பேய் ரெஸ்டாரெண்ட் – 2 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 2 | முகில் தினகரன்

“டேய்… ஆனந்து…

வேண்டாம்டா… தனியா போகாதடா… அவனுக உன்னையும் கொலை செஞ்சுடுவானுக”

“அப்படின்னா… நீயும் என் கூட துணைக்கு வா”

“நானா… இந்த நேரத்துல… இந்த இருட்டுல… ம்ஹூம்… மாட்டேன்… .மாட்டேன்”

ஆனால், தைரியமாய் முன் வந்த விஜயசந்தர், “ஆனந்து… கிளம்பு..நான் வர்றேன்… ரெண்டு பேரும் போகலாம்” என்று சொல்ல,

“அய்யோ… அப்ப நான் மட்டும் இங்கே தனியா இருக்கணுமா?….”

“அப்ப எங்க கூட வா” சொல்லியவாறே கதவைத் திறந்து கொண்டு ஆனந்தராஜ் வெளியேற, அவனைப் பின் தொடர்ந்து விஜயசந்தரும் செல்ல, வேறு வழியில்லாமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் திருமுருகன்.

ஆனால் அவர்களோடு நடக்கும் போது, பயத்தில் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தான். தூரத்தில் நாய் குரைக்க, “அய்யோ நாய் குரைக்குதே… நாய்கள் கண்களுக்கு பேய்கள் நல்லாத் தெரியும்!ன்னு சொல்லுவாங்களே?…இது அந்த வகைக் குரைப்போ?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் திருமுருகன்.

சிறிது தூரம் சென்றதும், தொண்ணூறு சதவீதம் கட்டி முடிக்கப்பட்டு, கிரகப் பிரவேசத்திற்குக் காத்திருக்கும் அந்தக் கட்டிடத்தின் அந்த நால்வரும் நின்று கொண்டிருக்க, நேரே அவர்களிடம் சென்றான் ஆனந்தராஜ்.

“யார் நீங்க?…இந்த நேரத்துல இங்க நின்னுட்டு என்ன பண்றீங்க?” அதட்டலாய்க் கேட்டான்.

மெலிதாய்ப் புன்னகைத்த அந்த நால்வரில் ஒருவன், “நீங்க யாரு சார்?” திருப்பிக் கேட்டான்.

“அதோ… அங்க தெரியுதே வீடு… அந்த வீட்டுக்காரன்”

“ஓ… அப்படியா?…ரொம்ப சந்தோஷம்… நான் இதோ இங்க தெரியுதே இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்” என்று அந்த கட்டி முடிக்கப்பட்ட வீட்டைக் காட்டினான் அவன்.

தாடையைத் தேய்த்தவாறு யோசித்த ஆனந்தராஜ், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… நீங்க நாலு பேரும் ஒரு ஆளைத் தூக்கிக்கிட்டு வந்தீங்களே?..அது யாரு?” கேட்டான்.

“அவரா?…அவரு அதோ அந்த சுவற்றுக்குப் பின்னாடி படுத்திருக்கார் போய்ப் பாருங்க”

மெல்ல நடந்து அவர் கை காட்டிய இடத்தில் சென்று டார்ச் ஒளியைப் பீய்ச்சிப் பார்த்த ஆனந்தராஜ், பலமாய்ச் சிரித்தான். அவன் சிரிப்பைக் கண்டு குழப்பமடைந்த திருமுருகனும், விஜயசந்தரும் அவனருகே சென்று, டார்ச் ஒளி காட்டிய அந்த மனிதனைப் பார்த்து அசடு வழிந்தனர்.

அவர்களை நோக்கி நடந்து வந்த அந்த புது வீட்டுக்காரர், “சார்… மேஸ்திரி சொன்னாரு என்பதற்காக… என்னோட பழைய பேண்ட்… சட்டைக்குள் வைக்கோலைத் திணிச்சு… நாங்களே எங்க வீட்டில் செஞ்ச திருஷ்டிப் பொம்மையைத்தான் சார் தூக்கிட்டு வந்தோம்!…இதுக்குப் போய் இவ்வளவு கலவரம் பண்றீங்களே?” என்று சொல்ல,

“ஹி… ஹி… ஹி..”என்று அசடு வழியச் சிரித்தவாறே மூவரும் வீடு திரும்பினர்.

வீட்டையடைந்ததும் நீண்ட வயிறு வலிக்கச் சிரித்து விட்டு, “சரி… சிரிச்சது போதும்… இனி ஆக வேண்டியதைப் பேசுவோம்!…என்ன சொல்றீங்க… பேய் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சிடலாம்தானே?” ஆனந்தராஜ் கேட்டான்.

