• தொடர்
 • பத்து மலை பந்தம் – 1 | காலச்சக்கரம் நரசிம்மா

பத்து மலை பந்தம் – 1 | காலச்சக்கரம் நரசிம்மா

9 months ago
3186
 • தொடர்
 • பத்து மலை பந்தம் – 1 | காலச்சக்கரம் நரசிம்மா

1. பள்ளங்கி பவனம்

பள்ளங்கி–

கொடைக்கானல் மலை ஏறும் வழியில், நிலப்பகுதியாகவும் இல்லாமல், மலைப்பகுதியாகவும் இல்லாமல், இரண்டுங்கெட்டானாக, சோம்பலுடன் மலைப்பகுதியின் மேடான பகுதியில் ஊசலாடிக்கொண்டிருக்கும் கிராமம். கொடைக்கானல் செல்லும் பாதையில், இந்த கிராமத்தின் எல்லையில்,அடர்ந்த மரங்களிடையே பிரம்மாண்டமான ஒரு நீல மூன்றடுக்கு கட்டடத்தை காணாமல் இருக்க முடியாது.

பள்ளங்கி போகர் தலையாய சித்த வைத்தியசாலை — என்று நீல வளைவில், பெரிய வெள்ளை எழுத்துகளில் காணப்படும். அந்த பிரம்மாண்ட நுழைவாயிலுக்கு கேட் எதுவும் இல்லை. இருபக்கமும் அடர்ந்த ஆலமரங்கள் பந்தலாகப் பரவி இருக்க, அவற்றின் விழுதுகள் இரண்டு, அந்த நுழைவாயிலின் இருபுறமும் காவலர்களாக நிற்கும். அந்த ஆலம் விழுதுகளிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சிறிது தொலைவு நடந்தால், ஒரு சிறு ஆலயம் காணப்படும். அந்த ஆலயத்தினுள் எட்டிப்பார்த்தால், ஒரே ஒரு வேல் மட்டுமே காணப்படும். வழிபடும் சிலை ஒன்றும் இருக்காது.

வேல் மட்டும்தான் அந்த ஆலயத்தில் உள்ளது என்பதை அறிந்தவர்கள், அந்த ஆலயத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்து போவார்கள். ஆனால் அண்மையில் நடந்த தேர்தலின் போது மட்டும், சில கொடைக்கானல் போகும் அரசியல்வாதிகள், வந்து தொழுதுவிட்டு, ”வெற்றிவேல் வீரவேல்” என்று கோஷமிட்டுச் சென்றார்கள். இன்னும் சிலர், ரகசியமாக  வந்து கும்பிட்டு சென்றார்கள்.

அந்தக் கோவிலைக் கடந்து வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில், தொடர்ந்து சற்று தொலைவு நடக்க வேண்டும். நடப்பதற்கு அலுப்பாகவே இருக்காது. காற்றில் வீசும் மூலிகை வாசமும், பறவைகளின் கூவலும், நடை போடுபவர்களுக்கு, மனதில் நிம்மதி என்கிற தடுப்பூசியை செலுத்தி, துயரங்கள் அவர்களை தொற்றாமல் பார்த்துக்கொள்ளும். அங்கேயே தங்கிவிடலாமா என்பது போன்று ஒவ்வொருவரும் நினைத்துக்கொள்வார்கள்.

அதோ–

அந்த வளைவில் திரும்பினால், தெரிகிற நீல நிற மூன்றுமாடி கட்டிடம்தான் ”பள்ளங்கி போகர் தலையாய சித்த மூலிகைச்சாலை!”

