இறையன்பு ஐ.ஏ.எஸ். | தமிழக அரசின் தலைமைச் செயலாளர்

 இறையன்பு ஐ.ஏ.எஸ். | தமிழக அரசின் தலைமைச் செயலாளர்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார்


இறையன்பு ஐ.ஏ.எஸ். புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றதைத் தொடர்ந்து தற்போது இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

🇮🇳பள்ளிக்கூடங்களில் பரிசுப் புத்தகங்களை வென்று படித்து, புத்தகங்களின் மீதான தனது பேரார்வத்தைத் தணித்துக்கொண்ட சிறுவன் பின்னாளில் மாணவர்களையும் தன் மாநிலத்தையும் நேசிக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாகிறான். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். கடந்து வந்த பாதையை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். கழிவென்று ஒதுக்கப்படும் பிரச்சனைகளைக் களமிறங்கி தீர்த்துவைப்பது இவரது தனிச்சிறப்பு.

🌴நிர்வாகத்தைப் பொறுத்தவரை இறையன்பு பணியாற்றாத பதவிகளே இல்லை எனலாம். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலராகப் பொறுப்பெற்றிருக்கும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். கடந்து வந்த பாதை.

📚1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது அண்ணன் திரு. திருப்புகழ் அவர்களும் அதிகாரிதான். நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழும் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் மேற்கொண்ட பேரிடர் மேலாண்மைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இவருடைய திறமை மற்றும் அனுபவம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னால் அதன் மறுசீரமைப்புப் பணிகளைக் கையாளுவதற்காக அந்நாட்டு திட்டக்குழுவின் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.

🌴விவசாயம், வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை ஆகியவைகளில் பட்டம் உளவியலில் முதுகலை பட்டம், வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டம், இந்தி மொழியில் பிரவீன், சமஸ்கிருதத்தில் கோவிதஹா, விவசாய இளங்கலைப் பட்டத் தேர்வில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1987-இல் நடைபெற்ற குடியுரிமைப் பணித் தேர்வில் அனைத்திந்திய அளவில் 15-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

🇮🇳இந்திய ஆட்சிப் பணியில் வித்தியாசமான அதிகாரி. சமூக அக்கறை கொண்டவர். அலுவலக நடைமுறைகளில் முழுவதுமாகக் கட்டுண்டு போகாமலும், அதிகாரத்தின் மீது மோகமில்லாமலும் தன் சுயத்தைக் காப்பாற்றி வருபவர். வாழ்க்கையை அடிப்படையான உள்ளுணர்வோடும், படைப்பாக்க உந்துதலோடும், ஆன்மிகப் பார்வையோடும் கண்டறிகிற பயணமாக மாற்றிக் கொண்டவர்.

🇮🇳முப்பது ஆண்டுகளாக அரசின் பல பொறுப்புகளில் பணியாற்றி வருகிறவர். எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர். நேர்மை, பாரபட்சமற்ற தன்மை போன்றவற்றை பணியின் தொடக்கத்திலிருந்து தரித்துக்கொண்டவர். நியாயமான நிர்வாகத்தை நடத்துவதுடன் சிறந்த ஆளுகையை தருவதற்காக அரசு இயந்திரத்தை முடுக்கி விடும் இயல்பு கொண்டவர். சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்துள்ளார். ஊழல் புரையோடிப்போன பிறகு அழிக்கிற நடவடிக்கையில் ஈடுபடாமல், அது நிகழக்கூடிய நேர்வுகளைத் தெரிந்து அவற்றை முன்கூட்டியே தடுத்தல், முறைகேடுகளை முறியடித்தல் போன்றவை அவருடைய செயல்முறை.

🇮🇳நாகப்பட்டினம் உதவி ஆட்சிய ராக பணிபுரிந்த போது நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதிலும், வெள்ள நிவாராணப் பணியிலும் முக்கியப் பங்காற்றினார். புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்திற்கான இடம், மாவட்ட ஆட்சியரின் குடியிருப்பு, இதர அலுவலகங்களை நிர்ணயித்தல் ஆகியவற்றை குறுகிய காலத்தில் முடிவு செய்தார். இவருக்கு பொது மக்களுடன் இருந்த நல்லுறவு இப்பணிகளையெல்லாம் திறம்பட முடிப்பதற்கு பேருதவியாக இருந்தது.

🌴கடலூர் மாவட்டத்தில், கூடுதல் ஆட்சிய ராக பணிபுரிந்த போது, மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டும் பணி மீனவர்களிடமே கொடுக்கப்பட்டு, ஒப்பந்தக்காரர் முறை ஒழிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைத்த சேமிப்பு அவ்வீடுகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்பட்டது. இம்முயற்சியை அரசும் ஏற்றுக்கொண்டு அதற்கான ஆணையைப் பிறப்பித்தது.