தொடர்ந்து பேய் ரெஸ்டாரெண்ட் பற்றிய சாதக, பாதக விஷயங்களை அலசி ஆராய்ந்து விட்டு, விடியற்காலை நேரத்தில், எவ்வளவு விரைவில் பேய் ரெஸ்டாரெண்டைத் துவக்க முடியுமோ?…அவ்வளவு சீக்கிரத்தில் துவங்கி விடுவது என்கிற நிலைப்பாட்டிற்கு வந்தனர். அந்த முடிவில் மூவருக்குமே முழு திருப்தியும், நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையுடனேயே அன்றைய டிஸ்கஸனை முடித்துக் கொண்டு, அதிகாலை நேரத்தில், சந்தோஷமாய்க் கலைந்து சென்றனர்.

சந்தோஷம் என்பது எல்லோருக்கும் எளிதாய்க் கிடைத்து விடக் கூடிய விஷயம் அல்ல, ஆரம்பத்தில் சந்தோஷம் போல் காட்சியளித்து விட்டு, கடைசியில் பெரும் சங்கடத்தில் கொண்டு போய் மூழ்கடித்து விடும் பல விஷயங்கள் நம்மைச் சுற்றியும் உண்டு.

பாவம், இந்த மூன்று இளைஞர்களுக்கும் இந்த இயற்கையின் நியதி ஏனோ புரியாமலே போனது.

****

இரண்டு தினங்களுக்குப் பிறகு, அதிகாலை வேளையிலேயே மொபைல் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான் ஆனந்தராஜ். புரோக்கர் குமாரசாமி லைனில் வந்தார்.

“சொல்லுங்க குமாரசாமி!…காலங்கார்த்தால கூப்பிட்டிருக்கீங்க…என்ன சமாச்சாரம்?” படுக்கையில் எழுந்தமர்ந்து கேட்டான் ஆனந்தராஜ்.

“என்ன சார்.. “ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கப் போறோம்!…வாடகைக்கு ஒரு நல்ல பில்டிங் இருந்தாச் சொல்லுங்க!”ன்னு நேத்திக்குத்தான் சொன்னீங்க?…அதுக்குள்ளார மறந்துட்டீங்களா?”

“ஓ…கரெக்ட்…கரெக்ட்!…என்னாச்சு…ஏதாச்சும் இருக்கா?” படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னலருகே வந்து நின்று பேசினான் ஆனந்தராஜ்.

“ஒண்ணு இருக்கு சார்!”

“எந்த ஏரியாவுல?”

“சிட்கோ”வுக்கு முன்னாடியே…எல்.ஐ.சி.காலனிக்குப் பக்கத்துல இருக்கு சார்…நல்லா மெயின் ரோட்டு மேலேயே இருக்கு!…உண்மையைச் சொல்லணும்னா…அது கடையல்ல..வீடு!…பெரிய டபிள் ஃப்ளோர் வீடு!…உள்ளார நுழைஞ்சது விஸ்தாரமான ஹால்!…அந்த ஹாலோட வலது பக்க மூலையில் மாடிக்குப் போற ஸ்டெப்ஸ்”

புரோக்கர் சொன்னதை கண்களை மூடி கற்பனை செய்து பார்த்தான் ஆனந்தராஜ்.

“ம்ம்ம்…நல்லாத்தான் இருக்கும் போலிருக்கே!” என்றவன், “அது செரி…ரெஸ்டாரெண்ட்டுக்காக எலிவேஷன்ல….இண்டீரியர்ல நிறைய டெக்கரேஷன்ஸ் பண்ணிவோமே?…ஹவுஸ் ஓனர் அப்ஜக்ட் பண்ணுவாரோ?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“உங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம் சார்!…ஹவுஸ் ஓனர் சிங்கப்பூர்ல இருக்கார்…அவங்க ரிலேஷன் ஒருத்தர்…பேரு கணேசன்!…அவர்தான் இங்கிருந்து கவனிச்சுக்கறார்!…அவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்… “ரெஸ்டாரெண்ட்டுக்குத்தான்”ன்னு…அவரும்…“அதனாலென்ன?…பரவாயில்லை!”ன்னுட்டார்!..ஆக…நீங்க உங்க பிரியத்துக்கு டெக்கரேஷன் பண்ணிக்கலாம்!”