அந்த மூலிகைச்சாலையின் வாயிலிலும் ஒரு சிறு ஆலயம் இருந்தது. வெளியில் தலையாட்டி சித்தர் என்று செம்மண் கலவையால் எழுதப்பட்டிருக்கும். போகர் தலையாய சித்த வைத்தியசாலை என்பதை குறிக்க தலையாய சித்தர் ஆலயம் என்று வைக்கப்பட்டு, நாளடைவில் தலையாட்டி சித்தர் என்று பெயர் மாறிவிட்டிருக்கலாம். அல்லது உண்மையிலேயே தலையாட்டி சித்தர் என்று ஒருவர் இருந்திருக்கலாம். சித்தர் பூமியில் எந்த யூகங்களுக்கும் இடமளிக்கக்கூடாது. தெய்வக் குற்றம் கூடச் செய்யலாம். சித்த புருஷர்களைச் சீண்டக்கூடாது. அந்த ஆலயத்துக்குக் கும்பிடு ஒன்றை வைத்துவிட்டு, உள்ளே நுழையலாம்.

அந்த மூலிகைச்சாலை, எப்போது தொடங்கப்பட்டது என்பது தெரியாவிட்டாலும், நான்கைந்து தலைமுறைகளாகப் பிரபலமாக உள்ளது. அதற்குக் காரணம் இப்போது அதனைப் பராமரித்து வரும் நல்லமுத்து குடும்பம்தான். அடர்ந்த காடுகளில் ரகசியமாகச் செய்யப்படும் வைத்திய சிகிச்சைகளை, இந்த விளம்பர யுகத்திற்குத் தக்கபடி மாற்றி வருகிறார்கள். இருப்பினும்…

அன்றாடப் பத்திரிகைகளிலும், ‘பள்ளங்கி சித்த வைத்தியசாலை’யின் விளம்பரங்களைப் பார்க்க முடியாது. காரணம், அந்த வைத்தியசாலைக்கு விளம்பரங்களே தேவையில்லை. உயிருடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், மரணம் நிச்சயம் என்று ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கும் புகலிடம், ‘பள்ளங்கி சித்த வைத்தியசாலை’தான். வாரிசு இல்லாமல் தனது திரண்ட சொத்துகளை உறவினர்களுக்கு உயில் எழுதிவிட்டு, யம தரிசனத்திற்காகக் காத்திருந்த ஒருவர், கடைசி நிமிடத்தில், இந்த வைத்தியசாலைக்கு வந்து, இப்போது உயிலை மாற்றி எழுதி ராஜபோகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.. வெளிநாட்டினர் கூட கொடைக்கானல் வந்தால், தலையாட்டி சித்தர் வைத்தியசாலைக்குப் போகாமல் இருக்கமாட்டார்கள்.

அந்த பிரம்மாண்டமான வைத்தியசாலையினுள் நுழையாமல், வளைந்து பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து சென்றால், ஒரு கருமை நிற இரும்பு கேட் தென்படும். அந்த பெரிய கேட் வாசலில் உள்ள காவலாளியிடம் , உங்கள் ஆதார் கார்டைக் காட்டினால் கூட, அங்கிருக்கும் காபினில் உள்ள தொலைபேசியில் யாருடனோ பேசி விட்டு, அவர்கள் அனுமதி தந்தால் மட்டுமே, அந்த ராட்சச கேட்டைத் திறப்பான், ராஜாபாதர் என்கிற அந்த காவலாளி.

கேட்-டைக் கடந்து நடந்து சென்றால், திகைத்துப் போவீர்கள். அந்த அமைதியான பள்ளங்கிக் காட்டில், எழில் குலுங்கும் பர்ணசாலை ஏதாவது கண்ணில் படும் என்று நினைத்திருப்போம். ஆனால் அழகிய தார் சாலையில் ஒரு அரை கி.மீ. தொலைவு, நடந்து சென்றால், கண்ணில் படும் அந்த பங்களா..! சென்னை போட் க்ளப் பங்களாக்கள் அந்த பங்களாவிடம் பிச்சை வாங்க வேண்டும்.