🇮🇳பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. பயிற்சிக்குப் பிறகு அவர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கும் வகையில் வங்கிகள் மூலம் கடன் வசதிகளும் அளிக்கப்பட்டன.

📚எட்டாவது உலகத் தமிழ் மாநாடு- க்கு தனி அலுவல ராக பணிபுரிந்த போது, உலகத் தமிழ் மாநாட்டிற்காகக் கூட்டப்பட்ட அனைத்து குழுக்களிலும் இவர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 வரை நடத்தப்பட்ட இம்மாநாடு பெரும் வெற்றியடைந்தது.

📚தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட அனைத்து கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்தார். தஞ்சை ஏ.ஆர். மைதானத்தில் நடத்தப்பட்ட அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளையும் முடிவு செய்தார்.

📚உலகத் தமிழ் மாநாட்டின்போது மூன்று நினைவு மலர்களை வெளியிடுவதில் முக்கியப் பங்காற்றினார். மாநாட்டிற்கான அழைப்பிதழ்கள் தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டினை வெளிப்படுத்தும் ஓவியங்களுடன் அச்சிடப்பட்டன. இந்த அழைப்பிதழ்களில் முதல் முறையாக எந்த ஒரு தனி நபரின் புகைப்படமும் இடம் பெறவில்லை.

📚செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை யில் இயக்குந ராக பணிபுரிந்த போது, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கும் வகையில் வாராந்திரப் பத்திரிக்கை நிருபர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

🇮🇳மக்கள் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்காக தமிழரசுப் பத்திரிக்கையில் சிறப்புப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் மூலம் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டன.

🇮🇳காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய ராக பணிபுரிந்த போது, மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் தறி நெய்யும் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு பெருமுயற்சி எடுத்தார். திடீர் சோதனைகள் நடத்தியும், தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொண்டும் இம்முயற்சி முடுக்கிவிடப்பட்டது.

🌴பட்டுத்தறியிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

🌴பல்வேறு மூலாதராங்களிலிருந்து நிதியினை சேகரித்து அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவனையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இம்மருத்துவமனைக்கு கல்பாக்கம் அணு மின் நிலையம் காமா ரேடியோ மீட்டரை (Gamma Radio Meter) அளித்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் உதவியுடன் கூடுதல் படுக்கைத் தொகுதி ஒன்றும் கட்டப்பட்டது. அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகிற ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் இம்மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர், சவக்கிடங்கு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

🇮🇳முதலமைச்சரின் செயலகத்தில், கூடுதல் செயலராக பதவி வகித்தப் போது, கால்நடைகளின் மருத்துவத்திற்காக முகாம்கள் அமைத்திட உதவி செய்த கால்நடை பாதுகாப்புத் திட்டம் உருவானதில் இவரின் பங்கு முக்கியமானது.

🇮🇳நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை இணைக்கும் சாலைகள் விரைந்து முடிக்கப்பட்டன.

📚செய்தி மற்றும் சுற்றுலாத் துறை செயலராக பதவி வகித்தப்போது, இப்பணியிலிருக்கும்போது முக்கிய விருந்தினர்களுக்கு சால்வை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்களைப் பரிசாக வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

✉ செய்திக் குறிப்புகளை இ-மெயில் வாயிலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பும் முறையையும் நடைமுறைப்படுத்தினார்.

🇮🇳சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை செயலராக பதவி வகித்தப்போது, சுற்றுலாப் பயணிகளை அன்புடன் நடத்தும் வகையில் `விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்` என்ற புதிய திட்டத்தை உருவாக்கினார். அத்திட்டத்தில் தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையம், கோயில்கள் ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனப் பயிற்சி அளிக்கப்பட்டது.

🇮🇳இவருடைய தலைமையின்கீழ் தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதன் காரணமாக அங்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகள் உருவாகின. சாலைகளும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டன. அந்த விழாவிற்குப் பிறகு பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கும்பகோணம் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் தீட்டிய சோழர் வரலாறு பற்றிய 100 சித்திரங்கள் அங்கு நடந்த கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பாராட்டுகளைக் குவித்தது.

🌴சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, செயலராக பதவி வகித்தப்போது, அரசின் அனுமதி பெற்று வனக் காவலர்கள், ரேஞ்சர்கள், ஃபாரெஸ்டர்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.

🌴சந்தனம் மற்றும் சிவப்பு சாண்டர் மரங்களை ஏலம் விடுவதில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, அரசின் வருமானம் கணிசமாக அதிகரிக்கப்பட்டது.

📚பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலராக பதவி வகித்தப்போது, பல்வேறு துறைகளிலிருக்கும் திறமை வாய்ந்தவர்களை வசீகரிப்பதற்காக அவ்வப்போது வருகைதரும் விரிவுரையாளர்களின் வெகுமானம் அதிகரிக்கப்பட்டது.

