காலச் சுவடுகள் SSR – 2 | டி.கே. ரவீந்திரன்
தென்மேற்கு பருவக் காற்றின் மெல்லிய வருடலில் பச்சைப் பசேலென வளர்ந்து நிற்கும் பயிர்கள் சிலிர்த்துக் கொள்ளும் தேனி மாவட்டம் அந்நாளில் அது மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதி.
அந்த மாவட்டத்தில் பெரியகுளம் வட்டாரத்தில் சேடபட்டி என்ற சிற்றூர்தான் நான் பிறந்த ஊர். பெரியகுளம் மாவட்ட கல்வி அதிகாரியாக பணிபுரிந்த சூரியநாராயணத் தேவர் எனது தந்தையார். அம்மா ஆதிலட்சுமி.
இப்படி கல்விக்கூடங்களின் கடமையாளராக திகழ்ந்த பெற்றோர்களுக்கு 1928 ஜனவரி 1 இல் நான் பிறந்தேன்.
எனது பிறப்பைப் பற்றிக் கூறப் போனாலே கண்கலங்கி நிற்பாள் எனது பாட்டி.
டேய் ராசா! நான் மட்டும் அன்னைக்கு இதை செய்யப்போய் பலிச்சிருந்தால் உன்னை இன்னைக்கு உயிரோடு பார்த்திருக்க முடியுமா? என்று கூறி மார்போடணைத்து முத்தமாரி பொழியும் அப்பத்தாவின் ஆதங்கத்திற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. அதை பிறகு சொல்கிறேன்.
என்னோட அப்பா சூரியநாராயண தேவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒன்றாக படித்தவர்கள். உயரிய நண்பர்கள். அதற்கு காரணமாக அமைந்தவர்கள் அவ்விருவரின் தந்தையார்களே. அதாவது எனது தாத்தா அழகுமலை தேவரும், முத்துராமலிங்கத் தேவரின் அப்பா உக்கிர பாண்டியத் தேவரும் உற்ற தோழர்கள். இவர்களது அன்னியோன்னியமாக நட்பு வாழையடி வாழையாக வளரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் பிள்ளைகளையும் ஒரே பள்ளியில் சேர்ந்து படிக்க வைத்தார்கள்.
அதனால் அவர்கள் எண்ணம் போலவே வாரிசுகளும் என்றென்றும் பிரிக்கமுடியாத இறுகியதோர் நட்புக்கு பாத்திரமாக திகழ்ந்தார்கள். இறுதிக்காலம் வரை இவர்களது நட்பில் எந்தவித விரிசலும் ஏற்பட்டதில்லை. தேவர் திருமகனின் கணிந்த பார்வையும், கருணை உள்ளமும் என்றென்றும் என் மீது பாய்ந்ததே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தேவர் திருமகனாரும், எனது தந்தையும் தங்களது கல்விப் பயணத்தில் இறுதியில் வௌ;வேறு கதைகளை தேர்வு செய்து கொண்டார்கள்.
முன்னவர் ஆன்மிகம் அரசியல் என்று பயணிக்க, எனது தந்தையார் பள்ளிக் கல்வித்துறையில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
இருந்தும் இவ்விருவரது நட்பும் ஒரு சிறிதும் குறைவினைக் கண்டதில்லை. எப்பொழுதெல்லாம் நண்பர்கள் சந்தித்துக்கொள்ள விருப்பப்பட்டார்களோ அப்போதெல்லாம் ஒருவரைக் காண ஒருவர் செல்வது வழக்கமாக இருந்தது.
பசும்பொன்னிலிருந்து புறப்பட்டு வெளியூர் செல்லும் பயணங்களின் போது தேவர் ஐயா எங்கள் வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
அப்படி ஒருமுறை அவர் வந்த போது கைக்குழந்தையாக இருந்த என்னை எடுத்து மடியிலிருத்திக் கொஞ்சியவாறே என் தந்தையிடம் ‘டேய் இவனுக்கு என்னடா பெயர் வைத்திருக்கிறாய்’ என்று வினவ, ‘இன்னும் ஒன்னும் வைக்கலடா! நீயேதான் பார்த்து ஒரு நல்ல பேரா வையேன்.’ என்று கூறியிருக்கிறார்.
தேவர் அய்யா ஆன்மீகவாதியாக மட்டுமல்ல ஜோதிடம் போன்ற கலைகளில் தெளிந்தவர். எனவே எனது தந்தையாரிடம் என் பிறந்த நாள் நட்சத்திரம் ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டு எனது ஜாதகத்தைக் கணித்து விட்டு, இவன் பிறந்த நாளும் கோளும், மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு வாய்த்தவை.
எனவே இவனுக்கு அதே பெயரை சூட்டுகிறேன் என்று அவர் சோழர் இவன் பாண்டியன் ஆக இவன் ராஜேந்திர பாண்டியன்.
அப்படித் தேவர் திருமகனாரின் வாயால் பெயர் சூட்டப்பட்ட இந்த ராஜேந்திரனின் ஜாதகத்தைக் கணித்துக் கூறிய அவர், ‘டேய் உன் பிள்ளை நிச்சயமாக ராஜேந்திர சோழனைப் போலவே ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்குவான் அதை நான் சொல்லல ஜாதகம் சொல்லுது’ என்றாராம்.
சேடப்பட்டி தொடக்கப் பள்ளியில்தான் என் கல்விப் பயணம் ஆரம்பித்தது. ஐந்தாம் வகுப்புவரை சேடப்பட்டியில் பயின்ற பின் ஆறாம் வகுப்பை வத்தலகுண்டிலுள்ள எ.எம்.சி. பள்ளியில் சேர்ந்து பயில துவங்கினேன். அந்த பள்ளி மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்டது.
பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் ‘பாமா விஜயம்’ என்ற நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தில் வேடம் புனைந்து அனைவரது பாராட்டையும் பெற்றேன். அன்றைய திரையுலக பிரபலமான தியாகராஜ பாகவதரைப் போல நடித்துக் காட்டிய எனது சீரிய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தேன். நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க சர்.பி.டி.ராஜன் அவர்கள் வந்திருந்தார்கள். அவரும் அன்றைக்கு என்னை வெகுவாக பாராட்டினார்.
அந்த நாட்களில், மக்களின் பொழுதுபோக்கிற்கு கிராமங்களில் நடைபெறும் கூத்து மற்றும் நாடகங்கள் மட்டும்தான் ஏக மார்க்கமாக இருந்தது. எங்களது வட்டாரத்திலும் புளிய மாநகர பாய்ஸ் கம்பெனி என்ற பெயரில் ஒரு நாடக சபை இயங்கி வந்தது.
நான் அந்த வயதிலேயே நன்றாக பாடுவது கிராமத்தில் பிரசித்தம். அத்துடன் பள்ளி நாடகத்தில் பாடி நடித்ததில் அந்த பெருமை மேலும் வலுவானது. அதனாலேயே உலக பிரமுகர்கள் என் அப்பாவை அணுகி என்னை அவர்களது நாடகக் குழுவில் பாட அனுமதி கோரினார்கள். வந்து கேட்டவர் அப்பாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆதலால் மறுபேச்சின்றி அனுப்பி வைத்தார்.
அப்பொழுது பள்ளி விடுமுறை நாட்களாக இருந்ததால் நான் அவர்களது நாடக சபைக்குச் சென்று தங்கிப் பாடி வந்தேன். சில நாட்களுக்குப் பிறகு அந்த நாடகக் குழு மலேசியாவிற்கு நாடகம் நடத்த பயணம் மேற்கொள்ளவே, என் தந்தையார் தகவல் இருந்து உடனடியாக என்னை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
நான் வீட்டிற்கு வந்தேன் என்றாலும் நாடக சபையுடன் நடித்த நாட்கள் என் நினைவில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
எங்கள் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர்தான் அங்கு கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வைப்பவர். ‘வார்டன் வாத்தியார்’ என்று தான் நாங்கள் அவரை அழைப்போம். அந்த சிறு வயதிலேயே என்னுள் பொங்கி வழியும் கலைத்தாகத்தைச் சரியாக புரிந்து வைத்துக் கொண்டிருந்தார் வார்டன் வாத்தியார்.
பாமா விஜயம் அதற்குப் பின்னால் அவரது கனிவான பார்வை என் மீது படலாயிற்று. நாடகம் திரைப்படம் என்ற விஷயங்கள் எங்களது பேச்சில் அடிக்கடி தலைகாட்டின. என்.எஸ்.கே போன்றவர்கள் நாடகம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தபோது சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருந்த நேரம் அது. எனவே நாடகமும் அதன் மூலம் திரைப்பட வாய்ப்பையும் அடையத் துடிக்கும் கலைப்பித்து அந்த துறையின் மீது நாட்டம் கொண்டவர்களுக்கு இயல்பாகவே இருந்தது.
ஒருநாள் வார்டன் வாத்தியார் என்னிடம் ‘டேய் ராஜேந்திரன் நீதான் நல்லா பாடுறே நடிக்கவும் செய்யுறே பேசாமல் ஏதாவது நாடக கம்பெனியில் சேர்ந்து விட வேண்டியதுதானே.
இப்பவே அப்படிச் சேர்ந்திட்டின்னா பிற்காலத்தில் நல்லா ஒஹோன்னு வருவே.’ என்றார். நான் என்ன நினைத்தேனோ அதை அவரது வாய் வார்த்தையாகக் கேட்டபொழுது அதுவரை என் ஆழ்மனதில் மூடிக்கிடந்த ஆசை சிப்பியின் இதழ் மெல்லத் திறந்தது போலாயிற்று.
யாரேனும் இதற்கு எனக்கு ஒரு வழி கூற மாட்டார்களா என்று ஏங்க போதுதான் வார்டன் வாத்தியார் இதைக் கூறினார். நான் அவரிடம் என் மனதைத் திறந்து சொன்னேன் எப்படி யார் மூலம் எனது ஆசையை நிறைவேற்றுவது என்று அறியாமல் தவிக்கிறேன் என்று.
வாத்தியார் சற்றும் யோசிக்கவில்லை நீ கவலைப்படாதே! நான் உன்னை எப்படியாவது சேர்த்து விடுகிறேன் என்று கூறியதுடன் மதுரையில் அன்றைக்கு பிரபலமாக புகழுடன் விளங்கிய பாய்ஸ் கம்பெனியில (டி.கே.எஸ். நாடக சபா) என்னைச் சேர்த்து விட முயல்வதாகவும் உறுதி கூறினார்.
சொன்னவர் ஒரு நாள் எனக்கு கைச் செலவுக்காகவும் சிறிது காசும் தந்து நீ மதுரைக்கு டிக்கெட் எடுத்து பஸ்ஸில் ஏற்றி விட்டார். நீ அங்கே போய் நாடகக் கம்பெனியை விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்று தைரியம் கூறி அனுப்பினார்.
(தொடரும்)
| அத்தியாயம்-1 | அத்தியாயம்-2