கவர்ச்சியுடனும், கம்பீரத்துடனும் நிற்கும் அந்த பங்களாதான் ‘பள்ளங்கி பவனம்.’ இதன் உரிமையாளர்தான் பூம்பாறை நாடிதாஸன் நல்லமுத்து ! சித்த வைத்தியசாலையைத் தற்போது வழிநடத்துபவர். அவரது பாட்டனார் காலத்தில் இந்தப் பங்களா கிடையாது. இவரது பாட்டனார், நாகரத்தினம், ஒரு கோவணத்தோடு திரிந்துதான் வைத்தியம் பார்த்தார். இந்த பங்களா இருந்த இடத்தில்தான் ஒரு பர்ணசாலையில் வாழ்ந்தார். ஆனால் நல்லமுத்து பொறுப்புக்கு வந்ததும், கலுவத்தில் சூர்ணம் பொடியாகும் போதே, உரலில் மூலிகை கீரை அரைபடும்போதே, அதற்கும் இன்ன விலை என்று தீர்மானித்து விடுவார். மந்தார இலை, தாமரை இலை, தொன்னை என்று விலையில்லாமல் வழங்கப்பட்ட மூலிகை மருந்துகள், தற்போது பிளாஸ்டிக் கன்டைனரில், விலை லேபிள் வைத்து விற்கப்படுகிறது. இப்போது நல்லமுத்து வைத்தியசாலைக்கு தனி டிவி சேனலே இருக்கிறது.

வைத்தியர் பூம்பாறை நாடிதாஸர் நல்லமுத்து. படிக்காத மேதை எஸ். வி. ரங்காராவ் மாதிரி நல்ல உயரமும், பருமனும், வெண்கலக் குரலும் கொண்டவர். சித்த வைத்தியத்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்று தனது திறமையால்,சென்னை டாக்டர்களையே வாய் பிளக்கச் செய்தவர். அவ்வளவு பெரிய பங்களாவில் தனியாகத்தான் வசித்தார்.

நல்லமுத்துவின் மகன் பாண்டிமுத்து ஒரு பிரபல கட்சியின் மாவட்டச் செயலாளராக கொடைக்கானலில் வசிக்கிறான். சித்த வைத்தியம் பயின்றிருந்தாலும், அரசியலில் பெரிய பதவியை அடையவேண்டும் என்கிற ஆர்வம் கொண்டு, மதுரையில் ஒரு வீடு வாங்கி, மதுரைக்கும், கொடைக்குமாக அலைந்துகொண்டிருந்தான். அவன் மனைவி சத்தியதேவி, கொடைக்கானலில் போர்டிங் பள்ளி ஒன்றை .நடத்தி வந்தாள். பாண்டிமுத்து – சத்யதேவி தம்பதிகளின் ஒரே செல்ல மகள் மயூரவள்ளி சென்னையில் விமான பணிப்பெண்ணாகப் பறந்துக்கொண்டிருந்தாள். நிலத்தில் இருக்கும்போதுதான் மயூரவள்ளி. விமானத்தில் பறக்கும்பொது மயூரி முத்து என்றுதான் அவளது பேட்ஜ்ஜில் எழுதப்பட்டிருக்கும்.

மகன், மருமகள், பெயர்த்திதான் விஐபிக்களாக வலம் வந்தார்கள் என்பதில்லை. நல்லமுத்துவின் பெண் குடும்பமும் விவிஐபிக்கள்தான். நல்லமுத்துவின் மருமகன் சரவண பெருமாள், சென்னையில் பெரிய தொழிலதிபர் என்னும் ஹோதாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் கால் வைக்காத தொழிலே இல்லை. ரியல் எஸ்டேட், செகண்ட் ஹாண்ட் கார் தொழில், சூப்பர் மார்க்கெட் என்று தனது பெயர், சரவணபெருமாளைச் சுருக்கி, SP குழுமம் என்று நடத்தி வந்தான். ‘குறிஞ்சி கார்ஸ்’ என்கிற  சரவண பெருமாளின் கார் ஷோரூம் மிகவும் புகழ் பெற்றது.