📚பயிற்சியளிக்கப்பட வேண்டிய அரசு அலுவலர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் தேங்கி இருந்ததால் காவலர் பயிற்சிப் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் அளவு குறைக்கப்பட்டது. இதன் மூலம் தகுதிகாண் பருவத்திற்கு ஒப்பளிப்பு செய்யாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டது.

📚அண்ணா மேலாண்மை நிலையத்தில் தலைமை இயக்குநர் (பயிற்சி) மற்றும் இயக்குநராக பதவி வகித்தப்போது, பசுமை வழிச் சாலையில் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் 10.56 கோடி ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டது. குடிமைப் பணிக்குத் தேர்வு பெறும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இங்கு உருவாக்கப்பட்டன. நபர் ஒன்றுக்கு 700 ரூபாய் என்றிருந்த உணவுச் செலவு 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இறுதித் தேர்வினை (main exam) எழுதும் மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட்டது.

📚சேலம், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் பிராந்தியப் பயிற்சி மையங்கள் நிறுவப்பட்டன. இம்மையங்கள் அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் தரத்தை வெகுவாக உயர்த்தின.

🇮🇳பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் முதன்மைச் செயலர்/ஆணையராக பதவி வகித்தப் போது, இவர் பணிக் காலத்தில் முதன்முறையாக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையானது தகவல்களைக் கொடுக்கும் நிறுவனம் என்ற நிலையிலிருந்து தகவல்களைப் பகுத்தாயும் நிறுவனமாக உருமாற்றம் பெற்றது.

📚காகித வடிவத்திலிருந்த தகவல் சேகரிப்புகள் மின்னணு இலக்க முறைக்கு மாற்றப்பட்டன.

🇮🇳தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், முதன்மைச் செயலர்/இயக்குநராக பதவி வகித்தப் போது, தமிழ்நாட்டின் புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கையை வரையறுப்பதில் பங்காற்றியதுடன் அரசு அதை ஏற்றுக்கொள்வதிலும் முக்கியப் பங்கு வகித்தார்.

📚தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து தொழில்முனைவோருக்கான சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்த ஆயத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

🇮🇳தற்போது அரசின் கூடுதல் தலைமைச் செயலர்/இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவர் பதவியில் இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ். பல விருதுகளை பெற்றுள்ளார்.

🥇சிறு சேமிப்பு வசூலிற்கான சிறந்த ஆட்சியர் விருது (1998)
🥇கொடி நாள் வசூலிற்கான விருது (1998 மற்றும் 1999)
🥇‘வாய்க்கால் மீன்கள்’ நூலிற்கான தமிழக அரசின் சிறந்த கவிதைத் தொகுப்பு விருது (1996)
🥇‘ஆத்தங்கரை ஓரம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருது (1998)
🥇சிறந்த கட்டுரைகளின் தொகுப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கியின் விருது (ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் மற்றும் ஏழாம் அறிவு ஆகிய நூல்கள் – 1998 மற்றும் 2003)
🥇‘பத்தாயிரம் மைல் பயணம்’ நூலிற்காக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் சிறந்த நூலுக்கான விருது (2012)
🥇அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது (2005)
🥇வாஷிங்டனில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் புறநானூறு பற்றி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையும் முதல் பரிசைப் பெற்றது (2011)
🥇இவர் எழுதிய ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்திற்கு தினத்தந்தி நாளிதழ் இரண்டு லட்சம் ரூபாயுடன் கூடிய ‘2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்’ என்ற இலக்கியப் பரிசை அளித்து சிறப்பித்தது. இந்த விருது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் கைகளால் வழங்கப்பட்டது.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

                                                      –   என்கிறார் வள்ளுவர்.

📚கல்வியின் மீதான பேரன்பைச் சிலாகிக்கிறது இந்தக் குறள். கல்வியின் மீதான இறையன்பின் பேரன்பு அதனைத் தன்னிடம் மட்டும் பொத்தி வைத்துக்கொள்ளாமல் மாணவர்களிடம் எடுத்துச் செல்லவைத்தது.மாணவர்கள் ஆர்வங்கொண்டு ஆட்சிப்பணிக்கு வரவேண்டும் என்பதற்காக ’ஐ.ஏ.எஸ்.தேர்வும் அணுகுமுறையும்’, ’படிப்பது சுகமே’, ’ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என பல புத்தகங்களை எழுதினார். நாவலாசிரியர், சிறந்த பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், சொற்பொழிவாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முகத்தன்மை இந்தப் பரிவான முகத்துக்கு உண்டு.

🇮🇳அன்புதான் இறை! பெயருக்கு ஏற்றதுபோல் பொறுப்பேற்று செயல்பட வாழ்த்துகள்.

கமலகண்ணன்

1 Comment

  • தலைமச்செயலாளராக பொறுப்பு ஏற்க்கும் உயர்திரு . வெ.இறையன்பு IAS அவர்கள்
    தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லாட்ச்சி அளத்திட முதலமைச்சர் அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி தமிழ்நாடு
    சீறும் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...