“ஓ.கே.குமாரசாமி…எப்பப் போய்ப் பார்க்கலாம்?” ஜன்னலிலிருந்து நகர்ந்து ஹால் சோபாவுக்கு வந்து சாய்ந்தமர்ந்தான் ஆனந்தராஜ்.

“இன்னிக்கு ஈவினிங் பார்ட்டியைக் கூட்டிட்டு வர்றேன்!னு சொல்லியிருக்கேன்!…நீங்க வந்தீங்கன்னா…அவர் இருக்கும் போதே பேச வேண்டியதையெல்லாம் பேசிக்கலாம்!”

“ம்ம்ம்…நான் என்னோட பார்ட்னர்ஸ் கிட்ட பேசி…அவங்களும் கூட வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணிட்டு உங்களைக் கூப்பிடறேன் குமாரசாமி!”

“சீக்கிரம் கூப்பிட்டுக் கன்ஃபர்ம் பண்ணுங்க சார்!…நீங்க சொன்ன பிறகுதான் நான் அந்த கணேசன்கிட்டச் சொல்லி அவரை அங்க வரச் சொல்லணும்!”

“ஓ.கே…ஓ.கே…இப்ப பத்து நிமிஷத்துல கூப்பிட்டுக் கன்ஃபர்ம் பண்ணிடறேன்!” சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்த ஆனந்தராஜ் முதலில் திருமுருகனைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

“ஓ.கே.இன்னிக்கே பார்த்திடுவோம்!…ஈவினிங் நான் ஃப்ரீதான் எங்க வரணும்னு சொல்லு…வந்திடறேன்!”

“நீ எங்கியும் போக வேண்டாம்…நேரா இங்க எங்க வீட்டுக்கு வந்திடு…விஜயசந்தரையும் இங்க வரச் சொல்லிடறேன்!..மூணு பேரும் இங்கிருந்தே போயிடலாம்!”

நண்பர்களிடம் பேசி விட்டு, புரோக்கர் குமாரசாமியிடம், “நாங்க மூணு பேரு ஈவினிங் அஞ்சு மணிக்கு அந்த எல்.ஐ.சி.காலனிக்கு முன்னாடி நிக்கறோம்!..” என்றான் ஆனந்தராஜ்.

“சரி தம்பி…நானும் சரியா அஞ்சுக்கு அங்க வந்திடறேன்!”

****

அன்று மாலை, அந்தக் கட்டிடத்தின் இருப்பிடத்தையும், உள் அமைப்புகளையும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்த நண்பர்கள் மூவரும் பரம திருப்திக்கு ஆளாயினர்.

“முருகா…நான் எந்த மாதிரி எதிர்பார்த்தேனோ?…அதே மாதிரி இருக்கு இந்த பில்டிங்!..கீழே இருக்கற பெரிய ஹால்ல ரவுண்ட் டேபிள்ஸ் போட்டுக்கலாம்!…ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஸ்கொயர் டேபிள்ஸ் போட்டுக்கலாம்!…ஹால் பெரிசாவே இருக்கறதினால சைடுல இங்கிலீஸ் ஹாரர் படங்கள்ல வர்ற மாதிரி குகை செட் போட்டுக்கலாம்!….ஸ்டெப்ஸ்ல…அங்கங்க…ஒரு வகை பேய் முகம் பதிச்சு…யாராவது அதைக் கடந்து போகும் போது…பயங்கரமா அலறுற மாதிரி செட் பண்ணிடலாம்!…”

“டேய்…டேய்…போதும்டா..போதும்டா!…இன்னும் வாடகை பேசி ஓ.கே.பண்ணவே இல்லை அதுக்குள்ளார டெக்கரேஷனையே ஆரம்பிச்சிட்டியே?” முருகன் அவனை அடக்கினான்.

அப்போது அவர்களிடம் வந்த புரோக்கர், “என்ன சார்?…உங்களுக்கு ஓ.கே.வா?” கேட்டார்.

“ஓ.கே!…ஓ.கே!…” என்றான் ஆனந்தராஜ்.

“அப்படின்னா வாங்க அந்த ஆள்கிட்ட மத்த விஷயங்களைப் பேசிடலாம்!” குமாரசாமி சொல்லி விட்டுத் திரும்பி நடக்க,

“சாமி…ஒரு நிமிஷம் இருங்க!…மொதல்ல நீங்க போய் பேசிட்டு…என்ன வாடகை?…என்ன அட்வான்ஸ்?ன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்க!…எங்களுக்கு கட்டுபடியானா தொடர்ந்து பேசறோம்!..இல்லையா…இப்படியே போயிடறோம்!” என்றான் விஜயசந்தர்.