செகண்ட் ஹாண்ட் கார்களை வாங்கி விற்கும் தொழிலை தொடங்கியவன், இப்போது புதிய கார்களை விற்கும் ஷோ ரூம் வைத்திருக்கிறான்

மகன் கார்த்திகைசெல்வன் தேஜஸ் சரவண பெருமாள்! தனது நீளமான பெயரை ‘தேஜஸ் எஸ் பெருமாள்’ என்று சுருக்கிக்கொண்டு, இப்போது ஐ.பி.எல்-லில் ராஜஸ்தான் ராயல்சுக்கு விளையாடி இந்திய அணியின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான். கிரிக்கெட் விளையாடி சாதனைகளை புரிய வேண்டும் என்றுதான் முதலில் ஆர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவனது கட்டழகால் ஏராளமான விளம்பரப் படங்களில் வேறு நடித்து, இளம் பெண்களின் இதயங்களைத் தனது புலி நகத்துடன் கூடிய தங்கச்சங்கிலியில் கோர்த்துத் தொங்க விட்டிருக்கிறான். தனக்கு வரும் காதல் கடிதங்களுக்குப் பதில் போடுவதற்கென்றே, பழைய பள்ளி நாட்கள் நண்பன் ரஞ்சித் என்பவனை வேலையில் அமர்த்தி இருக்கிறான்.

தேஜஸ்-சின் தங்கை தேவானையை யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவளது சினிமா பெயரைக் கேட்டால், அனைவரையும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகி கனிஷ்காவை யாருக்குத்தான் தெரியாது.? தேவானை என்கிற தனது பெயரை, தாத்தா நல்லமுத்துவின் கடும் எதிர்ப்பினை மீறி கனிஷ்கா என்று வைத்துக்கொண்டாள் .

”நொறுங்கிப் போன விமானத்தின் பெயர் கனிஷ்கா..! நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கணும்னுதானே முருகன் தொடர்பான பெயர்களையா தேர்தெடுத்து வச்சிருக்கேன். இப்படி அமங்கலமா பெயரை வச்சுக்காதே..!” –என்று நல்லமுத்து சொல்லிப்பார்த்தும், சரவண பெருமாள், கேட்கவில்லை.

”மாமா ! நீங்க வேணுமின்னா தேவானைனு கூப்பிட்டுக்கங்க. நானும் தேவயானி-னு ஸ்டைலா மாத்தலாம்னுதான் பார்த்தேன். ஆனால் ஏற்கனவே அந்த பெயர்ல ஒருத்தர் இருக்காங்க. அதனால, கனிஷ்கா என்கிற பெயரை தேர்ந்தெடுத்தேன்.” — சரவண பெருமாள் கூறியிருந்தான்.

விமானத்தின் பெயரை வைத்திருந்த கனிஷ்கா, திரையுலகத்தில்  தொடர்ந்து உயரப் பறந்துக்கொண்டிருநதாள். பணமும், புகழும் கொட்டிக்கொண்டிருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் தன்னைப் பற்றித் தானே கிசுகிசுக்களைப் பரப்பிக்கொண்டிருந்தாள்.

போட்கிளப் சாலையில் உள்ள அவர்களது பங்களாவின் வாயிலில் , ‘சரவண விலாஸ்’ என்னும் பெரிய பெயர்ப்பலகையைச்சுற்றி, தேஜஸ், கனிஷ்கா என்கிற பெயர்களை தாங்கி நிற்கிற பலகைகளின் நடுவே, இன்னும் ஒரு பலகையும் இருக்கிறது.

குணசுந்தரி சரவண பெருமாள், எடிட்டர் ‘பொய்கை’ என்கிற அந்த பலகைக்கு உரியவள், நல்லமுத்து வைத்தியரின் மகள்., பத்திரிகையாளர் என்கிற பெயரில் பவனி வரும் பகட்டின் மொத்த உருவம். சரவண பெருமாளின் மனைவி. தேஜஸ், கனிஷ்காவின் அம்மா.

மகள், மகனை பற்றி தனது பத்திரிக்கையில் செய்தி போடுவதற்கே அவர்களிடம் பணம் வாங்கும் கண்டிப்பான பெண்மணி, என்று குணசுந்தரியின் தோழிகள் கிண்டல் செய்வார்கள். ”பொய்கை” என்கிற பத்திரிக்கையின் ஆசிரியை!

