இதயத்தைப் பாதுகாக்கவும், இதயநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர்.
அரங்க சீனிவாசன்
கவித்தென்றல் அரங்க சீனிவாசன் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தார்.
இவர் மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியம் இது. இவரது காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும் என்ற ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.
சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக ஒத்துழைத்தார்.
வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் 1996ஆம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1885ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1928ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் சந்திர மிஸ்ரா பிறந்தார்.
1725ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஆங்கிலேய அரசியல்வாதி ராபர்ட் கிளைவ் பிறந்தார்.
1913ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ருடோல்ப் டீசல் மறைந்தார்.
