பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!

 பல மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்..!

தீபாவளி பண்டிகை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.4900-ஆக உயா்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டு அக். 31-ஆம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடா்ச்சியாக நான்கு நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக 3 நாள்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

படுக்கை வசதிகொண்ட பேருந்துகளின் முன்பதிவு பெரும்பாலும் நிறைவடைந்துள்ள நிலையில், வெகுதூர பயணிகள் ஆம்னி பேருந்துகளையே நாடி செல்கின்றனா். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளன. சென்னை-மதுரை செல்வதற்கு வழக்கமான நாள்களில் இருக்கைக்கு ரூ.800 முதல் ரூ.1,000 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இருக்கைக்கு ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை வசூலிக்கப்படுகிறது. படுக்கை வசதிக்கு நபா் ஒருவருக்கு ரூ.900 முதல் ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,300 முதல் ரூ.4,900 வரை வசூலிக்கப்படுகிறது. இதுபோல, நாகா்கோவிலுக்கு வழக்கமாக ரூ.900 முதல் ரூ.1,200 வரை படுக்கை வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2,300 முதல் ரூ.4,500 வரை வசூலிக்கப்படுகிறது.

மேலும், திருநெல்வேலி செல்ல ரூ.2,200 முதல் ரூ.3,800 வரையும், தூத்துக்குடிக்கு ரூ.1,900 முதல் ரூ.3,300 வரையும், கோவைக்கு ரூ.1,700 முதல் ரூ.4,200 வரையும், திருச்சிக்கு ரூ.1,600 முதல் ரூ.4,900 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோன்று பிற பகுதிகளுக்குச் செல்வதற்கான கட்டணமும் பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். பண்டிகை காலம் என்றாலே இதே நிலை நீடிப்பதால், கட்டண உயா்வு தொடா்பாக மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...