ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்..!

 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்..!

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில், மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும் (45.4 கி.மீ), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பனிமனை வரையிலும் (26.1 கி.மீ), மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் (44.6 கி.மீ) என சுமார் 116.1 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்திட்டத்தின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத ரயிலை பயன்படுத்துவதும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2-ஆம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 1,215.92 கோடிமதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணியை இந்த நிறுவனம் மேற்கொண்டது. அதன் பிறகு முதல் ரயிலினை கடந்த செப்டம்பர் 22ம் தேதி தயாரித்து முடித்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலினை பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் சோதனை ஓட்டத்திற்காக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மூன்று பெட்டிகள் அடங்கிய முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாத காலம் பூந்தமல்லி முதல் போரூர் வழியாக கலங்கரை விளக்கம் வரை செல்லும் பிரதான வழிதடத்தில் குறிப்பிட்ட சில கி.மீ. தூரத்திற்கு சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூந்தமல்லி மெட்ரோ பணிமனையில் நடைபெற உள்ள சோதனை ஓட்டத்தில் சிக்னல், பிரேக் பாயிண்ட், பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சோதனைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...