தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்று, அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு முதல் கேபினட் கூட்டம் நாளை நடக்கிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அமைச்சரவையில் இருந்து கா.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக செந்தில்பாலாஜி, சா.மு.நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
புதிய அமைச்சர்கள் செப்டம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றனர். மேலும், பொன்முடி, தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்வராஜ் ஆகிய 6 அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. புதிதாக அமைச்சரவையில் இணைந்துள்ள கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் முதல் முறையாக இப்போதுதான் அமைச்சரவையில் இணைந்துள்ளனர். எனவே, புதிய அமைச்சர்களுக்கு அறிவுரைகள் வழங்கும் வகையிலும், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த கேபினட் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.
தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அனுமதிகள் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், அண்மையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை முதலமைச்சர் ஆகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில், பொதுமக்களை கவரும் விதமாக முக்கிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது உள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் இருந்து 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்தும் நாளை நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.