தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!

 தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!

பல்வேறு வரி உயர்வுகளை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, குடிநீர், கழிவு நீர் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கோவை

சொத்துவரி உயர்வு, குடிநீர்வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வலியுறுத்தி, கோவை குனியமுத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

நெல்லை

நெல்லை மாநகராட்சி முன்பு, நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை
கணேசராஜா தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி
போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நீண்ட வரிசையாக சங்கிலி போல்
நின்று அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் விலைவாசி உயர்வு, சொத்துவரி குடிநீர் வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை பிரதிபலிக்கும் விதமாக காய்கறிகளை மாலையாக அணிவித்தும், உடலில் ஆங்காங்கே காலிக்கேன்கள், அரிக்கன் விளக்குகள் உள்ளிட்டவைகளை தொங்கவிட்டும் கலந்து கொண்டார்.

ஈரோடு

ஈரோடு மேட்டூர் சாலை, ஆரன் புதூர், பெருமாள் மலை, பாலக்காட்டூர் என பல்வேறு பகுதிகளில், முன்னாள் துணை மேயர் பழனிசாமி தலைமையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தருமபுரி

தருமபுரி நகராட்சியில் இருந்து பேருந்து நிலையம் வரை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் உயர்த்தப்பட்ட வரிகளை திரும்ப பெறவேண்டும் என மக்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

கரூர்

வேலாயுதம்பாளையம் பகுதியில், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் திருவிக தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...