பொய்களை நிறைய வெளியிட்டு கை நிறைய வாரி வருவதால் அந்தப் பத்திரிக்கைக்கு அந்தப் பெயர் தகும் என்று ரகசியமாகச் சிலர் கூறுவார்கள். ஆனால், பாப் தலைமுடியும், நுனிநாக்கு ஆங்கிலமும், மூக்கின் மீது வழிந்திருக்கும் கண்ணாடியுமாய் குணசுந்தரி ஒரு விழாவில் தோன்றினால், அவளைச் சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துக் கொள்ளும். சரவண பெருமாளின் மனைவியென்பதாலோ, தேஜஸ், கனிஷ்காவின் தாய் என்பதாலோ, புகழ் பெற்ற பத்திரிக்கையாளர் என்பதாலோ, அந்தக் கூட்டம் கூடவில்லை. மத்திய அமைச்சர் ஷைலஜா சேத்தியின் நெருங்கிய நண்பர் குணசுந்தரி என்பதால் அறிமுகம் இல்லாதவர்கள் கூட அவளை சுற்றி நின்றிருப்பார்கள்.

பூம்பாறை நாடிதாஸர் நல்லமுத்துவின் மகன், மகள், மாப்பிள்ளை, மருமகள், பெயரன், பேத்திகள் என்று அனைவருமே வி.ஐ.பி.கள்தான். அரசியல், சினிமா, கிரிக்கெட், பத்திரிகைதுறை, கல்வித்துறை, விமான சர்வீஸ் என்று அனைவருமே கொடி கட்டிப் பறந்து, குவியல் குவியலாகப் பணக்கட்டுகளில் புரண்டாலும், நல்லமுத்துவுக்கு மட்டும், இதற்கெல்லாம் தானே காரணம் என்கிற மமதை இருந்தது.

அனைவருமே, தத்தம் துறைகளில் பிரகாசிப்பதற்கு காரணமே, இவர்தான். இவர் தைப்பூச நாளில் குறிஞ்சியாண்டவர் கோவிலில் நிகழ்த்தும் அந்த பூஜைதான், இவரது குடும்பத்தினரை விவிஐபி.க்களாக திகழ செய்திருந்தது. அவர்கள் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்களாக, பவனிவர வைத்ததற்குப் பிரதிபலனாக, நல்லமுத்து ஒரே ஒரு வேண்டுகோளைத்தான் முன்வைத்திருந்தார்.

“உலகத்துல யாரு எந்த மூலையில இருந்தாலும், எத்தகைய சூழ்நிலையில இருந்தாலும், நான் எப்போது தைப்பூச பூஜைக்கு கூப்பிடறேனோ, அப்போ, நீங்க என்னுடைய பள்ளங்கி பங்களாவிற்கு வந்துடணும்!. ‘ஏன் , எதற்கு? , என்னால் முடியாது!. நான் பிஸியாக இருக்கிறேன்..!’ னு சொன்னீங்க-ன்னா… நஷ்டம் உங்களுக்குத்தான்!. நீங்க வரலைனா, தைப் பூசத்திற்கு மறுநாளான ஆயில்யம் அன்னைக்கு உங்க நட்சத்திர அந்தஸ்தை இழந்துடுவீங்க!..’’ என்று நல்லமுத்து எச்சரித்திருந்தார்.

வெளிநாட்டுப் படப்பிடிப்புகளில் இருந்தால்கூட, கனிஷ்கா தைப்பூசம் வந்தால் இந்தியாவுக்கு பறந்தோடி வந்து விடுவாள்.

ஒரு முறை, நல்லமுத்துவின் மாப்பிள்ளை சரவண பெருமாள் சிங்கப்பூர் செல்ல வேண்டி, தைப்பூச பூஜையை புறக்கணித்து விட, அந்த வருடம் கார் பிசினஸில் நஷ்டம். கார் டீலர்ஸ் அமைப்பு தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றான். அதன் பின்பு தவறாமல் பூஜையில் கலந்து வந்தான்.

ன்று மார்கழி முடிந்து தை மாதம் பிறந்து விட்டிருந்தது.

