தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகம் TNDES அறிக்கை..!

 தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம் அதிகம் TNDES அறிக்கை..!

தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் கடந்த 2 ஆண்டுகளில், தேசிய அளவிலான தனிநபர் வருமானத்தைவிட அதிகமாக இருப்பதாக தமிழக அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மதிப்பீடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திட்டம், வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு,

“தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான முன்மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது. மொத்த உற்பத்தி நிலையான விலையில் 2022-23-ம்ஆண்டில் ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டு நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

உள்நாட்டு உற்பத்தியின் மொத்த வளர்ச்சி வீதம் நிலையான விலையில், 2022-23-ம் ஆண்டில் 8.13%, 2023-24-ம் ஆண்டில் 8.23%-ஆகவும் இருந்தது. அதேநேரம், நடப்பு விலையில் 2022-23-ம் ஆண்டில் 15.48%, 2023-24-ம் ஆண்டில் 13.71% ஆகவும் இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தில் நடப்பு விலையில் 2022-23-ல் 8.88%, 2023-24-ல் 9.21% ஆகவும் இருந்தது. நிலையான விலையில் 9.03 மற்றும் 9.04% ஆகவும் இருந்தது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்ததாக 3வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் பணவீக்க வீதம் 2022-23-ல் 5.97%, 2023-24-ல் 5.37% ஆக இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பணவீக்க வீதம் 6.65 மற்றும் 5.38% ஆகவும் இருந்தன. மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி, நிலையான விலையில் 2012 முதல் 21 வரை 5.80% ஆகவும், கடந்த 2021-24 வரை 3 ஆண்டுகளில் முறையே 7.89, 8.13, 8.23% ஆகவும் இருந்தது.

இதனால், 2012-21 வரையான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, 2021-24 என மூன்றாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08% ஆக உள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் நிலையான விலையில் 2022-23, 2023-24 ஆகிய இரண்டுஆண்டுகளில் தமிழக தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்கு அதிகமாக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல், நடப்பு விலையில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தைவிட 1.71 மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29% மற்றும் 6.37% என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47%, 45.90% பங்களித்தது. 2023-24-ம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில் 9.25% வளர்ச்சியடைந்துள்ளது.

போக்குவரத்து, சேமிப்பு கிடங்குமற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76%, பிறவகை போக்குவரத்துத் துறையில் 7.46%, நிதி தொடர்பான பணிகளில் 9.29%, கட்டிடம், மனை துறையில் 10.08%, பிறவகைப் பணிகளில் 9.96% என வளர்ச்சி காணப்பட்டது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பணித்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...