மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறை..!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வரும் நிலையில், மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.
நீலகிரிக்கு ஆண்டு முழுவதுமே சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு, தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் கூட சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர். முக்கியமாக ஏப்ரல், மே உள்ளிட்ட சீசன் காலகட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காகவும், கோடை விடுமுறையை கழிப்பதற்காகவும் நீலகிரியில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
நீலகிரியின் மற்றொரு சிறப்பு மலை ரயில் சேவை. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசல் மூலமாகவும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வளைவுகள், பாலங்களைக் கடந்து செல்லும் இந்த ரயில் அடர்ந்த வனப் பகுதிளுக்குள்ளும் மலைகள், அருவிகள் என அனைத்தையும் கடந்து செல்லும். இதனால், உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் இடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நீலகிரி சுற்றுவட்டாரம் முழுவதும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரயிலை தாமதமாக இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.