நல்லமுத்துவின் பள்ளங்கி சித்த வைத்தியசாலையின் பின்புறமாக இருந்த, அந்த கருப்பு வண்ண கேட்டின் முன்பாக அமைதியாக ஸ்டூல் ஒன்றின் மீது அமைதியாக அமர்ந்திருந்தான், காவலாளி ராஜாபாதர்.

காவி வேட்டியில், மேனியெங்கும் திருநீற்றினை அப்பியிருந்த பூம்பாவை  கோவில் அர்ச்சகர் வாகீச குருக்கள், கேட்-டை நோக்கி வருவதைக் கண்டதும், இண்டர்காம்மில் ஒன்றுமே கேட்காமல் கேட்-டைத் திறந்தான். குருக்களுக்கு மட்டும்தான் எவ்வித விசாரிப்புகளும் இன்றி அந்த கேட் திறக்கப்படும்.

“பாதர்..! சௌக்கியமா இருக்கியா..?’’ என்று கடனே என்று விசாரித்துவிட்டு, பங்களாவினை நோக்கி நிதானமாக நடந்தார், குருக்கள்.

ஏதோ, …நல்லமுத்து வைத்தியர் இருப்பதால், பூம்பாறை குழந்தை வேலர் மற்றும் கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோவில்களில்  பூஜைகள் ஒழுங்காக நடந்து வருகின்றன. கோவில் காரியங்களுக்கு  அள்ளி அள்ளி கொடுத்து வருகிறார். குறிப்பாக,தைப்பூச உற்சவத்தை பழனிக்கு நிகராக கோலாகலமாக நடத்தி வருகிறார்.

சித்த வைத்தயசாலையின் அந்த பிரம்மாண்ட கட்டடத்தை கடந்து, பின்புறமாக இருபுறமும் அடர்ந்த மரங்களின் ஊடே சென்ற அரை கிலோமீட்டர் தார் சாலையில் நடந்தார், வாகீச குருக்கள். தொலைவில் பள்ளங்கி பவனம் கண்ணில் பட்டது.

இந்த அடர்ந்த காட்டில், இவ்வளவு பெரிய மாளிகையில் எப்படி தனியாக வசிக்கிறாரோ, நல்லமுத்து..? இவராவது மாளிகையில் வசிக்கிறார். இவரது பாட்டனார், நாகரத்தினம், சின்ன குடிசையில் கோவணத்துடன் வசித்தார் ! அவர் கோவணத்துடன் திரிந்து, போகரை தியானித்ததன் பலன்தான் நல்லமுத்துவின் குடும்பத்திற்கு இவ்வளவு வசதிகள் போலும்.

பங்களாவின் போர்டிகோவில், நாற்காலி ஒன்றை போட்டுகொண்டு அமர்ந்திருந்தார், நல்லமுத்து. வாகீச குருக்களை பார்த்ததும், புருவங்களை நெறித்தார்.

”என்ன குருக்களே….திடீர் விஜயம் ?” –நல்லமுத்து கேட்க, குருக்கள், பணிவான புன்னகையுடன் பார்த்தார்.

This image has an empty alt attribute; its file name is chapter-1-1015x1024.jpg

“வருஷா வருஷம் இந்த நேரத்தில நான் வர்றது வழக்கம்தானே..! உத்தராயணம் பிறந்தாச்சு!. தைப்பூசம் திருவிழா வர்றது. பூம்பாறை கோவில், குறிஞ்சியாண்டவர் கோவில் எல்லா கோவில்களும் உங்களைத்தான் தைப்பூசத்திற்கு நம்பி இருக்கு.” — என்று வாகீச குருக்கள் சொன்னதுமே, அடிவயிற்றில் குடல்கள் சுருண்டது போன்று, பகீர் என்று உணர்ந்தார் நல்லமுத்து.

