தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 14086 சிறப்புப் பேருந்துகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29, 30 தேதிகளில் மொத்தம் 14,086 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடந்து 4 நாட்கள் விடுமுறை.
தொடர் விடுமுறை கிடைக்கும் காலங்களில், வெளியூர்களில் தங்கி இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். வேலை, படிப்பு ஆகிய காரணங்களால் சென்னை போன்ற நகரங்களில் தங்கியிருக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளை பெரும்பாலான மக்கள் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாட விரும்புவர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் வெளியூர் செல்வதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். எனவே தீபாவளிக்கு முந்தைய நாட்களான 29, 30 அன்று பலரும் பேருந்து பயணங்களுக்கு திட்டமிட்டு உள்ளனர். பண்டிகை காலங்களில் ஆண்டு தோறும் மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஆலோசனை முடிவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 28, 29, 30 தேதிகளில் மொத்தம் 14,086 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்படுள்ளது.