மூதாட்டி போ கைஹன்தான் உறக்கத்தில் அலறிக் கொண்டிருந்தாள் !

‘’அய்யோ..! எம்எச் 370 விமானத்தை ஓட்டிய, அந்த 27 வயது விமானிதான் இந்த் விமானத்தையும் ஓட்டறான். நம்மளைக் கடலுல மூழ்கடிக்கப் போறான்.” –என்று அலறத்தொடங்க, மற்றப் பயணிகள் திடுக்கிட, நான்சியும், மயூரியும் அந்த மூதாட்டியை நோக்கி ஓடினார்கள்.

அந்த மூதாட்டியை மீண்டும் தட்டி சமாதானப்படுத்திய மயூரியின் மனக்கண்ணில், குகன் மணியின் கடுமையான பார்வை தோன்றியது. உண்மையிலேயே, குகன் அப்படி செய்வானா..?

பூம்பாறை ஆலய குருக்கள் வரப்போகும் தைப்பூசத்தை நினைவுபடுத்திவிட்டு, நல்லமுத்துவின் மனநிம்மதியை உடன் எடுத்துக்கொண்டு போய்விட்டார் போலும். குழப்பத்துடன் எழுந்து உள்ளே சென்று மாடிப் படிகளில் ஏறத் தொடங்கினார். நான்கைந்து படிகள் ஏறியதும், அப்படியே உறைந்து போய் நின்றார்.

தைப்பூசம் வருகிறதென்றால், மகன் குடும்பம், மகள் குடும்பம், தங்கை குடும்பம் என்று மனிதர்கள் வரத்தொடங்கிவிடுவார்களே..! எப்படி நான் இவ்வளவு நாள் இதைப் பற்றி எண்ணி, தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணாமல் இருந்தேன். அவர்களும் இங்கே வந்து சேர்ந்து, பிறகு நமது பூஜை பலனளிக்காவிட்டால்..?

தைப்பூசம் அன்று கைக்கு மேல் பலன் கிடைக்காவிட்டால், அடுத்த நாள் ஆயில்ய நட்சத்திரத்தில் இருந்து, குடும்பம் சின்னாபின்னமாகி விடுமே. நட்சத்திரங்களாக பல்வேறு துறைகளில் ஜொலிப்பவர்கள், ஒரே நாளில் செல்லாக்காசு ஆகிவிடுவார்களே..! என்ன செய்வது..? வேறு வழியில்லை… சிரமத்தைப் பாராமல் போகர் பாசறைக்குச் சென்று வருவது நல்லது..! ஆனால் அவ்வளவு தொலைவு நடந்து சென்று பலனில்லாமல் போய் விட்டால் என்ன செய்வது..? சஷ்டி சாமி கண்ணில் படுவாரா?

இப்போதைக்கு மீன மேஷம் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. தலை போகிற அவசரம்..! குடும்பத்தினர் பள்ளங்கி பவனத்திற்கு வருவதற்குள் ஏதாவது நல்ல தீர்வைக் காண வேண்டும்..!

மாடி ஏறும் எண்ணத்தைக் கைவிட்டவர், மீண்டும் படிகளில் இறங்கி, பூஜையறையை நோக்கிச்சென்றார். முன்பு சஷ்டி சாமி அளித்திருந்த ‘சரவண பவ’ எழுத்துகளுடன் கூடிய காவி அங்கியைச் சால்வையாக தனது சட்டையின் மீது போர்த்திக்கொண்டவர், தனது இருவிரல்களால் கிண்ணத்தில் இருந்து திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, மையத்தில் குங்குமப் பொட்டையும் வைத்துக்கொண்டு, கைத்தடியுடன் மாளிகையை விட்டு வெளியேறினார்.

கேட் அருகே வந்ததும் ராஜாபாதரைப் பார்த்தார்.

‘’யார் போன் செஞ்சாலும்… நான் பூம்பாறை கோவிலுக்குப் போயிருக்கிறதா சொல்லிடு. வாகீச குருக்கள் தைப்பூசம் விஷயமா பேச வரச் சொல்லியிருக்காருனு மட்டும் சொல்லிடு!’’ –கேட்டைக் கடந்து வெளியேறினார்

பள்ளிக்கு ரிசல்ட் பார்க்கச் செல்லும் மாணவனை போன்று அவரது உள்ளத்தில் பதட்டம்! போகர் பாசறைக்குச் செல்லும் போதெல்லாம் முன்பு பரவசமாக இருக்கும். இப்போது விசாரணைக்குச் செல்லும் ஒரு கைதியைப் போன்ற உணர்வுதான் அவருக்கு வந்தது.

போகர் பாசறையை ஒரு முறை நினைத்தார்..! நேர்மறையான எண்ணங்களை, பரவசங்களை உண்டு செய்யும் இடம். சித்த வைத்தியத்தின் ஊற்றுக்கண். சித்தர்கள் மறைவாக மானிடர்களின் தொந்தரவின்றி, மோன நிலையில் வாசம்செய்யும் இடம். பிரம்மாண்டமான குகைகள்..! உறுதியான கல்தூண்கள்..!

ருமுறை இவரது பேத்தி, நடிகை கனிஷ்கா திரைப்படப் படப்பிடிப்புக்காகக் கொடைக்கானல் வந்திருந்தாள்..! அப்போது பள்ளங்கி பவனத்தில்தான் சக நடிகர் மிதுன் என்பவனோடு தங்கியிருந்தாள்.

“எங்கேம்மா ஷூட்டிங்?’’ –சாதாரணமாக் கேட்டார், நல்லமுத்து..!