“அதற்குள் தைப்பூசம் வந்துவிட்டதா?” போன தைப்பூசத்திலேயே அவருக்கு போகர் குகை அருகே அந்த உணர்வு ஏற்பட்டது. உடனடியாக அது குறித்து ஆலோசனைகளைச் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தார். இருந்தாலும் குடும்ப சூழ்நிலையில், அவரது தங்கை, தேவசேனையின் மகள் மோகனவள்ளியின் திருமண கோலாகலத்தில் அதைப் பற்றி முற்றிலும் மறந்தே விட்டிருந்தார். இப்போது குருக்கள் வந்து ‘தைப்பூசம் வருகிறது’ என்றதும்தான் அவருக்கு நினைவுக்கு வந்தது.

”எப்படி இதனை மறந்தேன்..? காலம் கடந்து விட்டதா தெரியவில்லையே..? இவர் நினைப்பது மட்டும் உறுதிப்பட்டால், இவரது குடும்பம் அடுத்த கணமே நடுத்தெருவில் நிற்குமே..? என்ன செய்வது..?” –என்று தனக்குள் யோசித்தபடி நாற்காலியில் இருந்து எழுந்து நின்றவர், அப்படியே கற்சிலையாக உறைந்துபோனார்.

தொடரும்

இரண்டாம் பகுதி >

43 thoughts on “பத்து மலை பந்தம் – 1 | காலச்சக்கரம் நரசிம்மா

 1. அற்புதமான ​தொடக்கம் ஆர்வமுடன் காத்திருக்கி​றோம்

 2. ஆரம்பமே விறுவிறுப்பாக இருக்கிறதே- ஸ்ரீகாந்த்

 3. ஆஹா ! Introduction முடிந்த உடனேயே போஹர் என்ட்ரி ஆயிட்டாரே ! போகும் போகும் வேகம் போகும் போஹர் ஜேர்னி !
  வாழ்த்துகள் சார்

 4. விறுவிறுப்பாக ஒரே மூச்சில் படிக்க வைக்கிறது

 5. ஆரம்பமே. விறுவிறுப்பாக இருக்கிறது.
  பல முறை கொடைக்கானல் போனாலும் இந்த கட்டுரையை படித்ததும் மீண்டும் ஒரு முறை போக தூண்டுகிறது.

  இந்த வைத்தியரை போல பல குடும்பங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன. ஒவ்வொருவரின் பின்னாலும் பல அதிசயங்கள் புதைந்துள்ளன.

  1. கதை மாந்தர்கள் அறிமுகமே அட்டகாசம்! ‘ காலச்சக்கரா ‘ சுழலட்டும்-‘நரசிம்மா ‘ போல்
   விருட்டென்று அவதாரம் எடுத்துவிட்டது. பிரகலாதனுக்கான கருணையும்..கசிபுக்கான கோபமும்..கலந்து கட்டி ..கதை ‘விமான ‘வேகத்தில் பயணிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை(அமர்நாத்)

 6. அருமையான தொடக்கம் ஐயா. ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன் அடுத்த அத்தியாயத்திற்கு.

 7. பத்துமலை பந்தம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக தொடங்கி ஆவலை தூண்டுகிறது….

  தங்களது கதையினை படிக்கும் போதே எனது மனத்திரையில் காட்சிகளாக விரிகிறது.

  அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்…

  திரு.காலச்சக்கரம் நரசிம்மா சார் இதிலும் தன் தடத்தை நிச்சயமாக பதிப்பார்….

  வாழ்த்துக்கள்!!!

 8. இடத்தின் காட்சிகளும், பாத்திரங்களின் அறிமுகமும் வெகு ஜோர். குடும்பத்தின் பாத்திரங்கள் பற்றி ஒரு லேசான முன்னோட்டம் வாசகர்களுக்கு ஒரு பிம்பத்தை அளித்து விட்டது. வெற்றிவேல், வீரவேல்; நிம்மதி என்ற தடுப்பூசி… contemporary சப்ஜெக்ட்ஸ்.. TAN ஸ்டாம்ப். அத்தியாயம் ஒன்றிலிருந்தே கலக்குகிறார் காலச்சக்கரம்..💐 எதிர்பார்ப்பு எகிறுகிறது..