“அதுவும் செரிதான்!” சொல்லி விட்டுச் சென்ற புரோக்கர் போன வேகத்தில் திரும்பி வந்து, “சார்…உங்க மூணு பேருல யாரோ ஒருத்தருக்கு எங்கியோ மச்சம் இருக்கு சார்!…அந்த ஆள் என்ன சொன்னார் தெரியுமா?…நீங்களே நியாயமா முடிவு பண்ணி சொல்றதாம்…அது எதுவானாலும் அதை அவரு அப்படியே ஏத்துக்கறாராம்!”

ஆனந்தராஜால் நம்பவே முடியவில்லை. “இவ்வளவு பெரிய பில்டிங்…அதுவும் மெயின் ரோட்டு மேலே இருக்கு!…எக்கச்சக்க வாடகை…அட்வான்ஸ் கேட்பாரு!ன்னு பாத்தா…நம்மையே முடிவு பண்ணச் சொல்றாரே?” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன், சக நண்பர்களிடம் சன்னக்குரலில் பேசினான்.

பேசி முடித்த பின், “குமாரசாமி…ஆக்சுவலா இந்த பில்டிங்க்கு நிறையவே குடுக்கலாம்!…பட்… நாங்க ஏற்கனவே ரெண்டு மூணு பிசினஸ் பண்ணி…அடி வாங்கி ஓய்ஞ்சு போய்க் கிடக்கறதினால…எங்களாலே…மாத வாடகை…இருபதாயிரமும்…அட்வான்ஸ் ஒரு லட்சமும் தர முடியும்!…எங்களுக்கே தெரியுது நாங்க சொல்றது ரொம்பக் குறைச்சல்ன்னு…ப்ச்…எங்க நிலைமை இதுதான்!” என்றான் ஆனந்தராஜ்.

“அடப் போங்க தம்பி!…இதைப் போய் அந்த ஆளுகிட்ட சொல்றதுக்கே எனக்கு சங்கடமாயிருக்குப்பா!…மனுஷன் கோவத்துல எதையாவது எடுத்து அடிச்சாலும் அடிச்சிடுவான்!”

“சரி…உங்களுக்கு சங்கடமாயிருந்தா சொல்லுங்க…நாங்களே போய்ச் சொல்றோம்!” திருமுருகன் முன் வந்தான்.

“ம்ம்ம்….சரி…வாங்க…நீங்களே வந்து கேட்டுப் பாருங்க!” புரோக்கர் தான் நைஸாக நழுவிக் கொண்டு நண்பர்கள் மூவரையும் முன்னுக்குத் தள்ளி விட்டார்.

அந்த கணேசனிடம் சென்றதும், ஆனந்தராஜ் “வழ…வழா…கொழ…கொழா…”என்று எதுவும் பேசாமல் தாங்கள் முடிவு செய்திருந்த வாடகைத் தொகையையும், அட்வான்ஸ் தொகையையும் சொல்ல,

மெல்ல முறுவலித்த கணேசன், ஒரே வார்த்தையில், “சரிப்பா..” என்றார்.

புரோக்கர் குமாரசாமியே அசந்து போய் விட்டார். “அடப்பாவமே!…இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே!”

நண்பர்கள் மூவரும் அந்த கணேசனுக்கு நன்றி சொல்லி விட்டுக் கிளம்பும் போது, “சார்…நாங்க வர்ற புதன் கிழமை ஒரு டோக்கன் அட்வான்ஸ் குடுத்திட்டு…எங்களோட இண்டீரியர் டெக்கரேஷன் வேலையை ஆரம்பிச்சிடறோம்!” என்றான் ஆனந்தராஜ்.

“தாராளமா!” என்றான் கணேசன்.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்லி விட்டு நகர்ந்தனர் மூவரும். வரும் வழியில் திருமுருகன் சொன்னான், “டேய் உண்மைல நமக்கு கொஞ்சம் லக் இருக்குடா…இவ்வளவு பெரிய பில்டிங்…அதுவும் மெயின் ரோட்டுல இவ்வளவு குறைந்த வாடகைக்கு நமக்குக் கிடைச்சது பயங்கர அதிர்ஷ்டம்தாண்டா!”

மற்ற இருவரும் அதை பலமாய் ஆமோதித்தனர்.

பாவம், அது பயங்கர அதிர்ஷ்டமில்லை…அதி பயங்கர துரதிர்ஷ்டம் என்பது அவர்களுக்கு அப்போது தெரியாது.

(தொடரும்)

< முதல் பகுதி  |  மூன்றாவது பகுதி >

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...