“அதான் தாத்தா… நம்ம குணா குகை இருக்கே…. அங்கே..! ‘டெவில்ஸ் கிச்சன்’னுகூட அந்த இடத்தை அழைப்பாங்களே..! அங்கேதான் ஷூட்டிங்’’ –கனிஷ்கா கூறியதும், அவள் வேறு ஏதோ இடத்தைப் பற்றி கூறுவதாக நினைத்தார். ஆனால் கனிஷ்கா அவரையும் படப்பிடிப்புக்கு அழைத்துச்செல்ல, அவர்கள் குறிப்பிட்ட இடத்தைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

Guna Caves, Kodaikanal: How To Reach, Best Time & Tips

“தேவானை..!” பேத்தியின் காதில் கோபத்துடன் கிசுகிசுத்தார்..! “எப்பேர்ப்பட்ட சித்தர் பூமி இது..! இதைப் போய், பேயோட சமையலறைன்னு சொல்லறியே! உனக்கு என்ன தெரியும், இந்த இடத்தோட அருமை..! ஒழுங்கு மரியாதையா வந்தோமா, வேலையப் பாத்தோமானு கிளம்பிப் போய்கிட்டேஇருங்க..! டேக் எடுக்கும்போது சைலன்ஸனு கத்தறாரு டைரக்டர்..! ஆனா, டேக் எடுக்காம இருக்கறச்சே கூட சைலெண்டா தான் இருக்கணும், இந்த இடத்துல..! காரணம், இந்த இடம் அப்படி!’’ என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ன்று பெயர்த்தியிடம் போகர் பாசறையின் பெருமைகளைப் பற்றி ஆக்ரோஷத்துடன் பேசியிருந்த பூம்பாறை நல்லமுத்து, இன்று ‘குணா குகைகள்’ என்கிற புதுப் பெயருடன், அமானுஷ்ய அமைதியுடன் திகழும் அந்தக் கல்தூண்பகுதிகளை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தார். இதயத்தின் மூலையில் ஒருவித அச்சம் கனன்று கொண்டிருந்தது.

– தொடரும்…

< முதல் பகுதி | மூன்றாவது பகுதி >

ganesh

13 Comments

  • மிக அருமையான கதை ஐயா.வித்தியாசமாக உள்ளது… விமானம் பற்றிய தகவல்கள் சிறப்பு.போகர் பாசறையில் அடியேனும் உண்டு.பத்துமலை பந்தம் வெற்றி வாகை சூடும்.

    • கதை மாந்தர்கள் விமானத்தில் போகிறார்கள்!கதையோ ஜெட் விமான வேகத்தில் போகிறது !சூப்பர்.அடுத்த அத்யாயத்திற்காக வெயிட்டிங்!

  • Super

    • அருமை. பச்சை மிளகாயின் விறுவிறுப்பு.

  • MH 370 உங்கள் நாவல்களில் இடம்பெறுமென்பது நான் எதிர்பார்த்த விஷயம் தான். அது நடந்தது குறித்து மகிழ்ச்சி! Keep going sir.

  • Fast one sir

  • MH 370 பற்றியும் குணா பாறை என சொல்லப்படும் போகர் குகை பற்றியும் நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேண்ணா

  • சூப்பர்… விறு விறுனு போகுது….

  • தேவைப்படும் சில காலவரிசை இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விமானத்தில் இருந்து பூம்பாறைக்கு சதித்திட்டத்தை மாற்றும்போது குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்பே (அல்லது நீங்கள் எந்த ஆண்டைக் குறிப்பிடலாம்) ஜனவரி மாதத்தில் தை பூசமும் உங்கள் விமான விமான பயணமும் மார்ச் 8, 2021 என நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.

    I feel there may be some chronology presenting needed. Atleast you should have told when changing the plot from air plane to poombarai that it is two months back (or whichever year you may referring) because Thai poosam in Jan and your air plane journey you are referring as March 8, 2021.

    • நன்றி ! கதைக்கருவில் கவனம் செலுத்துவதால், சற்று சென்சேஷன் தேவைப்படுகிறது. தைப்பூசம் வருகிறது என்பதுதான் பஞ்ச். அது எப்போது வருகிறது என்பதில் போகஸ் இல்லை. போன வருட தைப்பூசத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றிய கவலைகள்தான் கதையின் பிளாட். கதை தளம் மார்ச்சில் நடைபெறுகிறது. உத்தராயணம் பிறந்து விட்டது என்று முதல் இதழில் கூறாமல் இருந்திருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது. அதை தவிர்த்திருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது. கதைப்படி வரப்போகும் தைப்பூசம் பிரச்சனை அல்ல. சென்ற வருடம் நடந்த தைப்பூச சம்பவம்தான் பிரச்சனை. உங்கள் கருத்தை கவனித்தால் கொள்கிறேன். காரணம் இந்த கடத்தி, தைப்பூசத்திற்கு முன்பாக நடக்கும் சம்பவங்கள்.தான். இந்த் வருட தைப்பூசம் வரை கதை நீடிக்காது.

      • Thank you for your reply. I just thought that it may be good. I wonder the translation of my previous response.

  • வித்தியாசமான கதைக்களம் . ஜெட் வேகம் . காணாமல் போன அந்த மலேசிய விமானம் குறித்த தகவல்கள் ..எதிர்பார்ப்பை தூண்டுகிறது .
    அன்புடன் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் ,கோவை

  • சுவாரஸ்யமாகச் செல்கிறது! அதே சமயம் உங்கள் முந்தைய தொடர்களைவிட இத்தொடரில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக உணர்கிறேன். அடுத்த அத்தியாயங்களில் சூடுபிடித்துவிடும் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...