  1. Excellent piece of introduction of Characters.
   Let us await the ‘next’ issue please 🙏

 9. வெற்றிவேல், வீரவேல், தைப்பூசம், பத்திரிக்கையாளர், அரசியல் – ஆரம்பமே பிரமாதம்

 10. பந்தத்தில் இணைந்தாயிற்று. ஆரம்பமே ஆர்வத்தை தூண்டிவிட்டது. ஆனாலும், என்ன சார் முதல் அத்தியாயத்திலேயே எல்லோரையும் கொண்டு வந்துட்டீங்க! இப்போதைக்கு நல்லமுத்து மட்டும் தான் மைன்ட்ல. அவர் தானே ஹீரோ… அதிசயம் அற்புதம் நடக்கட்டும்… I am waiting!

  1. ஆரம்பமே மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது.
   அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்

 11. ஆரம்பமே அமர்க்களம்! பிரம்மிக்க வைக்கிறது! நல்லமுத்து குடும்ப உறுப்பினர்களின் அறிமுகம் ஜோர்.அடுத்து என்ன? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

 12. என்னன்னு சொல்ல அக்மார்க் முத்திரை கதை பரபரப்பாக விறுவிறுப்பாக ஆரம்பம் முதல் அத்தியாயம் சூப்பர் ஸ்பீடா வேகம் எடுத்துச்வேகம் எடுத்து விட்டது தலையாய சித்தர் போகர் எண்ணிலடங்கா ரகசியங்களை அடக்கி வைத்திருப்பவர் அவர் உலகத்திற்கு வெளிப்படுத்தியது மிகச் சில ரகசியங்கள் தான் நவபாஷாணம் முருகன் சிலை யோக வலிமையால் ஸ்ரீராமர் சீனா மற்றும் வேறு பல நாடுகளுக்கும் பரந்து இருக்கிறார் என்று அவரது மருத்துவ குறிப்புகள் என்று சில தாசில் அதுதான் நமக்கு தெரியும் கண்மணி கண்முன் நடப்பது போல நிகழ்வுகள் கற்பனை கலந்த உண்மையா அல்லது உண்மை போல் எழுதும் கற்பனையா இல்லாவிட்டால் இரண்டும் கலந்ததா தெரியவில்லை ஒவ்வொரு கேரக்டரின் இன்றோடக்சன் மிக அருமை வெற்றிவேல் வீரவேல் என்று வணங்கிய அரசியல்வாதிகள் ஆதார் கார்டு இருந்தால் வைத்தியசாலைக்குள் நுழைய அனுமதி என்று செம கலக்கல்

 13. Supersonic speed tske off.agmark tan story.characters intro is very nice.my thoughts goes with tejas n kanishka. If really anybodyexists now.pallangibhavanam adharcard.. Vetrivel veeravel china china suvaiyana punches. Reminds me katna parambarai sapthamatha mslai Nallama chettiar ellarum ninaivirku vsrukirargal

 14. Started at 20 mph and reached 100 mph in seconds and all of a sudden applied an ABS break😔😔

 15. கலக்கல்..கலக்கல்…. ஆரம்பமே அமர்க்களம் சார்……

 16. Agmark TAN story with nice introduction of characters.I search for one secret information of siddhar/Koil in all introduction of TAN novels.But it in this TAN not reveled it.Waiting eagerly for the next episode

 17. துவக்க அத்தியாயமே ஒரே மூச்சில் படித்து முடித்தாக வேண்டுமெனும் ஆவலைத் தூண்டிவிடும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது, வளரட்டும், தொடரட்டும் உம்பணி.

 18. ஆரம்பமே அசத்தல். தலைப்பிலிருந்து பெயர்கள் வரை கதை முழுவதும் முருக மணம் கமழ்கிறது.

 19. அமர்க்களமாக ஆரம்பித்து இருக்கிறீர்கள் ஸ்வாமி! அருமை அருமை அருமை ஜீ. கதை மாந்தர்கள் அறிமுகமே ஒரு மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

January 2022
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31